பேதுருவின் இரண்டாம் கடிதம் 2:1-22

2  இருந்தாலும், பூர்வ காலத்தில் மக்கள் மத்தியில் போலித் தீர்க்கதரிசிகளும் வந்தார்கள், அப்படியே உங்கள் மத்தியிலும் போலிப் போதகர்கள் வருவார்கள்.+ அழிவை ஏற்படுத்துகிற மதப்பிரிவுகளை அவர்கள் தந்திரமாக உண்டாக்குவார்கள். அதோடு, தங்களை விலைகொடுத்து வாங்கிய+ உரிமையாளரை ஒதுக்கிவிட்டு, சீக்கிரத்தில் தங்களுக்கு அழிவைத் தேடிக்கொள்வார்கள்.  அவர்களுடைய வெட்கங்கெட்ட நடத்தையை*+ நிறைய பேர் பின்பற்றுவார்கள்; இவர்களால், சத்திய வழி பழித்துப் பேசப்படும்.+  அவர்கள் தங்களுடைய போலிப் போதனைகளால் உங்களைப் பேராசையோடு சுரண்டிப் பிழைப்பார்கள்; ஆனால், பல காலத்துக்கு முன்பே அவர்களுக்குத் தீர்மானிக்கப்பட்ட நியாயத்தீர்ப்பு+ தாமதிக்காது, அவர்களுக்கு அழிவு வரப்போவது நிச்சயம்.+  பாவம் செய்த தேவதூதர்களைக்+ கடவுள் தண்டிக்காமல் விடவில்லை; அவர்களை டார்டரசுக்குள்*+ தள்ளி, பயங்கர இருட்டில் அவர்களைச் சங்கிலிகளால் கட்டி* நியாயத்தீர்ப்புக்காக அடைத்து வைத்தார்.+  பூர்வ உலகத்தையும் அவர் தண்டிக்காமல் விடவில்லை;+ நீதியைப் பிரசங்கித்தவராகிய நோவா+ உட்பட எட்டுப் பேரை மட்டும் காப்பாற்றினார்,+ கடவுள்பக்தி இல்லாதவர்கள் நிறைந்த அந்த உலகத்தின் மீது பெரிய வெள்ளத்தைக் கொண்டுவந்தார்.+  சோதோம், கொமோரா நகரங்களையும் தண்டித்தார்.+ கடவுள்பக்தி இல்லாதவர்களுக்கு வரப்போகும் முடிவு எப்படியிருக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக+ அவற்றை எரித்துச் சாம்பலாக்கினார்.  வெட்கங்கெட்ட நடத்தையில்* ஈடுபட்ட அடங்காத மக்களைப் பார்த்து மிகவும் வேதனைப்பட்ட நீதிமானாகிய லோத்துவைக் காப்பாற்றினார்.+  அந்த நீதிமான் அவர்கள் மத்தியில் வாழ்ந்தபோது, தினம்தினம் அவர்களுடைய அக்கிரமச் செயல்களைப் பார்த்தும் கேள்விப்பட்டும் வந்ததால் அவருடைய நீதியான உள்ளம் வாட்டிவதைக்கப்பட்டது.  கடவுள்பக்தி உள்ளவர்களைச் சோதனையிலிருந்து விடுதலை செய்யவும்,+ அநீதிமான்களை நியாயத்தீர்ப்பு நாளில் அழிப்பதற்காக விட்டுவைக்கவும்+ யெகோவா* அறிந்திருக்கிறார். 10  முக்கியமாக, மற்றவர்களோடு தகாத உறவுகொண்டு அவர்களைக் கெடுப்பதற்கு அலைகிறவர்களையும்,+ அதிகாரத்தில் உள்ளவர்களைக் கேவலமாக நினைக்கிறவர்களையும்+ அழிக்க அவர் அறிந்திருக்கிறார். அப்படிப்பட்ட ஆட்கள் துணிச்சல்காரர்கள், இஷ்டப்படி நடக்கிறவர்கள், மகிமையானவர்களைப் பழித்துப் பேசப் பயப்படாதவர்கள். 11  ஆனால், அதிக பலமும் வல்லமையும் உள்ள தேவதூதர்கள்கூட, யெகோவாமேல்* வைத்திருக்கும் மரியாதையின் காரணமாகப் போலிப் போதகர்களைக் கடுமையான வார்த்தைகளால் குற்றம்சாட்டுவதில்லை.+ 12  ஆனாலும், பிடிபட்டுக் கொல்லப்படுவதற்காகவே பிறந்திருக்கும் மிருகங்களை, அதாவது இயல்புணர்ச்சியால் செயல்படுகிற புத்தியில்லாத மிருகங்களை, போன்ற அந்த ஆட்கள், தங்களுக்குத் தெரியாதவற்றைப் பழித்துப் பேசுவார்கள்,+ தங்களுடைய அழிவின் பாதையிலேயே போய் அழிந்துபோவார்கள். 13  அவர்கள் செய்த தீமைக்குப் பலனாகத் தீமைதான் அவர்களுக்கு வரும். பட்டப்பகலில் பாவ ஆசைகளில் புரளுவதை இன்பம் என்று நினைக்கிறார்கள்.+ உங்களோடு விருந்து சாப்பிடும்போது தங்களுடைய போதனைகளால் உங்களை ஏமாற்றுவதில் பயங்கரமாகச் சந்தோஷப்படுகிறார்கள்.+ உங்கள் மத்தியில் அவர்கள் கறையாகவும் களங்கமாகவும் இருக்கிறார்கள். 14  அவர்களுடைய கண்களில் காமவெறி*+ நிறைந்திருக்கிறது, கட்டுப்படுத்த முடியாத பாவ ஆசை அவர்களுக்கு இருக்கிறது. மன உறுதி இல்லாத ஆட்களை அவர்கள் வசப்படுத்திக்கொள்கிறார்கள்; பேராசைப்படுவதில் தேர்ச்சிபெற்ற இதயம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் சபிக்கப்பட்டவர்கள். 15  நேர்மையான வழியைவிட்டு விலகி மோசம்போயிருக்கிறார்கள். பெயோரின் மகனாகிய பிலேயாமின் வழியைப் பின்பற்றியிருக்கிறார்கள்.+ அந்த பிலேயாம் கூலிக்காகத் தவறு செய்ய ஆசைப்பட்டான்.+ 16  ஆனால், சட்டத்தை மீறியதால் அவன் கண்டிக்கப்பட்டான்.+ வாயில்லாத ஜீவன் ஒன்று மனித குரலில் பேசி, அந்தத் தீர்க்கதரிசியின் பைத்தியக்காரச் செயலைத் தடுக்க முயற்சி செய்தது.+ 17  அவர்கள் தண்ணீர் இல்லாத நீரூற்றுகள், புயல்காற்றில் அடித்துக்கொண்டு போகப்படும் மேகங்கள்; பயங்கர இருட்டில்தான் அவர்கள் தள்ளப்படுவார்கள்.+ 18  அவர்கள் வீண்பெருமை பேசுகிறார்கள்; தவறு செய்கிறவர்களிடமிருந்து தப்பித்து வருகிறவர்களைப் பாவ ஆசைகளாலும்+ வெட்கங்கெட்ட நடத்தையாலும்* வசீகரிக்கிறார்கள்.+ 19  அவர்களுக்கு விடுதலை கொடுப்பதாக வாக்குக் கொடுக்கிறார்கள், ஆனால் அவர்களே கெட்ட காரியங்களுக்கு அடிமைகளாக இருக்கிறார்கள்;+ ஒருவன் எவனால்* அடக்கி ஆளப்படுகிறானோ அவனுக்கு* இவன் அடிமையாகிவிடுகிறான்.+ 20  நம் எஜமானும் மீட்பருமான இயேசு கிறிஸ்துவைப் பற்றித் திருத்தமாகத் தெரிந்துகொண்டு உலகத்தின் பாவச் சேற்றிலிருந்து தப்பித்தவர்கள்,+ மறுபடியும் அதில் சிக்கிக்கொண்டு அதனால் அடக்கி ஆளப்பட்டால், நிச்சயமாகவே அவர்களுடைய நிலைமை முதலில் இருந்ததைவிட மோசமாக இருக்கும்.+ 21  நீதியின் வழியையும் பரிசுத்த கட்டளையையும் அவர்கள் திருத்தமாகத் தெரிந்துகொண்ட பின்பு அதைவிட்டு விலகுவதைவிட அதைப் பற்றித் தெரிந்துகொள்ளாமல் இருந்திருந்தாலே அவர்களுக்கு நல்லதாக இருந்திருக்கும்.+ 22  “நாய் தான் கக்கியதைத் தின்னத் திரும்பிப் போகும்; பன்றியைக் குளிப்பாட்டினாலும் அது மறுபடியும் சேற்றில் புரளும்” என்று சொல்லப்பட்ட பழமொழியின்படியே* அவர்களுக்கு நடந்தது.+

அடிக்குறிப்புகள்

அல்லது, “படுகுழிகளில் தள்ளி.”
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
வே.வா., “முறைகேடான உறவுகொள்ளும் வெறி.”
வே.வா., “எதனால்.”
வே.வா., “அதற்கு.”
வே.வா., “நீதிமொழியின்படியே.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா