Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அட்டைப்படக் கட்டுரை | பாசமுள்ளவரைப் பறிகொடுக்கும்போது...

இறந்தவர்கள் உயிரோடு வருவார்கள்!

இறந்தவர்கள் உயிரோடு வருவார்கள்!

இந்த அட்டைப்பட கட்டுரையில் முன்பு குறிப்பிடப்பட்ட கெயில் என்ற பெண்ணை உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். அவளுடைய கணவர் ராபர்ட்டை இழந்த சோகத்திலிருந்து அவள் மீண்டு வந்தாளா என ஒருவேளை நீங்கள் யோசிக்கலாம். ஆனால், கடவுள் வாக்கு கொடுத்திருக்கிற புதிய உலகத்தில் அவரை மறுபடியும் பார்க்க முடியும் என்ற நம்பிக்கையோடு இப்போது அவள் இருக்கிறாள். “எனக்கு ரொம்ப பிடிச்ச வசனம் வெளிப்படுத்துதல் 21:3, 4” என்று அவள் சொல்கிறாள். “கடவுள்தாமே அவர்களோடு இருப்பார். அவர்களுடைய கண்ணீரையெல்லாம் கடவுள் துடைத்துவிடுவார்; இனி மரணம் இருக்காது, துக்கம் இருக்காது, அழுகை இருக்காது, வேதனை இருக்காது; முன்பிருந்தவை ஒழிந்துவிடும்” என்று அந்த வசனம் சொல்கிறது.

கெயில் இப்படிச் சொல்கிறாள்: “இந்த ஒரே வாக்குறுதில எல்லாமே அடங்கிடுச்சு. இறந்தவங்கள மறுபடியும் உயிரோட பார்க்க முடியுங்கிற வாக்குறுதிய பத்தி தெரியாம அன்பானவங்கள இழந்து தவிக்கிறவங்களுக்காக நான் ரொம்ப அனுதாபப்படுறேன்.” அவள் தன்னுடைய நம்பிக்கையைப் பற்றி எல்லாருக்கும் சொல்ல முழுநேர ஊழியம் செய்கிறாள். அக்கம்பக்கத்தில் இருக்கிறவர்களைச் சந்தித்து, “இனி மரணம் இருக்காது” என்று கடவுள் கொடுத்திருக்கிற வாக்குறுதியைப் பற்றி சொல்கிறாள்.

மறுபடியும் உயிரோடு வரும் நம்பிக்கை யோபுவுக்கு இருந்தது

‘இதெல்லாம் நம்பற மாதிரி இல்ல’ என்று நீங்கள் ஒருவேளை சொல்லலாம். ஆனால் யோபு என்பவரின் உதாரணத்தை கவனியுங்கள். அவர் பயங்கரமான வியாதியில் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். (யோபு 2:7) செத்துப்போனால் நன்றாக இருக்கும் என்று அவர் சொன்னாலும்கூட, இதே பூமியில் தன்னை உயிரோடு கொண்டுவரும் சக்தி கடவுளுக்கு இருக்கிறது என்பதை உறுதியாக நம்பினார். அதனால்தான், ‘கடவுளே, நீங்கள் என்னைக் கல்லறையில் புதைத்து வையுங்கள், . . . நீங்கள் என்னைக் கூப்பிடுவீர்கள், நான் பதில் சொல்வேன். இறந்தவர்களை மறுபடியும் உயிரோடு கொண்டுவர நீங்கள் ஏக்கமாக இருப்பீர்கள்’ என்று நம்பிக்கையோடு சொன்னார். (யோபு 14:13, 15, NW) கடவுள் தன்னை ரொம்பவே ‘மிஸ்’ பண்ணுவார்... அவரை மறுபடியும் உயிரோடு கொண்டுவர ஏக்கமாக இருப்பார்... என்ற நம்பிக்கை யோபுவுக்கு இருந்தது.

சீக்கிரத்தில், இந்தப் பூமியை பூஞ்சோலையாக கடவுள் மாற்றும்போது, யோபுவின் ஆசையை மட்டுமல்ல எல்லாருடைய ஆசையையும் நிறைவேற்றுவார். (லூக்கா 23:42, 43) நல்லவர்கள் எல்லாரும் ‘உயிரோடு எழுப்பப்படுவார்கள்’ என்று பைபிள் உறுதியளிக்கிறது. (அப்போஸ்தலர் 24:15) “இதைக் குறித்து ஆச்சரியப்படாதீர்கள்; ஏனென்றால், வேளை வரப்போகிறது; அப்போது, கல்லறைகளில் உள்ள அனைவரும் அவரது குரலைக் கேட்டு வெளியே வருவார்கள்” என்று இயேசுவும் நமக்கு உறுதியளிக்கிறார். (யோவான் 5:28, 29) இந்த வாக்குறுதி நிறைவேறப்போவதை யோபு பார்ப்பார். அவருடைய உடல் “இளமையில் இருந்ததைவிட ஆரோக்கியம் அடையும்.” அதோடு, அவருடைய உடல் மறுபடியும் “இளமைத் துடிப்போடு” மாறும் என்ற அவருடைய நம்பிக்கையும் நிறைவேறும். (யோபு 33:24, 25, NW) இறந்தவர்களை இதே பூமியில் கடவுள் உயிரோடு கொண்டுவருவார் என்பதை ஏற்றுக்கொள்கிற எல்லாருக்கும் இப்படிப்பட்ட வாழ்க்கை கிடைக்கும்.

பாசமானவர்களை நீங்கள் பறிகொடுத்திருந்தால், இங்கே சொல்லப்பட்ட விஷயங்கள் ஒருவேளை உங்களுடைய துக்கத்தை முழுமையாகத் தணிக்காமல் இருக்கலாம். ஆனால், பைபிளில் கடவுள் சொல்லியிருக்கும் வாக்குறுதிகளைப் பற்றி ஆழமாக யோசித்துப் பார்க்கும்போது இது நிஜமான நம்பிக்கை என்பதைத் தெரிந்துகொள்வீர்கள். அதோடு, இது உங்களுடைய வாழ்க்கையைத் தொடர்ந்து நடத்துவதற்குத் தேவையான பலத்தையும் கொடுக்கும்.—1 தெசலோனிக்கேயர் 4:13.

துக்கத்திலிருந்து எப்படி மீண்டுவருவது என்பதைப் பற்றி இன்னும் அதிகமாகத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? அல்லது, “கஷ்டங்களையெல்லாம் கடவுள் ஏன் இன்னும் தீர்க்காமல் இருக்கிறார்?” போன்ற கேள்விகளுக்கு பதில் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறீர்களா? பைபிள் தரும் ஆறுதலான... நடைமுறையான... பதில்களைத் தெரிந்துகொள்ள, தயவுசெய்து jw.org பாருங்கள். ▪ (w16-E No. 3)