Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மூப்பர்களே, மற்ற சகோதரர்களுக்கு பயிற்சி கொடுக்கிறீர்களா?

மூப்பர்களே, மற்ற சகோதரர்களுக்கு பயிற்சி கொடுக்கிறீர்களா?

“ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு.”—பிர. 3:1.

1, 2. வட்டார கண்காணிகள் எதைக் கவனித்திருக்கிறார்கள்?

வட்டார கண்காணி ஒரு சபையை சந்தித்தபோது, அங்கிருந்த மூப்பர்களோடு ஒரு கூட்டம் நடத்திக்கொண்டு இருந்தார். அந்த மூப்பர்கள் எல்லாருமே சபைக்காக ரொம்ப கடினமாக வேலை செய்திருக்கிறார்கள். அவர்களில் சிலருக்கு அவருடைய அப்பா வயது இருக்கும். அவர்களுடைய கடின உழைப்பை பார்த்தபோது வட்டார கண்காணிக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. ஆனால், ஒரு விஷயத்தை நினைத்து அவர் கவலைப்பட்டார். அதனால் அந்தக் கூட்டம் முடிவதற்கு முன்பு அவர்களிடம், “சகோதரர்களே, மத்த சகோதரர்களுக்கு உங்களால பயிற்சி கொடுக்க முடிஞ்சதா?” என்று கனிவாக கேட்டார். ஏனென்றால், போன தடவை அவர் அந்த சபையை சந்தித்தபோது சபை பொறுப்புகளை செய்ய மற்ற சகோதரர்களுக்கும் பயிற்சி கொடுக்க வேண்டும், அதற்காக நேரம் ஒதுக்க வேண்டும் என்று சொல்லியிருந்தார். அவர் கேட்டதற்கு ஒரு மூப்பர் கடைசியாக, “நாங்க அந்தளவுக்கு பயிற்சி கொடுக்கல” என்று சொன்னார். மற்ற மூப்பர்களும் அதை ஒத்துக்கொண்டார்கள்.

2 நீங்கள் ஒரு மூப்பராக சேவை செய்கிறீர்களா? அப்படியென்றால், அவர் சொன்னதை நீங்களும் ஒருவேளை ஒத்துக்கொள்ளலாம். சபை பொறுப்புகளை எடுத்து செய்ய இளம் சகோதரர்களுக்கும் வயதான சகோதரர்களுக்கும் நிறைய பயிற்சி தேவைப்படுகிறது என்று உலகம் முழுவதும் இருக்கிற வட்டார கண்காணிகள் கவனித்திருக்கிறார்கள். ஆனால், அப்படிப் பயிற்சி கொடுப்பது ஒன்றும் சுலபம் இல்லை. ஏன்?

3. (அ) மற்றவர்களுக்குப் பயிற்சி கொடுப்பது ரொம்ப முக்கியம் என்று பைபிள் எப்படி சொல்கிறது? இந்தக் கட்டுரையை படிப்பது நம் எல்லாருக்குமே ஏன் பிரயோஜனமாக இருக்கும்? (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) (ஆ) மற்றவர்களுக்குப் பயிற்சி கொடுப்பது சில மூப்பர்களுக்கு ஏன் கஷ்டமாக இருக்கிறது?

3 மூப்பர்களே, மற்ற சகோதரர்களுக்குப் பயிற்சி கொடுப்பது எவ்வளவு முக்கியம் என்று உங்களுக்கு நன்றாகத் தெரியும். * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) சபைகளைப் பலப்படுத்துவதற்கும் புதிய சபைகள் உருவாகுவதற்கும் நிறைய சகோதரர்கள் தேவைப்படுகிறார்கள் என்று உங்களுக்குத் தெரியும். (ஏசாயா 60:22-ஐ வாசியுங்கள்.) பைபிள் சொல்கிற மாதிரி, ‘மற்றவர்களுக்கு கற்பிக்கிற’ பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது என்றும் தெரியும். (2 தீமோத்தேயு 2:2-ஐ வாசியுங்கள்.) இருந்தாலும், பயிற்சி கொடுப்பதற்காக நேரம் ஒதுக்குவது உங்களுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கலாம். ஏனென்றால், நீங்கள் எல்லாருமே உங்கள் குடும்பத்தைக் கவனித்துக்கொள்ள கடினமாக உழைக்கிறீர்கள்... வேலைக்குப் போகிறீர்கள்... சபை வேலைகளைப் பார்த்துக்கொள்கிறீர்கள்... முக்கியமான மற்ற வேலைகளையும் செய்கிறீர்கள். இருந்தாலும், பயிற்சி கொடுப்பதற்காக நேரம் ஒதுக்குவது ஏன் ரொம்ப முக்கியம் என்று இப்போது பார்க்கலாம்.

பயிற்சி ரொம்ப முக்கியம்

4. சகோதரர்களுக்குப் பயிற்சி கொடுப்பதை சிலசமயம் மூப்பர்கள் ஏன் தள்ளிப்போடலாம்?

4 சகோதரர்களுக்குப் பயிற்சி கொடுக்க நேரம் ஒதுக்குவது சில மூப்பர்களுக்கு கஷ்டமாக இருக்கலாம். அவர்கள் ஒருவேளை இப்படி நினைக்கலாம்: ‘பயிற்சி கொடுக்குறது முக்கியம்தான். இருந்தாலும் அதைவிட அவசரமா செஞ்சு முடிக்க வேண்டிய வேலைகள் சபையில நிறைய இருக்கு. அதனால, அவங்களுக்கு பயிற்சி கொடுக்குறது ஒண்ணும் அவ்ளோ அவசரம் இல்ல. அதனால சபைக்கு எந்த பாதிப்பும் வந்துடாது.’ உண்மைதான், சபையில் அவசரமாக செய்து முடிக்க வேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றன. இருந்தாலும், சகோதரர்களுக்குப் பயிற்சி கொடுப்பதை நீங்கள் தள்ளிப்போட்டால், சபை நிச்சயம் பாதிக்கப்படும்.

5, 6. இங்கே இருக்கிற உதாரணத்தை விளக்குங்கள், இந்த உதாரணத்தை சகோதரர்களுக்கு பயிற்சி கொடுப்பதோடு எப்படி ஒப்பிடலாம்?

5 இந்த உதாரணத்தை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்: வண்டி நன்றாக ஓட வேண்டுமென்றால், வண்டியின் ஆயிலை தவறாமல் மாற்ற வேண்டும் என்பது ஒரு டிரைவருக்கு நன்றாக தெரியும். இருந்தாலும் அந்த டிரைவர் இப்படி யோசிக்கலாம், ‘வண்டிக்கு ஆயில் மாத்துறது ஒண்ணும் அவசரம் இல்லை, அதை மெதுவாகூட மாத்திக்கலாம். ஆனா வண்டிக்கு பெட்ரோல் போடுறதுதான் இப்போ ரொம்ப முக்கியம், இல்லன்னா வண்டி நின்னுடும்.’ அந்த டிரைவர் அப்படி யோசிப்பது சரிதான். பெட்ரோல் போடவில்லை என்றால் வண்டி நின்றுவிடும். ஆனால், ஆயில் மாற்றுவதை தள்ளிப்போட்டுக்கொண்டே போனால் என்ன ஆகும்? வண்டி ஒருநாள் அப்படியே நின்றுவிடும், ஓடவே ஓடாது. அதற்கு பின்பு வண்டியை ரிப்பேர் செய்வதற்கு நிறைய நேரமும் பணமும் செலவு செய்ய வேண்டியிருக்கும். இதிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்ளலாம்?

6 மூப்பர்களுக்கு, சபையில் அவசரமாக செய்து முடிக்க வேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றன. அதையெல்லாம் செய்யவில்லை என்றால், சபை நிச்சயம் பாதிக்கப்படும். வண்டிக்கு தொடர்ந்து பெட்ரோல் போடுவது எவ்வளவு முக்கியமோ அதேமாதிரி, மூப்பர்கள் சபையில் இருக்கிற ‘மிக முக்கியமான காரியங்களை’ செய்து முடிப்பதும் ரொம்ப முக்கியம். (பிலி. 1:10) ஆனால் சிலர், இந்த முக்கியமான வேலையிலேயே மூழ்கிவிடுகிறார்கள். அதனால், மற்ற சகோதரர்களுக்குப் பயிற்சி கொடுப்பது இல்லை. ஆயில் மாற்றுவதை சில டிரைவர்கள் தள்ளிப்போடுவது போல, பயிற்சி கொடுப்பதை சில மூப்பர்கள் தள்ளிப்போடுகிறார்கள். அதனால், சபை பொறுப்புகளை செய்வதற்கு, தகுதியுள்ள சகோதரர்கள் இல்லாமல் போய்விடுகிறார்கள்.

7. மற்ற சகோதரர்களுக்குப் பயிற்சி கொடுக்க நேரம் ஒதுக்கும் மூப்பர்களைப் பற்றி என்ன சொல்லலாம்?

7 அப்படியென்றால், சகோதரர்களுக்குப் பயிற்சி கொடுப்பது முக்கியம் இல்லை என்று நினைக்கக் கூடாது. சபையின் வளர்ச்சியை மனதில் வைத்து சகோதரர்களுக்குப் பயிற்சி கொடுக்கிற மூப்பர்களை ‘சிறந்த நிர்வாகிகள்’ என்று சொல்லலாம். அதாவது, சபையை சிறந்த விதத்தில் வழிநடத்துகிறார்கள் என்று சொல்லலாம். (1 பேதுரு 4:10-ஐ வாசியுங்கள்.) இப்படி செய்கிற மூப்பர்கள், சபையில் இருக்கிற சகோதர சகோதரிகளுக்குப் பரிசுகளாக இருக்கிறார்கள். இதனால் சபைக்கும் நிறைய நன்மைகள் கிடைக்கின்றன. அது என்னவென்று இப்போது பார்க்கலாம்.

நேரம் ஒதுக்குங்கள்

8. (அ) மற்ற சகோதரர்களுக்குப் பயிற்சி கொடுக்க வேண்டும் என்றால் மூப்பர்கள் எதைப் புரிந்துகொள்ள வேண்டும்? (ஆ) தேவை அதிகமுள்ள இடத்தில் சேவை செய்யும் மூப்பர்கள் எதை உடனே செய்ய வேண்டும்? (“உடனே செய்யுங்கள்” என்ற பெட்டியைப் பாருங்கள்.)

8 நல்ல அனுபவமுள்ள மூப்பர்கள் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது, அவர்களுக்கும் வயதாவதால் இதற்கு முன்பு செய்த அளவிற்கு இனிமேல் அவர்களால் செய்ய முடியாது என்ற விஷயத்தை புரிந்துகொள்ள வேண்டும். இப்படி செய்கிற மூப்பர்கள், “அடக்கத்தோடு” நடக்கிறார்கள், அதாவது அவர்களுடைய வரையறைகளைப் புரிந்து நடக்கிறார்கள் என்று சொல்லலாம். (மீ. 6:8, NW) அதோடு, நாளைக்கு என்ன நடக்கும் என்று நம் யாருக்குமே தெரியாது. அப்போது சபை வேலைகளை அவர்களால் செய்ய முடியாமல் போய்விடலாம். (பிர. 9:11, 12; யாக். 4:13, 14) அதனால், மூப்பர்கள் அவர்களுடைய அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்ட விஷயங்களை இளம் சகோதரர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். அப்படி செய்யும்போது, யெகோவா மீதும் அவருடைய மக்கள் மீதும் அன்பு இருப்பதை அந்த மூப்பர்கள் வெளிக்காட்டுகிறார்கள்.சங்கீதம் 71:17, 18-ஐ வாசியுங்கள்.

9. மூப்பர்கள் இப்போது கொடுக்கிற பயிற்சி எதிர்காலத்தில் சபைக்கு எப்படி உதவியாக இருக்கும்?

9 இப்படிப் பயிற்சி கொடுக்கிற மூப்பர்கள் சபைக்கு ஆசீர்வாதமாக இருக்கிறார்கள். ஏனென்றால், அவர்கள் கொடுக்கிற பயிற்சியினால் சபையில் இருக்கிறவர்கள் பலப்படுகிறார்கள். பயிற்சி பெற்ற சகோதரர்கள் சபையில் இருக்கிறவர்களுக்கு உதவி செய்ய தயாராக இருப்பார்கள். இப்போது மட்டுமில்லாமல், மிகுந்த உபத்திரவத்தின்போதும் சபையில் இருக்கிற சகோதர சகோதரிகள் ஒற்றுமையாக இருக்க... கடவுளுக்கு உண்மையாக இருக்க... உதவி செய்வார்கள். (எசே. 38:10-12; மீ. 5:5, 6) அதனால் அன்பான மூப்பர்களே, மற்ற சகோதரர்களுக்குப் பயிற்சி கொடுக்க நேரம் ஒதுக்குங்கள். அதை இப்போதே செய்யுங்கள்!

10. பயிற்சி கொடுப்பதற்காக மூப்பர்கள் என்ன செய்ய வேண்டும்?

10 சபையில் இருக்கிற முக்கியமான வேலைகளை செய்வதற்கு மூப்பர்கள் நிறைய நேரம் செலவு செய்ய வேண்டியிருக்கிறது. அதை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது. இருந்தாலும், இப்போது நீங்கள் சபைக்காக செலவு செய்யும் நேரத்தில் கொஞ்ச நேரத்தை மற்ற சகோதரர்களுக்குப் பயிற்சி கொடுப்பதற்காக ஒதுக்கியே ஆக வேண்டும். (பிர. 3:1) அதுதான் ஞானமானது! சபையில் இருக்கிற எல்லாருக்கும் அது எதிர்காலத்தில் ரொம்ப பிரயோஜனமாக இருக்கும்.

சகோதரர்களைத் தயார்படுத்துங்கள்

11. (அ) வித்தியாசமான நாடுகளை சேர்ந்த மூப்பர்கள் எப்படி பதில் சொன்னார்கள்? (ஆ) அந்த மூப்பர்கள் கொடுக்கும் ஆலோசனையைக் கேட்பது முக்கியம் என்று நீதிமொழிகள் 15:22-ல் இருந்து எப்படித் தெரிந்துகொள்கிறோம்?

11 சகோதரர்களுக்கு சிறந்த விதத்தில் பயிற்சி கொடுத்த நிறைய மூப்பர்களிடம், ‘எப்படி பயிற்சி கொடுத்தீங்க, அதை செய்றதுக்கு உங்களுக்கு எது உதவியா இருந்தது?’ என்று கேட்டோம். * (அடிக்குறிப்பை பாருங்கள்.) அந்த மூப்பர்கள் வித்தியாசமான நாடுகளை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் எல்லாரும் ஒரே மாதிரிதான் பதில் சொன்னார்கள். இது எதைக் காட்டுகிறது? பைபிள் அடிப்படையில் பயிற்சி கொடுக்கும்போது “எல்லா இடங்களிலும் எல்லாச் சபைகளிலும்” உள்ள சகோதரர்களுக்கு அது உதவியாக இருக்கும் என்பதைக் காட்டுகிறது. (1 கொ. 4:17) அந்த மூப்பர்கள் கொடுத்த ஆலோசனையைப் பற்றி இந்த கட்டுரையிலும் அடுத்த கட்டுரையிலும் நாம் பார்க்கப் போகிறோம்.—நீதி. 15:22.

12. பயிற்சி கொடுப்பதற்கு முன்பு மூப்பர்கள் என்ன செய்ய வேண்டும், ஏன்?

12 ஒரு தோட்டக்காரர் விதை தூவுவதற்கு முன்பு நிலத்தை நன்றாக தயார்படுத்துவார், அதை பண்படுத்துவார். அதேமாதிரி, மூப்பர்களும் ஒரு சகோதரருக்குப் பயிற்சி கொடுப்பதற்கு முன்பு அவரை தயார்படுத்த வேண்டும். இதை எப்படி செய்யலாம்? இதற்கு சாமுவேல் தீர்க்கதரிசி என்ன செய்தார் என்று பார்க்கலாம்.

13-15. (அ) சாமுவேலை யெகோவா என்ன செய்ய சொன்னார்? (ஆ) ஒரு ராஜாவாக சவுல் தன்னுடைய பொறுப்புகளை செய்வதற்கு சாமுவேல் எப்படி அவரை தயார்படுத்தினார்? (ஆரம்பப் படம்) (இ) சாமுவேல் பற்றிய பைபிள் பதிவு இன்று மூப்பர்களுக்கு எப்படி உதவியாக இருக்கிறது?

13 கிட்டத்தட்ட 3,000 வருடங்களுக்கு முன்பு சாமுவேல் தீர்க்கதரிசியிடம் யெகோவா, “நாளை இந்நேரத்திற்குப் பென்யமீன் நாட்டானாகிய ஒரு மனுஷனை உன்னிடத்தில் அனுப்புவேன்; அவனை என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் அதிபதியாக அபிஷேகம்பண்ணக்கடவாய்” என்று சொன்னார். (1 சா. 9:15, 16) இஸ்ரவேல் மக்களை இனி அவர் வழிநடத்தப்போவது இல்லை, அதற்கு பதிலாக யெகோவா புதிதாக ஒரு ராஜாவை தேர்ந்தெடுக்கப் போகிறார் என்று சாமுவேல் புரிந்துகொண்டார். ‘இந்த முக்கியமான வேலையை செய்றதுக்கு அவரை எப்படி தயார்படுத்துறது?’ என்று சாமுவேல் யோசித்திருக்கலாம். அதற்கு பின்பு அவர் என்ன செய்தார் என்று இப்போது பார்க்கலாம்.

14 அடுத்த நாள், சாமுவேல் சவுலை பார்த்தார். யெகோவா சாமுவேலிடம், “இதோ, நான் உனக்குச் சொல்லியிருந்த மனுஷன் இவனே” என்று சொன்னார். சவுலை பார்த்த உடனேயே அவர் என்ன செய்தார் என்று கவனியுங்கள்: முதலில் சவுலை ஒரு விருந்திற்கு அழைத்தார். அங்கே சவுலையும் அவருடைய வேலைக்காரனையும் “தலைமையான இடத்திலே” உட்கார வைத்தார் என்று பைபிள் சொல்கிறது. அவர்களுக்காக சவுல் ஒரு விருந்தை தயாரித்திருந்தார். சவுலை பார்த்து, “இதோ, இது உனக்கென்று வைக்கப்பட்டது, இதை உனக்கு முன்பாக வைத்துச் சாப்பிடு” என்று சொன்னார். அதற்கு பின்பு சவுலை அவருடைய வீட்டிற்குக் கூட்டிக்கொண்டு போனார். போகிற வழியில் அவர்கள் இரண்டு பேரும் நிறைய விஷயங்களைப் பேசிக்கொண்டே போனார்கள். சவுலிடம் பேசுவதற்கு இந்த நல்ல சூழ்நிலையை சாமுவேல் நன்றாகப் பயன்படுத்திக்கொண்டார். வீட்டிற்கு வந்தவுடன், சவுலை அவருடைய ‘மேல்வீட்டிற்கு’ கூட்டிக்கொண்டு போனார். தென்றல் காற்று வீசுகிற அந்த சாயங்கால வேளையில் அவர்கள் இரண்டு பேரும் சந்தோஷமாகப் பேசிக்கொண்டு இருந்தார்கள்; அப்படியே தூங்கும்வரை பேசிக்கொண்டிருந்தார்கள். அடுத்த நாள் காலையில் சாமுவேல், “தைலக் குப்பியை எடுத்து, அவன் [சவுல்] தலையின்மேல் வார்த்து, அவனை முத்தஞ்செய்து . . . அபிஷேகம்பண்ணினார்.” அவருக்கு நிறைய ஆலோசனைகள் கொடுத்தார். அதற்கு பின்பு, சவுலை அனுப்பி வைத்தார். அப்போது, சவுல் அவருடைய பொறுப்பை செய்ய தயாராக இருந்தார்.—1 சா. 9:17-27; 10:1.

15 இஸ்ரவேல் தேசத்தை வழிநடத்துவதற்காக சாமுவேல் தீர்க்கதரிசி சவுலுக்கு பயிற்சி கொடுத்தார். அதேமாதிரி, மூப்பர்களும் மற்ற சகோதரர்களுக்குப் பயிற்சி கொடுக்கிறார்கள். அவர்கள் உதவி ஊழியர்களாக, மூப்பர்களாக ஆவதற்கு உதவி செய்கிறார்கள். ஆனால், சாமுவேல் கொடுத்த பயிற்சிக்கும் மூப்பர்கள் கொடுக்கிற பயிற்சிக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. இருந்தாலும், சவுல் அவருடைய பொறுப்புகளை செய்வதற்கு சாமுவேல் அவரை தயார்படுத்திய விதத்தில் இருந்து மூப்பர்கள் நிறைய முக்கியமான பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம். அதில் இரண்டு விஷயங்களை இப்போது பார்க்கலாம்.

முழு மனதோடு சொல்லிக் கொடுங்கள், நண்பராக இருங்கள்

16. (அ) இஸ்ரவேல் ஜனங்கள் தங்களுக்கு ஒரு ராஜா வேண்டும் என்று கேட்டபோது சாமுவேலுக்கு எப்படி இருந்தது? (ஆ) ‘சவுலை ராஜாவாக அபிஷேகம் செய்’ என்று யெகோவா சொன்னபோது சாமுவேல் எப்படி நடந்துகொண்டார்?

16 வேண்டா வெறுப்பாக இல்லாமல் முழு மனதோடு சொல்லிக் கொடுங்கள். இஸ்ரவேல் ஜனங்கள் ஒரு ராஜா வேண்டும் என்று கேட்டபோது சாமுவேல் தீர்க்கதரிசிக்கு ரொம்ப கவலையாக இருந்தது. அந்த ஜனங்கள் தன்னை ஒதுக்கியது போல உணர்ந்தார். (1 சா. 8:4-8) அவர்கள் சொன்னபடி செய்வதற்கு சாமுவேலுக்கு கொஞ்சம்கூட இஷ்டமே இல்லை. அதனால்தான் யெகோவா, ஜனங்கள் ‘சொல்வதை கேள்’ என்று சாமுவேலிடம் மூன்று தடவை சொன்னார். (1 சா. 8:7, 9, 22) சாமுவேலுக்கு வருத்தமாக இருந்தாலும் யெகோவா தேர்ந்தெடுத்த ராஜாவை பார்த்து அவர் பொறாமைப்படவும் இல்லை, கோபப்படவும் இல்லை. ‘சவுலை ராஜாவாக அபிஷேகம் செய்’ என்று யெகோவா சொன்னபோது அவர் உடனே கீழ்ப்படிந்தார். அதை வேண்டா வெறுப்பாகவோ கடமைக்காகவோ செய்யவில்லை. யெகோவாமீது அன்பு இருந்ததால்தான் அதை முழுமனதோடு செய்தார்.

17. இன்று மூப்பர்கள் எப்படி சாமுவேலை போல நடந்துகொள்கிறார்கள், அது அவர்களுக்கு எப்படி சந்தோஷத்தை கொடுக்கிறது?

17 இன்றும் அனுபவமுள்ள மூப்பர்கள் சாமுவேலை போலவே மற்ற சகோதரர்களுக்கு அன்பாக பயிற்சி கொடுக்கிறார்கள், அதை முழு மனதோடு செய்கிறார்கள். (1 பே. 5:2) சபையில் அவர்களுக்கு இருக்கிற சில பொறுப்புகளை மற்ற சகோதரர்களுக்கும் கொடுக்கிறார்கள்; அந்தப் பொறுப்புகளை இழந்துவிடுவோமோ என்று அவர்கள் பயப்படுவதும் இல்லை. அவர்களைத் தங்களுக்கு போட்டியாக நினைப்பதும் இல்லை. அதற்குப் பதிலாக, அவர்களை “சக வேலையாட்களாகவே” நினைக்கிறார்கள். சபையில் இருக்கிற வேலைகளைக் கவனிப்பதற்கு அவர்கள் ரொம்ப உதவியாக இருப்பார்கள் என்றும் நம்புகிறார்கள். (2 கொ. 1:24; எபி. 13:16) அனுபவமுள்ள மூப்பர்கள் சுயநலமில்லாமல் நடந்துகொள்கிறார்கள். பயிற்சி பெற்ற சகோதரர்கள் சபையைப் பலப்படுத்துவதற்காக எடுக்கும் முயற்சிகளைப் பார்க்கும்போது அவர்கள் ரொம்ப சந்தோஷப்படுகிறார்கள்.—அப். 20:35.

18, 19. மூப்பர்கள் எப்படி சகோதரர்களைத் தயார்படுத்தலாம், இப்படித் தயார்படுத்துவது ஏன் முக்கியம்?

18 சொல்லிக் கொடுத்தால் மட்டும் போதாது நல்ல நண்பராகவும் இருக்க வேண்டும். சாமுவேல் தீர்க்கதரிசி சவுலை பார்த்த உடனேயே அவருடைய தலையில் எண்ணெயை ஊற்றி, அவரை ராஜாவாக அபிஷேகம் பண்ணியிருக்கலாம். ஆனால், அவர் அப்படி செய்திருந்தால் சவுல் அந்தப் பெரிய பொறுப்பை செய்வதற்கு தயாராக இருந்திருப்பாரா? நிச்சயமாக இருந்திருக்க மாட்டார். அதனால்தான், சாமுவேல் அவரை தயார்படுத்துவதற்கு நேரம் ஒதுக்கினார். அவருடன் சேர்ந்து சாப்பிட்டார், நடந்துபோனார், தூங்கும்வரை பேசினார். இரண்டு பேரும் இரவு நன்றாக ஓய்வெடுத்தார்கள். அதற்குப் பின்புதான் சவுலை ராஜாவாக அபிஷேகம் பண்ணினார்.

பயிற்சி கொடுப்பதற்கு முன்பு அவர்களுடைய நண்பராக வேண்டும் (பாரா 18,19)

19 இன்றும் மூப்பர்கள் சாமுவேலை மாதிரியே நடந்துகொள்ளலாம். ஒரு சகோதரருக்குப் பயிற்சி கொடுப்பதற்கு முன்பு அவரோடு அன்பாக பழகலாம், அவருக்கு நல்ல நண்பராக ஆகலாம். இப்படி செய்வதற்கு ஒவ்வொரு மூப்பரும் எடுக்கிற முயற்சி நாட்டுக்கு நாடு, இடத்துக்கு இடம் வித்தியாசப்படலாம். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், நீங்கள் எவ்வளவு ‘பிஸியாக’ இருந்தாலும் பயிற்சி கொடுப்பதற்காக நேரம் ஒதுக்கும்போது, பயிற்சி பெறும் சகோதரர் ரொம்ப சந்தோஷப்படுவார். அப்படி செய்யும்போது, “நீங்க எனக்கு ரொம்ப முக்கியம்” என்று அந்த சகோதரரிடம் சொல்வதுபோல் இருக்கும். (ரோமர் 12:10-ஐ வாசியுங்கள்.) நீங்கள் அன்பாக, அக்கறையாக நடந்துகொள்வதைப் பார்க்கும்போது அந்த சகோதரரை உயர்வாக மதிக்கிறீர்கள் என்று அவர் புரிந்துகொள்வார்.

20, 21. (அ) நன்றாக பயிற்சி கொடுப்பதற்கு மூப்பர்கள் என்ன செய்ய வேண்டும்? (ஆ) அடுத்த கட்டுரையில் எதைப் பற்றி படிப்போம்?

20 மூப்பர்களே, மற்றவர்களுக்குப் பயிற்சி கொடுப்பது உங்களுக்கு ரொம்ப பிடித்த விஷயமாக இருக்கலாம். ஆனால், அதுமட்டும் போதாது. உங்களிடம் பயிற்சி பெறுகிற சகோதரரை நீங்கள் நேசிப்பதும் ரொம்ப முக்கியம். (யோவான் 5:20-ஐ ஒப்பிட்டு பாருங்கள்.) உங்களுக்கு அவர்மீது உண்மையான அக்கறை இருக்கிறது என்று தெரிந்தால்தான் நீங்கள் சொல்லிக்கொடுக்கும் விஷயங்களை அவர் ஆர்வமாக கற்றுக்கொள்வார். அதனால் அன்பான மூப்பர்களே, சகோதரர்களுக்குப் பயிற்சி கொடுப்பதோடு நிறுத்திவிடாதீர்கள், அவர்களுக்கு நல்ல நண்பராகவும் இருங்கள்.—நீதி. 17:17; யோவா. 15:15.

21 சபை பொறுப்புகளை செய்வதற்காக ஒரு சகோதரரை தயார்படுத்திய பின்பு மூப்பர் அவருக்குப் பயிற்சி கொடுக்க ஆரம்பிக்கலாம். ஆனால், எப்படிப் பயிற்சி கொடுக்கலாம்? இதைப் பற்றி அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

^ பாரா. 3 இந்தக் கட்டுரையும் அடுத்த கட்டுரையும் மூப்பர்களுக்காகத்தான் எழுதப்பட்டு இருக்கிறது. இருந்தாலும், சபையில் இருக்கிற எல்லாருக்குமே இது ரொம்ப பிரயோஜனமாக இருக்கும். எப்படி? சபை வேலைகளை செய்வதற்கு பயிற்சி தேவை என்ற விஷயத்தை ஞானஸ்நானம் எடுத்த எல்லா சகோதரர்களும் தெரிந்துகொள்வார்கள். இப்படிப் பயிற்சி எடுத்துக்கொண்ட சகோதரர்கள் நிறைய பேர் சபையில் இருந்தார்கள் என்றால், அது சபைக்கு ரொம்ப உதவியாக இருக்கும்.

^ பாரா. 11 இந்த மூப்பர்கள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், கொரியா, தென் ஆப்பிரிக்கா, நமிபியா, நைஜீரியா, பங்களாதேஷ், பிரான்சு, பிரெஞ்சு கயானா, பிரேசில், பெல்ஜியம், மெக்சிகோ, ரஷ்யா, ரீயூனியன் போன்ற நாடுகளை சேர்ந்தவர்கள்.