Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா?

பழங்காலங்களில், ஒருவர் இன்னொருவருடைய வயலில் களைகளை விதைத்த சம்பவம் உண்மையிலேயே நடந்தது என்று நம்பலாமா?

பழங்காலத்தின் சட்டப்பூர்வ விஷயங்களைப் பற்றி விளக்கும் ஆவணங்களில், 1468-ல் நகலெடுக்கப்பட்ட, பேரரசன் ஜஸ்டினியனின் டைஜஸ்டும் ஒன்று

“பரலோக அரசாங்கம், நல்ல விதையைத் தன் வயலில் விதைத்த ஒரு மனிதனுக்கு ஒப்பாக இருக்கிறது. எல்லாரும் தூங்கிக்கொண்டிருந்தபோது, அவனுடைய எதிரி வந்து கோதுமைகளுக்கு இடையே களைகளை விதைத்துவிட்டுப் போய்விட்டான். பயிர் வளர்ந்து கதிர்விட்டபோது, களைகளும் வளர்ந்திருந்தன” என்று மத்தேயு 13:24-26-ல் இயேசு சொல்கிறார். இந்த உதாரணத்தில் இருக்கிற சம்பவம் உண்மையிலேயே நடந்ததா என்று நிறைய எழுத்தாளர்கள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். ஆனால், இது உண்மையிலேயே நடந்திருக்கலாம் என்று பழங்காலத்தைச் சேர்ந்த ரோம சட்டப்பூர்வ ஆவணங்கள் சொல்கின்றன.

“பழிவாங்கும் எண்ணத்தில், டார்னெல் என்ற களைகளை வயல்களில் விதைப்பது . . . ரோம சட்டத்தின்படி குற்றம். இந்தச் சம்பவங்கள் அடிக்கடி நடந்ததால்தான் இதற்கென்று ஒரு சட்டம் இருந்தது” என்று ஒரு பைபிள் டிக்ஷனரி சொல்கிறது. கி.பி 533-ல் ரோமப் பேரரசன் ஜஸ்டினியன், டைஜஸ்ட் என்ற புத்தகத்தை வெளியிட்டார் என்றும் அதில் ரோம சட்டத்தின் சுருக்கமும் சட்டத்தின் இலக்கிய காலத்தில் (சுமார் கி.பி 100-250 வரை) வாழ்ந்த சட்ட நிபுணர்களின் சில குறிப்புகளும் இருக்கின்றன என்றும் சட்டவியல் அறிஞர் அலெஸ்டர் கெர் விளக்குகிறார். இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ரோம அரசியல் மேதை ஸெல்சஸ் என்பவரால் எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கைப் பற்றி சட்ட நிபுணர் உல்பியன் குறிப்பிட்டதாக இந்தப் புத்தகம் (டைஜஸ்ட், 9.2.27.14) சொல்கிறது. இன்னொருவருடைய வயலில் களைகளை விதைத்ததால் பயிர்களெல்லாம் நாசமாக்கப்பட்டன. அந்த வயலின் சொந்தக்காரருக்கோ குத்தகைக்காரருக்கோ ஏற்பட்ட இழப்புக்கு, பயிரை நாசமாக்கியவர் என்ன நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்பதைப் பற்றிய சட்டப்பூர்வ நிவாரணங்கள் டைஜஸ்ட் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்தன.

பழங்காலத்தில், ரோம சாம்ராஜ்யத்தில் நடந்த இதுபோன்ற கெடுதல் உண்டாக்குகிற சம்பவங்கள், இயேசு சொன்ன உதாரணம் உண்மையிலேயே நடந்தன என்பதை நிரூபிக்கின்றன.

முதல் நூற்றாண்டில், யூதேயாவில் இருந்த யூத அதிகாரிகளுக்கு ரோமர்கள் எந்தளவு சுதந்திரம் கொடுத்திருந்தார்கள்?

அந்தச் சமயத்தில், யூதேயாவை ரோமர்கள் ஆட்சி செய்தார்கள். அவர்களுடைய பிரதிநிதியாக ஓர் ஆளுநரை நியமித்திருந்தார்கள்; அந்த ஆளுநரின் கட்டுப்பாட்டில் ஒரு படை இருந்தது. ரோமுக்காக வரி வசூலிப்பதும், சமாதானத்தையும் ஒழுங்கையும் காப்பதும்தான் ஆளுநருடைய முக்கிய வேலையாக இருந்தது. சட்ட விரோதமான செயல்களைத் தடுப்பதிலும், தவறு செய்கிறவர்களைத் தண்டிப்பதிலும் ரோமர்கள் தனி கவனம் செலுத்தினார்கள். மற்றபடி, அந்த மாகாணத்தின் தினசரி நிர்வாகத்தை உள்ளூர் தலைவர்கள் பார்த்துக்கொள்ளும்படி அவர்கள் விட்டுவிட்டார்கள்.

யூத நியாயசங்கத்தில் ஒரு வழக்கு நடந்துகொண்டிருக்கிறது

யூதர்களுடைய உச்ச நீதிமன்றமாகவும் யூத சட்டம் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கான ஆட்சிக் குழுவாகவும் நியாயசங்கம் செயல்பட்டது. கீழ் நீதிமன்றங்கள் யூதேயா முழுவதும் இருந்தன. ரோம ஆட்சியாளர்களின் தலையீடு இல்லாமலேயே பெரும்பாலான சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகள் அங்கே விசாரிக்கப்பட்டிருக்கலாம். ஆனால், ஒரு விஷயத்தை மட்டும் செய்வதற்கான அதிகாரம் யூத நீதிமன்றங்களுக்குக் கொடுக்கப்படவில்லை. அதாவது மரண தண்டனை கொடுக்கும் அதிகாரம், அவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை. அது ரோமர்களுடைய கையில்தான் இருந்தது. ஆனால், ஒரு சம்பவம் மட்டும் இதற்கு விதிவிலக்காக இருந்தது. ஸ்தேவானைப் பற்றிய சம்பவம்தான் அது! எல்லாருக்கும் தெரிந்தபடி, அவர் நியாயசங்கத்தின் உறுப்பினர்களால் விசாரிக்கப்பட்டு, பிறகு கல்லெறிந்து கொல்லப்பட்டார்.—அப். 6:8-15; 7:54-60.

யூத நியாயசங்கத்துக்குப் பெரியளவில் ஆட்சி அதிகாரம் இருந்தது. ஆனாலும், ஏமில் ஷ்யூரர் என்ற அறிஞர் இப்படி எழுதுகிறார்: “யூத நியாயசங்கத்துக்கு ஒரு கட்டுப்பாடு இருந்தது. ரோம அதிகாரிகளால் எப்போது வேண்டுமானாலும் யாருடைய அனுமதியும் இல்லாமல் தாங்களாகவே ஒரு வழக்கை எடுத்து, விசாரிக்க முடிந்தது. சொல்லப்போனால், அரசியல் குற்றம் நடந்ததாகச் சந்தேகப்படும்போது அவர்கள் அப்படிச் செய்திருக்கிறார்கள்.” படைத் தளபதி கிலவுதியு லீசியாவின் தலைமையின்கீழ் நடந்த ஒரு சம்பவம் இதற்கு ஓர் உதாரணம்; ரோமக் குடிமகனான பவுலை அவர் காவலில் வைத்துக்கொண்டதுதான் அந்தச் சம்பவம்.—அப். 23:26-30.