Skip to content

ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு மதத்தில் இருப்பது முக்கியமா?

ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு மதத்தில் இருப்பது முக்கியமா?

பைபிள் தரும் பதில்

 ஆம்! மக்கள் ஒன்றுகூடி வந்து தன்னை வணங்க வேண்டும் என்று கடவுள் எதிர்பார்க்கிறார். “அன்பு காட்டுவதற்கும் நல்ல செயல்கள் செய்வதற்கும் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்தி, ஒருவர்மீது ஒருவர் ஆழ்ந்த அக்கறை காட்ட வேண்டும்; சிலர் வழக்கமாகச் சபைக் கூட்டங்களுக்கு வராமல் இருந்துவிடுவதுபோல் நாமும் இருந்துவிடக் கூடாது” என்று பைபிள் சொல்கிறது.—எபிரெயர் 10:24, 25.

 “நீங்கள் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்டினால், நீங்கள் என்னுடைய சீஷர்கள் என்று எல்லாரும் தெரிந்துகொள்வார்கள்” என்று இயேசு தன்னுடைய சீஷர்களிடம் சொன்னார். இதன் மூலம், சீஷர்கள் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட தொகுதியாகச் செயல்படுவார்கள் என்று இயேசு குறிப்பிட்டார். (யோவான் 13:35) கிறிஸ்துவின் சீஷர்கள், சக வணக்கத்தாரோடு ஒன்றுகூடி வருவதுதான் அன்பு காட்டுவதற்கான முக்கிய வழியாக இருக்கிறது. வணக்கத்துக்காக தவறாமல் ஒன்றுகூடி வருகிற எல்லாரும் சபைகளாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்தார்கள். (1 கொரிந்தியர் 16:19) உலகம் முழுவதும் இருக்கிற இவர்கள் எல்லாரும் ஒரே குடும்பமாக ஆகிறார்கள்.—1 பேதுரு 2:17.

மதத்தின் அங்கத்தினராக இருந்தால் மட்டும் போதாது

 கடவுளை வணங்குவதற்கு மக்கள் எல்லாரும் ஒன்றுகூடி வர வேண்டும் என்று பைபிள் சொல்கிறது. ஒருவர் வெறுமனே ஒரு மதத்தின் அங்கத்தினராக இருந்தால் மட்டும் கடவுளைப் பிரியப்படுத்திவிட முடியும் என்று அது போதிப்பது கிடையாது. கடவுள் ஒரு நபரை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால், அவருடைய மதம் அவருடைய அன்றாட வாழ்க்கையின் பாகமாக இருக்க வேண்டும். உதாரணத்துக்கு, “கஷ்டப்படுகிற அநாதைகளையும் விதவைகளையும் கவனித்துக்கொள்வதும், இந்த உலகத்தால் கறைபடாமல் நம்மைப் பாதுகாத்துக்கொள்வதும்தான் நம் தகப்பனாகிய கடவுளுடைய பார்வையில் சுத்தமான, களங்கமில்லாத வழிபாடாகும்” என்று பைபிள் சொல்கிறது.—யாக்கோபு 1:27, அடிக்குறிப்பு.