Skip to content

பைபிள் வசனங்களின் விளக்கம்

ஏசாயா 42:8—“நான் கர்த்தர்”

ஏசாயா 42:8—“நான் கர்த்தர்”

 “நான் யெகோவா. அதுதான் என்னுடைய பெயர். என்னுடைய மகிமையை யாருக்கும் கொடுக்க மாட்டேன். என்னுடைய புகழை எந்தச் சிலைக்கும் கொடுக்க மாட்டேன்.”—ஏசாயா 42:8, புதிய உலக மொழிபெயர்ப்பு.

 “நான் கர்த்தர், இது என் நாமம்; என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன்.”—ஏசாயா 42:8, பரிசுத்த வேதாகமம்—தமிழ் O.V. பைபிள்.

ஏசாயா 42:8-ன் அர்த்தம்

 கடவுள் தன்னுடைய சொந்தப் பெயரை நம்மிடம் சொல்கிறார். அதோடு, சிலைகளை வைத்து தன்னை வழிபடக் கூடாது என்றும் சொல்கிறார்.

 கடவுள் தனக்கே இந்தப் பெயரை வைத்துக்கொண்டார். தமிழில் இந்தப் பெயர் பொதுவாக “யெகோவா” என்று மொழிபெயர்க்கப்படுகிறது. a (யாத்திராகமம் 3:14, 15) பழைய ஏற்பாட்டில் (எபிரெய-அரமெயிக் வேதாகமம்) இந்தப் புனிதமான பெயர் கிட்டத்தட்ட 7,000 தடவை இருந்தாலும் நிறைய மொழிபெயர்ப்புகள் அந்தப் பெயருக்குப் பதிலாக “கர்த்தர்” என்ற பதவிப்பெயரைத் தடித்த எழுத்துக்களில் போட்டிருக்கிறார்கள். உதாரணத்துக்கு, சங்கீதம் 110:1-ஐ பார்க்கலாம். இதில் யெகோவாவையும் இயேசுவையும் பற்றி சொல்லியிருக்கிறது. பரிசுத்த வேதாகமம்—தமிழ் O.V. பைபிளில் “கர்த்தர் [யெகோவா] என் ஆண்டவரை [இயேசுவை] நோக்கி” என்று இந்த வசனம் மொழிபெயர்க்கப்பட்டு இருக்கிறது. (அப்போஸ்தலர் 2:34-36) இந்த வசனத்தைப் படிக்கும்போது கர்த்தர் என்பது யாரை குறிக்கிறது என்றும் ஆண்டவர் என்பது யாரை குறிக்கிறது என்றும் நமக்குப் புரியவில்லை. ஆனால், இந்தக் குழப்பம் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளில் இல்லை. “யெகோவா என் எஜமானிடம், ‘நான் உன் எதிரிகளை உனக்குக் கால்மணையாக்கிப் போடும்வரை என் வலது பக்கத்தில் உட்கார்ந்திரு’ என்றார்” என்று அதில் போடப்பட்டிருக்கிறது. இப்படி, கடவுளுடைய பெயர் எங்கெல்லாம் இருக்க வேண்டுமோ அங்கெல்லாம் போடப்பட்டதால் தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது.

 “ஆகும்படி செய்பவர்” என்பதுதான் கடவுளுடைய பெயரின் அர்த்தம் என்று நிறைய அறிஞர்கள் நம்புகிறார்கள். இந்தப் பெயர் உண்மை கடவுளுக்கு மட்டும்தான் பொருந்தும். ஏனென்றால், இவரால் மட்டும்தான் தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்ற ஒவ்வொரு சூழ்நிலையிலும் எப்படியெல்லாம் ஆக வேண்டுமோ, அப்படியெல்லாம் ஆக முடியும். அதோடு, தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகத் தன்னுடைய படைப்புகள் எப்படியெல்லாம் ஆக வேண்டுமோ அப்படியெல்லாம் ஆக வைக்க முடியும்.

 யெகோவாதான் நம்முடைய படைப்பாளர். அவர்தான் ஒரே உண்மை கடவுள். அதனால், அவருக்கு மட்டும்தான் முழு பக்தியைக் கொடுக்க வேண்டும். வேறு யாருக்கும் வேறு எதற்கும் கொடுக்க கூடாது. இது சிலைகளையும் உருவங்களையும்கூட குறிக்கிறது.—யாத்திராகமம் 20:2-6; 34:14; 1 யோவான் 5:21.

ஏசாயா 42:8-ன் பின்னணி

 ஏசாயா 42-வது அதிகாரத்தின் ஆரம்ப வசனங்களில், தான் ‘தேர்ந்தெடுத்தவர்’ செய்யப்போகிற வேலையைப் பற்றி யெகோவா சொல்கிறார். தன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் “எல்லா தேசத்து ஜனங்களுக்கும் . . . நியாயம் செய்வார்” என்று கடவுள் வாக்குக் கொடுத்தார். (ஏசாயா 42:1) அதைப் பற்றி “இப்போது புதிய விஷயங்களைச் சொல்லப்போகிறேன். அதெல்லாம் நடப்பதற்கு முன்பே உங்களிடம் சொல்கிறேன்” என்று அவர் சொன்னார். (ஏசாயா 42:9) ‘தேர்ந்தெடுக்கப்பட்டவர்’ பற்றிய இந்த விஷயம் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு உண்மையானது. அதாவது கிறிஸ்து இந்தப் பூமிக்கு வந்து ஊழியம் செய்தபோது அது நிறைவேறியது.—மத்தேயு 3:16, 17; 12:15-21.

ஏசாயா 42:8-ன் வேறு மொழிபெயர்ப்பு

 ”நானே கர்த்தர்! எனது நாமம் யேகோவா! நான் எனது மகிமையை வேறு ஒருவனுக்கும் கொடேன். நான் எனக்குரிய பாராட்டை சிலைகளுக்கு (பொய்த் தெய்வங்களுக்கு) கொடேன்.”—ஈஸி டு ரீட் வர்ஷன்.

a எபிரெய மொழியில் கடவுளுடைய பெயரை நான்கு மெய்யெழுத்துக்களில் எழுதினார்கள். இது பொதுவாக தமிழில் ய்ஹ்வ்ஹ் என்று எழுதப்படுகிறது. சில தமிழ் மொழிபெயர்ப்புகளில் கடவுளுடைய பெயர் “யேகோவா” என்று இருக்கிறது. இதைப் பற்றி இன்னும் தெரிந்துகொள்ள பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு ஆராய்ச்சி பதிப்பில் இருக்கிற “எபிரெய வேதாகமத்தில் கடவுளுடைய பெயர்” என்ற அட்டவணை A4-ஐ பாருங்கள்.