Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் வழிநடத்துதலிலிருந்து பயனடையுங்கள்!

யெகோவாவின் வழிநடத்துதலிலிருந்து பயனடையுங்கள்!

போலந்தில் ஒருவர் எடுத்த ஞானமான தீர்மானம்

“நான் ஞானஸ்நானம் எடுத்தப்போ எனக்கு 15 வயசு. ஆறு மாசத்துக்கு அப்புறம் நான் துணைப் பயனியர் செய்ய ஆரம்பிச்சேன். அடுத்த ஆறு மாசத்துக்கு அப்புறம் ஒழுங்கான பயனியர் சேவை செய்ய எழுதிக்கொடுத்தேன். நான் உயர்நிலைப் பள்ளி படிப்ப முடிச்சதுக்கு அப்புறம் தேவை அதிகமா இருக்கிற இடத்துல சேவை செய்யணும்னு கேட்டேன். அப்போ நானும் என் பாட்டியும் ஒண்ணாதான் இருந்தோம். என் ஊரையும் யெகோவாவின் சாட்சியா இல்லாத என் பாட்டியையும் விட்டு ரொம்ப தூரம் போகணும்னு நினைச்சேன். ஆனா, என்னோட சொந்த ஊர்லயே என்னை நியமிச்சிருக்கிறதா வட்டார கண்காணி சொன்னார். அதை கேட்டதும் எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. ஆனா, நான் அவர்கிட்ட எதையும் காட்டிக்கல. அவர் சொன்னத யோசிச்சுக்கிட்டே அங்க இருந்து அமைதியா வந்துட்டேன். என்னோட பயனியர் பார்ட்னர்கிட்ட, ‘நான் யோனா மாதிரி நடந்துக்கிறேன்னு நினைக்கிறேன். ஆனா, கடைசியில யோனா நினிவேக்குதான் போனாரு. நானும் என்னை நியமிச்ச இடத்துலயே சேவை செய்யப்போறேன்’”னு சொன்னேன்.

“என்னோட ஊர்லயே இப்போ 4 வருஷமா பயனியர் செஞ்சிக்கிட்டு இருக்கேன். எனக்கு கிடைச்ச ஆலோசனைபடி செஞ்சது எவ்ளோ ஞானமானதுனு புரிஞ்சுக்கிட்டேன். என்னோட தவறான மனப்பான்மைதான் எனக்கு பெரிய பிரச்சினையா இருந்துச்சு. ஆனா, இப்போ நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். ஒரே மாசத்துல எனக்கு 24 பைபிள் படிப்புகள் கிடைச்சிருக்கு. ஆரம்பத்துல என்னை எதிர்த்த என்னோட பாட்டிக்கும் இப்போ பைபிள் படிப்பு ஆரம்பிச்சிருக்கேன்.”

பிஜியில் நடந்த ஒரு சந்தோஷமான விஷயம்

பிஜியில் இருக்கும் பைபிள் மாணவர் ஒருவர், மாநாட்டுக்குப் போவதா அல்லது தன் கணவருடைய சொந்தக்காரரின் பிறந்தநாள் நிகழ்ச்சிக்குப் போவதா என்று தீர்மானிக்க வேண்டியிருந்தது. மாநாட்டுக்குப் போவதற்கு அவருடைய கணவர் அனுமதி கொடுத்தார். மாநாடு முடிந்த பிறகு அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதாக அவரும் தன் கணவரிடம் சொன்னார். ஆனால், மாநாட்டிலிருந்து திரும்பி வந்த பிறகு, யெகோவாவோடு இருக்கும் நட்பைப் பாதிக்கிற சூழ்நிலைகளில் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதுதான் நல்லது என்று நினைத்து, அந்த நிகழ்ச்சிக்குப் போகாமல் வீட்டிலேயே இருந்துவிட்டார்.

அந்தச் சமயத்தில் அவருடைய கணவர் தன்னுடைய சொந்தக்காரர்களிடம், ‘நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறதால, “சாட்சிகளுடைய கூட்டம்” முடிஞ்ச பிறகு அவ இங்க வருவா’ என்று சொன்னார். அதற்கு அவர்கள், “அவ வரமாட்டா, ஏன்னா யெகோவாவின் சாட்சிகள் பிறந்த நாளெல்லாம் கொண்டாட மாட்டாங்க” என்று சொன்னார்கள். *

தன் மனைவி அவருடைய நம்பிக்கைகளின்படியும் மனசாட்சியின்படியும் தீர்மானம் எடுத்ததை நினைத்து அவருடைய கணவருக்கு மிகவும் பெருமையாக இருந்தது. தான் காட்டிய விசுவாசத்தால், தன் கணவனுக்கும் மற்றவர்களுக்கும் அவரால் சாட்சிகொடுக்க முடிந்தது. கடைசியில், அவருடைய கணவர் பைபிள் படிப்புக்கு ஒத்துக்கொண்டார், தன் மனைவியோடு கூட்டங்களுக்கும் வர ஆரம்பித்தார்.

^ பாரா. 7 டிசம்பர் 15, 2001 காவற்கோபுரத்தில் வெளிவந்த “வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்” என்ற பகுதியைப் பாருங்கள்.