Skip to content

இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள் | எலியா

அவர் முடிவுவரை சகித்திருந்தார்

அவர் முடிவுவரை சகித்திருந்தார்

ஆகாப் ராஜா இறந்துவிட்டார் என்ற செய்தி எலியாவின் காதுக்கு வந்தது. இந்தக் காட்சியைக் கொஞ்சம் கற்பனை செய்யுங்கள்: அந்த வயதான தீர்க்கதரிசி தன்னுடைய கண்களை அகல விரித்தபடியே, தன்னுடைய தாடியை வருடியபடியே, ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருக்கிறார். பொல்லாத ஆகாப் ராஜாவோடு போராடிய சம்பவங்கள் அவருடைய மனத்திரையில் ஓடுகின்றன. அவர் எவ்வளவு கஷ்டங்களைச் சகித்திருந்தார்! ஆகாபும் அவருடைய மனைவி யேசபேலும் எலியாவைப் பல தடவை மிரட்டியிருந்தார்கள், அவரைத் தீர்த்துக்கட்ட நினைத்திருந்தார்கள். எலியா, உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு நடமாட வேண்டியிருந்தது. யெகோவாவுடைய தீர்க்கதரிசிகள் பலரை யேசபேல் ராணி கொலை செய்திருந்தாள்; அதைத் தடுக்க ராஜா எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதுமட்டுமல்ல, ராஜாவும் ராணியும் சதி செய்து அப்பாவியான நாபோத்தையும் அவருடைய மகன்களையும் கொலை செய்திருந்தார்கள். அதற்கு முழுக்க முழுக்க காரணம் அவர்களுடைய பேராசைதான்! அதனால், ஆகாபுக்கும் அவருடைய ராஜ பரம்பரைக்கும் எதிராக ஒரு நியாயத்தீர்ப்புச் செய்தியை எலியாவின் மூலம் யெகோவா சொல்லியிருந்தார். யெகோவா சொன்னபடியே நடந்தது. ஆகாப் இறந்துவிட்டார்!—1 ராஜாக்கள் 18:4; 21:1-26; 22:37, 38; 2 ராஜாக்கள் 9:26.

இருந்தாலும், பிரச்சினைகள் தீர்ந்த பாடில்லை என்பது எலியாவுக்குத் தெரிந்திருந்தது. ஏனென்றால், யேசபேல் இன்னும் உயிரோடுதான் இருந்தாள். அவள் தன்னுடைய குடும்பத்தையும் அந்த முழு தேசத்தையும் ஆட்டிப்படைத்துக்கொண்டு இருந்தாள். அதுபோக, இன்னும் பல சவால்களையும் எலியா சந்திக்க வேண்டியிருந்தது. அதேசமயத்தில், அவருக்குப் பிறகு தீர்க்கதரிசியாக ஆகவிருந்த அவருடைய நண்பர் எலிசாவுக்கு இன்னும் நிறைய விஷயங்களைக் கற்றுத்தர வேண்டியிருந்தது. இப்போது, எலியா நிறைவேற்றிய கடைசி மூன்று பொறுப்புகளைப் பற்றி விவரமாகப் பார்க்கலாம். எலியாவுக்கு இருந்த விசுவாசம் தொடர்ந்து சகித்திருக்க அவருக்கு எப்படி உதவியது என்பதை நாம் தெரிந்துகொள்வோம். இந்தப் பொல்லாத உலகத்தில் நம்முடைய விசுவாசத்தைப் பலப்படுத்திக்கொள்ள அது நமக்கு உதவி செய்யும்.

அகசியாவுக்கு எதிரான நியாயத்தீர்ப்பு

ஆகாபுக்கும் யேசபேலுக்கும் பிறந்த மகன்தான் அகசியா. ஆகாபுக்குப் பிறகு அவர்தான் இஸ்ரவேல் தேசத்துக்கு ராஜாவானார். தன்னுடைய அப்பா-அம்மா செய்த தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்வதற்குப் பதிலாக, அவரும் அவர்களைப் போலவே கெட்ட வழியில் போனார். (1 ராஜாக்கள் 22:52) அவர்களைப் போலவே பாகால் தெய்வத்தை அவர் வணங்கினார். பாகாலை வணங்கியவர்கள் கோயில் விபச்சாரத்தில் ஈடுபட்டார்கள், பிள்ளைகளை நரபலி கொடுத்தார்கள், அருவருப்பான இன்னும் பல விஷயங்களைச் செய்தார்கள். யெகோவாவுக்கு எதிராக இப்படிப்பட்ட மகா பெரிய துரோகங்களைச் செய்துவந்த அகசியா ராஜா திருந்துவதற்கு வாய்ப்பிருந்ததா? தன்னுடைய மக்களையும் அவர் திருத்துவதற்கு வாய்ப்பிருந்ததா?

ஆணவம்பிடித்த அந்த இளம் ராஜாவுக்கு ஒரு விபரீதம் நடந்தது. அரண்மனைக் கூரையின் சாளரம் வழியாகக் கீழே விழுந்ததால் அவருக்குப் பயங்கரமாக அடிபட்டுவிட்டது. உயிருக்கு ஆபத்தான அந்த நிலையில்கூட அவர் யெகோவாவிடம் உதவி கேட்கவில்லை. அதற்குப் பதிலாக, எதிரிகளுடைய (பெலிஸ்தியர்களுடைய) நகரமாகிய எக்ரோனுக்குத் தூதுவர்களை அனுப்பி, தனக்குக் குணமாகுமா ஆகாதா என்று பாகால்-செபூப் என்ற தெய்வத்திடம் விசாரித்து வரும்படி சொன்னார். இதற்கு மேலும் யெகோவா பொறுத்துக்கொள்வதாக இல்லை! அவர் எலியாவிடம் ஒரு தேவதூதரை அனுப்பி, அகசியா அனுப்பிய ஆட்களைத் தடுக்கும்படி சொன்னார். அந்த ஆட்கள் மூலமாக ஒரு கடுமையான செய்தியை ராஜாவுக்குச் சொல்லி அனுப்பினார். இஸ்ரவேலர்களுக்குக் கடவுளே இல்லாததுபோல் அகசியா நடந்துகொண்டது மிகப் பெரிய பாவம்! அதனால், அவர் படுத்த படுக்கையாகவே கிடந்து செத்துப்போவார் என்று யெகோவா சொல்லிவிட்டார்.—2 ராஜாக்கள் 1:2-4.

மனம்திருந்தாத அகசியா தன்னுடைய ஆட்களிடம், “உங்களிடம் இந்தச் செய்தியைச் சொன்னவர் பார்ப்பதற்கு எப்படி இருந்தார்?” என்று கேட்டார். எலியா போட்டிருந்த எளிமையான உடையைப் பற்றி அவர்கள் விளக்கிய உடனேயே அகசியா, ‘அவர் எலியாதான்’ என்று சொன்னார். (2 ராஜாக்கள் 1:7, 8) எலியா போட்டிருந்த எளிமையான உடையை வைத்தே அவரை அகசியா அடையாளம் கண்டுபிடித்துவிட்டார். அப்படியென்றால், எலியா எவ்வளவு எளிமையாக வாழ்ந்திருப்பார்! கடவுளுடைய சேவையில் எந்தளவுக்கு கவனம் செலுத்தியிருப்பார்! ஆனால், அகசியாவைப் பற்றியோ அவருடைய அப்பா-அம்மாவைப் பற்றியோ அப்படி எதுவும் சொல்ல முடியாது. ஏனென்றால், அவர்கள் பேராசையும் பொருளாசையும் பிடித்தவர்களாக இருந்தார்கள். எலியாவின் உதாரணத்திலிருந்து என்ன கற்றுக்கொள்கிறோம்? நம் வாழ்க்கையை எளிமையாக வைத்துக்கொள்வதும், முக்கியமான காரியங்களுக்கு மட்டுமே கவனம் செலுத்துவதும் அவசியம் என்று கற்றுக்கொள்கிறோம். இயேசுவும் இதைத்தான் நமக்குச் சொல்லியிருக்கிறார்.—மத்தேயு 6:22-24.

எலியாவைப் பழிவாங்கியே தீர வேண்டும் என்று அகசியா நினைத்தார். அதனால், எலியாவைக் கைது செய்வதற்காக 50 வீரர்களையும் அவர்களுடைய தலைவரையும் அனுப்பிவைத்தார். அவர்கள் போனபோது “எலியா ஒரு மலைமேல் உட்கார்ந்திருந்தார்.” * அந்தத் தலைவர் அவரிடம், “ராஜா உங்களைக் கீழே வரச் சொல்கிறார்” என்று அதட்டினார். அநேகமாக, அவரைக் கொண்டுபோய்க் கொலை செய்ய அவர்கள் திட்டம் போட்டிருக்கலாம். எலியா ‘உண்மைக் கடவுளின் ஊழியர்’ என்று தெரிந்தும் அவர்கள் அவரை மிரட்ட நினைத்தது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்! அந்தத் தலைவரிடம் எலியா, “நான் கடவுளின் ஊழியன் என்றால், வானத்திலிருந்து நெருப்பு வந்து உன்னையும் உன்னுடன் வந்த 50 பேரையும் அழித்துப்போடட்டும்” என்று சொன்னார். உடனே, கடவுள் நெருப்பை அனுப்பினார். “வானத்திலிருந்து நெருப்பு வந்து அந்தத் தலைவரையும் 50 வீரர்களையும் அழித்துப்போட்டது” என்று பைபிள் சொல்கிறது. (2 ராஜாக்கள் 1:9, 10) அவர்களுக்கு ஏற்பட்ட கோரமான முடிவிலிருந்து ஒரு முக்கியமான விஷயம் புரிகிறது. தன்னுடைய ஊழியர்களை யாராவது மரியாதை இல்லாமல் நடத்தினால் யெகோவா அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டார்!—1 நாளாகமம் 16:21, 22.

அகசியா இன்னொரு 50 வீரர்களையும் அவர்களுடைய தலைவரையும் அனுப்பினார். இந்தத் தலைவர் முதல் தலைவரைவிட அதிக துணிச்சலோடு நடந்துகொண்டார். ஏனென்றால், முதலில் போன 51 பேரும் கொல்லப்பட்ட பிறகுகூட இவருக்குப் புத்தி வரவில்லை; அவர்கள் எரிந்து சாம்பலாகிக் கிடந்ததை இவர் கண்கூடாகப் பார்த்திருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனாலும், முதல் தலைவரைப் போலவே இவரும் எலியாவைக் கீழே வரச் சொல்லி அதட்டினார்; அதுவும், “உடனே” வரச் சொல்லி அதட்டினார். எவ்வளவு பெரிய முட்டாள்தனம்! முதலில் போனவர்களுக்கு வந்த அதே கதிதான் இவருக்கும் இவருடைய ஆட்களுக்கும் வந்தது. இவர்களை அனுப்பிய ராஜா இவர்களைவிட ரொம்பவே துணிச்சலோடு நடந்துகொண்டார். கொஞ்சம்கூடத் திருந்தாமல், மூன்றாவது தடவையாகத் தன்னுடைய வீரர்களை அனுப்பினார். ஆனால், மூன்றாவதாக அனுப்பப்பட்ட தலைவர் புத்திசாலித்தனமாக நடந்துகொண்டார். அவர் மனத்தாழ்மையோடு எலியாவிடம் போய், தனக்கும் தன் ஆட்களுக்கும் உயிர்ப்பிச்சை தரும்படி கெஞ்சினார். அதனால், அந்த வீரர்களோடு புறப்பட்டுப் போகும்படி ஒரு தேவதூதர் மூலமாக எலியாவிடம் யெகோவா சொன்னார். அதன்படியே எலியாவும் அந்த வீரர்களோடு போனார். இப்படி, யெகோவாவைப் போலவே அவரும் அந்தத் தலைவருக்கு இரக்கம் காட்டினார். பொல்லாத ராஜாவான அகசியாவைச் சந்தித்து, யெகோவாவின் நியாயத்தீர்ப்புச் செய்தியை மறுபடியும் சொன்னார். அதன்படியே, அகசியா இறந்துபோனார். வெறும் இரண்டு வருஷங்கள்தான் அவர் ஆட்சி செய்திருந்தார்.—2 ராஜாக்கள் 1:11-17.

யெகோவாவைப் போலவே எலியாவும் மனத்தாழ்மையுள்ள ஒரு தலைவருக்கு இரக்கம் காட்டினார்

எலியாவைச் சுற்றியிருந்த ஆட்கள் கொஞ்சம்கூட அடங்காமல், முரட்டுப் பிடிவாதத்தோடு நடந்துகொண்டார்கள். அந்தச் சூழ்நிலையை எலியா எப்படிச் சகித்தார்? இந்தக் கேள்விக்குப் பதில் தெரிந்துகொள்வது நமக்குப் பிரயோஜனமாக இருக்கும். உங்களுக்குப் பிரியமான ஒருவர் நீங்கள் சொல்லும் புத்திமதியைக் கேட்காமல் கெட்ட வழியிலேயே போய்க்கொண்டிருப்பதைப் பார்த்து நீங்கள் வேதனைப்பட்டது உண்டா? இப்படிப்பட்ட மன வேதனையை நாம் எப்படிச் சகித்துக்கொள்ளலாம்? அந்த வீரர்கள் எலியாவைத் தேடிப்போனபோது அவர் எங்கே இருந்தார் என்பதை யோசித்துப் பாருங்கள். அவர் “ஒரு மலைமேல் உட்கார்ந்திருந்தார்.” அவர் ஏன் அங்கே உட்கார்ந்திருந்தார் என்று நம்மால் உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால், அவர் ஜெபத்துக்கு ரொம்பவும் முக்கியத்துவம் கொடுத்த ஒருவர். அதனால், கடவுளிடம் பேசுவதற்கும் அவரிடம் நெருக்கமாவதற்கும் அவர் அந்தத் தனிமையான இடத்தைத் தேர்ந்தெடுத்திருப்பார் என்பதில் சந்தேகமே இல்லை. (யாக்கோபு 5:16-18) நாமும் அவரைப் போல் கடவுளிடம் தவறாமல் பேசுவதற்குத் தனிமையான இடத்தையும் நேரத்தையும் தேர்ந்தெடுக்கலாம்; கடவுளுடைய பெயரைச் சொல்லிக் கூப்பிட்டு, நம்முடைய மனதில் இருப்பதையெல்லாம் அவரிடம் கொட்டிவிடலாம். அப்போது, நமக்குப் பிரியமான யாராவது பிடிவாதமாகக் கெட்ட வழியிலேயே போனால் அந்த வேதனையை நம்மால் சகித்துக்கொள்ள முடியும்.

அங்கி கைமாறுகிறது

எலியா தன்னுடைய பொறுப்பை இன்னொருவரிடம் ஒப்படைக்கும் நேரம் வந்தது. என்ன நடந்தது என்று கவனியுங்கள். அவரும் எலிசாவும் கில்காலிலிருந்து புறப்பட்டார்கள். அப்போது எலிசாவை அங்கேயே இருக்கும்படி எலியா கேட்டுக்கொண்டார்; தான் மட்டும் சுமார் 11 கிலோமீட்டர் (7 மைல்) தூரத்தில் இருந்த பெத்தேலுக்குப் போகப்போவதாகச் சொன்னார். அதற்கு எலிசா, “உயிருள்ள கடவுளாகிய யெகோவாமேல் ஆணையாகச் சொல்கிறேன், உங்கள் உயிர்மேல் ஆணையாகச் சொல்கிறேன், நான் உங்களைவிட்டுப் போக மாட்டேன்” என்று உறுதியாகச் சொல்லிவிட்டார். அதனால், இரண்டு பேரும் சேர்ந்து பெத்தேலுக்குப் போனார்கள். அதன்பின் எலியா, தான் மட்டும் சுமார் 22 கிலோமீட்டர் (14 மைல்) தூரத்தில் இருந்த எரிகோவுக்குப் போகப்போவதாகச் சொன்னார். ஆனால் எலிசா, முன்பு சொன்ன அதே வார்த்தைகளையே இந்த தடவையும் சொன்னார். மூன்றாவது முறையாக எரிகோவிலும் அதேபோல் நடந்தது. எலிசா எலியாவைவிட்டுப் பிரிவதாகவே இல்லை! அதனால், இரண்டு பேருமே சுமார் 8 கிலோமீட்டர் (5 மைல்) தூரத்தில் இருந்த யோர்தான் ஆற்றுக்குப் போனார்கள்.—2 ராஜாக்கள் 2:1-6.

எலிசா முக்கியமான ஒரு குணத்தைக் காட்டினார். அதுதான் மாறாத அன்பு. இந்த அன்பைத்தான் நகோமியிடம் ரூத் காட்டினாள். ஒருவர்மேல் நமக்கு மாறாத அன்பு இருந்தால், எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் அவரைவிட்டுப் பிரிய மாட்டோம். (ரூத் 1:15, 16) கடவுளுடைய ஊழியர்கள் எல்லாருமே இப்படிப்பட்ட அன்பைக் காட்டுவது அவசியம், அதுவும் இந்தக் காலத்தில்! இந்தக் குணம் எவ்வளவு முக்கியம் என்று எலிசாவைப் போலவே நாமும் புரிந்து வைத்திருக்கிறோமா?

இளம் நண்பரான எலிசா காட்டிய மாறாத அன்பைப் பார்த்து எலியா நிச்சயம் நெகிழ்ந்துபோயிருப்பார்! எலிசா மாறாத அன்பைக் காட்டியதால்தான், எலியா செய்த கடைசி அற்புதத்தைப் பார்க்கும் பாக்கியம் அவருக்குக் கிடைத்தது. யோர்தான் ஆற்றங்கரையில் நின்றுகொண்டு எலியா அந்த அற்புதத்தைச் செய்தார். யோர்தான் ஆறு வேகமாகப் பாய்ந்தோடும்; ஆங்காங்கே ஆழமாகவும் இருக்கும். எலியா தன்னுடைய அங்கியைச் சுருட்டி அந்த ஆற்றின் தண்ணீரை அடித்தார். உடனே தண்ணீர் இரண்டாகப் பிரிந்தது! ‘தீர்க்கதரிசிகளின் மகன்களில் 50 பேர்கூட’ அந்த அற்புதத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். இவர்கள் அநேகமாக, உண்மை வணக்கத்தில் மக்களை முன்நின்று நடத்துவதற்குப் பயிற்சி பெற்றுவந்த தீர்க்கதரிசிகளாக இருந்திருக்கலாம். (2 ராஜாக்கள் 2:7, 8) எலியாவின் மேற்பார்வையில் இவர்களுக்கு அந்தப் பயிற்சி கொடுக்கப்பட்டிருக்கலாம். சில வருஷங்களுக்கு முன்பு, அந்தத் தேசத்தில் கடவுளுக்கு உண்மையாக இருந்தவர்களில் தான் மட்டும்தான் மீந்திருந்ததாக நினைத்து எலியா வருத்தப்பட்டார். அதுமுதல், யெகோவாவை வணங்குபவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்வதைப் பார்க்கும் பாக்கியம் அவருக்குக் கிடைத்தது. இப்படி, எலியாவின் சகிப்புத்தன்மைக்கு யெகோவா பலன் தந்தார்.—1 ராஜாக்கள் 19:10.

யோர்தானைக் கடந்த பிறகு எலிசாவிடம் எலியா, “நான் உன்னைவிட்டுப் போகப்போகிறேன், உனக்கு என்ன வேண்டுமோ கேள்” என்று சொன்னார். தான் விடைபெற வேண்டிய சமயம் வந்துவிட்டதை எலியா தெரிந்துவைத்திருந்தார். இனி எல்லா பொறுப்புகளும் செல்வாக்கும் தன்னுடைய இளம் நண்பருக்குப் போய்விடுமே என்று நினைத்து அவர் எரிச்சலடையவில்லை. அதற்குப் பதிலாக, அவருக்கு எல்லா விதத்திலும் உதவி செய்யத்தான் ஆசைப்பட்டார். எலிசா அவரிடம், “உங்களிடம் இருக்கிற கடவுளுடைய சக்தியில் இரண்டு பாகத்தைத் தயவுசெய்து எனக்குத் தருவீர்களா?” என்று கேட்டார். (2 ராஜாக்கள் 2:9) இந்த வசனத்தின் அடிக்குறிப்பில் நாம் பார்க்கிறபடி, “கடவுளுடைய சக்தி” என்பதற்கான மூலவார்த்தைகள் எலியாவின் மனப்பான்மையையும் குறிக்கலாம். அப்படியென்றால், கடவுளுடைய சக்தியினால் எலியா பெற்றிருந்த தைரியமான மனப்பான்மையைத் தரும்படி எலிசா கேட்டிருப்பார். அதோடு, திருச்சட்டத்தை மனதில் வைத்துத்தான் ‘இரண்டு பாகம்’ தரும்படி அவர் கேட்டிருப்பார். திருச்சட்டத்தின்படி, மூத்த மகனுக்குச் சொத்தில் இரண்டு பாகங்கள் கொடுக்கப்பட்டன; குடும்பத் தலைவர் என்ற புதிய பொறுப்பை நிறைவேற்ற இது அந்த மூத்த மகனுக்கு உதவியது. (உபாகமம் 21:17) அதேபோல் எலியாவின் வாரிசாக, அதாவது அடுத்த தீர்க்கதரிசியாக, தன் பொறுப்பைச் சரியாக நிறைவேற்ற வேண்டுமென்றால், எலியாவைப் போலவே தனக்கு அதிக தைரியம் தேவைப்படும் என்பதை எலிசா புரிந்துவைத்திருந்தார்.

எலிசாவுக்கு யெகோவாவே பதில் தரும்படி எலியா மனத்தாழ்மையோடு விட்டுவிட்டார். எலியாவை யெகோவா எடுத்துக்கொள்வதை நேரில் பார்க்கும் வாய்ப்பு ஒருவேளை எலிசாவுக்குக் கிடைத்தால், அவர் கேட்டதைக் கடவுள் கொடுத்ததாக அர்த்தம் என்று எலியா சொன்னார். நீண்டகால நண்பர்களாக இருந்த அந்த இரண்டு பேரும் “பேசிக்கொண்டே நடந்துபோனபோது,” அற்புதமான ஒன்று நடந்தது!—2 ராஜாக்கள் 2:10, 11.

எலியாவுக்கும் எலிசாவுக்கும் இருந்த நட்பு, கஷ்டங்களைச் சகித்துக்கொள்ள இருவருக்குமே உதவியது

மிகப் பிரகாசமான ஏதோவொன்று வானத்தில் தோன்றி, வேகமாக அவர்களை நோக்கி வந்தது. இந்தக் காட்சியைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்: திடீரென்று சுழல்காற்று வீசுகிறது. காற்றின் சத்தம் காதைப் பிளக்கிறது. கண்கள் கூசும் அளவுக்குப் பிரகாசமான ஏதோவொன்று வானத்தில் தெரிகிறது. அது அந்த இரண்டு பேரையும் நோக்கி வேகமாக வருகிறது. பயத்திலும் பிரமிப்பிலும் அவர்கள் ஆடிப்போகிறார்கள்! அவர்கள் பார்த்தது என்ன? நெருப்பைப் போல் தகதகவென்று பிரகாசிக்கும் ஒரு ரதம்! விடைபெற வேண்டிய சமயம் வந்துவிட்டதை எலியா புரிந்துகொண்டார். அவர் அந்த ரதத்தில் ஏறினாரா? நமக்குத் தெரியாது. ஆனால், அந்தச் சுழல்காற்றில் எலியா கொஞ்சம் கொஞ்சமாக மேலே போய்க்கொண்டே இருந்தார்!

எலிசா பிரமிப்பில் உறைந்துபோனார். அந்தக் காட்சியைக் கண்சிமிட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தார். அந்த அற்புதத்தைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்ததால், எலியாவின் தைரியத்தில் “இரண்டு பாகத்தை” யெகோவா தனக்குக் கொடுப்பார் என்று எலிசாவுக்குப் புரிந்தது. ஆனாலும், எலிசாவின் மனம் சோகத்தில் வாடியது. ஏனென்றால், தன்னுடைய உயிருக்கு உயிரான நண்பர் எங்கே போகிறார் என்று அவருக்குத் தெரியவில்லை. அவரை மறுபடியும் பார்க்கவே முடியாது என்றுகூட எலிசா நினைத்திருக்கலாம். அதனால், “தகப்பனே, தகப்பனே! இஸ்ரவேலின் ரதமே, குதிரைவீரரே!” என்று சத்தமாகக் கூப்பிட்டார். அவருடைய பாசமான குரு அவருடைய பார்வையிலிருந்து மறைந்ததும், தன்னுடைய உடையை இரண்டாகக் கிழித்துக்கொண்டார்.—2 ராஜாக்கள் 2:12.

எலியா மேலே போய்க்கொண்டே இருந்தபோது, அவருடைய இளம் நண்பரின் சோகக் குரலைக் கேட்டு அவரும் கண் கலங்கியிருப்பாரா? நமக்குத் தெரியாது. ஆனால், எலிசாவைவிட்டுப் பிரிவது அவருக்கும் வேதனையாகத்தான் இருந்திருக்கும். ஏனென்றால், கஷ்டங்களைச் சகித்துக்கொள்வதற்கு உதவியாக இருந்த நண்பர் அவர்! இதில் நமக்கு என்ன பாடம்? கடவுளை நேசிப்பவர்களையும் அவருடைய விருப்பத்தைச் செய்கிறவர்களையும் நண்பர்களாகத் தேர்ந்தெடுப்பது நமக்கும் உதவியாக இருக்கும்.

எலியாவை யெகோவா வேறொரு இடத்துக்குக் கொண்டுபோய் ஒரு புதிய பொறுப்பைக் கொடுத்தார்

கடைசி பொறுப்பு

எலியா எங்கே போனார்? கடவுள் அவரைப் பரலோகத்துக்கு எடுத்துக்கொண்டதாகச் சில மதங்கள் சொல்கின்றன. ஆனால், அதற்கு வாய்ப்பே இல்லை. ஏனென்றால், இயேசு கிறிஸ்துவின் காலத்துக்கு முன்னால் யாருமே பரலோகத்துக்குப் போனதில்லை; இயேசுவே இதைச் சொல்லியிருக்கிறார். (யோவான் 3:13) சில பைபிள்களில், ‘எலியா சுழல்காற்றிலே பரலோகத்திற்கு ஏறிப்போனார்’ என்று கொடுக்கப்பட்டிருக்கிறதே, அதைப் பற்றி என்ன சொல்லலாம்? (2 ராஜாக்கள் 2:11, தமிழ் O.V.) பைபிளில் ‘பரலோகம்’ என்பதற்கான மூலவார்த்தை யெகோவா குடியிருக்கும் பரலோகத்தை மட்டுமல்ல, மேகங்கள் மிதக்கும் வானத்தையும் குறிக்கும். (சங்கீதம் 147:8) அதனால், எலியா வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதைப் பற்றித்தான் இந்த வசனம் சொல்கிறது. அதற்குப் பிறகு என்ன நடந்தது?

யெகோவா தன்னுடைய அன்பு தீர்க்கதரிசிக்கு ஒரு புதிய பொறுப்பைக் கொடுத்தார்; அதாவது, யூதா ராஜ்யத்தில் தீர்க்கதரிசியாகச் சேவை செய்யும் பொறுப்பைக் கொடுத்தார். பல வருஷங்கள் எலியா அங்கே சேவை செய்ததாக பைபிள் சொல்கிறது. ஒருவேளை, ஏழு வருஷங்களுக்குமேல் அவர் அங்கே சேவை செய்திருக்கலாம். அப்போது, பொல்லாத ராஜாவாகிய யோராம் யூதாவை ஆட்சி செய்துகொண்டிருந்தார். ஆகாபுக்கும் யேசபேலுக்கும் பிறந்த மகளை அவர் கல்யாணம் செய்திருந்தார். அதனால், ஆகாப் மற்றும் யேசபேலின் கெட்ட செல்வாக்கு அப்போதும் ஒழிந்த பாடில்லை. யோராமுக்கு எதிராகத் தண்டனைத் தீர்ப்பை எழுதி அனுப்பும்படி யெகோவா எலியாவிடம் சொன்னார். யெகோவா சொன்னபடியே யோராமுக்குக் கோரமான சாவு வந்தது. அதுமட்டுமல்ல, “அவர் இறந்துபோனதற்காக யாருமே வருத்தப்படவில்லை.”—2 நாளாகமம் 21:12-20.

அந்தப் பொல்லாத ராஜாவுக்கும் எலியாவுக்கும் எவ்வளவு வித்தியாசம்! எலியா எப்படி இறந்தார், எப்போது இறந்தார் என்றெல்லாம் நமக்குத் தெரியாது. ஆனால், யோராம் இறந்ததுபோல் அவர் இறக்கவில்லை என்பது மட்டும் உறுதி. யோராம் இறந்தபோது யாருமே வருத்தப்படவில்லை. ஆனால், எலியாவின் பிரிவு எலிசாவையும் உண்மையுள்ள மற்ற தீர்க்கதரிசிகளையும் வாட்டியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதுமட்டுமல்ல, கிட்டத்தட்ட 1,000 வருஷங்களுக்குப் பிறகுகூட யெகோவாவின் மனதில் எலியா விசேஷ இடம்பிடித்திருந்தார். அதனால்தான், இயேசு தோற்றம் மாறிய காட்சியில் எலியாவின் உருவம் தோன்றும்படி செய்தார். (மத்தேயு 17:1-9) எலியாவிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ள நீங்கள் விரும்புகிறீர்களா? கஷ்டங்களைச் சகிப்பதற்குத் தேவையான விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள ஆசைப்படுகிறீர்களா? அப்படியென்றால், கடவுளை நேசிப்பவர்களை நண்பர்களாகத் தேர்ந்தெடுங்கள், ஆன்மீக விஷயங்களுக்கு வாழ்க்கையில் முதலிடம் கொடுங்கள், எப்போதும் ஜெபம் செய்யுங்கள். அப்போது, அன்பு நிறைந்த யெகோவாவின் இதயத்தில் நீங்களும் நீங்காத இடம்பிடிப்பீர்கள்!

^ பாரா. 6 கர்மேல் மலையின் மேல்தான் எலியா உட்கார்ந்திருந்ததாகச் சில அறிஞர்கள் சொல்கிறார்கள். (கர்மேல் மலையில்தான் சில வருஷங்களுக்கு முன்பு பாகால் தீர்க்கதரிசிகளைத் தோற்கடிக்க எலியாவுக்குக் கடவுள் உதவி செய்திருந்தார்.) ஆனால், உண்மையில் எலியா எந்த மலைமேல் உட்கார்ந்திருந்தார் என்று பைபிள் சொல்வதில்லை.