Skip to content

கருக்கலைப்பைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

கருக்கலைப்பைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

பைபிள் தரும் பதில்

 கருக்கலைப்பு செய்வதைப் பற்றிய நேரடியான சட்டங்கள் பைபிளில் இல்லை. ஆனாலும், மனித உயிரைப் பற்றியும், கருவில் இருக்கும் குழந்தையின் உயிரைப் பற்றியும் கடவுள் என்ன நினைக்கிறார் என்று அதிலிருக்கும் நிறைய வசனங்கள் காட்டுகின்றன.

 உயிர் என்பது கடவுள் தரும் பரிசு. (ஆதியாகமம் 9:6; சங்கீதம் 36:9) கடவுள் எல்லா உயிர்களையும் ரொம்ப உயர்வாக நினைக்கிறார். கருவில் இருக்கும் குழந்தையின் உயிரைக்கூட அவர் ரொம்ப விசேஷமானதாக நினைக்கிறார். அதனால், கருவை யாராவது வேண்டுமென்றே கலைத்துவிட்டால் அதுவும் கொலைக்குச் சமம்தான்.

 இஸ்ரவேலர்களுக்குக் கடவுள் இந்தச் சட்டத்தைக் கொடுத்திருந்தார்: “ஆண்கள் ஒருவருக்கொருவர் சண்டை போடும்போது ஒரு கர்ப்பிணிக்கு அடிபட்டு குறைப்பிரசவம் ஆகிவிட்டால், அதேசமயத்தில் அவளுடைய உயிருக்கோ குழந்தையின் உயிருக்கோ ஒன்றும் ஆகாவிட்டால், அடித்தவன் அந்தப் பெண்ணின் கணவர் கேட்கிற அபராதத்தை நியாயாதிபதிகளின் மூலம் கொடுக்க வேண்டும். ஆனால் தாயோ குழந்தையோ இறந்துவிட்டால், உயிருக்கு உயிர் கொடுக்க வேண்டும்.”—யாத்திராகமம் 21:22, 23. a

 மனித உயிர் எப்போது உருவாகிறது?

 கரு உருவாகும் சமயத்திலேயே மனித உயிர் உருவாகிவிடுவதாகக் கடவுள் நினைக்கிறார். நிறைய பைபிள் வசனங்கள், தாயின் வயிற்றில் இருக்கும் கருவைக்கூட கடவுள் ஒரு தனி நபராகப் பார்க்கிறார் என்று காட்டுகின்றன. பிறக்காத குழந்தையும் பிறந்த குழந்தையும் கடவுளுடைய பார்வையில் சமம்தான் என்பதற்குச் சில உதாரணங்களை இப்போது கவனியுங்கள்.

  •   “நான் கருவாக இருந்தபோதே உங்கள் கண்கள் என்னைப் பார்த்தன” என்று தாவீது ராஜா கடவுளுடைய சக்தியால் தூண்டப்பட்டு சொன்னார். (சங்கீதம் 139:16) தாவீது பிறப்பதற்கு முன்பே, தன் தாயின் வயிற்றில் இருந்தபோதே, கடவுள் அவரை ஒரு தனி நபராகப் பார்த்தார்.

  •   அதுமட்டுமல்ல, எரேமியா தீர்க்கதரிசி பிறப்பதற்கு முன்பே கடவுள் அவரை ஒரு விசேஷமான வேலைக்குத் தேர்ந்தெடுத்ததாகச் சொன்னார். “உன் தாயின் வயிற்றில் உன்னை உருவாக்குவதற்கு முன்பே உன்னைப் பற்றி எனக்குத் தெரியும். நீ பிறப்பதற்கு முன்பே ஒரு விசேஷ வேலைக்காக உன்னைத் தேர்ந்தெடுத்தேன். தேசங்களுக்கு உன்னை ஒரு தீர்க்கதரிசியாக நியமித்தேன்” என்று கடவுள் அவரிடம் சொன்னார்.—எரேமியா 1:5.

  •   பைபிள் எழுத்தாளராகவும் மருத்துவராகவும் இருந்த லூக்கா, பிறந்த குழந்தையைக் குறிப்பதற்கும் கருவில் இருக்கும் குழந்தையைக் குறிப்பதற்கும் ஒரே கிரேக்க வார்த்தையைத்தான் பயன்படுத்தினார்.—லூக்கா 1:41; 2:12, 16.

 கருக்கலைப்பு செய்த ஒருவரைக் கடவுள் மன்னிப்பாரா?

 கருக்கலைப்பு செய்தவர்கள் கடவுளுடைய மன்னிப்பைப் பெற முடியும். உயிரைக் கடவுள் எப்படிப் பார்க்கிறார் என்று அவர்கள் புரிந்துகொண்டு அதை ஏற்றுக்கொண்டால் குற்றவுணர்ச்சியில் தவிக்க வேண்டியதில்லை. ஏனென்றால், “யெகோவா இரக்கமும் கரிசனையும் உள்ளவர் . . . கிழக்குக்கும் மேற்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரத்துக்கு நம்முடைய குற்றங்களை அவர் தூக்கியெறிந்திருக்கிறார்.” b (சங்கீதம் 103:8-12) முன்பு செய்த பாவத்தை நினைத்து வருத்தப்பட்டு மனம் திருந்துகிற எல்லாரையும், அவர்கள் கருக்கலைப்பு செய்திருந்தாலும்கூட, யெகோவா மன்னிப்பார்.—சங்கீதம் 86:5.

 தாயா குழந்தையா என்ற சூழ்நிலை வரும்போது கருக்கலைப்பு செய்வது தவறா?

 பிறக்காத குழந்தையின் உயிர்கூட ரொம்ப ரொம்ப உயர்வானது என்று பைபிள் சொல்கிறது. அதனால், தாயின் உயிருக்கோ குழந்தையின் உயிருக்கோ பிரச்சினை வரலாம் என்று டாக்டர் சொல்வதை வைத்து கருக்கலைப்பு செய்வதை நியாயப்படுத்த முடியாது.

 ஒருவேளை பிரசவத்தின்போது தாயை அல்லது குழந்தையை, யாராவது ஒருவரைத்தான் காப்பாற்ற முடியும் என்ற அவசர சூழ்நிலை வரலாம். அப்போது என்ன செய்வது? யாருடைய உயிரைக் காப்பாற்றுவது என்ற முடிவைக் கணவனும் மனைவியும்தான் எடுக்க வேண்டும்.

a இஸ்ரவேலர்களுக்குக் கொடுக்கப்பட்ட இந்தச் சட்டம் தாயுடைய உயிருக்கு முக்கியத்துவம் கொடுப்பது போலவும் தாயுடைய வயிற்றில் இருக்கும் குழந்தையுடைய உயிருக்கு முக்கியத்துவம் கொடுக்காதது போலவும் சில பைபிள்களில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஆனால், பைபிள் எழுதப்பட்ட எபிரெய மொழியில், இந்த சட்டம் இரண்டு பேருடைய உயிருக்கும் ஒரே அளவு முக்கியத்துவத்தைத்தான் கொடுக்கிறது.

b யெகோவா என்பது கடவுளுடைய பெயர் என்று பைபிள் சொல்கிறது.—சங்கீதம் 83:18.