கொரிந்தியருக்கு இரண்டாம் கடிதம் 9:1-15

9  பரிசுத்தவான்களுக்குச் செய்ய வேண்டிய சேவையைப்+ பற்றி நான் உங்களுக்கு எழுத வேண்டியதில்லை.  ஏனென்றால், நீங்கள் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். அகாயாவைச் சேர்ந்த சகோதரர்களாகிய நீங்கள் ஒரு வருஷமாகவே உதவி செய்யத் தயாராக இருக்கிறீர்கள் என்று மக்கெதோனியர்களிடம் உங்களைப் பற்றிப் பெருமையாகப் பேசி வருகிறேன். உங்களுடைய பக்திவைராக்கியம் அவர்களில் பெரும்பாலோரைத் தூண்டியிருக்கிறது.  ஆனால், இந்த விஷயத்தில் உங்களைப் பற்றி நாங்கள் பெருமையாகப் பேசுவது பொய்யாகிவிடக் கூடாது என்பதற்காகவும், உங்களைப் பற்றி நான் சொல்லி வந்தபடியே நீங்கள் தயாராக இருக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தச் சகோதரர்களை உங்களிடம் அனுப்புகிறேன்.  இல்லையென்றால், மக்கெதோனியாவில் இருக்கிற சகோதரர்கள் என்னோடு வந்து நீங்கள் தயாராக இல்லாததைப் பார்த்தால், உங்கள்மீது இவ்வளவு நம்பிக்கையோடு இருந்ததற்காக நாங்கள் வெட்கப்பட வேண்டியிருக்கும், நீங்களும் வெட்கப்பட வேண்டியிருக்கும்.  அதனால், இந்தச் சகோதரர்கள் எனக்கு முன்பே உங்களிடம் வரும்படியும், தாராளமாய்த் தருவதாக நீங்கள் வாக்குக் கொடுத்திருந்த நிவாரணத் தொகையைத் திரட்டி வைக்கும்படியும் அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். அப்போதுதான், அந்தத் தொகை கட்டாயப்படுத்தி வாங்கியதாக இல்லாமல் தாராளமாய்க் கொடுத்ததாக இருக்கும்.  இதைப் பற்றி நான் சொல்வது என்னவென்றால்: கொஞ்சமாக விதைப்பவர் கொஞ்சமாக அறுவடை செய்வார், ஏராளமாக விதைப்பவர் ஏராளமாக அறுவடை செய்வார்.+  ஒவ்வொருவரும் வேண்டாவெறுப்பாகவும்* அல்ல, கட்டாயமாகவும் அல்ல,+ தன் இதயத்தில் தீர்மானித்தபடியே கொடுக்கட்டும். ஏனென்றால், சந்தோஷமாகக் கொடுப்பவரைத்தான் கடவுள் நேசிக்கிறார்.+  கடவுள் தன்னுடைய அளவற்ற கருணையை உங்கள்மேல் அதிகமதிகமாகப் பொழிவதற்கு வல்லவராகவும் இருக்கிறார். அதனால், தேவையானதெல்லாம் உங்களுக்கு எப்போதும் நிறைவாக இருக்கும். எல்லா விதமான நல்ல செயல்களையும் செய்வதற்குத் தேவையானவை உங்களிடம் ஏராளமாகவே இருக்கும்.+  (இதைப் பற்றித்தான், “வாரி வழங்கியிருக்கிறான்,* ஏழைகளுக்குக் கொடுத்திருக்கிறான்; அவனுடைய நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்” என்று எழுதப்பட்டிருக்கிறது.+ 10  விதைக்கிறவனுக்கு விதையையும் சாப்பிடுகிறவனுக்கு உணவையும் ஏராளமாகக் கொடுப்பவர் உங்களுக்கும்கூட விதைப்பதற்கு விதையைக் கொடுத்து அதைப் பெருகச் செய்வார். உங்கள் நீதியான செயல்களின் பலனை அதிகரிக்கவும் செய்வார்.) 11  நீங்கள் எல்லா விதத்திலும் தாராளமாய்க் கொடுப்பதற்காக அவர் உங்களை எல்லாவற்றிலும் வளமாக்கி வருகிறார். எங்கள் மூலம் நீங்கள் காட்டிய இந்தத் தாராள குணத்தின் காரணமாக நிறைய பேர் கடவுளுக்கு நன்றி சொல்கிறார்கள். 12  இப்படி, இந்தப் பொதுப்பணி பரிசுத்தவான்களுடைய தேவைகளை நன்றாகப் பூர்த்தி செய்வது மட்டுமல்லாமல்,+ கடவுளுக்குத் தாராளமாக நன்றி சொல்ல நிறைய பேரைத் தூண்டவும் செய்கிறது. 13  உங்களுடைய தாராள குணத்துக்கு அத்தாட்சியாக இருக்கிற இந்த நிவாரண ஊழியத்தைப் பார்த்து கடவுளை அவர்கள் மகிமைப்படுத்துகிறார்கள். நீங்கள் அறிவிக்கிற கிறிஸ்துவின் நல்ல செய்திக்கு நீங்கள் அடிபணிந்து நடப்பதாலும், அவர்களுக்கும் மற்ற எல்லாருக்கும் தாராளமாக நன்கொடை கொடுப்பதாலும் கடவுளை மகிமைப்படுத்துகிறார்கள்.+ 14  அதோடு, ஈடிணையில்லாத மகா கருணையைக் கடவுள் உங்கள்மேல் பொழிந்திருப்பதால், அவர்கள் உங்களுக்காக மன்றாடுகிறார்கள், உங்கள்மேல் பாசம் வைத்திருக்கிறார்கள். 15  வார்த்தைகளால் விவரிக்க முடியாத இலவச அன்பளிப்பைக் கொடுக்கிற கடவுளுக்கு நன்றி.

அடிக்குறிப்புகள்

வே.வா., “தயக்கத்தோடு.”
வே.வா., “தாராளமாகக் கொடுத்திருக்கிறான்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா