Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிள்—ஆளையே மாற்றும் சக்தி படைத்தது!

பைபிள்—ஆளையே மாற்றும் சக்தி படைத்தது!

பைபிள்—ஆளையே மாற்றும் சக்தி படைத்தது!

பைக், போதைப் பொருள், போட்டி விளையாட்டு ஆகியவையே வாழ்க்கை என்றிருந்தவர் ஏன் முழுநேர ஊழியராக ஆனார்? சூதாடி சூதாடியே பிழைப்பு நடத்தியவர், அதை விட்டுவிட்டு, கௌரவமான வேலை பார்த்துக் குடும்பத்தைக் காப்பாற்றுபவராக ஆனது எப்படி? யெகோவாவின் சாட்சியாக வளர்க்கப்பட்டபோதிலும், பிற்பாடு பைபிளுக்கு முரணாக வாழ ஆரம்பித்த ஓர் இளம் பெண், தன்னுடைய வாழ்க்கையை மீண்டும் மாற்றிக்கொண்டது எதனால்? இவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை வாசித்துப் பாருங்கள்.

பின்னணிக் குறிப்பு

பெயர்: டெரன்ஸ் ஜே. ஓப்ரையன்

வயது: 57

நாடு: ஆஸ்திரேலியா

முன்பு: போதைப் பொருள்களைப் பயன்படுத்தினார், எந்நேரமும் பைக்கில் சுற்ற விரும்பினார்

கடந்த காலம்: நான் சந்தடிமிக்க பிரிஸ்பேன் நகரில் வளர்ந்தேன்; அது குயின்ஸ்லாந்தின் தலைநகர். நான் கத்தோலிக்கக் குடும்பத்தைச் சேர்ந்தவனாக இருந்தேன். ஆனாலும் எனக்கு எட்டு வயதானபோது, நாங்கள் சர்ச்சுக்குப் போவதை நிறுத்திவிட்டோம்; அதன் பிறகு, மதத்தைப் பற்றி நாங்கள் பேசவே இல்லை. எனக்குப் பத்து வயதானபோது, நாங்கள் ஆஸ்திரேலியாவிலுள்ள கோல்ட் கோஸ்ட் என்ற இடத்திற்குக் குடிமாறினோம். எங்களுடைய வீடு கடற்கரைக்கு அருகில் இருந்ததால், 13, 14 வயதிலெல்லாம் நீச்சலடிப்பதும் நீர் சறுக்கு விளையாடுவதுமாகப் பொழுதைப் போக்கினேன்.

என்றாலும், என் வாழ்க்கையில் சந்தோஷமே இருக்கவில்லை. எனக்கு எட்டு வயதிருந்தபோது, அப்பா வீட்டைவிட்டுப் போய்விட்டார். என்னுடைய அம்மா வேறொருவரைக் கல்யாணம் செய்துகொண்டார்; குடிப்பதும் சண்டை போடுவதுமே வீட்டில் வழக்கமாயிற்று. ஒரு நாள் ராத்திரி அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இடையில் வாக்குவாதம் முற்றினது; அப்போது நான் படுக்கையில் உட்கார்ந்துகொண்டு, எனக்குக் கல்யாணமென ஒன்று நடந்தால் என் மனைவியோடு சண்டையே போடக் கூடாது என்று தீர்மானித்தேன். வீட்டில் பிரச்சினைகள் இருந்தபோதிலும், நாங்கள் ஆறு பிள்ளைகளும் பெற்றோரும் நெருக்கமாக இருந்தோம்.

எனக்கு 18, 19 வயதிருந்தபோது, என்னுடைய நண்பர்கள் நிறையப் பேர் கலவரங்களில் ஈடுபட்டார்கள். அவர்கள் மரிஹுவானா, புகையிலை போன்ற நிறையப் போதைப் பொருள்களைப் பயன்படுத்தினார்கள், குடித்து வெறித்தார்கள். அவர்களைப் போல நானும் மனம்போல் வாழ்ந்தேன். அதுமட்டுமா, பைக்கில் ஊரெல்லாம் சுற்றினேன். இரண்டு மூன்று முறை பெரிய விபத்தில் மாட்டிக்கொண்டபோதிலும், பைக் மோகம் என்னை விடவில்லை; அதில், ஆஸ்திரேலியாவையே ஒரு சுற்று சுற்றிவர வேண்டுமென தீர்மானித்தேன்.

நான் சுதந்திரப் பறவையாய்த் திரிந்தபோதிலும், உலக நிலைமையையும் மனிதரின் பிரச்சினைகளைக் குறித்துப் பெரும்பாலான மக்கள் அசட்டையாக இருந்ததையும் நினைத்து அடிக்கடி சோர்ந்துபோனது உண்டு. கடவுளையும் மதத்தையும் உலக நிலைமைகளையும் பற்றிய உண்மையை அறிந்துகொள்ள ஏங்கினேன். அந்த விஷயங்களைப் பற்றி இரண்டு கத்தோலிக்கப் பாதிரிகளிடம் கேட்டேன்; ஆனால், அவர்கள் கொடுத்த பதில்கள் எனக்குத் திருப்தியாக இருக்கவில்லை. அதே விஷயங்களைப் பற்றி நிறைய புராட்டஸ்டன்ட் பாதிரிகளிடமும் கேட்டேன்; அவர்கள் கொடுத்த பதில்களும் திருப்தி அளிக்கவில்லை. பிறகு, என்னுடைய நண்பன் ஒருவன், எடீ என்ற ஒரு யெகோவாவின் சாட்சியை நான் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்தான். நான்கு முறை அவரிடம் பேசினேன்; ஒவ்வொரு முறையும் என் கேள்விகளுக்கு அவர் பைபிளிலிருந்து பதிலளித்தார். எங்களுடைய முதல் சந்திப்பிலிருந்தே ஒரு புதையலைக் கண்டுபிடித்துவிட்ட உணர்வு எனக்கு ஏற்பட்டது. என்றாலும், என்னுடைய வாழ்க்கைப் பாணியை எவ்விதத்திலும் மாற்றிக்கொள்வது அந்தச் சமயத்தில் எனக்கு அவசியமாகப் படவில்லை.

பைபிள் என்னை மாற்றிய விதம்: நான் ஆஸ்திரேலியாவைச் சுற்றி வந்த சமயத்தில் மற்றொரு யெகோவாவின் சாட்சியைச் சந்தித்தேன்; அவரிடம் சில முறை பேசினேன். ஆனால், குயின்ஸ்லாந்துக்கு நான் திரும்பிய பின் ஆறு மாதங்களுக்கு யெகோவாவின் சாட்சிகளைச் சந்திக்கவில்லை.

ஒரு நாள், நான் வேலையிலிருந்து வீடு திரும்பும் வழியில் நேர்த்தியாக உடையணிந்த இரண்டு பேர் சிறு பெட்டியை எடுத்துக்கொண்டு நடந்து வருவதைப் பார்த்தேன்; அவர்கள் யெகோவாவின் சாட்சிகளாகத்தான் இருப்பார்கள் என்று நினைத்தேன். பின்பு, அவர்களிடமே சென்று அதை உறுதி செய்துகொண்டேன்; அதோடு, எனக்கு பைபிளைக் கற்றுக்கொடுக்கும்படி கேட்டேன். சீக்கிரத்திலேயே யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களுக்குப் போக ஆரம்பித்தேன், 1973-ல் சிட்னியில் நடந்த பெரிய மாநாட்டிலும் கலந்துகொண்டேன். என்றாலும், என்னுடைய வீட்டார், முக்கியமாக என்னுடைய அம்மா, அதையெல்லாம் அறிந்தபோது மிகவும் வருத்தப்பட்டார்கள். இந்தக் காரணத்தாலும் வேறு சில காரணங்களாலும் யெகோவாவின் சாட்சிகளோடு தொடர்புகொள்வதை நிறுத்திவிட்டேன். பிறகு ஒரு வருடத்திற்கு கிரிக்கெட், கிரிக்கெட் என பைத்தியமாக இருந்தேன்.

என்றாலும், யெகோவாவின் சாட்சிகளோடு பைபிள் படித்த சமயத்தில் மட்டும்தான் நான் உண்மையிலேயே சந்தோஷமாக இருந்தேன் என்பதை பிற்பாடு உணர்ந்துகொண்டேன். அதனால், அவர்களை மீண்டும் சந்தித்து கூட்டங்களுக்குச் செல்ல ஆரம்பித்தேன். போதைப் பொருள்களைப் பயன்படுத்திய என் நண்பர்களுடைய சகவாசத்தையும் விட்டுவிட்டேன்.

பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள யோபு என்பவரைப் பற்றிக் கற்றுக்கொண்டதுதான் இத்தனை மாற்றங்களையும் செய்ய என்னைத் தூண்டியது. என்னைவிட வயதில் மூத்த பில் என்ற ஒரு சகோதரர் எனக்குத் தவறாமல் பைபிளைக் கற்றுத்தந்தார். அவர் அன்பானவர், அதே சமயத்தில் உறுதியானவர். யோபுவைப் பற்றிப் படித்த பிறகு, யாரும்கூட அரைகுறை மனதுடன் கடவுளைச் சேவிப்பதாகச் சாத்தான் குற்றம் சாட்டுகிறான் என்று அவர் என்னிடம் கேட்டார். (யோபு 2:3-5) எனக்குத் தெரிந்த எல்லா பைபிள் கதாபாத்திரங்களின் பெயரையும் சொன்னேன்; அவரும் பொறுமையோடு, “சரிதான் .. சரிதான் ..” என்றார். பிறகு, அவர் என்னை உற்றுப் பார்த்து, “சாத்தான் உன்னையும்தான் குற்றம் சாட்டுகிறான்!” என்று சொன்னார். நான் அப்படியே அதிர்ந்துபோய் விட்டேன். அதுவரையில், நான் கற்று வந்த விஷயங்கள் உண்மை என்று எனக்குத் தெரிந்திருந்தது. ஆனால், நான் கற்று வந்ததன்படி நடப்பது ஏன் முக்கியம் என்பதை அன்றைக்குத்தான் புரிந்துகொண்டேன். நான்கு மாதங்களுக்குப் பிறகு, ஞானஸ்நானம் பெற்று ஒரு யெகோவாவின் சாட்சி ஆனேன்.

நான் பெற்ற பலன்கள்: பைபிளிலிருந்து கற்றுக்கொண்டபடி நான் நடந்திருக்கவில்லை என்றால், என்னுடைய வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்பதை நினைத்தாலே குலைநடுங்குகிறது. நான் உயிரோடு இருந்திருப்பேனா என்பதே சந்தேகம்தான். என்னுடைய முன்னாள் நண்பர்கள் பலர் போதைப் பொருள்களைப் பயன்படுத்தியதாலோ மிதமிஞ்சிக் குடித்ததாலோ இறந்துவிட்டார்கள். அவர்கள் உயிரோடு இருந்தபோதும் மனைவி மக்களுடன் மகிழ்ச்சியாக வாழவில்லை. என்னுடைய கதியும் அப்படித்தான் ஆகியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

நான் மார்கெரட் என்ற பெண்ணை மணந்தேன்; இப்போது நாங்கள் இருவரும் ஆஸ்திரேலியாவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்தில் சந்தோஷமாகச் சேவை செய்து வருகிறோம். என்னுடைய குடும்பத்தில் யாருமே யெகோவாவின் சாட்சியாகவில்லை. ஆனாலும், இத்தனை வருடங்களாக திருமணமானவர்களுக்கும் மற்ற பலருக்கும் பைபிள் படிப்புகளை நடத்தும் பாக்கியத்தை நானும் மார்கெரட்டும் பெற்றிருக்கிறோம்; அவர்களும் என்னைப் போல் தங்கள் வாழ்க்கையை மாற்றியிருக்கிறார்கள். இவ்வாறு, அநேக அருமையான நண்பர்களைச் சம்பாதித்திருக்கிறோம். அதுமட்டுமல்ல, ஒரு யெகோவாவின் சாட்சியாக வளர்க்கப்பட்ட என் மனைவி மார்கெரட், சுமார் 40 வருடங்களுக்கு முன்பு நான் செய்த தீர்மானத்தை நிறைவேற்ற எனக்கு உதவியிருக்கிறாள். 25 வருடங்களுக்கும் மேலாக நாங்கள் சந்தோஷமான தம்பதியராக வாழ்ந்து வருகிறோம். எங்களுடைய கருத்துகள் சிலசமயங்களில் வித்தியாசப்பட்டாலும் இதுவரை நாங்கள் சண்டை போட்டுக்கொண்டதே இல்லை. அதற்குக் காரணம் பைபிள்தான் என்று நாங்கள் இருவரும் நம்புகிறோம்.

பின்னணிக் குறிப்பு

பெயர்: மாசாஹிரோ ஓகாபாயாஷி

வயது: 39

நாடு: ஜப்பான்

முன்பு: சூதாட்டக்காரர்

கடந்த காலம்: நான் இவாக்குரா என்ற சிறிய ஊரில் வளர்ந்தேன்; நாகொயாவிலிருந்து ரயில் ஏறினால் சுமார் அரை மணிநேரத்தில் இங்கு வந்துவிடலாம். என்னுடைய அம்மா அப்பா இருவருமே ரொம்ப அன்பானவர்கள். என்றாலும், என்னுடைய அப்பா ஒரு யாகூஸாவாக, அதாவது ரௌடியாக, இருந்தது பிற்பாடுதான் தெரிந்தது; அவர் கொஞ்சக் காலத்திற்கு மோசடி செய்துதான் எங்கள் குடும்பத்திலுள்ள ஐந்து பேரையும் காப்பாற்றி வந்தார். அவர் தினமும் பயங்கரமாகக் குடித்தார்; அதனால், கல்லீரல் கரணை நோய் வந்து இறந்துவிட்டார். அப்போது எனக்கு 20 வயது.

என் அப்பா கொரிய நாட்டைச் சேர்ந்தவர்; அதனால் எல்லாரும் எங்களை ஓரங்கட்டினார்கள். இதன் காரணமாகவும் வேறு பிரச்சினைகள் காரணமாகவும் என்னுடைய டீனேஜில் ரொம்பவே கஷ்டப்பட்டேன். நான் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தபோதிலும் அடிக்கடி மட்டம் போட்டேன்; அதுவுமல்லாமல் ஒரு வருடத்திற்குப் பிறகு படிப்புக்கே முழுக்குப் போட்டுவிட்டேன். ஏற்கெனவே போலீஸாரின் பதிவேட்டில் என்னுடைய பெயர் இருந்ததாலும் என் அப்பா கொரிய நாட்டவராக இருந்ததாலும் எனக்கு வேலை கிடைப்பது கடினமாக ஆனது. கடைசியில், ஒரு வேலை கிடைத்தது; ஆனால், என்னுடைய முழங்கால்களில் அடிபட்டதால் வேலை செய்ய முடியாமல் போனது.

பிழைப்புக்காக பாச்சிங்கோ விளையாட ஆரம்பித்தேன்; அது பின்பால் மெஷினைப் போன்ற ஒன்றை வைத்து விளையாடும் ஒருவகை சூதாட்டம். அந்தச் சமயத்திற்குள்ளாக நான் ஒரு பெண்ணுடன் வாழ்ந்து வந்தேன். அவளோ, நான் நல்ல வேலையைத் தேட வேண்டுமென்றும் தன்னைக் கல்யாணம் செய்துகொள்ள வேண்டுமென்றும் விரும்பினாள். ஆனால், சூதாட்டத்தில் எக்கச்சக்கமான பணம் கிடைத்ததால், அவள் சொன்னபடி செய்ய நான் விரும்பவில்லை.

பைபிள் என்னை மாற்றிய விதம்: ஒருநாள் யெகோவாவின் சாட்சி ஒருவர் என் வீட்டிற்கு வந்து உயிர்—எப்படி தோன்றியது? பரிணாமத்தினாலா படைப்பினாலா? என்ற புத்தகத்தைக் கொடுத்தார். இப்படியொரு கேள்வியை நான் அதற்குமுன் யோசித்துப் பார்த்ததே இல்லை. என்றாலும், அந்தப் புத்தகத்தை வாசித்த பிறகு, பைபிளைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள ஒத்துக்கொண்டேன். சாகும்போது என்ன ஆகும் என்று நான் எப்போதுமே யோசித்தது உண்டு. இதற்கும் வேறு பல விஷயங்களுக்கும் தெள்ளத்தெளிவான பதிலை பைபிளிலிருந்து பெற்றபோது என் அறிவுக் கண்கள் திறந்ததைப்போல் உணர்ந்தேன்.

பைபிளிலிருந்து கற்றுக்கொண்டதைப் பின்பற்றுவது அவசியம் என புரிந்துகொண்டேன். ஆகவே, என் திருமணத்தைச் சட்டப்பூர்வமாகப் பதிவு செய்தேன், புகைப்பதை நிறுத்தினேன், பொன்னிற ‘டை’ அடித்த நீளமான முடியை வெட்டினேன், நேர்த்தியாக உடை உடுத்தினேன். சூதாடுவதையும் விட்டுவிட்டேன்.

இதையெல்லாம் செய்வது எளிதாக இருக்கவில்லை. உதாரணமாக, புகைப்பதை என்னுடைய சொந்த பலத்தால் விட முடியவில்லை. ஆனால், யெகோவா தேவனிடம் ஊக்கமாக ஜெபம் செய்து, அவரைச் சார்ந்திருப்பதன் மூலம் அதை விட முடிந்தது. அதுமட்டுமல்ல, பாச்சிங்கோ விளையாட்டை விட்ட பிறகு எனக்குக் கிடைத்த முதல் வேலை பெரிய சவாலாக இருந்தது. சூதாட்டத்தில் கிடைத்த பணத்தில் பாதியே இதில் கிடைத்தது; அதோடு, வேலை சிரமமானதாகவும் சோர்வூட்டுவதாகவும் இருந்தது. அந்தக் கஷ்டமான சமயத்தில் எனக்கு உதவிய வசனம், பிலிப்பியர் 4:6, 7. “நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள்; எல்லாவற்றையும் குறித்து உங்கள் விண்ணப்பங்களை நன்றியுடன்கூடிய ஜெபத்தினாலும் மன்றாட்டினாலும் கடவுளுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்போது, எல்லாச் சிந்தனைக்கும் அப்பாற்பட்ட தேவசமாதானம் உங்கள் இருதயத்தையும் மனதையும் கிறிஸ்து இயேசுவின் மூலமாகக் காத்துக்கொள்ளும்” என்று அது சொல்கிறது. இந்த வாக்குறுதி எந்தளவுக்கு உண்மை என்பதைப் பல முறை அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.

நான் பெற்ற பலன்கள்: நான் முதன்முதலில் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிள் படிக்க ஆரம்பித்தபோது என் மனைவிக்கு அது பிடிக்கவில்லை. ஆனால், என்னுடைய நடத்தையில் நிறைய மாற்றங்களை அவள் பார்த்தபோது, அவளும் என்னோடு சேர்ந்து பைபிள் படிக்க ஆரம்பித்தாள், யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களுக்கும் என்னோடு வர ஆரம்பித்தாள். இப்போது நாங்கள் இருவரும் யெகோவாவின் சாட்சிகளாக இருக்கிறோம். இருவருமாகச் சேர்ந்து கடவுளைச் சேவிப்பது ஒரு பெரிய ஆசீர்வாதம்!

பைபிள் படிப்பதற்கு முன்பு, நான் சந்தோஷமாய் இருந்ததாக நினைத்தேன். ஆனால், உண்மையான சந்தோஷம் என்றால் என்ன என்பதை இப்போதுதான் புரிந்திருக்கிறேன். பைபிளின்படி வாழ்வது சுலபமே அல்ல, ஆனால் அதுதான் மிகச் சிறந்த வாழ்க்கை என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை.

பின்னணிக் குறிப்பு

பெயர்: எலிசபெத் ஜேன் ஸ்கோஃபில்ட்

வயது: 35

நாடு: பிரிட்டன்

முன்பு: சனி, ஞாயிறுகளில் உல்லாசமாக இருப்பதிலேயே குறியாக இருந்தார்

கடந்த காலம்: நான் ஹார்ட்கேட் என்ற சிறிய ஊரில் வளர்ந்தேன்; அது ஸ்காட்லாந்திலுள்ள கிளாஸ்கோவுக்குத் தொட்டாற்போல் அமைந்துள்ள ஊர். எனக்கு ஏழு வயதிருந்தபோது, யெகோவாவின் சாட்சியாக ஆகியிருந்த என்னுடைய அம்மா எனக்கு பைபிளைக் கற்றுத்தர ஆரம்பித்தார். ஆனாலும், எனக்கு 17 வயது ஆனதும் ஸ்கூல் ஃபிரெண்ட்ஸோடு நைட்கிளப்புக்குப் போவது, ஹெவி-மெட்டல் இசை கேட்பது, மது அருந்துவது ஆகியவற்றில்தான் ரொம்ப ஆர்வம் காட்ட ஆரம்பித்தேன். ஆன்மீக விஷயங்களுக்கும் எனக்கும் வெகுதூரம் ஆனது. சனி, ஞாயிறுகளில் உல்லாசமாக இருப்பதிலேயே குறியாக இருந்தேன். என்றாலும், எனக்கு 21 வயது ஆனதும் எல்லாம் தலைகீழாகியது.

என்னுடைய சில உறவினர்களைப் பார்ப்பதற்காக வட அயர்லாந்துக்குச் சென்றிருந்தேன். அங்கு, புராட்டஸ்டன்டினரின் ஆரஞ்ச் வாக் என்ற அணிவகுப்பைப் பார்த்தேன். அந்தச் சம்பவத்தின்போது புராட்டஸ்டன்டினரும் கத்தோலிக்கரும் காட்டிய பயங்கரமான பகையையும் மதவெறியையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். சொல்லப்போனால், அது என்னை யோசிக்க வைத்தது. பைபிளிலிருந்து அம்மா எனக்குக் கற்றுக்கொடுத்த விஷயங்கள் என் நினைவுக்கு வந்தன; கடவுளுடைய அன்பான நெறிமுறைகளை அசட்டை செய்வோரை அவர் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார் என்பதும் என் நினைவுக்கு வந்தது. நான் கடவுள் விரும்புகிறபடி வாழாமல் நான் விரும்புகிறபடியெல்லாம் வாழ்ந்து வந்திருந்ததைச் சட்டென உணர்ந்தேன். ஸ்காட்லாந்துக்குத் திரும்பிய கையோடு பைபிளை ஆராய்ந்து படிக்க வேண்டுமென முடிவு செய்தேன்.

பைபிள் என்னை மாற்றிய விதம்: என்னுடைய ஊரில் நடந்த யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டத்திற்கு நான் திரும்பவும் போனபோது எனக்குச் சங்கோஜமாகவும் படபடப்பாகவும் இருந்தது. என்றாலும், எல்லாருமே என்னிடம் அன்பாகப் பழகினார்கள். பைபிளிலிருந்து கற்றுக்கொள்வதை நான் கடைப்பிடிக்க ஆரம்பித்தபோது, சபையிலிருந்த மிகவும் அன்பான ஒரு சகோதரி என்மீது தனி அக்கறை காட்டினார். நான் மீண்டும் சபையில் ஒருத்தியாக இருப்பதுபோல் உணர வைப்பதற்கு அவர் ரொம்பவே உதவினார். என்னுடைய பழைய ஃபிரெண்ட்ஸ் நைட்கிளப்புகளுக்கு என்னை அழைத்துக்கொண்டே இருந்தார்கள்; ஆனால், பைபிள் நெறிகளின்படி வாழ நான் தீர்மானமாய் இருந்ததை அவர்களிடம் சொன்னேன். கடைசியில், அவர்கள் என்னை அழைப்பதை விட்டுவிட்டார்கள்.

முன்பெல்லாம், பைபிளை ஒரு சட்ட புத்தகம்போல் கருதினேன். ஆனால், பிற்பாடு என் எண்ணம் மாறிவிட்டது. என்னைப் போன்ற உணர்ச்சிகளையும் குறைபாடுகளையும் உடைய நிஜ ஆட்களாக பைபிள் கதாபாத்திரங்களைக் கருத ஆரம்பித்தேன். அவர்களும் தவறுகள் செய்தார்கள்; ஆனாலும், உள்ளப்பூர்வமாக மனந்திரும்பியபோது யெகோவா தேவன் அவர்களை மன்னித்தார். இள வயதில் நான் கடவுளுக்கு விரோதமாக நடந்திருந்த போதிலும், அவருக்குப் பிரியமாய் நடக்க கடுமையாக முயற்சி செய்தால் அவர் என்னை மன்னித்து என் தவறுகளை மறந்துவிடுவார் என்ற நம்பிக்கையைப் பெற்றேன்.

என் அம்மாவுடைய நடத்தையும்கூட என்னை ரொம்பவே கவர்ந்தது. நான் கடவுளை விட்டுவிட்டிருந்த போதிலும், கடவுளுக்கு அம்மா எப்போதும் உண்மையோடு இருந்தார். அவருடைய முன்மாதிரி, யெகோவாவைச் சேவிப்பது வீண்போகாது என்பதை எனக்கு உணர்த்தியது. சிறு வயதில் அம்மாவோடு வீடு வீடாகப் போய் ஊழியம் செய்தேன். ஆனாலும், அதை நான் சந்தோஷமாகச் செய்யவில்லை; பல மணிநேரம் ஊழியத்தில் செலவிடுவதை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. ஆனால் பிற்பாடு, மத்தேயு 6:31-33-லுள்ள இயேசுவின் வாக்குறுதி எந்தளவுக்கு உண்மை என்பதைச் சோதித்துப் பார்க்கத் தீர்மானித்தேன். “‘எதைச் சாப்பிடுவோம்?’ ‘எதைக் குடிப்போம்?’ ‘எதை உடுத்துவோம்?’ என்று ஒருபோதும் கவலைப்படாமல் இருங்கள். . . . இவையெல்லாம் உங்களுக்குத் தேவை என்று உங்கள் பரலோகத் தகப்பன் அறிந்திருக்கிறார். அதனால், முதலாவது கடவுளுடைய அரசாங்கத்தையும் அவருடைய நீதிநெறிகளையும் நாடிக்கொண்டே இருங்கள், அப்போது இவற்றையெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார்” என்று இயேசு வாக்குறுதி அளித்தார். நான் ஞானஸ்நானம் பெற்று யெகோவாவின் சாட்சி ஆனதும், என்னுடைய முழுநேர வேலையை விட்டுவிட்டு பகுதிநேர வேலையைத் தேடிக்கொண்டேன்; கடவுளுக்கு முழுநேர சேவை செய்ய ஆரம்பித்தேன்.

நான் பெற்ற பலன்கள்: சனி ஞாயிறுகளில் உல்லாசமாக இருந்த காலத்தில், நான் திருப்தியாகவே உணரவில்லை. என் வாழ்க்கை வெறுமையாக இருந்தது. இப்போதோ யெகோவாவுக்குச் சேவை செய்வதில் முழுமையாக ஈடுபட்டு வருவதால், மனநிறைவோடு இருக்கிறேன். அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்கிறேன். எனக்குத் திருமணமாகி விட்டது; என் கணவரும் நானும் ஒவ்வொரு வாரமும் யெகோவாவின் சாட்சிகளுடைய பல சபைகளைச் சந்தித்து உற்சாகம் அளிக்கிறோம். இந்த வேலையை வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த மிகப் பெரிய பாக்கியமாகக் கருதுகிறேன். எனக்கு மற்றொரு வாய்ப்பு அளித்ததற்காக யெகோவாவுக்கு மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். (w09-E 11/01)

[பக்கம் 29-ன் சிறுகுறிப்பு]

“எங்களுடைய முதல் சந்திப்பிலிருந்தே ஒரு புதையலைக் கண்டுபிடித்துவிட்ட உணர்வு எனக்கு ஏற்பட்டது. என்றாலும், என்னுடைய வாழ்க்கைப் பாணியை எவ்விதத்திலும் மாற்றிக்கொள்வது அந்தச் சமயத்தில் எனக்கு அவசியமாகப் படவில்லை”

[பக்கம் 31-ன் சிறுகுறிப்பு]

“புகைப்பதை என்னுடைய சொந்த பலத்தால் விட முடியவில்லை. ஆனால், யெகோவா தேவனிடம் ஊக்கமாக ஜெபம் செய்து, அவரைச் சார்ந்திருப்பதன் மூலம் அதை விட முடிந்தது”

[பக்கம் 32-ன் சிறுகுறிப்பு]

“முன்பெல்லாம், பைபிளை ஒரு சட்ட புத்தகம்போல் கருதினேன். ஆனால், பிற்பாடு என் எண்ணம் மாறிவிட்டது. என்னைப் போன்ற உணர்ச்சிகளையும் குறைபாடுகளையும் உடைய நிஜ ஆட்களாக பைபிள் கதாபாத்திரங்களைக் கருத ஆரம்பித்தேன்”