Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளில் பயன்படுத்தப்பட்ட கிரேக்க மொழி

பைபிளில் பயன்படுத்தப்பட்ட கிரேக்க மொழி

இது, கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம் எழுதுவதற்குப் பயன்படுத்தப்பட்ட கிரேக்க மொழி. பழங்கால கிரேக்க மொழியின் சில வார்த்தைகள் அதில் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், முக்கியமாக அப்போது புழக்கத்தில் இருந்த கொய்னி கிரேக்க மொழியில்தான் அது எழுதப்பட்டது. மத்தேயுவின் சுவிசேஷம் முதன்முதலில் எபிரெய மொழியில் எழுதப்பட்டு, பிற்பாடு கொய்னி கிரேக்கில் மொழிபெயர்க்கப்பட்டதாகத் தெரிகிறது.

மகா அலெக்ஸாண்டர் பல இடங்களைக் கைப்பற்றிய பிறகு, கிழக்கத்திய மத்தியதரைப் பகுதியில் சுமார் கி.மு. 300 முதல் சுமார் கி.பி. 500 வரை பெரும்பாலான மக்கள் கொய்னி மொழியில்தான் பேசினார்கள். கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் யூத அறிஞர்கள் எபிரெய வேதாகமத்தை கொய்னியில் மொழிபெயர்க்க ஆரம்பித்ததாகப் பாரம்பரியம் சொல்கிறது. அந்த மொழிபெயர்ப்புதான் செப்டுவஜன்ட் என்று அழைக்கப்பட்டது. செப்டுவஜன்ட்டிலும் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்திலும் பயன்படுத்தப்பட்ட கிரேக்க மொழியில் எபிரெய வேதாகமத்தின் வார்த்தைகள் மற்றும் எழுத்துப்பாணியின் தாக்கம் அதிகமாகவே இருந்தது.

கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம் கொய்னி மொழியில் எழுதப்பட்டது மிகவும் பிரயோஜனமாக இருந்தது; ஏனென்றால், மற்ற மொழிகளைவிட அதுதான் அதிகமாகப் புழக்கத்தில் இருந்தது. வெவ்வேறு கிரேக்க கிளைமொழிகளின் கலவையாக அது இருந்தது. முக்கியமாக, அட்டிக்கா கிளைமொழிதான் அதில் அதிகமாகக் கலந்திருந்தது. ஆனால், அதன் இலக்கணம் எளிமையாக இருந்தது. அதேசமயத்தில், கொய்னி மொழியில் ஒரு விஷயத்தைப் பல விதங்களில் சொல்ல முடிந்தது, நுணுக்கமான கருத்துகளைக்கூட தெரிவிக்க முடிந்தது.