Skip to content

குடும்ப ஸ்பெஷல் | பிள்ளை வளர்ப்பு

குழந்தையை ப்ளே ஸ்கூலில் விடுவதற்குமுன் பெற்றோர் தெரிந்திருக்க வேண்டியவை

குழந்தையை ப்ளே ஸ்கூலில் விடுவதற்குமுன் பெற்றோர் தெரிந்திருக்க வேண்டியவை

 வேலைக்கு போகிற சில பெற்றோர்கள், வேலைக்குப் போகும்போது தங்கள் பிள்ளைகளை ப்ளே ஸ்கூலில் விட்டுவிட்டு போகிறார்கள். ப்ளே ஸ்கூல் என்பது பள்ளியில் இருக்கிற கிளாஸ் ரூம் போல்தான் இருக்கும். ஆனால், இப்படிச் செய்வது பிள்ளைகளுக்கு நல்லதா?

 யோசித்துப் பார்க்க வேண்டிய விஷயங்கள்

 பிள்ளைகளை ப்ளே ஸ்கூலுக்கு அனுப்புவது அப்பா-அம்மாவுக்கும் பிள்ளைக்கும் இடையில் இருக்கிற உறவை பாதிக்குமா? வாய்ப்பு இருக்கிறது! ஏனென்றால், இந்தப் பருவத்தில் குழந்தையின் மூளை அதிகமாக வளர்ச்சி அடையும். அந்த வளர்ச்சி, குழந்தை மற்றவர்களோடு பழகும் விதத்தைப் பாதிக்கும். குழந்தையின் வாழ்நாள் முழுவதும் ஒரு பெரிய தாக்கத்தை அது ஏற்படுத்தும். அதனால், இந்தப் பருவத்தில் நீங்கள் உங்கள் குழந்தையோடு இருப்பது ரொம்ப நல்லது.—உபாகமம் 6:6, 7.

  •    குழந்தைகளை ப்ளே ஸ்கூலில் விடுவதைப் பற்றி யோசிக்கும் பெற்றோர்கள், குழந்தைகளுடன் அவர்களுக்கு இருக்கிற பந்தத்தை அது எப்படி பாதிக்கும் என்பதைப் பற்றி ரொம்ப ரொம்ப கவனமாக யோசித்துப் பார்க்க வேண்டும்.

 ப்ளே ஸ்கூலுக்கு போகும் பிள்ளைகளால் உங்களிடமிருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியுமா? வாய்ப்பு குறைவுதான்! ”எவ்வளவு நேரம் பிள்ளைகளை ப்ளே ஸ்கூலில் விடுகிறோமோ அந்தளவுக்கு பிள்ளைகள் அங்கிருக்கிற மற்ற பிள்ளைகளிடம் இருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்வார்கள்“ என்று ஹோல்ட் ஆன் டூ யுவர் கிட்ஸ் என்ற புத்தகம் சொல்கிறது.

  •    குழந்தைகளை ப்ளே ஸ்கூலில் விடுவதைப் பற்றி யோசிக்கும் பெற்றோர்கள், குழந்தைகள் தங்கள் வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களை உண்மையிலேயே பெற்றோர்களாகிய உங்களிடமிருந்துதான் கற்றுக்கொள்வார்களா என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.

 ப்ளே ஸ்கூலில் விடுவதால் பிள்ளைகள் ஸ்கூலுக்கு போகும்போது நன்றாக படிப்பார்களா? சிலர் ஆமாம் என்று சொல்கிறார்கள். வேறு சிலர் இல்லை என்றும் சொல்கிறார்கள். இருந்தாலும், குழந்தைகள் மனநிலை ஆலோசகர் பெனிலொப் லீச் என்ன எழுதியிருக்கிறார் என்று பாருங்கள். ”ஸ்கூலில் பிள்ளைகள் கற்றுக்கொள்கிற விஷயங்கள்தான் அவர்கள் வாழ்க்கைக்கு ரொம்ப பிரயோஜனமாக இருக்கும் என்று நினைக்காதீர்கள். எவ்வளவுக்கு எவ்வளவு பிள்ளைகளைச் சீக்கிரமாக ஸ்கூலில் சேர்க்க வேண்டுமோ, அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது என்றும் நினைக்காதீர்கள். நீங்கள் அப்படி நினைத்தால், குழந்தை பிறந்த சமயத்திலிருந்து நீங்கள் அவர்களுக்கு சொல்லிக்கொடுத்த விஷயங்களின் மதிப்பை நீங்களே புரிந்துகொள்ளாமல் போய்விடுவீர்கள்.“

  •   குழந்தைகளை ப்ளே ஸ்கூலில் விடுவதைப் பற்றி யோசிக்கும் பெற்றோர்கள், அப்படிச் செய்வது தேவைதானா, அது உண்மையிலேயே பிரயோஜனமாக இருக்குமா என்பதை நன்றாக யோசித்துப் பார்க்க வேண்டும்.

 நீங்களோ உங்களுடைய துணையோ வீட்டிலேயே இருந்து பிள்ளைகளைக் கவனித்துக்கொள்ள முடியுமா? வசதியாக வாழ வேண்டும் என்பதற்காகவே சில இடங்களில் பெற்றோர்கள் இருவருமே வேலைக்கு போகிறார்கள். ஆனால், அப்படிச் செய்வது உண்மையிலேயே நல்லதா?

  •   குழந்தைகளை ப்ளே ஸ்கூலில் விடுவதைப் பற்றி யோசிக்கும் பெற்றோர்கள், தங்களுடைய செலவுகளை கொஞ்சம் குறைத்துக்கொள்ள முடியுமா என்றும் யாராவது ஒருவர் வேலைக்கு போகாமல் வீட்டிலேயே இருக்க முடியுமா என்றும் யோசித்துப் பார்க்கலாம்.

 பிள்ளைகளை ப்ளே ஸ்கூலில் விடலாமா வேண்டாமா என்ற முடிவு எடுப்பதற்கு முன்பு, பெற்றோர்கள் அதனால் வரும் நன்மைகளைப் பற்றியும், பாதிப்புகளைப் பற்றியும் யோசித்துப் பார்க்க வேண்டும். அப்படி யோசித்த பின்பும், பிள்ளைகளை ப்ளே ஸ்கூலில் விடுவதுதான் உங்கள் குடும்பத்துக்கு நல்லது என்று தோன்றினால் கீழே இருக்கிற விஷயங்களை யோசித்துப் பாருங்கள்.

 நீங்கள் என்ன செய்யலாம்?

 “சாமர்த்தியமாக நடக்கிறவன் ஒவ்வொரு அடியையும் யோசித்துதான் எடுத்து வைக்கிறான்” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 14:15) இந்த ஆலோசனையை மனதில் வைத்து, குழந்தைகளை கவனித்துக்கொள்வதற்கு என்னென்ன வழிகள் இருக்கின்றன… எப்படிப்பட்ட ப்ளே ஸ்கூல்கள் இருக்கின்றன… என்று யோசித்து முடிவெடுங்கள்.

 குழந்தையைக் கவனித்துக்கொள்வதற்கு என்னென்ன வழிகள் இருக்கின்றன என்று யோசித்துப் பாருங்கள்

  •   சிலர் வீட்டிலேயே ப்ளே ஸ்கூல் நடத்துவார்கள். அதுபோன்ற இடங்களில், குழந்தைகளை பார்த்துக்கொள்கிறவர்களும் குறைவாகத்தான் இருப்பார்கள், குழந்தைகளும் குறைவாகத்தான் இருப்பார்கள். அதுபோன்ற ப்ளே ஸ்கூலில் பிள்ளைகளை விடுவதற்கு சில பெற்றோர்கள் விரும்புகிறார்கள்.

  •   சில பெற்றோர், தங்கள் சொந்தக்காரர்களிடம் குழந்தையைப் பார்த்துக்கொள்ளும்படி கேட்கிறார்கள். அல்லது, குழந்தையைப் பார்த்துக்கொள்கிறவர்களை வீட்டிலேயே தங்க வைத்துக்கொள்கிறார்கள். அல்லது, தினமும் வீட்டிற்கே வந்து குழந்தையைப் பார்த்துக்கொள்வதற்கு யாரையாவது ஏற்பாடு செய்கிறார்கள்.

 குழந்தைகளைப் பார்த்துக்கொள்வதற்கு எந்த மாதிரியான ஏற்பாடுகளைச் செய்தாலும் அதில் நன்மைகளும் இருக்கிறது, ஆபத்தும் இருக்கிறது. இந்த விஷயத்தில் அனுபவம் இருக்கிற பெற்றோரிடம் நீங்கள் பேசி பாருங்களேன்! ”ஆலோசனை கேட்கிறவர்களிடம் ஞானம் இருக்கும்” என்று பைபிளும் சொல்கிறது.—நீதிமொழிகள் 13:10.

 ஒருவேளை, பிள்ளைகளை ப்ளே ஸ்கூலில்தான் விட வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், கீழே கொடுத்திருக்கிற விஷயங்களையும் யோசித்துப் பாருங்கள்.

 அந்த இடத்தைப் பற்றி நன்றாக தெரிந்துகொள்ளுங்கள்

  •   அந்த ப்ளே ஸ்கூல் அரசாங்க அங்கீகாரம் பெற்றதா? அந்தப் பகுதியில் அந்தப் ப்ளே ஸ்கூல் என்ன பெயர் எடுத்திருக்கிறது?

  •   அந்த இடம் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறதா?

  •   அந்த இடத்தில் பிள்ளைகளை என்ன மாதிரியான விளையாட்டை விளையாட வைக்கிறார்கள்? a

 குழந்தைகளைப் பார்த்துக்கொள்கிறவர்களைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்

  •   அவர்கள் பயிற்சி பெற்றவர்களா? குழந்தை வளர்ப்பு சம்பந்தமான பயிற்சிகள் அவர்களுக்கு கிடைத்திருக்கிறதா? முதல் உதவி செய்ய தெரியுமா? CPR செய்ய தெரியுமா?

  •   உங்கள் குழந்தையைப் பார்த்துக்கொள்ளபோகிறவர்கள் முன்பு ஏதாவது பெரிய குற்றங்களைச் செய்திருக்கிறார்களா? அல்லது, அவர்கள்மேல் ஏதாவது கேஸ் இருக்கிறதா?

  •   அங்கே வேலை செய்கிறவர்கள் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கிறார்களா? அப்படியிருந்தால், புது புது ஆட்களோடு ஒத்துப்போவது உங்கள் பிள்ளைக்கு கஷ்டமாக இருக்கலாம்.

  •   ப்ளே ஸ்கூலில் எத்தனை பேர் வேலை செய்கிறார்கள்? ஒவ்வொருவரும் எத்தனை குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள வேண்டியிருக்கும்? இந்த விஷயங்களையும் நீங்கள் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், ஒருவரே நிறைய குழந்தைகளைப் பார்க்க வேண்டியிருந்தால் உங்கள் குழந்தைக்கு தேவையான கவனிப்பு கிடைக்காமல் போய்விடும். உண்மைதான், ஒவ்வொரு குழந்தைக்கும் எவ்வளவு கவனிப்பு தேவை என்பது அந்த குழந்தையின் வயதையும் திறமைகளையும் பொறுத்துதான் இருக்கிறது.

  •   அந்த ஸ்கூலை நடத்துகிறவர்கள் தங்களுக்கு இருக்கிற சவால்களை உங்களிடம் வெளிப்படையாக சொல்ல தயாராக இருக்கிறார்களா? அதேபோல், நீங்கள் சொல்லும் விஷயங்களையும் பொறுமையாக கேட்க தயாராக இருக்கிறார்களா?

a உதாரணத்துக்கு, அந்த இடத்தில் பிள்ளைகள் எப்போதுமே டிவி முன்பு உட்கார்ந்திருக்கிறார்களா? அல்லது, ஓடி ஆடி விளையாடுகிறார்களா? நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கு உதவுகிற விளையாட்டுகள் அங்கே இருக்கிறதா?