யாத்திராகமம் 32:1-35

32  பல நாட்களாகியும் மோசே மலையிலிருந்து இறங்கி வராததால்+ ஜனங்கள் ஆரோனைச் சூழ்ந்துகொண்டு, “எகிப்திலிருந்து எங்களைக் கூட்டிக்கொண்டு வந்த மோசேக்கு என்ன ஆனதோ தெரியவில்லை. எங்களை வழிநடத்துவதற்கு ஒரு தெய்வத்தைச் செய்துகொடுங்கள்”+ என்றார்கள்.  அதற்கு ஆரோன், “உங்களுடைய மனைவிமக்களின் காதுகளில் இருக்கிற தங்கத் தோடுகளைக்+ கழற்றி என்னிடம் கொண்டுவாருங்கள்” என்றார்.  அதனால், ஜனங்கள் எல்லாரும் தாங்கள் போட்டிருந்த தங்கத் தோடுகளைக் கழற்றி ஆரோனிடம் கொடுத்தார்கள்.  ஆரோன் அந்தத் தங்கத்தை வாங்கி, செதுக்கும் கருவியால் செதுக்கி, ஒரு கன்றுக்குட்டி சிலையைச் செய்தார்.+ அப்போது ஜனங்களில் சிலர், “இஸ்ரவேலர்களே, உங்களை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்த தெய்வம் இதுதான்!” என்று சொன்னார்கள்.+  ஆரோன் அதைப் பார்த்தபோது, அந்தச் சிலைக்கு முன்னால் ஒரு பலிபீடத்தைக் கட்டினார். பின்பு, “நாளைக்கு யெகோவாவுக்குப் பண்டிகை கொண்டாடுவோம்” என்று அறிவித்தார்.  அதனால், ஜனங்கள் விடியற்காலையிலேயே எழுந்து தகன பலிகளையும் சமாதான பலிகளையும் செலுத்தினார்கள். அதன்பின் சாப்பிட்டார்கள், குடித்தார்கள், சந்தோஷமாக இருந்தார்கள்.+  அப்போது யெகோவா மோசேயிடம், “நீ கீழே இறங்கிப் போ. எகிப்திலிருந்து நீ கூட்டிக்கொண்டு வந்த ஜனங்கள் தறிகெட்டுப் போய்விட்டார்கள்.+  இவ்வளவு சீக்கிரத்தில் என் வழியைவிட்டு விலகிவிட்டார்கள்!+ கன்றுக்குட்டி சிலையைச் செய்து அதை வணங்குகிறார்கள். அதற்குப் பலி செலுத்தி, ‘இஸ்ரவேலர்களே, உங்களை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்த தெய்வம் இதுதான்!’ என்று சொல்லிக்கொள்கிறார்கள்” என்றார்.  அதோடு யெகோவா மோசேயிடம், “இந்த ஜனங்கள் பிடிவாதக்காரர்கள்*+ என்று எனக்குத் தெரியும். 10  இவர்கள்மேல் என் கோபம் பற்றியெரிகிறது, இவர்களை அடியோடு அழிக்கலாம் என்றிருக்கிறேன். அதேசமயத்தில், உன் மூலமாக ஒரு மாபெரும் தேசத்தை உருவாக்கப்போகிறேன்”+ என்றார். 11  அப்போது, மோசே தன் கடவுளாகிய யெகோவாவிடம் இப்படிக் கெஞ்சினார்:+ “யெகோவாவே, இந்த ஜனங்களை மகா வல்லமையோடும் கைபலத்தோடும் எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்தவர் நீங்கள்தானே? அப்படியிருக்கும்போது, இவர்கள்மேல் நீங்கள் இந்தளவுக்குக் கோபப்படலாமா?+ 12  எகிப்தியர்கள் உங்களைப் பற்றித் தப்பாகப் பேசுவதற்கு ஏன் இடம் தர வேண்டும்? அவர்கள், ‘இஸ்ரவேலர்களை மலையில் கொன்றுபோட்டு இந்தப் பூமியிலிருந்தே ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தோடுதான் அவர்களுடைய கடவுள் அவர்களைக் கூட்டிக்கொண்டு போனார்’ என்று சொல்வார்களே.+ அதனால் உங்களுடைய கடும் கோபத்தை விட்டுவிடுங்கள். தயவுசெய்து, இந்த ஜனங்களை அழிக்க வேண்டுமென்ற உங்கள் முடிவை மாற்றிக்கொள்ளுங்கள். 13  உங்கள் ஊழியர்களான ஆபிரகாமையும் ஈசாக்கையும் இஸ்ரவேலையும் நினைத்துப் பாருங்கள். அவர்களிடம், ‘உங்கள் சந்ததியை வானத்திலுள்ள நட்சத்திரங்களைப் போலப் பெருகப் பண்ணுவேன்,+ நான் தேர்ந்தெடுத்த இந்தத் தேசம் முழுவதையும் உங்கள் சந்ததிக்கு நிரந்தர சொத்தாகத் தருவேன்’+ என்று உங்கள்மேல் சத்தியம் செய்து கொடுத்தீர்களே” என்றார். 14  அதனால், யெகோவா தன்னுடைய முடிவை மாற்றிக்கொண்டு தன் ஜனங்களை அழிக்காமல் விட்டுவிட்டார்.+ 15  அதன்பின், மோசே இரண்டு சாட்சிப் பலகைகளையும்+ கையில் பிடித்துக்கொண்டு மலையிலிருந்து கீழே இறங்கினார்.+ அந்தக் கற்பலகைகளின் இரண்டு பக்கங்களிலும், அதாவது முன்புறத்திலும் பின்புறத்திலும், எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. 16  அந்தக் கற்பலகைகள் கடவுளால் செய்யப்பட்டவை. அதன்மேல் இருந்த எழுத்துக்கள் அவரால் பொறிக்கப்பட்டவை.+ 17  ஜனங்கள் போடுகிற சத்தத்தை யோசுவா கேட்டபோது அவர் மோசேயிடம், “முகாமில் போர் சத்தம் கேட்கிறதே” என்றார். 18  அதற்கு மோசே, “அது வெற்றிப் பாடலின் சத்தம் போலவும் தெரியவில்லை,தோல்விப் பாடலின்* சத்தம் போலவும் தெரியவில்லை.வேறு விதமான பாடல் சத்தம்தான் கேட்கிறது” என்றார். 19  முகாமை நெருங்கியவுடன் கன்றுக்குட்டி சிலையையும்+ ஜனங்களின் ஆட்டம்பாட்டத்தையும் அவர் பார்த்தார். அப்போது, அவருக்குக் கோபம் பற்றிக்கொண்டு வந்தது. உடனே, தன் கையிலிருந்த கற்பலகைகளை மலை அடிவாரத்தில் வீசியெறிந்தார். அவை துண்டு துண்டாக உடைந்து சிதறின.+ 20  பின்பு, அவர்கள் செய்த கன்றுக்குட்டி சிலையை நெருப்பில் சுட்டெரித்து, பொடிப் பொடியாக நொறுக்கி,+ தண்ணீர்மேல் தூவி, இஸ்ரவேலர்களைக் குடிக்கச் சொன்னார்.+ 21  அதன்பின் அவர் ஆரோனிடம், “இந்த ஜனங்கள் உங்களுக்கு என்ன செய்தார்கள்? இவர்கள்மேல் இவ்வளவு பெரிய பாவத்தைச் சுமத்திவிட்டீர்களே” என்றார். 22  அதற்கு ஆரோன், “எஜமானே, கோபப்படாதீர்கள். இந்த ஜனங்களுடைய கெட்ட புத்தி உங்களுக்கே தெரியும்.+ 23  அவர்கள் என்னிடம், ‘எகிப்திலிருந்து எங்களைக் கூட்டிக்கொண்டு வந்த மோசேக்கு என்ன ஆனதோ தெரியவில்லை. எங்களை வழிநடத்துவதற்கு ஒரு தெய்வத்தைச் செய்துகொடுங்கள்’+ என்று கேட்டார்கள். 24  அதனால் நான் அவர்களிடம், ‘நீங்கள் போட்டிருக்கிற தங்க நகைகளைக் கழற்றிக் கொடுங்கள்’ என்றேன். அவர்கள் கொடுத்த தங்கத்தை நெருப்பில் போட்டேன், இந்தக் கன்றுக்குட்டி வந்தது” என்று சொன்னார். 25  ஆரோன் கண்டிக்காமல் விட்டுவிட்டதால் அந்த ஜனங்கள் தறிகெட்டுப்போய், எதிரிகள்முன் அவமானத்தைத் தேடிக்கொண்டதை மோசே பார்த்தார். 26  பின்பு முகாமின் வாசலில் நின்றுகொண்டு, “யார் யெகோவாவின் பக்கம் இருக்கிறீர்கள்? என்னிடம் வாருங்கள்!”+ என்றார். உடனே, லேவியர்கள் எல்லாரும் அவரிடம் கூடிவந்தார்கள். 27  அப்போது அவர், “இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘எல்லாரும் வாளை எடுத்துக்கொள்ளுங்கள், முகாமின் ஒவ்வொரு வாசலுக்கும் போய் உங்கள் சகோதரனையும் அக்கம்பக்கத்தில் இருப்பவனையும் நெருங்கிய நண்பனையும் வெட்டிப்போடுங்கள்’”+ என்றார். 28  மோசே சொன்னபடியே லேவியர்கள் செய்தார்கள். அதனால், அந்த நாளில் சுமார் 3,000 ஆண்கள் கொல்லப்பட்டார்கள். 29  அப்போது மோசே, “இன்று உங்களை யெகோவாவின் சேவைக்கு அர்ப்பணியுங்கள். சொந்த மகன் என்றோ சகோதரன் என்றோ பார்க்காமல் எல்லாரையும் கொன்றுபோட்டீர்களே.+ இன்று அவர் உங்களை ஆசீர்வதிப்பார்”+ என்றார். 30  அடுத்த நாள் மோசே இஸ்ரவேலர்களிடம், “நீங்கள் மகா பெரிய பாவம் செய்துவிட்டீர்கள். உங்கள் பாவத்துக்கு நான் ஏதாவது பரிகாரம் செய்ய முடியுமா என்பதை யெகோவாவிடம் போய்க் கேட்டுக்கொண்டு வருகிறேன்”+ என்றார். 31  பின்பு மோசே யெகோவாவிடம் திரும்பிப்போய், “இந்த ஜனங்கள் மகா பெரிய பாவம் செய்திருக்கிறார்கள்! தங்கத்தில் சிலை செய்து வணங்கியிருக்கிறார்கள்!+ 32  உங்களுக்கு இஷ்டம் இருந்தால், இவர்களுடைய பாவத்தை மன்னியுங்கள்.+ இல்லையென்றால், தயவுசெய்து உங்களுடைய புத்தகத்திலிருந்து என் பெயரை அழித்துவிடுங்கள்”+ என்றார். 33  அதற்கு யெகோவா மோசேயிடம், “யாரெல்லாம் எனக்கு எதிராகப் பாவம் செய்தார்களோ, அவர்களுடைய பெயரைத்தான் என் புத்தகத்திலிருந்து துடைத்தழிப்பேன். 34  நீ இப்போது கீழே போ. நான் உனக்குச் சொன்ன இடத்துக்கு இந்த ஜனங்களைக் கூட்டிக்கொண்டு போ. இதோ! என் தூதர் உங்கள் முன்னால் போய் வழிகாட்டுவார்.+ என்னுடைய தீர்ப்பு நாளில், அந்த ஜனங்களுடைய பாவத்துக்குத் தண்டனை கொடுப்பேன்” என்றார். 35  அந்த ஜனங்கள் ஆரோன் மூலம் கன்றுக்குட்டி செய்ததற்காக யெகோவா அவர்களுக்குக் கொடிய தண்டனை கொடுக்க ஆரம்பித்தார்.

அடிக்குறிப்புகள்

நே.மொ., “வளையாத கழுத்து உள்ளவர்கள்.”
வே.வா., “தோல்வியினால் பாடும் ஒப்பாரிப் பாடலின்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா