Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளை நம்புவதற்கான காரணங்கள்

3. முரண்பாடற்றது

3. முரண்பாடற்றது

வித்தியாசப்பட்ட பின்னணியைச் சேர்ந்த 40 பேர் ஒரு புத்தகத்தை எழுதுவதாக வைத்துக்கொள்ளுங்கள். அப்புத்தகத்தில் ஒவ்வொருவரும் ஒரு பகுதியை எழுதுகிறார்கள். அவர்கள் பல்வேறு இடங்களில் வாழ்கிறார்கள். அவர்களில் அநேகர் ஒருவரையொருவர் பார்த்ததுகூட கிடையாது. மற்றவர்கள் என்ன எழுதியிருக்கிறார்கள் என்பதும் சிலருக்கு தெரியாது. இப்படி எழுதப்பட்ட ஒரு புத்தகம் முரண்பாடின்றி இருக்கும் என நீங்கள் நினைக்கிறீர்களா?

மேற்குறிப்பிடப்பட்ட அனைத்தும் பைபிளுக்குப் பொருந்தும். a இங்கு விவரிக்கப்பட்டுள்ளதைக் காட்டிலும் இன்னும் பல அசாதாரண சூழ்நிலைகளில் இது எழுதப்பட்டது. என்றாலும், இது முரண்பாடின்றி இருப்பது அபாரம்!

இயேசு அணிந்திருந்த ஆடை செந்நிறமா அல்லது கருஞ்சிவப்பு நிறமா?

அசாதாரண சூழ்நிலைகள்.

ஏறக்குறைய 1,600 வருட காலப்பகுதியில், அதாவது பொ.ச.மு. 1513-லிருந்து சுமார் பொ.ச. 98-வரையான காலப்பகுதியில் பைபிள் எழுதப்பட்டது. இதைக் கிட்டத்தட்ட 40 பேர் எழுதினார்கள்; இவர்களில் அநேகர் பல்வேறு நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர்கள். அவர்கள் வெவ்வேறு தொழில்களில் ஈடுபட்டவர்கள். சிலர் மீனவர்கள், இன்னும் சிலர் மேய்ப்பர்களாக அல்லது ராஜாக்களாக இருந்தவர்கள், ஒருவரோ மருத்துவராகப் பணிபுரிந்தவர்.

ஒரே செய்தி.

பைபிளை எழுதியவர்கள் ஒரே மையப்பொருளின் அடிப்படையில் அதை எழுதினார்கள். மனிதகுலத்தை ஆட்சி செய்வதற்குத் தகுதியானவர் கடவுளே என்பது நிரூபிக்கப்படுவதும், முழு உலகிற்கும் ஒரே அரசாங்கமாகத் திகழும் பரலோக ராஜ்யத்தின்மூலம் கடவுள் தமது நோக்கத்தை நிறைவேற்றுவதுமே அதன் மையப்பொருள். ஆதியாகமப் புத்தகத்தில் அந்த மையப்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்துவரும் புத்தகங்களில் அது விரிவாக விளக்கப்பட்டுள்ளது. வெளிப்படுத்தல் புத்தகத்தில் அதன் உச்சக்கட்டம் விவரிக்கப்பட்டுள்ளது.​—⁠பக்கம் 19-⁠ல், “பைபிள் எதைப்பற்றிச் சொல்கிறது?” என்ற கட்டுரையைக் காண்க.

தகவல்களில் ஒற்றுமை.

நுட்ப விவரங்களைக்கூட பைபிள் எழுத்தாளர்கள் முரண்பாடின்றி எழுதியிருக்கிறார்கள். பெரும்பாலும் பைபிளின் பிற எழுத்தாளர்கள் எழுதியதை ஒத்துப் பார்க்காமலேயே அப்படி எழுதியிருக்கிறார்கள். அதற்கு ஓர் உதாரணத்தைக் கவனியுங்கள். தம் பேச்சைக்கேட்க மக்கள் திரண்டு வந்திருந்தபோது அவர்களுக்கு உணவளிக்க அப்பங்களை எங்கே வாங்கலாமென குறிப்பாக பிலிப்புவிடம் இயேசு கேட்டார்; இதை பைபிள் எழுத்தாளர் யோவான் குறிப்பிடுகிறார். (யோவான் 6:1-5) இதே சம்பவத்தை லூக்கா எழுதுகையில், இது பெத்சாயிதா பட்டணத்திற்கு அருகே நடந்ததாகக் குறிப்பிடுகிறார். யோவான் தன்னுடைய புத்தகத்தின் ஆரம்பத்திலேயே பிலிப்பு பெத்சாயிதா பட்டணத்தைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட்டிருக்கிறார். (லூக்கா 9:10; யோவான் 1:44) ஆகவே, அந்தச் சுற்றுவட்டாரத்தில் வாழ்ந்த ஒருவரிடத்தில்தான் இயேசு அக்கேள்வியைக் கேட்டிருக்கிறார். பைபிள் எழுத்தாளர்கள், விவரங்களை முரண்பாடின்றி எழுத வேண்டுமென்ற எண்ணத்தில் அவ்வாறு எழுதவில்லை; அப்படியிருந்தும் அவை ஒத்திருக்கின்றன. b

நியாயமான வேறுபாடுகள்.

சில பதிவுகளுக்கு இடையே சிறுசிறு வேறுபாடுகள் இருக்கின்றன; ஆனால், அது இருக்கத்தான் செய்யும், அல்லவா? ஒரு கொலையை பலர் பார்த்திருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் எல்லாரும் விவரங்களை ஒரே விதமாக சொல்கிறார்கள் என்றால், ஒரே விதமான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள் என்றால், அவர்கள் எல்லாரும் பேசிவைத்துதான் அப்படிச் சொல்கிறார்கள் என்று நீங்கள் சந்தேகப்படுவீர்கள் அல்லவா? அச்சம்பவத்தை ஒவ்வொருவரும் தனித்தனி கோணத்தில் பார்த்ததால் அவர்களுடைய சாட்சியமும் ஓரளவு வித்தியாசமாக இருக்கும் என்பது நியாயம்தான். ஆகவே, பைபிள் எழுத்தாளர்கள் எழுதியவற்றில் சிறுசிறு வேறுபாடுகள் இருக்கும் என்பது நியாயம்தான்.

ஓர் உதாரணத்தைப் பாருங்கள். மாற்குவும் யோவானும் தெரிவிக்கிறபடி இயேசு தாம் மரித்த நாளில் செந்நிற ஆடையை உடுத்தியிருந்தாரா? (மாற்கு 15:17; பொது மொழிபெயர்ப்பு; யோவான் 19:2, பொ.மொ.) அல்லது மத்தேயு சொல்கிறபடி கருஞ்சிவப்பு ஆடையை அணிந்திருந்தாரா? (மத்தேயு 27:28, பொ.மொ.) இரண்டும் சரியானதென்றே சொல்லலாம். கருஞ்சிவப்பில் சிவப்பு நிறமும் கலந்திருக்கிறது. அங்குள்ள ஒளியின் பிரதிபலிப்பாலும் பின்னணிச் சூழலாலும் பார்ப்பவரின் கோணத்தைப் பொறுத்து ஆடையின் நிறம் அவர்களுடைய கண்களுக்குச் சற்று வித்தியாசமாகத் தெரிந்திருக்கலாம். c

பைபிள் எழுத்தாளர்கள் தங்களை அறியாமலேயே முரண்பாடின்றி எழுதியிருப்பது அதன் நம்பகத்தன்மைக்கு அழியா முத்திரையைப் பதிக்கிறது.

a ஆதியாகமம்முதல் வெளிப்படுத்துதல் வரையாக 66 புத்தகங்களை அல்லது உட்பிரிவுகளைக் கொண்ட ஒரு தொகுப்பே பைபிள்.

b கூடுதல் எடுத்துக்காட்டுகளுக்காக, எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம் என்ற சிற்றேட்டில் பக்கம் 16-17-ஐக் காண்க. இது யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.

c கூடுதல் தகவலுக்கு பைபிள்​—⁠கடவுளுடைய வார்த்தையா, மனிதனுடையதா? என்ற ஆங்கில புத்தகத்தில் “பைபிள் தன்னில்தானே முரண்படுகிறதா?” என்ற 7-ஆம் அதிகாரத்தைக் காண்க. இது யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.