Skip to content

கிறிஸ்மஸ் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

கிறிஸ்மஸ் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

பைபிள் தரும் பதில்

 இயேசுவின் பிறந்த நாளை பைபிள் குறிப்பிடுவதும் இல்லை, அவருடைய பிறந்த நாளை கொண்டாடச் சொல்வதும் இல்லை. மெக்லின்டாக் அண்டு ஸ்ட்ராங்க்ஸ் ஸைக்ளோப்பீடியா இப்படிச் சொல்கிறது: “கிறிஸ்மஸ் கொண்டாடும்படி கடவுள் கட்டளையிடவில்லை, அதைப் பற்றி புதிய ஏற்பாட்டில் எதுவும் சொல்லப்படவில்லை.”

 கிறிஸ்மஸ் பண்டிகையின் சரித்திரத்தை ஆராய்ந்து பார்த்தால், அது பொய்மத சடங்காச்சாரத்திலிருந்து தோன்றியிருப்பது அப்பட்டமாகத் தெரியும். கடவுளுக்குப் பிடிக்காத விதத்தில் அவரை வணங்கினால், அவரைக் கோபப்படுத்துவோம் என்று பைபிள் சொல்கிறது.—யாத்திராகமம் 32:5-7.

கிறிஸ்மஸ் சம்பிரதாயங்களின் சரித்திரம்

  1.   இயேசுவின் பிறந்த நாளை கொண்டாடுவது: “ஆரம்பகால கிறிஸ்தவர்கள் இயேசுவின் பிறந்த நாளைக் கொண்டாடவில்லை; ஏனென்றால், பிறந்த நாள் கொண்டாட்டத்தை பொய்மத பழக்கமாக அவர்கள் கருதினார்கள்.”—தி உவர்ல்டு புக் என்ஸைக்ளோப்பீடியா.

  2.   டிசம்பர் 25: இயேசு இந்தத் தேதியில் பிறந்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஒருவேளை குளிர்கால சங்கிராந்தி அன்றோ அல்லது அந்தச் சமயத்திலோ நடைபெற்ற புறமத பண்டிகைகளோடு சேர்த்துக் கொண்டாடுவதற்காக சர்ச் தலைவர்கள் இந்த நாளைத் தேர்ந்தெடுத்திருக்கலாம்.

  3.   பரிசுகள், விருந்து, பார்ட்டி: “மத்திப டிசம்பரில் கொண்டாடப்பட்ட சாட்டர்னேலியா என்ற ரோமப் பண்டிகையிலிருந்தே, கிறிஸ்மஸோடு சம்பந்தப்பட்ட குதூகல பழக்கவழக்கங்கள் பல ஆரம்பமாயின. உதாரணமாக, தாம்தூம் என்று விருந்து வைப்பது, பரிசுப் பொருள்களைக் கொடுப்பது, மெழுகுவர்த்திகளை ஏற்றி வைப்பது போன்ற பழக்கவழக்கங்கள் ஆரம்பமாயின” என்று தி என்ஸைக்ளோப்பீடியா அமெரிக்கானா சொல்கிறது. “சாட்டர்னேலியா பண்டிகை சமயத்தில் எல்லா வேலைகளும் வியாபாரங்களும் நிறுத்தி வைக்கப்பட்டன” என்று தி என்ஸைக்ளோப்பீடியா ப்ரிட்டானிக்கா குறிப்பிடுகிறது.

  4.   கிறிஸ்மஸ் ஒளி விளக்குகள்: ஐரோப்பியர்கள் குளிர்கால பண்டிகையைக் கொண்டாடுவதற்காகவும், அசுத்த ஆவிகளைத் துரத்தியடிப்பதற்காகவும் தங்கள் வீடுகளை “ஒளி விளக்குகளாலும் எல்லா விதமான பசுஞ்செடிகொடிகளாலும் அலங்கரித்தார்கள்” என்று தி என்ஸைக்ளோப்பீடியா ஆஃப் ரிலிஜன் சொல்கிறது.

  5.   மிஸில்ட்டோ, ஹாலி: இந்தத் தாவரங்கள் கிறிஸ்மஸ் சமயத்தில் அலங்காரத்துக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. “குறிப்பாக, மிஸில்ட்டோ என்ற புல்லுருவிக்கு மந்திரசக்தி இருப்பதாக கெல்டிக் இனத்தவரின் குரு வகுப்பினர் நம்பினார்கள். சூரியன் திரும்பி வருவதற்கான வாக்குறுதிக்கு அடையாளமாக பசுமைமாறா ஹாலி மரம் வணங்கப்பட்டது.”—தி என்ஸைக்ளோப்பீடியா அமெரிக்கானா.

  6.   கிறிஸ்மஸ் மரம்: “மரங்களை வழிபடுகிற வழக்கம் புறமத ஐரோப்பியர்கள் மத்தியில் சகஜமாகக் காணப்பட்டது; அவர்கள் கிறிஸ்தவர்களாக மாறிய பிறகு அந்த வழக்கத்தைத் தொடர்ந்தார்கள்.” மர வழிபாடு தொடர்ந்ததற்கு ஒரு உதாரணம், “மத்திப குளிர்கால பண்டிகை நாட்களில் ஒரு கிறிஸ்மஸ் மரம் வீட்டு வாசலில் அல்லது வீட்டுக்குள் வைக்கப்பட்டது.”—என்ஸைக்ளோப்பீடியா ப்ரிட்டானிக்கா.