நீதிமொழிகள் 23:1-35

23  ராஜாவோடு விருந்து சாப்பிட உட்காரும்போது,சூழ்நிலையை மனதில் வைத்துக் கவனமாக நடந்துகொள்.   நீ பயங்கர பசியோடு இருந்தாலும்,உன் வாயைக் கட்டிக்கொள்.*   அவர் கொடுக்கிற ருசியான உணவுகளைச் சாப்பிடத் துடிக்காதே.அவை உன்னை மோசம்போக்கிவிடும்.   சொத்து சேர்ப்பதற்காக உழைத்து உழைத்துக் களைத்துப்போகாதே.+ அப்படிச் செய்வதை நிறுத்திவிட்டு புத்தியோடு நடந்துகொள்.*   இல்லாமல்போகும் ஒன்றின்மேல் நீ ஏன் கண்ணை வைக்க வேண்டும்?+அது கழுகைப் போல் இறக்கை விரித்து வானத்துக்குப் பறந்துவிடுமே!+   கஞ்சன் தரும் உணவைச் சாப்பிடாதே.அவன் கொடுக்கிற ருசியான உணவுகளைச் சாப்பிடத் துடிக்காதே.   ஏனென்றால், அவன் எல்லாவற்றுக்கும் கணக்குப் பார்ப்பான். “நன்றாகச் சாப்பிடு, குடி” என்று வெறும் பேச்சுக்குத்தான் சொல்வான்.   நீ அதைச் சாப்பிட்டபின் வாந்தி எடுத்துவிடுவாய்.நீ பாராட்டிப் பேசியதெல்லாம் வீணாகிவிடும்.   முட்டாளின் காதில் விழும்படி எதையும் பேசாதே.+ஏனென்றால், நீ சொல்கிற ஞானமான வார்த்தைகளை அவன் மதிக்க மாட்டான்.+ 10  பூர்வ காலத்தில் வைக்கப்பட்ட எல்லைக் குறியைத் தள்ளி வைக்காதே.+அப்பா இல்லாத பிள்ளைகளின் நிலத்தை ஆக்கிரமிக்காதே. 11  ஏனென்றால், அவர்களை விடுவிக்கிறவர்* பலம்படைத்தவர்.அவர்களுக்காக அவரே உன்னோடு வாதாடுவார்.+ 12  புத்திமதியை உன் இதயத்தில் வை.அறிவுள்ள வார்த்தைகளை உன் காதில் வாங்கிக்கொள். 13  பிள்ளையைத் தண்டிக்காமல் இருக்காதே.+ நீ பிரம்பால் அடித்தால் அவன் ஒன்றும் செத்துவிட மாட்டான். 14  நீ அவனைப் பிரம்பால் அடித்தால்தான்கல்லறைக்குப் போகாதபடி அவனைக் காப்பாற்ற முடியும். 15  என் மகனே, உன் இதயம் ஞானமுள்ளதாக இருந்தால்,என் இதயம் சந்தோஷத்தில் பூரிக்கும்.+ 16  உன் உதடுகள் சரியானதைப் பேசினால்,என் உள்ளம்* சந்தோஷத்தில் துள்ளும். 17  உன் இதயம் பாவிகள்மேல் பொறாமைப்படாமல் இருக்கட்டும்.+நாள் முழுவதும் நீ யெகோவாவுக்குப் பயந்து நட.+ 18  அப்போது உன் எதிர்காலம் நன்றாக இருக்கும்.+உன் நம்பிக்கை வீண்போகாது. 19  என் மகனே, நான் சொல்வதைக் கேட்டு ஞானம் அடைந்து,உன் இதயத்தைச் சரியான வழியில் நடத்து. 20  அளவுக்கு அதிகமாகத் திராட்சமது குடிக்கிறவர்களோடும்,+அளவுக்கு அதிகமாக இறைச்சி சாப்பிடுகிறவர்களோடும் சேர்ந்துகொள்ளாதே.+ 21  ஏனென்றால், குடிகாரர்களும் பெருந்தீனிக்காரர்களும் ஏழைகளாவார்கள்.+தூக்க மயக்கத்திலேயே இருப்பவர்கள் கந்தல் துணியைத்தான் உடுத்துவார்கள். 22  உன்னைப் பெற்ற அப்பாவின் பேச்சைக் கேள்.உன் அம்மாவுக்கு வயதாகிவிட்டதால் அவளை அலட்சியம் செய்யாதே.+ 23  சத்தியத்தை வாங்கு,* அதை ஒருபோதும் விற்காதே.+அதேபோல், ஞானத்தையும் புத்திமதியையும் புத்தியையும்* வாங்கு.+ 24  நீதிமானைப் பெற்றவன் நிச்சயம் சந்தோஷப்படுவான்.ஞானமுள்ள மகனைப் பெற்றவன் பூரித்துப்போவான். 25  உன் அப்பாவும் அம்மாவும் பூரித்துப்போவார்கள்.உன்னைப் பெற்றெடுத்தவள் சந்தோஷப்படுவாள். 26  என் மகனே, உன் இதயத்தை எனக்குத் தா.உன் கண்கள் என் வழிகளை ரசிக்கட்டும்.+ 27  விபச்சாரி ஓர் ஆழமான படுகுழி.ஒழுக்கங்கெட்ட பெண் ஒரு குறுகலான கிணறு.+ 28  திருடனைப் போல் அவள் பதுங்கியிருக்கிறாள்.+நிறைய ஆண்களைத் துரோகம் செய்ய வைக்கிறாள். 29  யாருக்கு வேதனை? யாருக்குக் கவலை? யாருக்குச் சண்டை சச்சரவுகள்? யாருக்குப் புலம்பல்கள்? யாருக்குத் தேவையில்லாத காயங்கள்? யாருக்குச் சிவந்த* கண்கள்? 30  மதுவே கதி என்று கிடப்பவர்களுக்குத்தான்.+அதிக போதையேற்றும் மதுவை* நாடிப் போகிறவர்களுக்குத்தான். 31  திராட்சமதுவின் சிவப்பு நிறத்தைப் பார்க்காதே.அது கிண்ணத்தில் பளபளக்கும், தொண்டையில் இதமாக இறங்கும். 32  கடைசியில், பாம்புபோல் கடிக்கும்.விரியன் பாம்புபோல் விஷத்தைக் கக்கும். 33  உன் கண்கள் வினோதமான காட்சிகளைப் பார்க்கும்.உன் இதயம் தாறுமாறாகப் பேசும்.+ 34  நடுக்கடலில் படுத்திருப்பவனைப் போலவும்,பாய்மரக் கம்பத்தின் உச்சியில் படுத்திருப்பவனைப் போலவும் நீ இருப்பாய். 35  “என்னை அடித்தார்கள், ஆனால் எனக்கு உறைக்கவில்லை. என்னை உதைத்தார்கள், ஆனால் நான் உணரவில்லை. நான் எப்போது எழுந்திருப்பேன்?+ நான் மறுபடியும் குடிக்க வேண்டும்!” என்று நீ சொல்வாய்.

அடிக்குறிப்புகள்

நே.மொ., “உன் தொண்டையில் கத்தியை வை.”
அல்லது, “உன் சொந்த புத்தியை நம்பாதே.”
வே.வா., “மீட்கிறவர்.”
நே.மொ., “சிறுநீரகம்.”
வே.வா., “சம்பாதி.”
வே.வா., “புரிந்துகொள்ளுதலையும்.”
வே.வா., “மங்கிப்போன.”
வே.வா., “கலப்புத் திராட்சமதுவை.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா