எபேசியருக்குக் கடிதம் 6:1-24

6  பிள்ளைகளே, நம் எஜமான் விரும்புகிறபடி உங்கள் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் கீழ்ப்படிந்து நடங்கள்,+ இதுதான் சரியானது.  “உங்கள் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மதிப்புக் கொடுங்கள்”+ என்பதுதான் வாக்குறுதியோடு கொடுக்கப்பட்ட முதலாம் கட்டளை.  “நீ சீரும் சிறப்புமாக இருப்பாய்,* பூமியில் நீண்ட காலம் வாழ்வாய்” என்பதுதான் அந்த வாக்குறுதி.  அப்பாக்களே, உங்களுடைய பிள்ளைகளுக்கு எரிச்சலூட்டாதீர்கள்.+ அதற்குப் பதிலாக, யெகோவா* சொல்கிற விதத்தில் அவர்களைக் கண்டித்து,*+ அவர் தருகிற புத்திமதியின்படி* வளர்த்து வாருங்கள்.+  அடிமைகளே, நீங்கள் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிவதுபோல், இந்த உலகத்தில் இருக்கிற உங்கள் எஜமான்களுக்குப் பயத்தோடும் மரியாதையோடும் உண்மை மனதோடும் கீழ்ப்படிந்து நடங்கள்.+  மனிதர்களைப் பிரியப்படுத்துவதற்காக, மற்றவர்கள் பார்க்கும்போது மட்டுமே கீழ்ப்படியாதீர்கள்.+ கிறிஸ்துவின் அடிமைகளாகக் கடவுளுடைய விருப்பத்தை* முழு மூச்சோடு நிறைவேற்றுங்கள்.+  மனிதர்களுக்கு அல்ல, யெகோவாவுக்கே* கீழ்ப்படிவதாக நினைத்து, நல்ல எண்ணத்தோடு வேலை செய்யுங்கள்.+  ஏனென்றால், அடிமையாக இருந்தாலும் சுதந்திரமானவனாக இருந்தாலும் அவனவன் செய்கிற நன்மையின்படியே யெகோவாவிடமிருந்து* அவனுக்குப் பலன் கிடைக்கும்+ என்பதை அறிந்திருக்கிறீர்கள்.  எஜமான்களே, நீங்களும் இதை மனதில் வைத்து உங்கள் அடிமைகளை நடத்துங்கள், அவர்களை மிரட்டாதீர்கள். ஏனென்றால், அவர்களுக்கும் உங்களுக்கும் எஜமான் பரலோகத்தில் இருக்கிறார்+ என்பதையும், அவர் பாரபட்சம் காட்டாதவர் என்பதையும் அறிந்திருக்கிறீர்கள். 10  கடைசியாக நான் சொல்வது இதுதான்: நம் எஜமான் தருகிற மகா பலத்தால் வலிமை+ பெற்றுக்கொண்டே இருங்கள். 11  பிசாசின் சூழ்ச்சிகளை* நீங்கள் உறுதியோடு எதிர்த்து நிற்க வேண்டுமானால், கடவுள் தருகிற முழு கவசத்தையும் போட்டுக்கொள்ளுங்கள்.+ 12  ஏனென்றால், மனிதர்களோடு* அல்ல, அரசாங்கங்களோடும், அதிகாரிகளோடும், இந்த இருண்ட உலகத்தின் தலைவர்களோடும், பரலோகத்தில் இருக்கிற பொல்லாத தூதர் கூட்டத்தோடும்+ நாம் போராட* வேண்டியிருக்கிறது.+ 13  அதனால், கடவுள் தருகிற முழு கவசத்தையும் போட்டுக்கொள்ளுங்கள்;+ அப்போதுதான், பொல்லாத நாளில் அவர்களை உங்களால் எதிர்க்கவும் எல்லாவற்றையும் முழுமையாகச் செய்து முடித்து உறுதியோடு நிற்கவும் முடியும். 14  அதனால், சத்தியத்தை உங்கள் இடுப்புவாராகக்+ கட்டிக்கொண்டும், நீதியை மார்புக் கவசமாகப் போட்டுக்கொண்டும்,+ 15  சமாதானத்தின் நல்ல செய்தியைக் காலணியாகப் போட்டுக்கொண்டும் உறுதியாக நில்லுங்கள்.*+ 16  இவை எல்லாவற்றோடும்கூட, பொல்லாதவன் எறிகிற நெருப்புக் கணைகளையெல்லாம்*+ அணைப்பதற்காக, விசுவாசத்தைப் பெரிய கேடயமாகப் பிடித்துக்கொள்ளுங்கள்.+ 17  அதோடு, மீட்பைத் தலைக்கவசமாக அணிந்துகொள்ளுங்கள்;+ கடவுளுடைய சக்தியால் கொடுக்கப்பட்டிருக்கிற அவருடைய வார்த்தையை+ வாளாக எடுத்துக்கொள்ளுங்கள். 18  அதுமட்டுமல்ல, எல்லா சந்தர்ப்பங்களிலும் கடவுளுடைய சக்தியின் உதவியால்+ எல்லா விதமான ஜெபங்களையும்+ மன்றாட்டுகளையும் ஏறெடுங்கள். அதற்காக விழிப்புடன் இருந்து, பரிசுத்தவான்கள் எல்லாருக்காகவும் எப்போதும் மன்றாடுங்கள். 19  நல்ல செய்தியின் பரிசுத்த ரகசியத்தைத்+ தைரியமாகப் பேசுவதற்குக் கடவுள் என் வாயில் வார்த்தைகளைத் தர வேண்டுமென்று எனக்காகவும் ஜெபம் செய்யுங்கள். 20  இந்த நல்ல செய்திக்காகச் சங்கிலிகளால் கட்டப்பட்டிருக்கிற தூதுவனாகிய+ நான், அதைப் பற்றிப் பேச வேண்டிய விதத்தில் தைரியமாகப் பேசுவதற்கு எனக்காக ஜெபம் செய்யுங்கள். 21  நான் எப்படி இருக்கிறேன், என்ன செய்து வருகிறேன் என்பதையெல்லாம் அன்பான சகோதரரும் நம் எஜமானுடைய உண்மையுள்ள ஊழியருமான தீகிக்கு+ உங்களிடம் சொல்வார்.+ 22  எங்களைப் பற்றிய விஷயங்களைத் தெரியப்படுத்துவதற்கும், உங்கள் இதயங்களுக்கு ஆறுதல் தருவதற்கும்தான் அவரை உங்களிடம் அனுப்புகிறேன். 23  பரலோகத் தகப்பனாகிய கடவுளிடமிருந்தும் நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் சகோதரர்களுக்குச் சமாதானமும் விசுவாசத்தோடுகூடிய அன்பும் கிடைக்கட்டும். 24  நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துமேல் அழியாத அன்பு காட்டுகிற எல்லாருக்கும் கடவுளுடைய அளவற்ற கருணை கிடைக்கட்டும்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “வளமாக வாழ்வாய்.”
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
‘கண்டித்தல்’ என்பதற்கான மூல வார்த்தைக்கு கட்டுப்படுத்துவது, கட்டளையிடுவது, கற்பிப்பது, திருத்துவது, அறிவுறுத்துவது, தண்டிப்பது, புத்தி சொல்லுவது, பயிற்றுவிப்பது என பல அர்த்தங்கள் இருக்கின்றன.
வே.வா., “அறிவுரையின்படி; ஆலோசனையின்படி.” நே.மொ., “அவருடைய சிந்தையை அவர்களுடைய மனதில் பதிய வைக்கும் விதத்தில்.”
வே.வா., “சித்தத்தை.”
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
வே.வா., “சதித்திட்டங்களை.”
நே.மொ., “சதையோடும் இரத்தத்தோடும்.”
நே.மொ., “மல்யுத்தம் செய்ய.”
நே.மொ., “சமாதானத்தின் நல்ல செய்தியை அறிவிக்க உங்கள் கால்களைத் தயார்நிலையில் வைத்துக்கொள்ளுங்கள்.”
வே.வா., “அம்புகளையெல்லாம்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா