எபேசியருக்குக் கடிதம் 2:1-22

2  அதோடு, குற்றங்களாலும் பாவங்களாலும் செத்த நிலையில் இருந்தபோதிலும், கடவுள் உங்களுக்கு உயிர் தந்தார்.+  ஒருகாலத்தில் நீங்கள் இந்த உலகம் போகிற போக்கில் போய்க்கொண்டிருந்தீர்கள்.+ காற்றுபோல் நம்மைச் சூழ்ந்திருக்கிற உலகச் சிந்தையை,+ அதாவது கீழ்ப்படியாதவர்களிடம் இப்போது செயல்படுகிற சிந்தையை, ஆளுகிறவனுடைய விருப்பத்தின்படி வாழ்ந்துகொண்டிருந்தீர்கள்.+  ஆம், ஒருகாலத்தில் நாம் எல்லாரும் நம்முடைய பாவ ஆசைகளின்படி நடந்து,+ நம்முடைய உடலும் உள்ளமும் ஆசைப்பட்டதையெல்லாம் செய்துகொண்டிருந்தோம்.+ மற்றவர்களைப் போல நாமும் இயல்பிலேயே கடவுளுடைய கடும் கோபத்துக்கு ஆளாகும் பிள்ளைகளாக இருந்தோம்.+  குற்றங்களால் நாம் செத்த நிலையில்+ இருந்தபோதிலும், மகா இரக்கமுடைய கடவுள்+ நம்மேல் வைத்திருக்கிற அளவுகடந்த அன்பினால்,+  கிறிஸ்துவோடு ஒன்றுபட்டிருக்கிற நமக்கு உயிர் தந்திருக்கிறார். அவருடைய அளவற்ற கருணையால் உங்களைக் காப்பாற்றியிருக்கிறார்.  கிறிஸ்து இயேசுவோடு ஒன்றுபட்டிருக்கிற நம்மை உயிரோடு எழுப்பி, அவரோடு பரலோகத்தில் உட்கார வைத்திருக்கிறார்.+  கிறிஸ்து இயேசுவோடு ஒன்றுபட்டிருக்கும் நமக்குத் தயவோடு அவர் தருகிற அளவற்ற கருணையின் ஈடில்லாத செல்வத்தை இனிவரும் உலகத்தில்* வெளிக்காட்டுவதற்காகவே இப்படிச் செய்திருக்கிறார்.  இந்த அளவற்ற கருணையால்தான் விசுவாசத்தின் மூலம் நீங்கள் மீட்புப் பெற்றிருக்கிறீர்கள்;+ இதை நீங்களாகவே சம்பாதிக்கவில்லை, இது கடவுளுடைய அன்பளிப்பு.  இதைச் செயல்களால் பெற முடியாது.+ அதனால், பெருமை பேச ஒருவனுக்கும் இடமில்லை. 10  நாம் அவருடைய கைவேலைப்பாடாக இருக்கிறோம். நல்ல செயல்கள் செய்வதற்காகப் படைக்கப்பட்டு,+ கிறிஸ்து இயேசுவோடு ஒன்றுபட்டவர்களாக இருக்கிறோம்.+ நாம் செய்ய வேண்டிய அந்த நல்ல செயல்களைக் கடவுள் முன்கூட்டியே தீர்மானித்திருக்கிறார். 11  அதனால், இதை எப்போதும் மனதில் வையுங்கள்: பிறப்பால் நீங்கள் மற்ற தேசத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தீர்கள். மனிதரால் உடலில் “விருத்தசேதனம் செய்யப்பட்டவர்கள்” உங்களை “விருத்தசேதனம் செய்யப்படாதவர்கள்” என்று சொன்னார்கள். 12  நீங்கள் அந்தச் சமயத்தில் கிறிஸ்துவைப் பற்றித் தெரியாதவர்களாகவும், இஸ்ரவேல் தேசத்துக்கு அன்னியர்களாகவும், வாக்குறுதி அடங்கிய ஒப்பந்தங்களுக்குச் சம்பந்தமே இல்லாதவர்களாகவும்,+ நம்பிக்கை இல்லாதவர்களாகவும், கடவுளைப் பற்றித் தெரியாதவர்களாகவும் இந்த உலகத்தில் வாழ்ந்து வந்தீர்கள்.+ 13  ஆனால், ஒருகாலத்தில் கடவுளைவிட்டுத் தூரத்தில் இருந்த நீங்கள் இப்போது கிறிஸ்து இயேசுவோடு ஒன்றுபட்டு கிறிஸ்துவின் இரத்தத்தால் கடவுளுக்குப் பக்கத்தில் வந்திருக்கிறீர்கள். 14  கிறிஸ்துதான் நம்முடைய சமாதானத்துக்குக் காரணமாக இருக்கிறார்.+ இரண்டு தொகுதிகளுக்கும் நடுவில் இருந்த சுவரைத் தகர்த்து,+ அவரே அவர்களை ஒன்றாக்கினார்.+ 15  அவர் தன்னுடைய உடலைப் பலியாகக் கொடுத்து, பகைக்குக் காரணமானதும் கட்டளைகளும் ஆணைகளும் அடங்கியதுமான திருச்சட்டத்தை ஒழித்தார். இரண்டு தொகுதிகளையும் தன்னோடு ஒன்றுபட்ட ஒரே புதிய மக்களாக*+ உருவாக்கி சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக அப்படிச் செய்தார். 16  சித்திரவதைக் கம்பத்தின்*+ மூலம் இரண்டு தொகுதிகளையும் ஒரே மக்களாகக் கடவுளோடு முழுமையாய்ச் சமரசமாக்கினார்; தன்னுடைய மரணத்தின் மூலம் அந்தப் பகையை அழித்தார்.+ 17  அதுமட்டுமல்ல, கடவுளைவிட்டுத் தூரத்தில் இருந்த உங்களிடமும் கடவுளுக்குப் பக்கத்தில் இருந்தவர்களிடமும் வந்து, சமாதானத்தைப் பற்றிய நல்ல செய்தியை அறிவித்தார். 18  இவர் வழியாகத்தான், இரண்டு தொகுதிகளைச் சேர்ந்த நாம் நம்முடைய தகப்பனை அவருடைய ஒரே சக்தியால் அணுகும் உரிமையைப் பெற்றிருக்கிறோம். 19  அதனால், நீங்கள் இனி சம்பந்தமில்லாதவர்களும் கிடையாது, அன்னியர்களும் கிடையாது,+ ஆனால் பரிசுத்தவான்களுடைய சக குடிமக்களாகவும்+ கடவுளுடைய வீட்டாராகவும் இருக்கிறீர்கள்.+ 20  அதோடு, அப்போஸ்தலர்களையும் தீர்க்கதரிசிகளையும் அஸ்திவாரமாக வைத்துக் கட்டப்பட்டிருக்கிறீர்கள்.+ கிறிஸ்து இயேசுவே அதற்கு மூலைக்கல்லாக இருக்கிறார்.+ 21  அவரோடு ஒன்றுபட்டிருக்கிற முழு கட்டிடமும் ஒன்றாக இணைக்கப்பட்டு,+ யெகோவாவுக்கு* பரிசுத்த ஆலயமாக+ உருவாகி வருகிறது. 22  அவரோடு ஒன்றுபட்டிருக்கிற நீங்களும், கடவுள் தன்னுடைய சக்தியின் மூலம் குடியிருக்கிற இடமாக ஒன்றுசேர்த்துக் கட்டப்பட்டு வருகிறீர்கள்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “சகாப்தத்தில்.” சொல் பட்டியலைப் பாருங்கள்.
நே.மொ., “மனிதனாக.”
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா