Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சிக்கனமாய்ச் செலவு செய்யுங்கள்

சிக்கனமாய்ச் செலவு செய்யுங்கள்

“பணம் எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது” என்ற பழமொழி பைபிளிலிருந்து வந்ததாக அநேகர் கூறுகிறார்கள். ஆனால், ‘பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது’ என்றுதான் பைபிள் சொல்கிறது. (1 தீமோத்தேயு 6:10) சிலர் பணத்தின் மீது மோகத்தை வளர்த்துக்கொண்டு, செல்வம் சேர்ப்பதற்கே தங்களுடைய வாழ்க்கையை அர்ப்பணம் செய்திருக்கிறார்கள். சிலர் பணத்திற்கு அடிமையாகி, பரிதாபமான விளைவுகளை அறுவடை செய்திருக்கிறார்கள். ஆனால் பணத்தைத் தகுந்த முறையில் நிர்வகிக்கும்போது, அது பயனுள்ளதாய் இருக்கும். “பணம் பல சிக்கல்களைத் தீர்க்கிறது” என்று பைபிளும் சொல்கிறது.​—பிரசங்கி 10:​19, ஈஸி டு ரீட் வர்ஷன்.

பைபிள் ஒரு “நிதி ஆலோசகராக” இல்லையென்றாலும், பணத்தை ஞானமாய் நிர்வகிப்பதற்கு உதவும் நடைமுறையான ஆலோசனைகளைத் தருகிறது. பொதுவாக, நிதி ஆலோசகர்கள் சிபாரிசு செய்கிற ஐந்து வழிமுறைகளை இப்போது கவனிக்கலாம்; இவை பைபிளில் பல்லாண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட நியமங்களுடன் ஒத்திருக்கின்றன.

வரவுக்கேற்ப செலவு செய்யுங்கள்

சேமியுங்கள். சேமிப்பின் மதிப்பைப் பற்றி பூர்வ இஸ்ரவேல் தேசத்தாருக்குக் கற்பிக்கப்பட்டதாக பைபிள் பதிவு சொல்கிறது. பிரத்தியேகமாய்ப் பண்டிகைகளுக்குச் செல்வதற்காகவே ஒவ்வொரு வருடமும் தசமபாகத்தை (அதாவது, பத்திலொரு பங்கை) சேமித்து வைக்கும்படி அவர்களுக்குச் சொல்லப்பட்டது. (உபாகமம் 14:22–27) அதைப்போலவே, ஏழ்மையில் இருக்கும் சக விசுவாசிகளுக்கு நன்கொடை கொடுத்து உதவி செய்வதற்காக ஒவ்வொரு வாரமும் கொஞ்சம் பணத்தைச் சேமித்து வைக்கும்படி ஆரம்பகால கிறிஸ்தவர்களை அப்போஸ்தலன் பவுல் ஊக்குவித்தார். (1 கொரிந்தியர் 16:​1, 2) சேமித்து வைக்கும் பழக்கத்தைப் பெரும்பாலான நிதி ஆலோசகர்களும் ஊக்குவிக்கிறார்கள். சேமிப்புக்கு முக்கியத்துவம் கொடுங்கள். சம்பளம் கையில் கிடைத்தவுடன் நீங்கள் சேமிக்க விரும்புகிற தொகையை உடனே ஒரு வங்கியில் அல்லது வேறெங்காவது முதலீடு செய்யுங்கள். அப்போதுதான் அந்தப் பணத்தைச் செலவு செய்ய உங்களுக்கு எண்ணம் வராது.

பட்ஜெட் போடுங்கள். நீங்கள் எதற்கெல்லாம் செலவு செய்கிறீர்கள் என்பதைத் தெரிந்துகொள்ள.. உங்கள் செலவைக் கட்டுப்படுத்த.. இதுவே நடைமுறையான வழி. நல்ல விதத்தில் பட்ஜெட் போட்டால் உங்களுடைய பணம் எங்கே போகிறது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்; உங்களுடைய திட்டங்களை நிறைவேற்றவும் முடியும். உங்கள் வரவுக்கேற்ப செலவு செய்யுங்கள். தேவைகள்-⁠விருப்பங்கள் இடையே உள்ள வித்தியாசத்தைக் கற்றுக்கொள்ளுங்கள். எந்தத் திட்டத்தையும் போடுவதற்கு முன்பு ‘செலவைக் கணக்கிட்டுப் பார்க்கும்படி’ இயேசுவும்கூட தமது சீடர்களை உந்துவித்தார். (லூக்கா 14:28, NW) அநாவசியமாய்க் கடன் வாங்குவதைத் தவிர்க்கும்படி பைபிள் நமக்கு ஆலோசனை அளிக்கிறது.​—நீதிமொழிகள் 22:⁠7.

திட்டமிடுங்கள். உங்களுடைய வருங்காலத் தேவைகளைக் கவனமாகத் திட்டமிடுங்கள். உதாரணமாக, நீங்கள் வீட்டுக்கடன் வாங்கத் திட்டமிட்டால், நியாயமான வட்டிக்கு வாங்குவது நல்லது. அதேபோல், குடும்பத் தலைவர் தன் மனைவி மக்களுக்காக ஆயுள் காப்பீடு, உடல்நலக் காப்பீடு, விபத்துக் காப்பீடு, அல்லது வேறுவகை காப்பீடுகளில் முதலீடு செய்யலாம். ஓய்வுகாலத்திற்காகத் திட்டமிடுவதும் உங்களுடைய வருங்காலத் திட்டத்தில் அடங்கும். “திட்டமிட்டு ஊக்கத்துடன் உழைப்பவரிடம் செல்வம் சேரும் என்பது திண்ணம்” என நீதிமொழிகள் 21:5 (பொது மொழிபெயர்ப்பு) சொல்கிறது.

தேவைகள்-⁠விருப்பங்கள் இடையே உள்ள வித்தியாசத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்

கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் உடல் ஆரோக்கியத்தையும் மன ஆரோக்கியத்தையும் பேணிக் காப்பதற்குத் தேவையான திறமைகளை வளர்த்துக்கொள்ள முயலுங்கள். இத்தகைய திறமைகள் பிற்காலத்தில் உங்களுக்குக் கைகொடுக்கும். கற்பதற்கு வயது வரம்பே கிடையாது. “நடைமுறை ஞானத்தையும் சிந்திக்கும் திறனையும்” பற்றி பைபிள் உயர்வாகப் பேசுகிறது; அதோடு, அவற்றைத் தொடர்ந்து வளர்த்துக்கொள்ளும்படியும் நம்மை உந்துவிக்கிறது.​—நீதிமொழிகள் 3:​21, 22, NW; பிரசங்கி 10:⁠10.

சமநிலையோடிருங்கள். பணத்தைப் பூஜிக்காதீர்கள். பணத்தைவிட மனிதர்களைப் பெரிதாக மதிக்கிறவர்கள் அதிக சந்தோஷமாய் இருக்கிறார்கள் என்பதைப் பல சுற்றாய்வுகள் காட்டுகின்றன. ஆனால் சிலர் பேராசையினால் சமநிலை இழந்துவிடுகிறார்கள். எப்படி? தங்களுடைய அடிப்படைத் தேவைகளைப் போதுமானளவு திருப்தி செய்துகொண்டபின் சொத்து சேர்ப்பதில் முழுமூச்சாய் இறங்கிவிடுகிறார்கள். ஆனால், உணவு, உடை, உறைவிடம் தவிர ஒருவருக்கு இன்னும் என்ன வேண்டும்? இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட பைபிள் எழுத்தாளர், “உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக்கடவோம்” என்று எழுதியதில் ஆச்சரியமில்லை. (1 தீமோத்தேயு 6:8) திருப்தியுடன் இருக்கக் கற்றுக்கொண்டால் பண ஆசையையும், அதனால் வருகிற எல்லாப் பிரச்சினைகளையும் தவிர்க்கலாம்.

உண்மையில், பண ஆசையே எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது. நீங்கள் இடங்கொடுத்தால் பணம் உங்கள் எஜமானாகிவிடும். ஆனால், பணத்தைத் தகுந்த முறையில் பயன்படுத்தப் பழகிக்கொள்ளும்போது, நல்ல பலன்களைப் பெற முடியும்; ஆம், குடும்பத்தோடும் நண்பர்களோடும் கடவுளோடும் நெருங்கிய பந்தத்தை வளர்த்துக்கொள்ள முடியும். என்றாலும், பணக் கவலையிலிருந்து முற்றிலும் விடுபடுவது இந்த உலகத்தில் சாத்தியமற்றதாகத் தோன்றலாம். பணம் என்றுமே கவலைக்குக் காரணமாக இருக்குமா? வறுமை ஒழியும் என்பதற்கு என்ன ஆதாரம்? பதில் அறிய இந்தத் தொடர்கட்டுரையின் கடைசி கட்டுரையைப் படியுங்கள். (g 3/09)

உணவு, உடை, உறைவிடம் தவிர ஒருவருக்கு இன்னும் என்ன வேண்டும்?