ஆதியாகமம் 11:1-32

11  அப்போது, பூமியெங்கும் ஒரே மொழி இருந்தது; ஜனங்கள் ஒரே விதமான வார்த்தைகளைப் பேசினார்கள்.  அவர்கள் கிழக்குத் திசையில் போனபோது, சினேயார் தேசத்தில்+ ஒரு சமவெளியைக் கண்டுபிடித்து அங்கே குடியேறினார்கள்.  அப்போது அவர்கள், “நாம் செங்கல் செய்து அவற்றைச் சூளையில் சுடுவோம், வாருங்கள்” என்று ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டார்கள். பின்பு செங்கல் செய்து அவற்றைக் கல்லுக்குப் பதிலாகப் பயன்படுத்தினார்கள், தார் வைத்து அவற்றைப் பூசினார்கள்.  பின்பு அவர்கள், “வாருங்கள்! நாம் பூமி முழுவதும் சிதறிப்போகாமல் இருப்பதற்காக, நமக்கு ஒரு நகரத்தையும் வானத்தைத் தொடுகிற அளவுக்கு ஒரு கோபுரத்தையும் கட்டி, பேரும் புகழும் சம்பாதிப்போம்” என்று சொல்லிக்கொண்டார்கள்.+  மனிதர்கள் கட்டிக்கொண்டிருந்த நகரத்தையும் கோபுரத்தையும் பார்ப்பதற்காக யெகோவா கீழே இறங்கி வந்தார்.*  அப்போது யெகோவா, “இதோ! அவர்கள் எல்லாரும் ஒரே மொழியைப்+ பேசிக்கொண்டு ஒன்றாக இருக்கிறார்கள். அதனால்தான், இந்த வேலையைச் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். இனி அவர்கள் திட்டம் போடுகிறபடியெல்லாம் செய்துவிடுவார்கள்.  அதனால் நாம்+ இறங்கிப் போய்,* அவர்கள் ஒருவருக்கொருவர் பேசுவது புரியாதபடி அவர்களுடைய மொழியில் குழப்பத்தை ஏற்படுத்தலாம்” என்று சொன்னார்.  அதன்படியே, யெகோவா அவர்களை அங்கிருந்து பூமி முழுவதும் சிதறிப்போக வைத்தார்.+ அதனால், அந்த நகரத்தை அவர்கள் கட்டாமல் விட்டுவிட்டார்கள்.  அந்த இடத்துக்கு பாபேல்*+ என்ற பெயர் வைக்கப்பட்டது. ஏனென்றால், பூமியெங்கும் பேசப்பட்ட மொழியை யெகோவா குழப்பியது அந்த இடத்தில்தான். அங்கிருந்த ஜனங்களை யெகோவா பூமியெங்கும் சிதறிப்போக வைத்தார். 10  சேமின் வரலாறு இதுதான்.+ பெருவெள்ளம் வந்து இரண்டு வருஷங்களுக்குப் பின்பு, சேமுக்கு 100 வயதானபோது, அவனுக்கு அர்பக்சாத்+ பிறந்தான். 11  அர்பக்சாத் பிறந்த பின்பு சேம் 500 வருஷங்கள் வாழ்ந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றான்.+ 12  அர்பக்சாத்துக்கு 35 வயதானபோது அவனுக்கு சேலா+ பிறந்தான். 13  சேலா பிறந்த பின்பு அர்பக்சாத் 403 வருஷங்கள் வாழ்ந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றான். 14  சேலாவுக்கு 30 வயதானபோது அவனுக்கு ஏபேர்+ பிறந்தான். 15  ஏபேர் பிறந்த பின்பு சேலா 403 வருஷங்கள் வாழ்ந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றான். 16  ஏபேருக்கு 34 வயதானபோது அவனுக்கு பேலேகு+ பிறந்தான். 17  பேலேகு பிறந்த பின்பு ஏபேர் 430 வருஷங்கள் வாழ்ந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றான். 18  பேலேகுக்கு 30 வயதானபோது அவனுக்கு ரெகூ+ பிறந்தான். 19  ரெகூ பிறந்த பின்பு பேலேகு 209 வருஷங்கள் வாழ்ந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றான். 20  ரெகூவுக்கு 32 வயதானபோது அவனுக்கு சேரூக் பிறந்தான். 21  சேரூக் பிறந்த பின்பு ரெகூ 207 வருஷங்கள் வாழ்ந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றான். 22  சேரூக்குக்கு 30 வயதானபோது அவனுக்கு நாகோர் பிறந்தான். 23  நாகோர் பிறந்த பின்பு சேரூக் 200 வருஷங்கள் வாழ்ந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றான். 24  நாகோருக்கு 29 வயதானபோது அவனுக்கு தேராகு+ பிறந்தான். 25  தேராகு பிறந்த பின்பு நாகோர் 119 வருஷங்கள் வாழ்ந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றான். 26  தேராகுக்கு 70 வயதான பின்பு, அவனுக்கு ஆபிராம்,+ நாகோர்,+ ஆரான் என்ற மகன்கள் பிறந்தார்கள். 27  தேராகுடைய வரலாறு இதுதான். ஆபிராம், நாகோர், ஆரான் ஆகியவர்கள் தேராகுவின் மகன்கள்; ஆரான் லோத்துவைப்+ பெற்றார். 28  ஆரான் தன்னுடைய சொந்த நகரமாகிய ஊர்+ என்ற கல்தேயர்களின் நகரத்தில்+ தன் அப்பா தேராகுக்கு முன்பே இறந்துவிட்டார். 29  சாராய்+ என்ற பெண்ணை ஆபிராம் கல்யாணம் செய்துகொண்டார். மில்காள்+ என்ற பெண்ணை நாகோர் கல்யாணம் செய்துகொண்டார்; மில்காள் ஆரானின் மகள். ஆரானுக்கு மில்காளைத் தவிர இஸ்காள் என்ற மகளும் இருந்தாள். 30  சாராய்க்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை.+ 31  பின்பு, தேராகு தன்னுடைய மகன் ஆபிராமையும், ஆரானின் மகனும் தன்னுடைய பேரனுமான லோத்துவையும்,+ ஆபிராமின் மனைவியும் தன் மருமகளுமான சாராயையும் கூட்டிக்கொண்டு, ஊர் என்ற கல்தேயர்களின் நகரத்தைவிட்டு கானான் தேசத்துக்குப்+ புறப்பட்டுப் போனார். பின்பு, அவர்கள் ஆரான்+ என்ற நகரத்துக்குப் போய் அங்கே குடியிருந்தார்கள். 32  தேராகு மொத்தம் 205 வருஷங்கள் உயிரோடு இருந்தார். பின்பு, ஆரானில் இறந்துபோனார்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “தன் கவனத்தைத் திருப்பினார்.”
வே.வா., “நம்முடைய கவனத்தைத் திருப்பி.”
அர்த்தம், “குழப்பம்.” பாபேல் என்பது பாபிலோனைக் குறிக்கிறது.

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா