ஆதியாகமம் 44:1-34

44  பின்பு யோசேப்பு தன்னுடைய வீட்டு நிர்வாகியிடம், “அந்த மனுஷர்களால் எவ்வளவு கொண்டுபோக முடியுமோ அவ்வளவு தானியத்தை அவரவர் பைகளில் நிரப்பு. அதற்கு மேலாக அவரவர் பணத்தைப் போட்டுவிடு.+  ஆனால், சின்னவனுடைய பையில் மட்டும் தானியத்துக்காக அவன் கொடுத்த பணத்தோடு சேர்த்து என்னுடைய வெள்ளிக் கோப்பையையும் போட்டுவிடு” என்று சொன்னார். அந்த நிர்வாகியும் அப்படியே செய்தார்.  பொழுது விடிந்தவுடன், அவர்கள் தங்களுடைய கழுதைகளோடு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.  அவர்கள் அந்த நகரத்தைவிட்டுக் கொஞ்ச தூரம்தான் போயிருப்பார்கள். அப்போது யோசேப்பு அந்த நிர்வாகியிடம், “சீக்கிரம்! அவர்களைத் துரத்திப் பிடித்து, ‘நாங்கள் நல்லது செய்ததுக்கு இப்படியா எங்களுக்குக் கெடுதல் செய்வது?  எங்களுடைய எஜமான் குடிப்பதற்கும் குறிபார்ப்பதற்கும் வைத்திருக்கிற கோப்பையை ஏன் எடுத்துக்கொண்டு வந்தீர்கள்? பெரிய மோசடி செய்திருக்கிறீர்கள்!’ என்று சொல்” என்றார்.  அந்த நிர்வாகி அவர்களைத் துரத்திப் பிடித்து, யோசேப்பு சொன்னபடியே அவர்களிடம் சொன்னார்.  அதற்கு அவர்கள், “எங்கள் எஜமான் இப்படிப் பேசலாமா? உங்கள் அடிமைகளாகிய நாங்கள் இப்படியொரு காரியத்தைச் செய்வோமா?  எங்கள் பைகளில் இருந்த பணத்தைக்கூட கானான் தேசத்திலிருந்து திரும்பக் கொண்டுவந்து தந்தோமே!+ அப்படியிருக்கும்போது, உங்கள் எஜமானுடைய வீட்டிலிருந்து வெள்ளியையோ தங்கத்தையோ திருடிக்கொண்டு வருவோமா?  எங்கள் யாரிடமாவது அது இருந்தால் அவனைக் கொன்றுவிடுங்கள். மற்றவர்களும் உங்கள் எஜமானுக்கு அடிமைகளாக ஆகிவிடுகிறோம்” என்று சொன்னார்கள். 10  அதற்கு அவர், “நீங்கள் சொன்னபடியே செய்யலாம். யாரிடம் அது இருக்கிறதோ அவன் எனக்கு அடிமையாவான். மற்ற எல்லாரும் நிரபராதிகள்” என்று சொன்னார். 11  உடனே எல்லாரும் அவரவர் பைகளைத் தரையில் இறக்கி வைத்து அதை அவிழ்த்தார்கள். 12  மூத்தவன் தொடங்கி சின்னவன் வரைக்கும், ஒவ்வொருவருடைய பையையும் அவர் கவனமாகத் தேடினார். கடைசியில், அந்தக் கோப்பை பென்யமீனின் பையில் கண்டுபிடிக்கப்பட்டது.+ 13  அப்போது, அவர்கள் தங்களுடைய உடையைக் கிழித்துக்கொண்டு, தங்கள் பைகளை மறுபடியும் கழுதைகள்மேல் ஏற்றி நகரத்துக்குத் திரும்பி வந்தார்கள். 14  யூதாவும்+ அவருடைய சகோதரர்களும் யோசேப்பின் வீட்டுக்குள் போனார்கள். அதுவரை யோசேப்பு அங்கேதான் இருந்தார். அவர்கள் அவர்முன் சாஷ்டாங்கமாக விழுந்தார்கள்.+ 15  யோசேப்பு அவர்களைப் பார்த்து, “ஏன் இப்படிச் செய்தீர்கள்? நான் எல்லாவற்றையும் குறிபார்த்துக்+ கண்டுபிடித்துவிடுவேன் என்று உங்களுக்குத் தெரியாதா?” என்று கேட்டார். 16  அதற்கு யூதா, “எங்கள் எஜமானே, உங்களிடம் என்ன சொல்வோம்? என்ன பேசுவோம்? நாங்கள் நிரபராதிகள்* என்று எப்படி நிரூபிப்போம்? உங்கள் அடிமைகளாகிய நாங்கள் முன்பு தப்பு செய்ததால் இப்போது உண்மைக் கடவுள் எங்களைத் தண்டிக்கிறார்.+ இதோ, நாங்களும் இந்தக் கோப்பையை வைத்திருந்தவனும் உங்களுக்கு அடிமைகள்!” என்றார். 17  ஆனால் அவர், “உங்கள் எல்லாரையும் நான் அடிமையாக்க மாட்டேன். யாருடைய பையில் இந்தக் கோப்பை இருந்ததோ அவன் மட்டும்தான் எனக்கு அடிமையாக இருப்பான்.+ மற்றவர்கள் உங்களுடைய அப்பாவிடம் சமாதானத்தோடு திரும்பிப் போகலாம்” என்று சொன்னார். 18  அப்போது யூதா அவருக்குப் பக்கத்தில் போய், “என் எஜமானே, உங்களிடம் கெஞ்சிக் கேட்கிறேன், அடியேன் பேசுவதைக் கொஞ்சம் கேளுங்கள். இந்த அடிமைமேல் கோபப்படாதீர்கள். நீங்கள் பார்வோனுக்குச் சமமானவர்.+ 19  எஜமானாகிய நீங்கள் இந்த அடிமைகளிடம், ‘உங்களுக்கு அப்பா இருக்கிறாரா, இன்னொரு சகோதரன் இருக்கிறானா?’ என்று கேட்டீர்கள். 20  அதற்கு நாங்கள், ‘ஆமாம், ரொம்பவே வயதாகிவிட்ட அப்பாவும், வயதான காலத்தில் அவருக்குக் கடைசியாகப் பிறந்த ஒரு மகனும் இருக்கிறார்கள்.+ அவனுடைய அண்ணன் இறந்துவிட்டான்.+ அவனுடைய அம்மாவுக்குப் பிறந்தவர்களில் இப்போது அவன் மட்டும்தான் உயிரோடு இருக்கிறான்.+ அதனால், எங்கள் அப்பா அவன்மேல் உயிரையே வைத்திருக்கிறார்’ என்று சொன்னோம். 21  அதற்கு நீங்கள் இந்த அடிமைகளிடம், ‘அவனை நான் பார்க்க வேண்டும், என்னிடம் கூட்டிக்கொண்டு வாருங்கள்’ என்று சொன்னீர்கள்.+ 22  ஆனால் நாங்கள் எஜமானாகிய உங்களிடம், ‘அவன் எங்கள் அப்பாவைவிட்டு வர முடியாது. அப்படி வந்தால், அவர் நிச்சயம் செத்துப்போய்விடுவார்’+ என்று சொன்னோம். 23  அப்போது நீங்கள் இந்த அடிமைகளிடம், ‘உங்கள் தம்பியைக் கூட்டிக்கொண்டு வராவிட்டால் என் முகத்திலேயே முழிக்க வேண்டாம்’ என்று சொன்னீர்கள்.+ 24  அதனால், உங்களுடைய அடிமையாகிய எங்கள் அப்பாவிடம் போய், எஜமானாகிய நீங்கள் சொன்னதையெல்லாம் சொன்னோம். 25  பின்பு எங்களுடைய அப்பா எங்களிடம், ‘மறுபடியும் போய், நமக்குக் கொஞ்சம் தானியம் வாங்கிக்கொண்டு வாருங்கள்’ என்றார்.+ 26  அப்போது நாங்கள், ‘எங்களால் போக முடியாது. கடைசித் தம்பி எங்களுடன் வந்தால்தான் போவோம். அவன் எங்களோடு வராவிட்டால் எங்களால் அவருடைய முகத்தில் முழிக்க முடியாது’ என்று சொன்னோம்.+ 27  அப்போது உங்களுடைய அடிமையாகிய எங்கள் அப்பா எங்களிடம், ‘உங்களுக்கே தெரியும், என் மனைவி எனக்கு இரண்டு மகன்களைப் பெற்றுக் கொடுத்தாள்.+ 28  ஆனால், அவர்களில் ஒருவன் என்னைவிட்டுப் போய்விட்டான். அவனை ஏதோவொரு காட்டு மிருகம் கடித்துக் குதறியிருக்கும் என்று நினைத்துக்கொண்டேன்.+ இதுவரைக்கும் நான் அவனைப் பார்க்கவில்லை. 29  இவனையும் நீங்கள் என்னிடமிருந்து கூட்டிக்கொண்டு போய், வழியில் இவனுக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிட்டால், அவ்வளவுதான்! இந்த வயதான காலத்தில், உங்களால் நான் மிகுந்த துக்கத்தோடுதான்+ கல்லறைக்குள்+ போவேன்’ என்றார். 30  உங்கள் அடிமையாகிய எங்கள் அப்பா இவனை உயிருக்கு உயிராக நேசிக்கிறார். அதனால், இவன் இல்லாமல் நான் திரும்பிப் போனால், 31  உடனே அவருடைய உயிர் போய்விடும். இந்த வயதான காலத்தில் எங்கள் அப்பா எங்களால் துக்கத்தோடுதான் கல்லறைக்குள் போவார். 32  உங்கள் அடிமையாகிய நான் என்னுடைய அப்பாவிடம் இவனுக்காக உத்தரவாதம் கொடுத்திருக்கிறேன். ‘இவனைத் திரும்பவும் கூட்டிக்கொண்டுவந்து உங்கள்முன் நிறுத்தாவிட்டால், சாகும்வரைக்கும் அந்தப் பழி என் தலைமேல் இருக்கட்டும்’ என்று சொல்லியிருக்கிறேன்.+ 33  அதனால் என் எஜமானே, தயவுசெய்து இவனுக்குப் பதிலாக என்னை உங்கள் அடிமையாக வைத்துக்கொள்ளுங்கள். இவனை மற்ற சகோதரர்களுடன் அனுப்பி வையுங்கள். 34  இவன் இல்லாமல் நான் எப்படி என் அப்பாவிடம் திரும்பிப் போவேன்? என் அப்பா துக்கத்தோடு செத்துப்போவதை என்னால் பார்க்க முடியாது!” என்று சொன்னார்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “நீதிமான்கள்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா