Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்

இயேசு கிறிஸ்து யார்?

இயேசு கிறிஸ்து யார்?

இந்தக் கட்டுரையில் சில கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. ஒருவேளை இந்தக் கேள்விகள் உங்களுக்கும் வந்திருக்கலாம். பதில்களைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? அப்படியானால், இந்தக் கட்டுரையை வாசியுங்கள். பதில்களை பைபிளிலிருந்தே தெரிந்துகொள்வீர்கள். இதைப் பற்றி இன்னும் விளக்கமாக உங்களிடம் பேச யெகோவாவின் சாட்சிகள் ஆவலாக இருக்கிறார்கள்.

1. இயேசு கிறிஸ்து யார்?

இயேசு பூமியில் மனிதனாகப் பிறப்பதற்கு முன், காண முடியாத ஒரு நபராகப் பரலோகத்தில் வாழ்ந்துவந்தார்; எந்த மனிதனும் அப்படி வாழ்ந்ததில்லை. (யோவான் 8:23) அவர் கடவுளுடைய முதல் படைப்பாக இருந்தார்; மற்ற எல்லாவற்றையும் படைப்பதில் கடவுளுக்கு உதவியாக இருந்தார். அவர் மட்டுமே யெகோவாவினால் நேரடியாகப் படைக்கப்பட்டார்; அதனால்தான், கடவுளுடைய ‘ஒரே மகன்’ என அழைக்கப்படுகிறார். அவர் கடவுளின் சார்பாகப் பேசுபவர் என்பதால், “வார்த்தை” எனவும் அழைக்கப்படுகிறார்.—யோவான் 1:1-3, 14; நீதிமொழிகள் 8:22, 23, 30-ஐயும் கொலோசெயர் 1:15, 16-ஐயும் வாசியுங்கள்.

2. இயேசு ஏன் பூமிக்கு வந்தார்?

கடவுள் தம்முடைய மகனின் உயிரைப் பரலோகத்திலிருந்து யூத கன்னிப் பெண்ணான மரியாளின் கருப்பைக்கு மாற்றினார். அப்படியானால், இயேசுவின் தந்தை ஒரு மனிதத் தந்தை அல்ல. (லூக்கா 1:30-35) இயேசு, (1) கடவுளைப் பற்றிய சத்தியத்தைக் கற்பிப்பதற்காக, (2) கடவுளுடைய சித்தத்தைச் செய்வதில் மற்றவர்களுக்கு முன்மாதிரி வைப்பதற்காக, (3) தமது பரிபூரண உயிரை “மீட்புவிலையாய்” கொடுப்பதற்காகப் பூமிக்கு வந்தார்.மத்தேயு 20:28-ஐயும் யோவான் 18:37-ஐயும் வாசியுங்கள்.

3. நமக்கு மீட்புவிலை ஏன் தேவை?

பொதுவாக, மீட்புவிலை செலுத்தினால்தான் ஓர் அடிமையை மீட்க முடியும். மனிதர்களைக் கடவுள் படைத்தபோது அவர்கள் வயதாகி சாக வேண்டும் என்ற நோக்கம் அவருக்கு இருக்கவில்லை. அது நமக்கு எப்படித் தெரியும்? முதல் மனிதனாகிய ஆதாமிடம், ‘நீ பாவம் செய்தாய் என்றால் இறந்துபோவாய்’ எனக் கடவுள் சொன்னார். ஆதாம் பாவம் செய்திருக்காவிட்டால் இறந்திருக்கவே மாட்டான். அவன் பாவம் செய்த பிறகு பல நூற்றாண்டுகள் வாழ்ந்தாலும், கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போன நாளிலிருந்தே சாக ஆரம்பித்துவிட்டான். (ஆதியாகமம் 2:16, 17; 5:5) பாவமும் அதற்குத் தண்டனையாகக் கிடைத்த மரணமும் அவனுடைய சந்ததியில் வந்த எல்லாருக்கும் வழிவழியாகக் கடத்தப்பட்டது. இவ்வாறு, ஆதாம் மூலம் மரணம் இந்த உலகத்தில் “வந்தது.” அதனால்தான், நமக்கு மீட்புவிலை தேவை.ரோமர் 5:12-ஐயும் 6:23-ஐயும் வாசியுங்கள்.

4. இயேசு ஏன் மரித்தார்?

நம்மை மரணத்திலிருந்து விடுவிக்க யாரால் மீட்புவிலை கொடுக்க முடியும்? அபூரண மனிதர்களாகிய எல்லாரும் தங்களுடைய பாவங்களுக்குத் தண்டனையாகத்தான் மரிக்கிறார்கள்; எனவே, ஒரு மனிதர் இன்னொரு மனிதருக்காக மீட்புவிலை கொடுக்க முடியாது.சங்கீதம் 49:7-9-ஐ வாசியுங்கள்.

இயேசுவோ ஓர் அபூரண மனிதராக இருக்கவில்லை; அதனால், அவர் மரித்தது அவருடைய பாவங்களுக்காக அல்ல, மற்றவர்களுடைய பாவங்களுக்காகவே! ஆம், அவர்களுக்கு மீட்புவிலை கொடுப்பதற்காகவே! நம்மீது அளவுகடந்த அன்பு இருந்ததால்தான் கடவுள் தமது மகனை நமக்காக மரிக்கும்படி அனுப்பினார். இயேசுவுக்கும்கூட நம்மீது அன்பு இருந்ததால்தான், தம் தந்தைக்குக் கீழ்ப்படிந்து பாவங்களிலிருந்து நம்மை மீட்பதற்காக மரித்தார்.யோவான் 3:16-ஐயும் ரோமர் 5:18, 19-ஐயும் வாசியுங்கள்.

5. இன்று இயேசு என்ன செய்துகொண்டிருக்கிறார்?

இயேசு பூமியில் இருந்தபோது நோயால் அவதிப்பட்டவர்களைக் குணப்படுத்தினார், மரித்தவர்களை உயிரோடு எழுப்பினார், பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் மக்களை விடுவிக்க தம் உயிரையே கொடுத்தார்; இவ்வாறு, கீழ்ப்படிதலுள்ள மனிதர்களுக்கு எதிர்காலத்தில் என்ன செய்வார் என்பதை நிரூபித்துக் காட்டினார். (லூக்கா 18:35-42; யோவான் 5:28, 29) இயேசு மரித்த பிறகு, பரலோகத்திற்குரிய உடலில் உயிர்த்தெழுப்பப்பட்டார். (1 பேதுரு 3:18) அதன் பிறகு, பூமி முழுவதையும் ஆட்சி செய்வதற்கான அதிகாரத்தை யெகோவா தமக்குக் கொடுக்கும்வரை அவருடைய வலது பக்கத்தில் காத்திருந்தார். (எபிரெயர் 10:12, 13) இன்று இயேசு பரலோகத்தில் ஆட்சி செய்துகொண்டிருக்கிறார்; அவரைப் பின்பற்றுகிற மக்கள் பூமியெங்கும் நற்செய்தியை அறிவித்துக்கொண்டிருக்கிறார்கள்.தானியேல் 7:13, 14-ஐயும் மத்தேயு 24:14-ஐயும் வாசியுங்கள்.

சீக்கிரத்தில் இயேசு தம்முடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி, துன்ப துயரங்களையும் அவற்றுக்குக் காரணமானவர்களையும் ஒழித்துக்கட்டுவார். இயேசுவின் மீது விசுவாசம் வைத்து அவருக்குக் கீழ்ப்படிந்து நடக்கிற லட்சோப லட்சம் பேர் பூஞ்சோலை பூமியில் சந்தோஷமாக வாழ்வார்கள்.சங்கீதம் 37:9-11-ஐ வாசியுங்கள். (w11-E 03/01)