Skip to content

யார் பரலோகத்திற்குப் போகிறார்கள்?

யார் பரலோகத்திற்குப் போகிறார்கள்?

பைபிள் தரும் பதில்

 விசுவாசமுள்ள சில கிறிஸ்தவர்களைப் பரலோக வாழ்க்கைக்காகக் கடவுள் தேர்ந்தெடுக்கிறார்; அவர்கள் இறந்த பிறகு பரலோகத்திற்கு உயிர்த்தெழுப்பப்படுவார்கள். (1 பேதுரு 1:3, 4) தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொருவரும் தங்களுடைய கிறிஸ்தவ விசுவாசத்தையும் நடத்தையையும் தொடர்ந்து காத்துக்கொள்ள வேண்டும்; இல்லையென்றால், பரலோக ஆஸ்திக்கான, அதாவது பரலோக அழைப்புக்கான, தகுதியை அவர்கள் இழந்துவிடுவார்கள்.—எபேசியர் 5:5; பிலிப்பியர் 3:12-14.

பரலோகத்திற்குப் போகிறவர்கள் அங்கே போய் என்ன செய்வார்கள்?

 1,000 வருடங்களுக்கு இயேசுவோடுகூட ராஜாக்களாகவும் குருமார்களாகவும் சேவை செய்வார்கள். (வெளிப்படுத்துதல் 5:9, 10; 20:6) ‘புதிய பூமியின்மேல்,’ அதாவது பூமியில் வாழப்போகும் மக்கள்மேல், ஆட்சி செய்யப்போகிற ‘புதிய வானத்தின்’ அதாவது பரலோக அரசாங்கத்தின், பாகமாய் ஆகப்போகிறார்கள். கடவுளுடைய ஆரம்ப நோக்கத்தின்படியே மனிதகுலத்தைத் திரும்பவும் பரிபூரண நிலைமைக்குக் கொண்டுவரப்போகிறார்கள்.—ஏசாயா 65:17; 2 பேதுரு 3:13.

எத்தனை பேர் பரலோகத்திற்கு உயிர்த்தெழுப்பப்படுவார்கள்?

 1,44,000 பேர் பரலோக வாழ்க்கைக்கு உயிர்த்தெழுப்பப்படுவார்கள் என்று பைபிள் சுட்டிக்காட்டுகிறது. (வெளிப்படுத்துதல் 7:4) அப்போஸ்தலன் யோவான் பார்த்த ஒரு தரிசனத்தில், “சீயோன் மலைமீது ஆட்டுக்குட்டியானவர் நின்றுகொண்டிருந்தார்; . . . 1,44,000 பேர் அவரோடு நின்றுகொண்டிருந்தார்கள்.” இந்தத் தரிசனம், வெளிப்படுத்துதல் 14:1-3-ல் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இங்கே “ஆட்டுக்குட்டியானவர்” என்ற வார்த்தை உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசுவைக் குறிக்கிறது. (யோவான் 1:29; 1 பேதுரு 1:19) “சீயோன் மலை” என்பது இயேசு மற்றும் அவரோடு பரலோகத்தில் ஆட்சி செய்கிற 1,44,000 பேரின் மேன்மையான நிலையைக் குறிக்கிறது.—சங்கீதம் 2:6; எபிரெயர் 12:22.

 பரலோக அரசாங்கத்தில் கிறிஸ்துவோடு ஆட்சிசெய்வதற்காக “அழைக்கப்பட்ட,” “தேர்ந்தெடுக்கப்பட்ட” ஆட்கள் “சிறுமந்தை” என்று அழைக்கப்படுகிறார்கள். (வெளிப்படுத்துதல் 17:14; லூக்கா 12:32) “சிறுமந்தை” என்ற வார்த்தை, இயேசுவுடைய ஆடுகளின் முழு எண்ணிக்கையோடு ஒப்பிட அவர்கள் குறைவாகவே இருப்பார்கள் என்பதைக் காட்டுகிறது.—யோவான் 10:16.

பரலோகத்திற்குப் போகிறவர்களைப் பற்றிய தவறான கருத்துகள்

 தவறான கருத்து: நல்லவர்கள் எல்லாருமே பரலோகத்திற்குப் போகிறார்கள்.

 உண்மை: நல்லவர்கள் ஏராளமானோருக்கு பூமியில் முடிவில்லாத வாழ்வைத் தரப்போவதாகக் கடவுள் வாக்குக் கொடுத்திருக்கிறார்.—சங்கீதம் 37:11, 29, 34.

  •   “எந்த மனுஷனும் பரலோகத்துக்கு ஏறிப் போனதில்லை” என்று இயேசு சொன்னார். (யோவான் 3:13) தனக்கு முன்பாக இறந்துபோன ஆபிரகாம், மோசே, யோபு, தாவீது போன்ற எத்தனையோ நல்லவர்கள் பரலோகத்திற்குப் போகவில்லை என்பதை இயேசு இங்கே தெளிவாக எடுத்துக்காட்டினார். (அப்போஸ்தலர் 2:29, 34) பூமியில் உயிர்த்தெழுப்பப்படுகிற நம்பிக்கைதான் அவர்களுக்கு இருந்தது.—யோபு 14:13-15.

  •   பரலோக உயிர்த்தெழுதல் ‘முதலாம் உயிர்த்தெழுதல்’ என்று அழைக்கப்படுகிறது. (வெளிப்படுத்துதல் 20:6) அப்படியானால், அடுத்து இன்னொரு உயிர்த்தெழுதல் இருக்கிறதென்று அர்த்தம். அது பூமிக்குரிய உயிர்த்தெழுதல்.

  •   கடவுளுடைய ஆட்சியின் கீழ், “இனிமேல் மரணம் இருக்காது” என்று பைபிள் சொல்கிறது. (வெளிப்படுத்துதல் 21:3, 4) இந்த வாக்குறுதி பூமிக்குத்தான் பொருந்தும், ஏனென்றால் பரலோகத்தில் மரணம் எப்போதுமே இருந்ததில்லை.

 தவறான கருத்து: முடிவில்லாத வாழ்க்கை பரலோகத்தில் வேண்டுமா அல்லது பூமியில் வேண்டுமா என்பதை ஒவ்வொரு நபரும் அவராகவே தீர்மானிக்கிறார்.

 உண்மை: “பரலோக அழைப்பு என்ற பரிசை,” அதாவது பரலோக வாழ்க்கைக்கான நம்பிக்கையை யார் பெறுவார்கள் என்பதைக் கடவுள்தான் தீர்மானிக்கிறார். (பிலிப்பியர் 3:14) ஒரு நபருடைய தனிப்பட்ட விருப்பத்தையோ லட்சியத்தையோ வைத்து அந்த நபர் பரலோக வாழ்க்கைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை.—மத்தேயு 20:20-23.

 தவறான கருத்து: பூமியில் முடிவில்லாத வாழ்வு என்ற நம்பிக்கை இரண்டாம் ரக நம்பிக்கையாகும், பரலோகத்திற்குப் போக தகுதியில்லாத ஆட்களுக்கு அது கொடுக்கப்படுகிறது.

 உண்மை: பூமியில் முடிவில்லாத வாழ்வைப் பெறப்போகிறவர்களைக் கடவுள், ‘என் ஜனங்கள்,’ என்றும், “நான் தேர்ந்தெடுத்த ஜனங்கள்” என்றும், ‘யெகோவாவின் ஆசீர்வாதத்தைப் பெற்ற ஜனங்கள்’ என்றும் அழைக்கிறார். (ஏசாயா 65:21-23) பூஞ்சோலை பூமியில் மனிதர்கள் என்றென்றும் வாழ வேண்டுமென்ற கடவுளுடைய ஆரம்ப நோக்கத்தை நிறைவேற்றுகிற பாக்கியத்தை அவர்கள் பெறுவார்கள்.—ஆதியாகமம் 1:28; சங்கீதம் 115:16; ஏசாயா 45:18.

 தவறான கருத்து: 1,44,000 என்று வெளிப்படுத்துதல் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணிக்கை அடையாளப்பூர்வமானது, நிஜமானது அல்ல.

 உண்மை: வெளிப்படுத்துதலில் அடையாளப்பூர்வ எண்கள் கொடுக்கப்பட்டிருந்தாலும், நிஜ எண்ணிக்கையிலும் சில எண்கள் உள்ளன. உதாரணத்திற்கு, “ஆட்டுக்குட்டியானவரின் 12 அப்போஸ்தலர்களுடைய 12 பெயர்கள்” பற்றி அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. (வெளிப்படுத்துதல் 21:14) இங்கே 12 என்பது நிஜமான எண்ணாக இருப்பது போலவே 1,44,000 என்ற எண்ணிக்கையும் நிஜமானதுதான்; இதற்கான அத்தாட்சியைக் கவனியுங்கள்.

 “முத்திரை போடப்பட்டவர்களின் [அதாவது, பரலோக வாழ்வுக்கான உத்தரவாதத்தைப் பெற்றவர்களின்] எண்ணிக்கை . . . 1,44,000” என்று வெளிப்படுத்துதல் 7:4 சொல்கிறது. இந்த வசனத்தின் சூழமைவு இரண்டாவது வகுப்பாரைப் பற்றியும் சொல்கிறது, அதாவது ‘எந்த மனிதனாலும் எண்ண முடியாத திரள் கூட்டமான ஜனங்களை’ பற்றிச் சொல்கிறது. அந்த ‘திரள் கூட்டமான ஜனங்களும்’ கடவுளிடமிருந்து மீட்புப் பெறுகிறார்கள். (வெளிப்படுத்துதல் 7:9, 10) 1,44,000 என்ற எண்ணிக்கை அடையாளப்பூர்வமானது என்றால், அதாவது குறிப்பிட்ட எண்ணிக்கை இல்லாத ஒரு தொகுதி என்றால், இரண்டு வகுப்பாருக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லாமல் போய்விடும். a

 மற்றொரு விஷயம்: 1,44,000 பேர் “முதல் விளைச்சலாக மனிதகுலத்திலிருந்து விலைகொடுத்து வாங்கப்பட்டவர்கள்” என்று விவரிக்கப்படுகிறார்கள். (வெளிப்படுத்துதல் 14:4) ‘முதல் விளைச்சல்’ என்பது முழு விளைச்சலைப் பிரதிநிதித்துவம் செய்கிற ஒரு சிறிய பங்கைக் குறிக்கிறது. பூமியில் கணக்கிட முடியாத எண்ணிக்கையிலுள்ள மக்கள்மீது பரலோகத்திலிருந்து கிறிஸ்துவோடு ஆட்சிசெய்யப்போகிற குறைந்த எண்ணிக்கையினரை இந்த வார்த்தை மிகச் சரியாகவே விவரிக்கிறது.—வெளிப்படுத்துதல் 5:10.

a வெளிப்படுத்துதல் 7:4-ல் சொல்லப்பட்டுள்ள 1,44,000 என்ற எண்ணிக்கையைப் பற்றி பேராசிரியர் ராபர்ட் எல். தாமஸ் இப்படி எழுதினார்: “இது ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை; 7:9-ல் கொடுக்கப்பட்டுள்ள கணக்கிட முடியாத எண்ணிக்கையுடன் இது வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை அடையாளப்பூர்வமானது என்று சொன்னால், இந்தப் புத்தகத்திலுள்ள வேறெந்த எண்ணிக்கையையும் நிஜமானதாக எடுத்துக்கொள்ள முடியாது.”—வெளிப்படுத்துதல் 1-7: ஆன் எக்ஸிஜெட்டிகல் கமென்ட்ரி, பக்கம் 474.