தானியேல் 8:1-27

8  தானியேலாகிய எனக்கு அந்தத் தரிசனம் கிடைத்த+ பின்பு, பெல்ஷாத்சார் ராஜா+ ஆட்சி செய்த மூன்றாம் வருஷத்தில் இன்னொரு தரிசனம் கிடைத்தது.  நான் ஏலாம் மாகாணத்திலுள்ள+ சூசான்*+ கோட்டையில்* இருந்தேன். ஊலாய் ஆற்றின்* பக்கத்தில் அந்தத் தரிசனத்தைப் பார்த்தேன்.  நான் நிமிர்ந்து பார்த்தபோது, அந்த ஆற்றுக்கு முன்னால் ஒரு செம்மறியாட்டுக் கடா+ நின்றுகொண்டிருந்தது. அதற்கு நீளமான இரண்டு கொம்புகள் இருந்தன.+ ஒரு கொம்பு மற்றொன்றைவிட நீளமாக இருந்தது. அது பிற்பாடு முளைத்த கொம்பு.+  அந்தச் செம்மறியாட்டுக் கடா மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் பாய்ந்து போனதைப் பார்த்தேன். எந்தக் காட்டு மிருகத்தாலும் அதன் முன்னால் நிற்க முடியவில்லை. அதனுடைய தாக்குதலிலிருந்து காப்பாற்றும் சக்தி யாருக்குமே இருக்கவில்லை.+ அது தன் இஷ்டம்போல் நடந்துகொண்டது, தற்பெருமையோடு திரிந்தது.  அதற்குப் பின்பு, மேற்கிலிருந்து ஒரு வெள்ளாட்டுக் கடா+ வந்தது. தரையில் கால் படாமலேயே பூமியெங்கும் அது போனது. அதன் கண்களுக்கு இடையில் எடுப்பான ஒரு கொம்பு இருந்தது.+  அது ஆற்றின் முன்னால் நின்றுகொண்டிருந்த இரண்டு கொம்புகளுள்ள செம்மறியாட்டுக் கடாவுக்கு நேராக ஆக்ரோஷமாய்ப் பாய்ந்து வந்தது.  அது செம்மறியாட்டுக் கடாவின் பக்கத்தில் போய், கடும் வெறுப்போடு அதை முட்டி, அதன் இரண்டு கொம்புகளையும் முறித்துப்போட்டது. அதன்முன் நிற்க செம்மறியாட்டுக் கடாவுக்குப் பலமே இருக்கவில்லை. அது செம்மறியாட்டுக் கடாவைத் தரையில் தள்ளி, மிதித்துப்போட்டது. அதனுடைய தாக்குதலிலிருந்து செம்மறியாட்டுக் கடாவைக் காப்பாற்ற யாருமே இருக்கவில்லை.  அந்த வெள்ளாட்டுக் கடா தன்னையே அளவுக்கதிகமாக உயர்த்திக்கொண்டது. ஆனால், அது பலம் அடைந்தவுடனேயே அதனுடைய பெரிய கொம்பு முறிக்கப்பட்டது. அதற்குப் பதிலாக, எடுப்பான நான்கு கொம்புகள் பூமியின் நான்கு திசைகளுக்கு* நேராக முளைத்தன.+  அவற்றில் ஒரு கொம்பிலிருந்து இன்னொரு கொம்பு முளைத்தது. அது சிறியதாக இருந்தது. அது தெற்குக்கு நேராகவும் கிழக்குக்கு நேராகவும் சிங்கார* தேசத்துக்கு நேராகவும் பலத்தைக் காட்டியது.+ 10  அது வானத்தின் படையை எட்டுமளவுக்கு உயர்ந்தது. அந்தப் படையில் கொஞ்சத்தையும் நட்சத்திரங்கள் சிலவற்றையும் பூமிக்குத் தள்ளி அவற்றை மிதித்துப்போட்டது. 11  அந்தப் படையின் அதிபதியையே எதிர்க்கும் அளவுக்கு அது தன்னை உயர்த்தியது. வழக்கமான* பலியை அவரிடமிருந்து நீக்கியது. அவருடைய பரிசுத்த இடத்தை நாசமாக்கியது.+ 12  அத்துமீறல் காரணமாக, படையும் வழக்கமான* பலியும் அதனிடம் கொடுக்கப்பட்டன. அது சத்தியத்தைத் தரையில் தள்ளிக்கொண்டே இருந்தது. தன் இஷ்டப்படி நடந்து, வெற்றி பெற்றது. 13  பின்பு, ஒரு பரிசுத்தவான் பேசுவதைக் கேட்டேன். அவரிடம் இன்னொரு பரிசுத்தவான், “வழக்கமான* பலியைப் பற்றியும், நாசமுண்டாக்குகிற அத்துமீறலைப் பற்றியும் இந்தத் தரிசனத்தில் காட்டப்பட்ட சம்பவங்கள் இன்னும் எவ்வளவு காலத்துக்குத் தொடரும்?+ பரிசுத்த இடமும் படையும் எவ்வளவு காலத்துக்கு மிதிக்கப்படும்?” என்று கேட்டார். 14  அப்போது அவர் என்னிடம், “அவை 2,300 மாலையும் காலையும் தொடரும். அதன்பின், பரிசுத்த இடம் பழையபடி நல்ல நிலையை அடையும்” என்றார். 15  தானியேலாகிய நான் அந்தத் தரிசனத்தைப் பார்த்து, அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள முயற்சி செய்துகொண்டிருந்தேன். அப்போது திடீரென்று, மனிதனைப் போன்ற ஒருவர் என் முன்னால் நிற்பதைப் பார்த்தேன். 16  பின்பு, ஊலாய் ஆற்றின்+ நடுவிலிருந்து ஒரு மனிதக் குரல் கேட்டது. அது, “காபிரியேலே,+ இவன் பார்த்ததை இவனுக்குப் புரிய வை”+ என்றது. 17  அவர் உடனே, நான் நின்றுகொண்டிருந்த இடத்துக்கு வந்தார். அவர் வந்ததும் நான் நடுநடுங்கிப்போய் சாஷ்டாங்கமாக விழுந்தேன். அவர் என்னிடம், “மனிதகுமாரனே, இந்தத் தரிசனம் முடிவு காலத்தைப் பற்றியது என்பதைப் புரிந்துகொள்” என்றார்.+ 18  அவர் என்னிடம் பேசிக்கொண்டு இருந்தபோதே, கீழே விழுந்த நிலையில் நான் நன்றாகத் தூங்கிவிட்டேன். அவர் என்னைத் தொட்டு எழுப்பி, முன்பு நின்ற அதே இடத்தில் நிற்க வைத்தார்.+ 19  பின்பு என்னிடம், “குறிக்கப்பட்ட முடிவு காலத்தில் நடக்கப்போகும் சம்பவங்களைத்தான் நீ பார்த்தாய். அதனால், கடவுளுடைய கோபக் காலத்தின் கடைசிக் கட்டத்தில் நடக்கப்போகிறவற்றை+ உனக்குச் சொல்கிறேன். 20  நீ பார்த்த இரண்டு கொம்புகளுள்ள செம்மறியாட்டுக் கடா மேதிய பெர்சிய+ ராஜாக்களைக் குறிக்கிறது. 21  ரோமம் நிறைந்த வெள்ளாட்டுக் கடா கிரேக்கு தேசத்து ராஜாவைக் குறிக்கிறது.+ அதன் கண்களுக்கு இடையில் இருந்த பெரிய கொம்பு அதன் முதல் ராஜாவைக் குறிக்கிறது.+ 22  ஒரு கொம்பு முறிக்கப்பட்டு அதற்குப் பதிலாக நான்கு கொம்புகள் முளைத்ததன்+ அர்த்தம் என்னவென்றால், அவருடைய சாம்ராஜ்யத்திலிருந்து நான்கு ராஜ்யங்கள் எழும்பும், ஆனால் அவருக்கிருந்த வல்லமை அவற்றுக்கு இருக்காது. 23  அவர்களுடைய அரசாட்சியின் கடைசிக் காலத்தில், அத்துமீறி நடக்கிறவர்களுடைய குற்றங்கள் உச்சத்தை எட்டும்போது, தெளிவில்லாத வார்த்தைகளைக்கூட புரிந்துகொள்ளும் ஒரு ராஜா* தோன்றுவான். அவன் பார்ப்பதற்குக் கொடூரமாக இருப்பான். 24  அவனுடைய அதிகாரம் கூடிக்கொண்டே போகும், ஆனால் சொந்த பலத்தால் அந்த அதிகாரத்தைப் பெற மாட்டான். அவன் பயங்கரமான சீரழிவை உண்டாக்குவான், எல்லாவற்றிலும் வெற்றி அடைவான், சாமர்த்தியமாக நடந்துகொள்வான். பலவான்களுக்கும் பரிசுத்தவான்களுக்கும் சீரழிவைக் கொண்டுவருவான்.+ 25  மிகத் தந்திரமாக ஏமாற்றி வெற்றி பெறுவான். இதயத்தில் பெருமைகொள்வான். அமைதியான ஒரு காலகட்டத்தில்* பலரை அழித்துப்போடுவான். அதிபதிகளுக்கெல்லாம் அதிபதியையே எதிர்த்து நிற்பான். ஆனால், மனிதனுடைய கை படாமலேயே அவன் முறிக்கப்படுவான். 26  மாலையையும் காலையையும் பற்றிய தரிசனத்தில் சொல்லப்பட்ட விஷயம் உண்மை. ஆனால், அந்தத் தரிசனத்தை நீ ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால், அது பல நாட்களுக்குப் பின்பு நடக்கப்போகிறது”+ என்றார். 27  தானியேலாகிய நான் களைத்துப்போய் சில நாட்களுக்குச் சுகமில்லாமல் ஆகிவிட்டேன்.+ பின்பு, எழுந்து ராஜாவின் வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்தேன்.+ ஆனாலும், அந்தத் தரிசனத்தைப் பார்த்ததால் பிரமை பிடித்தவன்போல் இருந்தேன். யாராலும் அந்தத் தரிசனத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “சூசா.”
வே.வா., “அரண்மனையில்.”
இது கால்வாயாகவும் இருக்கலாம்.
நே.மொ., “வானத்தின் நான்கு காற்றுகளுக்கு.”
வே.வா., “அழகான.”
வே.வா., “தினமும் செலுத்தப்படுகிற.”
வே.வா., “தினமும் செலுத்தப்படுகிற.”
வே.வா., “தினமும் செலுத்தப்படுகிற.”
வே.வா., “சாமர்த்தியமாகச் சூழ்ச்சி செய்யும் ஒரு ராஜா.”
அல்லது, “முன்னெச்சரிக்கை தராமல்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா