1 சாமுவேல் 22:1-23

22  பின்பு, தாவீது அங்கிருந்து அதுல்லாம் குகைக்குத் தப்பித்துப் போனார்.+ அவருடைய அண்ணன்களும் அப்பாவின் குடும்பத்தார் எல்லாரும் அதைக் கேள்விப்பட்டபோது, அவரிடம் போனார்கள்.  பிரச்சினைகளில் சிக்கியிருந்தவர்களும் கடன்தொல்லையால் அவதிப்பட்டவர்களும் அநீதியினால் கொதித்துப்போனவர்களும் தாவீதோடு சேர்ந்துகொண்டார்கள். அவர்களுக்கு அவர் தலைவரானார். சுமார் 400 ஆண்கள் அவரோடு இருந்தார்கள்.  பின்பு, தாவீது அங்கிருந்து மோவாபிலுள்ள மிஸ்பேக்குப் போனார். அவர் மோவாப்+ ராஜாவைப் பார்த்து, ‘கடவுள் எனக்கு ஒரு வழி காட்டும்வரை என் அப்பா அம்மா உங்கள் தேசத்தில் தங்குவதற்குத் தயவுசெய்து அனுமதி கொடுங்கள்” என்று கேட்டார்.  பிறகு, அவர்களை மோவாப் ராஜாவின் பொறுப்பில் விட்டுவிட்டுப் போனார். தாவீது மலையில் தங்கியிருந்த காலம் முழுவதும் அவர்கள் மோவாபில் வாழ்ந்துவந்தார்கள்.+  சிலகாலம் கழித்து, காத்+ தீர்க்கதரிசி தாவீதிடம், “மலையில் தங்க வேண்டாம். அங்கிருந்து யூதா தேசத்துக்குப் போய்விடுங்கள்”+ என்று சொன்னார். அதனால், தாவீது அங்கிருந்து ஏரேத் என்ற காட்டுக்குப் போனார்.  தாவீதும் அவருடைய ஆட்களும் எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்ற விஷயம் சவுலின் காதுக்கு எட்டியது. அப்போது, கிபியாவில்+ ஒரு குன்றின் மேலிருந்த சவுக்கு மரத்தடியில் சவுல் உட்கார்ந்துகொண்டிருந்தார். அவருடைய கையில் ஈட்டி இருந்தது. அவருடைய ஊழியர்கள் எல்லாரும் அவரைச் சுற்றி நின்றுகொண்டிருந்தார்கள்.  சவுல் அவர்களிடம், “பென்யமீன் கோத்திரத்தாரே, தயவுசெய்து நான் சொல்வதைக் கேளுங்கள். என்னைப் போல ஈசாயின் மகன்+ உங்களுக்கு வயல்களையும் திராட்சைத் தோட்டங்களையும் கொடுப்பானா? உங்கள் எல்லாரையும் 1,000 பேருக்குத் தலைவர்களாகவும் 100 பேருக்குத் தலைவர்களாகவும் நியமிப்பானா?+  நீங்கள் எல்லாரும் எனக்கு எதிராகச் சதி செய்துவிட்டீர்கள்! அந்த ஈசாயின் மகனோடு என் சொந்த மகனே ஒப்பந்தம் செய்த விஷயத்தை+ நீங்கள் யாரும் என்னிடம் சொல்லவில்லை. உங்கள் ஒருவருக்குக்கூட என்மேல் அனுதாபம் இல்லை. எனக்கு எதிராகச் சூழ்ச்சி செய்ய என் மகனே என் ஊழியனைத் தூண்டியிருக்கிறான், அதையும்கூட யாருமே என்னிடம் சொல்லவில்லை” என்றார்.  அப்போது, சவுலின் ஊழியர்களுக்கு அதிகாரியாக இருந்த ஏதோமியனாகிய தோவேக்,+ “நான் அந்த ஈசாயின் மகனை நோபுவில் பார்த்தேன். அகிதூப்பின் மகன் அகிமெலேக்கைப் பார்க்க அவன் வந்திருந்தான்.+ 10  அகிமெலேக்கு அவனுக்காக யெகோவாவிடம் விசாரித்தார், அவனுக்கு உணவு கொடுத்தார். பெலிஸ்தியன் கோலியாத்தின் வாளையும்கூட கொடுத்தார்”+ என்று சவுலிடம் சொன்னான். 11  உடனே, நோபுவில் இருக்கிற குருவாகிய அகிதூப்பின் மகன் அகிமெலேக்கையும் அவருடைய அப்பாவின் குடும்பத்தாராகிய குருமார்கள் எல்லாரையும் வரச் சொல்லி ராஜா ஆள் அனுப்பினார். அவர்கள் எல்லாரும் ராஜாவிடம் வந்தார்கள். 12  அப்போது சவுல், “அகிதூப்பின் மகனே, நான் கேட்பதற்குப் பதில் சொல்” என்றார். அதற்கு அவர், “என்ன விஷயம், எஜமானே!” என்றார். 13  அப்போது சவுல், “நீயும் அந்த ஈசாயின் மகனும் ஏன் எனக்கு எதிராகச் சதி செய்தீர்கள்? நீ ஏன் அவனுக்கு ரொட்டியும் வாளும் கொடுத்தாய்? ஏன் அவனுக்காகக் கடவுளிடம் விசாரித்தாய்? அவன் என்னை எதிர்க்கிறான், எனக்கு எதிராகச் சூழ்ச்சி செய்கிறான்” என்றார். 14  அதற்கு அகிமெலேக்கு, “உங்கள் ஊழியர்களில் தாவீதைப் போல நம்பகமானவர் யாராவது இருக்கிறார்களா?+ ராஜாவே, அவர் உங்கள் மருமகன்,+ உங்கள் மெய்க்காவலரின் தலைவர், உங்களுடைய குடும்பத்தாரின் மதிப்பு மரியாதையைப் பெற்றவர்.+ 15  அவருக்காக நான் கடவுளிடம் விசாரிப்பது இதுதான் முதல் தடவையா?+ உங்களுக்குத் துரோகம் செய்வதை என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது! தயவுசெய்து இந்த ஊழியன் மேலோ என் அப்பாவின் குடும்பத்தார் மேலோ குற்றம் சுமத்தாதீர்கள். உங்கள் ஊழியனுக்கு இதைப் பற்றி எதுவுமே தெரியாது”+ என்றார். 16  அதற்கு ராஜா, “அகிமெலேக்கு, நீ கண்டிப்பாகச் சாக வேண்டும்,+ நீ மட்டுமல்ல உன் அப்பாவின் குடும்பத்தார் எல்லாரும் சாக வேண்டும்!”+ என்றார். 17  பின்பு, தன்னைச் சுற்றி நின்ற காவலர்களிடம், “இதோ, யெகோவாவுக்குச் சேவை செய்கிற இந்தக் குருமார்களைக் கொன்றுபோடுங்கள். இவர்கள் தாவீதின் பக்கம் சேர்ந்துவிட்டார்கள்! அவன் தப்பித்து ஓடுகிற விஷயம் தெரிந்திருந்தும் எனக்குச் சொல்லவில்லை” என்றார். ஆனால், யெகோவாவுக்குச் சேவை செய்யும் குருமார்கள்மேல் கை வைக்க ராஜாவின் ஊழியர்களுக்கு மனம் வரவில்லை. 18  அதனால் தோவேக்கிடம்+ ராஜா, “இந்தக் குருமார்களை நீயே கொன்றுபோடு!” என்றார். உடனே, ஏதோமியனாகிய+ தோவேக் ஒரே ஆளாக நின்று குருமார்களை வெட்டிக் கொன்றுபோட்டான். நாரிழை* ஏபோத்தைப் போட்டிருந்த 85 குருமார்களை அன்றைக்குக் கொன்றுபோட்டான்.+ 19  குருமார்கள் வாழ்ந்த நோபு நகரத்தையும்+ தாக்கி, ஆண்கள், பெண்கள், பிள்ளைகள், கைக்குழந்தைகள் எல்லாரையும் வாளுக்குப் பலியாக்கினான். ஆடுமாடுகளையும் கழுதைகளையும்கூட வாளால் வெட்டிப்போட்டான். 20  ஆனால், அகிதூப்பின் மகனாகிய அகிமெலேக்கின் மகன்களில் ஒருவர் தாவீதிடம் சேர்ந்துகொள்வதற்காகத் தப்பித்து ஓடினார். அவருடைய பெயர் அபியத்தார்.+ 21  அவர் தாவீதிடம் போய், “யெகோவாவுக்குச் சேவை செய்யும் குருமார்களை சவுல் கொன்றுவிட்டார்” என்று சொன்னார். 22  அதற்கு தாவீது, “அன்றைக்கு ஏதோமியனாகிய தோவேக்கை அங்கு பார்த்தபோதே நினைத்தேன்,+ இவன் கண்டிப்பாக சவுலிடம் சொல்லிவிடுவான் என்று. உங்களுடைய அப்பாவின் குடும்பத்தாருடைய சாவுக்கு நான்தான் காரணம். 23  என்னோடு தங்கியிருங்கள். பயப்படாதீர்கள், உங்களைக் கொல்ல நினைக்கிறவர்தான் என்னையும் கொல்ல நினைக்கிறார். நான் உங்களுக்குப் பாதுகாப்பு தருகிறேன்”+ என்றார்.

அடிக்குறிப்புகள்

அதாவது, “லினன்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா