நெகேமியா 2:1-20

2  அது அர்தசஷ்டா ராஜா+ ஆட்சி செய்த 20-ஆம் வருஷம்,+ நிசான்* மாதம். ராஜாவுக்கு முன்னால் திராட்சமது வைக்கப்பட்டிருந்தது. எப்போதும்போல் நான் திராட்சமதுவை எடுத்து ராஜாவுக்குக் கொடுத்தேன்.+ அன்று நான் துக்கமாக இருந்தேன். ராஜாவுக்கு முன்னால் ஒருநாளும் நான் அப்படி இருந்ததே இல்லை.  அதனால் ராஜா என்னிடம், “உன் உடம்புக்குத்தான் ஒன்றுமில்லையே, அப்புறம் ஏன் உன் முகம் இப்படி வாடியிருக்கிறது? உன் மனதுதான்* சரியில்லை என்று நினைக்கிறேன்” என்றார். அதைக் கேட்டதும் நான் ரொம்பவே பயந்துபோனேன்.  உடனே அவரிடம், “ராஜா நீடூழி வாழ்க! என்னுடைய முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்ட நகரம் பாழடைந்து கிடக்கிறது, அதன் நுழைவாசல்கள் எரிந்து நாசமாகிவிட்டன.+ அப்படியிருக்கும்போது என் முகம் வாடாமல் இருக்குமா, ராஜாவே?” என்று கேட்டேன்.  அதற்கு ராஜா, “நான் உனக்கு ஏதாவது செய்ய வேண்டுமா?” என்று கேட்டார். உடனடியாக, பரலோகத்தின் கடவுளிடம் ஜெபம் செய்தேன்.+  பின்பு ராஜாவிடம், “உங்களுக்கு நல்லதாகப் பட்டால், என்மேல் உங்களுக்குப் பிரியம் இருந்தால், யூதாவுக்குப் போய் என் முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்ட நகரத்தைத் திரும்பக் கட்டுவதற்கு+ என்னை அனுப்புங்கள்” என்று சொன்னேன்.  அப்போது, பட்டத்து ராணியும் ராஜாவின் பக்கத்தில் உட்கார்ந்திருந்தாள். ராஜா என்னிடம், “அங்கே போவதற்கு எத்தனை நாளாகும், எப்போது திரும்பி வருவாய்?” என்று கேட்டார். என்னை அனுப்ப ராஜா விரும்புகிறார் என்று தெரிந்ததும்,+ திரும்பி வர இவ்வளவு காலம்+ ஆகும் என்று சொன்னேன்.  பின்பு ராஜாவிடம், “நான் ஆற்றுக்கு அப்பாலுள்ள* பிரதேசத்தின்+ வழியாகத்தான் யூதாவுக்குப் போக வேண்டும். அதனால் உங்களுக்கு நல்லதாகப் பட்டால், அந்தப் பிரதேசத்தின் வழியாகப் போக என்னை அனுமதிக்கும்படி அங்கே இருக்கிற ஆளுநர்களுக்குக் கடிதங்களை எழுதிக் கொடுங்கள்.  ஆலயத்தைச் சேர்ந்த கோட்டையின் கதவுகளுக்கும்,+ நகரத்தின் மதில்களுக்கும்,+ நான் தங்கப்போகிற வீட்டுக்கும் வேண்டிய மரச்சட்டங்களைத் தரும்படி ராஜாவுடைய வன* அதிகாரியான ஆசாபுக்கும் கடிதம் எழுதிக் கொடுங்கள்” என்று கேட்டுக்கொண்டேன். என் கடவுள் எனக்கு உறுதுணையாக இருந்ததால்+ ராஜா அவற்றை எழுதிக் கொடுத்தார்.+  அதுமட்டுமல்ல, என்னோடு படைத் தலைவர்களையும் குதிரைவீரர்களையும் அனுப்பினார். நான் அங்கிருந்து புறப்பட்டு ஆற்றுக்கு அப்பாலுள்ள பிரதேசத்தின் ஆளுநர்களிடம் வந்து ராஜாவின் கடிதங்களைக் கொடுத்தேன். 10  இஸ்ரவேல் ஜனங்களுக்கு நல்லது செய்ய ஒருவர் வந்திருப்பதை ஓரோனியனான சன்பல்லாத்தும்+ அம்மோனிய+ அதிகாரியான தொபியாவும்+ கேள்விப்பட்டபோது மிகவும் எரிச்சல் அடைந்தார்கள். 11  கடைசியில், நான் எருசலேமுக்கு வந்து சேர்ந்தேன். அங்கே மூன்று நாட்கள் தங்கினேன். 12  ராத்திரியில் எழுந்து, சில ஆட்களைக் கூட்டிக்கொண்டு வெளியே கிளம்பினேன். ஆனால் எருசலேமுக்காக நான் என்னென்ன செய்ய வேண்டுமென்று என் கடவுள் என் உள்ளத்தில் உணர்த்தினாரோ, அதையெல்லாம் நான் யாரிடமும் சொல்லவில்லை. நான் ஏறிப் போன கழுதையைத் தவிர வேறெந்த மிருகமும் என்னிடம் இல்லை. 13  அன்றைக்கு ராத்திரி ‘பள்ளத்தாக்கு நுழைவாசல்’+ வழியாக ‘பெரிய பாம்பின் நீரூற்றை’ கடந்து ‘குப்பைமேட்டு நுழைவாசலுக்கு’+ வந்து சேர்ந்தேன். இடிந்து கிடக்கும் எருசலேம் மதில்களையும் நெருப்பில் எரிக்கப்பட்டிருந்த அதன் நுழைவாசல்களையும்+ பார்வையிட்டேன். 14  அங்கிருந்து ‘நீரூற்று நுழைவாசலுக்கும்’+ ‘ராஜாவின் குளத்துக்கும்’ போனேன். ஆனால், என்னுடைய கழுதை போவதற்கு அங்கு இடமே இருக்கவில்லை. 15  ஆனாலும், அன்றைக்கு ராத்திரி பள்ளத்தாக்கின்*+ வழியாகவே போய் மதில்களைப் பார்வையிட்டேன். பின்பு, ‘பள்ளத்தாக்கு நுழைவாசல்’ வழியாகத் திரும்பி வந்துவிட்டேன். 16  நான் எங்கே போனேன், என்ன செய்தேன் என்றெல்லாம் துணை அதிகாரிகளுக்குத்+ தெரியாது. ஏனென்றால், அவர்களிடமும் யூதர்களிடமும் குருமார்களிடமும் முக்கியப் பிரமுகர்களிடமும் மற்ற வேலையாட்களிடமும் அதுவரை நான் எதையுமே சொல்லவில்லை. 17  கடைசியில் அவர்களிடம், “நம்முடைய நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பது உங்களுக்கே தெரியும். எருசலேம் பாழாய்க் கிடப்பதையும், அதன் நுழைவாசல்கள் எரிந்து நாசமாகியிருப்பதையும் நீங்களே பார்க்கிறீர்கள். இனியும் இந்தக் கேவலமான நிலைமை நமக்கு வேண்டாம். வாருங்கள், எருசலேமின் மதில்களைத் திரும்பக் கட்டுவோம்” என்று சொன்னேன். 18  பின்பு, என் கடவுள் எனக்கு எப்படி உறுதுணையாக இருந்தார்*+ என்பதையும், ராஜா என்னிடம் என்ன சொன்னார்+ என்பதையும் அவர்களிடம் சொன்னேன். அதற்கு அவர்கள், “நாம் உடனடியாகப் போய் மதிலைக் கட்ட ஆரம்பிக்கலாம்” என்று சொல்லி, அந்த நல்ல வேலையைச் செய்ய ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்தினார்கள்.+ 19  இந்த விஷயத்தை ஓரோனியனான சன்பல்லாத்தும், அம்மோனிய+ அதிகாரியான தொபியாவும்,+ அரேபியனான கேஷேமும்+ கேள்விப்பட்டபோது எங்களைக் கேலி செய்தார்கள்.+ எங்களைக் கேவலமாகப் பேசி, “என்ன செய்கிறீர்கள்? ராஜாவுக்கு எதிராகக் கலகம் செய்கிறீர்களோ?” என்று கேட்டார்கள்.+ 20  அதற்கு நான், “வேலையை நல்லபடியாக முடிக்க பரலோகத்தின் கடவுள் எங்களுக்கு உதவுவார்.+ அவருடைய ஊழியர்களான நாங்கள் எருசலேம் நகரத்தைத் திரும்பக் கட்டத்தான் போகிறோம். இங்கே உங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை, உரிமையும் இல்லை; எருசலேமின் வரலாற்றில் உங்களுக்கு இடமும் இல்லை”*+ என்று சொன்னேன்.

அடிக்குறிப்புகள்

இணைப்பு B15-ஐப் பாருங்கள்.
நே.மொ., “இதயம்தான்.”
அதாவது, “யூப்ரடிஸ் ஆற்றுக்கு மேற்கிலுள்ள.”
வே.வா., “ராஜ பூங்காவின்.”
அதாவது, “காட்டாற்றுப் பள்ளத்தாக்கின்.”
நே.மொ., “நன்மை செய்யும் என் கடவுளுடைய கை எப்படி என்மேல் இருந்தது.”
வே.வா., “எருசலேமில் உங்கள் நினைவாக ஒன்றும் இருக்காது.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா