2 ராஜாக்கள் 2:1-25

2  ஒரு சுழல்காற்றில்+ எலியாவை+ யெகோவா வானத்துக்குக் கொண்டுபோவதற்கு முன்பு, எலியாவும் எலிசாவும்+ கில்காலிலிருந்து*+ புறப்பட்டார்கள்.  அப்போது எலியா அவரிடம், “தயவுசெய்து நீ இங்கேயே இரு, யெகோவா என்னை பெத்தேலுக்குப் போகச் சொல்லியிருக்கிறார்” என்றார். ஆனால் எலிசா, “உயிருள்ள கடவுளாகிய யெகோவாமேல் ஆணையாகச் சொல்கிறேன்,* உங்கள் உயிர்மேல் ஆணையாகச் சொல்கிறேன்,* நான் உங்களைவிட்டுப் போக மாட்டேன்” என்று சொன்னார். அதனால், அவர்கள் இரண்டு பேரும் பெத்தேலுக்குப்+ போனார்கள்.  அப்போது, பெத்தேலில் இருந்த தீர்க்கதரிசிகளின் மகன்கள்* எலிசாவிடம் வந்து, “இன்றைக்கு யெகோவா உங்கள் எஜமானைக் கொண்டுபோய்விடுவார், உங்களுடைய தலைவர் உங்களைவிட்டுப் போகப்போகிறார், உங்களுக்குத் தெரியுமா?”+ என்று கேட்டார்கள். அதற்கு எலிசா, “எனக்குத் தெரியும், நீங்கள் பேசாமல் இருங்கள்” என்று சொன்னார்.  பின்பு எலியா அவரிடம், “எலிசா, தயவுசெய்து நீ இங்கேயே இரு. யெகோவா என்னை எரிகோவுக்குப்+ போகச் சொல்லியிருக்கிறார்” என்றார். ஆனால் எலிசா, “உயிருள்ள கடவுளாகிய யெகோவாமேல் ஆணையாகச் சொல்கிறேன்,* உங்கள் உயிர்மேல் ஆணையாகச் சொல்கிறேன்,* நான் உங்களைவிட்டுப் போக மாட்டேன்” என்று சொன்னார். அதனால் அவர்கள் இரண்டு பேரும் எரிகோவுக்குப் போனார்கள்.  எரிகோவில் இருந்த தீர்க்கதரிசிகளின் மகன்கள் எலிசாவிடம் வந்து, “இன்றைக்கு யெகோவா உங்கள் எஜமானைக் கொண்டுபோய்விடுவார், உங்களுடைய தலைவர் உங்களைவிட்டுப் போகப்போகிறார், உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். அதற்கு எலிசா, “எனக்குத் தெரியும், நீங்கள் பேசாமல் இருங்கள்” என்று சொன்னார்.  பின்பு எலியா அவரிடம், “தயவுசெய்து நீ இங்கேயே இரு. யெகோவா என்னை யோர்தானுக்குப் போகச் சொல்லியிருக்கிறார்” என்றார். ஆனால் எலிசா, “உயிருள்ள கடவுளாகிய யெகோவாமேல் ஆணையாகச் சொல்கிறேன்,* உங்கள் உயிர்மேல் ஆணையாகச் சொல்கிறேன்,* நான் உங்களைவிட்டுப் போக மாட்டேன்” என்று சொன்னார். அதனால் அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்தே போனார்கள்.  தீர்க்கதரிசிகளின் மகன்களில் 50 பேர் அவர்கள் பின்னால் போனார்கள்; ஆனால், எலியாவும் எலிசாவும் யோர்தான் ஆற்றங்கரைக்கு வந்து நின்றபோது, அந்த 50 பேரும் சற்றுத் தூரத்தில் நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள்.  பின்பு எலியா தன்னுடைய அங்கியை* கழற்றி,+ அதைச் சுருட்டி ஆற்றுத் தண்ணீரை அடித்தார். உடனே தண்ணீர் இரண்டாகப் பிரிந்தது. அவர்கள் இரண்டு பேரும் வறண்ட தரையில் நடந்து ஆற்றைக் கடந்தார்கள்.+  அவர்கள் இரண்டு பேரும் ஆற்றைக் கடந்தவுடன் எலியா அவரிடம், “எலிசா, நான் உன்னைவிட்டுப் போகப்போகிறேன், உனக்கு என்ன வேண்டுமோ கேள்” என்றார். அதற்கு எலிசா, “உங்களிடம் இருக்கிற கடவுளுடைய சக்தியில்*+ இரண்டு பாகத்தைத் தயவுசெய்து எனக்குத் தருவீர்களா?”+ என்று கேட்டார். 10  அப்போது எலியா, “கஷ்டமான ஒன்றைக் கேட்கிறாய். இருந்தாலும், நான் கொண்டுபோகப்படுவதை நீ பார்த்தால், நீ கேட்டது கிடைக்கும். இல்லாவிட்டால், கிடைக்காது” என்று சொன்னார். 11  அவர்கள் பேசிக்கொண்டே நடந்து போனபோது, திடீரென்று அவர்களுக்கு இடையே ஒரு ரதமும் குதிரைகளும்+ வந்தன; அவை நெருப்பைப் போல் தகதகவென்று பிரகாசித்தன. எலியா சுழல்காற்றில் வானத்துக்குக் கொண்டுபோகப்பட்டார்.+ 12  எலிசா அதைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, “தகப்பனே, தகப்பனே! இஸ்ரவேலின் ரதமே, குதிரைவீரரே!”+ என்று சத்தமாகக் கூப்பிட்டார். அவருடைய பார்வையிலிருந்து எலியா மறைந்ததும், எலிசா தன்னுடைய உடையை இரண்டாகக் கிழித்துக்கொண்டார்.+ 13  எலியா போட்டிருந்த அங்கி*+ கீழே விழுந்து கிடந்ததால், எலிசா அதை எடுத்துக்கொண்டு மறுபடியும் யோர்தான் ஆற்றங்கரையில் போய் நின்றார். 14  எலியாவின் அங்கியால் ஆற்றுத் தண்ணீரை அடித்து, “எலியாவின் கடவுளான யெகோவா எங்கே?” என்று கேட்டார். அவர் தண்ணீரை அடித்ததும், அது இரண்டாகப் பிரிந்தது. எலிசா ஆற்றைக் கடந்து போனார்.+ 15  எரிகோவிலிருந்து வந்த தீர்க்கதரிசிகளின் மகன்கள் தூரத்திலிருந்து எலிசாவைப் பார்த்ததும், “எலியாவிடமிருந்த கடவுளின் சக்தி எலிசாவுக்குக் கிடைத்துவிட்டது”+ என்று சொன்னார்கள். அதனால், அவர்கள் எலிசாவிடம் போய் அவர் முன்னால் மண்டிபோட்டு தலைவணங்கினார்கள். 16  பின்பு அவர்கள், “உங்களுடைய ஊழியர்களான எங்களுடன் 50 பலசாலிகள் இருக்கிறார்கள். அவர்கள் போய் உங்கள் எஜமானைத் தேடிக் கண்டுபிடிக்க தயவுசெய்து அனுமதி கொடுங்கள். ஒருவேளை யெகோவாவின் சக்தி* அவரைக் கொண்டுபோய் ஏதாவது மலையிலோ பள்ளத்தாக்கிலோ போட்டிருக்கலாம்”+ என்று சொன்னார்கள். ஆனால் எலிசா, “வேண்டாம், அவர்களை அனுப்பாதீர்கள்” என்று சொன்னார். 17  இருந்தாலும், அவர்கள் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அதனால் அவர் சங்கடத்தோடு, “சரி, அனுப்புங்கள்” என்று சொன்னார். அவர்கள் அந்த 50 பேரை அனுப்பினார்கள். அவர்கள் மூன்று நாட்கள் விடாமல் தேடியும் எலியாவைக் கண்டுபிடிக்க முடியவில்லை. 18  அவர்கள் திரும்பி வந்தபோது எலிசா எரிகோவில்+ தங்கியிருந்தார். அவர்களைப் பார்த்து, “போக வேண்டாமென்று நான் அப்போதே உங்களிடம் சொன்னேன், இல்லையா?” என்றார். 19  கொஞ்சக் காலம் கழித்து, அந்த நகரத்து ஆட்கள் எலிசாவிடம் வந்து, “எஜமானே, இந்த ஊர் அருமையான இடத்தில் அமைந்திருக்கிறது+ என்று உங்களுக்கே தெரியும். ஆனால், தண்ணீர்தான் மோசம். அதனால், இந்த இடத்தில் விளைச்சலே இல்லை”* என்று சொன்னார்கள். 20  அதற்கு அவர், “ஒரு புதிய கிண்ணத்தில் உப்பைக் கொண்டுவாருங்கள்” என்று சொன்னார். அவர்களும் கொண்டுவந்தார்கள். 21  அப்போது எலிசா, தண்ணீர் ஊற்றெடுக்கும் இடத்துக்குப் போய் அந்த உப்பைக் கொட்டினார்;+ அப்போது, “நான் இந்தத் தண்ணீரைச் சுத்தமாக்கிவிட்டேன். இனிமேல் இந்தத் தண்ணீரால் மரணமோ மலட்டுத்தன்மையோ* ஏற்படாது என்று யெகோவா சொல்கிறார்” என்றார். 22  எலிசா சொன்னபடியே அந்தத் தண்ணீர் இன்றுவரை சுத்தமாக இருக்கிறது. 23  பின்பு, அவர் அங்கிருந்து புறப்பட்டு பெத்தேலுக்குப் போனார். அவர் போய்க்கொண்டிருந்தபோது, நகரத்திலிருந்து சிறுவர்கள் சிலர் வந்து அவரைப் பார்த்து கேலி செய்தார்கள்.+ “வழுக்கைத் தலையா, ஏறிப் போ! வழுக்கைத் தலையா, ஏறிப் போ!” என்று சொல்லிக்கொண்டே இருந்தார்கள். 24  கடைசியில் எலிசா அவர்களைத் திரும்பிப் பார்த்து யெகோவாவின் பெயரில் சபித்தார். அப்போது, இரண்டு பெண் கரடிகள்+ காட்டிலிருந்து வந்து அந்த 42 சிறுவர்களையும் பீறிப்போட்டன.+ 25  அவர் கர்மேல் மலைக்குப்+ போனார், பின்பு அங்கிருந்து சமாரியாவுக்குத் திரும்பிப் போனார்.

அடிக்குறிப்புகள்

இது எரிகோவுக்குப் பக்கத்திலுள்ள கில்கால் அல்ல, பெத்தேலுக்கு அருகில் மலைப்பகுதியில் உள்ள கில்கால்.
வே.வா., “யெகோவா உயிரோடு இருப்பது எந்தளவு நிச்சயமோ அந்தளவு நிச்சயமாகச் சொல்கிறேன்.”
வே.வா., “நீங்கள் உயிரோடு இருப்பது எந்தளவு நிச்சயமோ அந்தளவு நிச்சயமாகச் சொல்கிறேன்.”
“தீர்க்கதரிசிகளின் மகன்கள்,” பயிற்சி பெறுகிற தீர்க்கதரிசிகளின் குழுவை அல்லது தீர்க்கதரிசிகளின் சங்கத்தைக் குறிக்கலாம்.
வே.வா., “யெகோவா உயிரோடு இருப்பது எந்தளவு நிச்சயமோ அந்தளவு நிச்சயமாகச் சொல்கிறேன்.”
வே.வா., “நீங்கள் உயிரோடு இருப்பது எந்தளவு நிச்சயமோ அந்தளவு நிச்சயமாகச் சொல்கிறேன்.”
வே.வா., “யெகோவா உயிரோடு இருப்பது எந்தளவு நிச்சயமோ அந்தளவு நிச்சயமாகச் சொல்கிறேன்.”
வே.வா., “நீங்கள் உயிரோடு இருப்பது எந்தளவு நிச்சயமோ அந்தளவு நிச்சயமாகச் சொல்கிறேன்.”
அதாவது, “தீர்க்கதரிசியின் அங்கியை.”
இது எலியாவின் மனப்பான்மையையும் குறிக்கலாம்.
அதாவது, “தீர்க்கதரிசியின் அங்கி.”
வே.வா., “காற்று.”
அல்லது, “இந்த இடத்தில் உள்ளவர்களுக்குக் கருச்சிதைவு ஏற்படுகிறது.”
அல்லது, “கருச்சிதைவோ.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா