Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“பாதுகாப்பில்லை” என்று பயமா?

“பாதுகாப்பில்லை” என்று பயமா?

பிறந்த குழந்தையால் தானாக எதுவுமே செய்ய முடியாது. நாமும் குழந்தையாக இருந்தபோது, அப்பா-அம்மாவுடைய கைக்குள் ரொம்ப பாதுகாப்பாக இருந்திருப்போம். நடக்க ஆரம்பித்தபோது, பெரியவர்கள் எல்லாம் பார்ப்பதற்கு ராட்சதர்கள் போல பெரிய உருவமாக தெரிந்திருப்பார்கள். யாரையாவது பார்த்து நமக்கு பயமாக இருந்தால், உடனே அப்பா-அம்மாவிடம் ஓடி ஒளிந்துகொள்வோம். அவர்களுடைய கைகளை பிடித்துக்கொண்டு இருந்தபோது நமக்கு எந்த பயமும் இருந்திருக்காது.

குழந்தைகளாக இருந்தபோது, அப்பா-அம்மா நம்மை நன்றாக கவனித்துக் கொண்டார்கள்... அன்பையும் பாசத்தையும் காட்டினார்கள்... நம்மை பாராட்டினார்கள். அவர்களுடைய அன்பை புரிந்துகொண்டபோது, நாம் ரொம்ப பாதுகாப்பாக உணர்ந்திருப்போம். அவர்கள் நம்மை பாராட்டியது நமக்கு தன்னம்பிக்கையை கொடுத்திருக்கும். “இன்னும் நல்லா செய்யணும்” என்றும் நினைத்திருப்போம்.

பள்ளிக்குப் போனபோது, நம்மோடு நண்பர்கள் இருந்ததால் இன்னும் பாதுகாப்பாக உணர்ந்திருப்போம், பயமில்லாமல் சந்தோஷமாக இருந்திருப்போம்.

ஆனால், எல்லா குழந்தைகளும் இப்படி பாதுகாப்பாக உணர்ந்திருப்பார்கள் என்று சொல்ல முடியாது. சில இளைஞர்களுக்கு நண்பர்களே இல்லை. அப்பா-அம்மாவின் அன்பும் ஆதரவும்கூட நிறைய பிள்ளைகளுக்கு கிடைப்பதில்லை. “மத்தவங்க குடும்பமா ஒற்றுமையா எடுத்துக்கிட்ட ஃபோட்டோவ பார்க்கும்போதெல்லாம் என் மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும். நான் சின்ன பிள்ளையா இருந்தப்போ எங்க குடும்பமும் இப்படி இருந்திருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும்?” என்று ஏங்கியதாக பிரியா சொல்கிறார். * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) ஒருவேளை, நீங்களும்கூட அப்படி உணர்ந்திருக்கலாம்.

பாதுகாப்பான சூழலில் பிள்ளைகள் வளராதபோது...

சிறுவயதில் உங்களுடைய தன்னம்பிக்கையை ஒருவேளை நீங்கள் இழந்திருக்கலாம். அப்பா-அம்மாவின் அன்பும் பாராட்டும் உங்களுக்கு கிடைக்காமல் போயிருக்கலாம். அப்பா-அம்மா அடிக்கடி சண்டை போட்டு கடைசியில் அவர்கள் பிரிந்து போயிருக்கலாம். அதுக்கு காரணம் நீங்கள்தான் என்று ஒருவேளை நீங்கள் தவறாக நினைத்துக்கொண்டிருக்கலாம், அல்லது அப்பாவோ அம்மாவோ உங்களை மோசமாக நடத்தியிருக்கலாம் அல்லது அடித்துக் கொடுமைப்படுத்தியிருக்கலாம்.

பாதுகாப்பான சூழலில் வளராத சில டீனேஜ் பிள்ளைகள் அதிகமாக குடிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள், அல்லது போதை மருந்துகளை பயன்படுத்துகிறார்கள். சிலர் ரவுடி கும்பல்களோடு சேர்ந்துகொள்கிறார்கள். அதுதான் அவர்களுக்கு பாதுகாப்பு என்று நினைக்கிறார்கள். இன்னும் சில டீனேஜ் பிள்ளைகள் அன்புக்காக ஏங்கிப்போய், காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். ஆனால், ‘டீனேஜ் காதல்’ நிறைய சமயம் தோல்வியில்தான் முடிகிறது. அதனால், வாழ்க்கை இன்னும் சோகமாகிவிடுகிறது. தங்களுக்கு பாதுகாப்பில்லை என்ற பயம் அவர்களுக்கு இன்னும் அதிகமாகிவிடுகிறது.

சில டீனேஜ் பிள்ளைகள் இதுபோன்ற ஆபத்துகளில் சிக்கிக்கொள்ளாமல் இருக்கலாம். ஆனால், நாட்கள் செல்ல செல்ல அவர்கள் ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்று நினைக்க ஆரம்பித்து விடலாம். “நான் எதுக்குமே லாயக்கில்லாதவனு என்னோட அம்மா அடிக்கடி திட்டுவாங்க. அதனால, எதையுமே சரியா செய்ய முடியாதுனு நானும் என்னைப் பத்தி தப்பா நினைக்க ஆரம்பிச்சிட்டேன். அவங்க என்னை பாராட்டுனதாவோ பாசம் காட்டுனதாவோ எனக்கு சுத்தமா ஞாபகம் இல்லை” என்று சொல்கிறார் சந்தியா.

நாம் இப்படி உணர்வதற்கு காரணம் வளர்ந்த விதம் மட்டுமல்ல. ஒருவேளை, கணவன் அல்லது மனைவி நம்மை விட்டுப் பிரிந்து போகும்போதோ வயதாவதால் கஷ்டப்படும்போதோ ‘நமக்கு உதவ யாருமே இல்லை’ என்ற எண்ணம் நம்மை வாட்டி எடுக்கலாம். சிலர், “நான் பார்ப்பதற்கு அழகா இல்லையே” என்று தங்களையே தாழ்வாக நினைக்கலாம். எது எப்படி இருந்தாலும், நமக்கு பாதுகாப்பு இல்லை, நம்மால் எதுவுமே செய்ய முடியாது என்று நினைத்துக் கொண்டிருந்தால் நம் சந்தோஷத்தை இழந்துவிடுவோம். மற்றவர்களோடு நமக்கு இருக்கும் நட்பையும் அது கெடுத்துவிடும். அப்படியென்றால், அந்த மாதிரி எண்ணங்கள் வராமல் இருக்க நாம் என்ன செய்யலாம் என்று இப்போது பார்க்கலாம்.

கடவுள் நமக்கு உதவி செய்ய தயாராக இருக்கிறார்

நமக்கு உதவி செய்ய யாருமே இல்லை என்று நினைக்க வேண்டாம். கடவுள் நிச்சயம் நமக்கு உதவி செய்வார். அப்படி செய்வதற்கு அவர் ஆசையாக இருக்கிறார்.

ஏசாயா என்ற தீர்க்கதரிசி மூலம் கடவுள் நமக்கு ஒரு ஆறுதலான விஷயத்தை சொல்கிறார்: “நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.” (ஏசாயா 41:10,13) கடவுள் நம்முடைய கையை பிடித்து நம்மை வழிநடத்துவதாக சொல்கிறார். இதை கேட்பதற்கே எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது! அதனால், எதற்குமே கவலைப்படாதீர்கள்!

பைபிள் காலங்களில் வாழ்ந்த சிலரும் ஆரம்பத்தில் கவலையோடு இருந்தார்கள். பிறகு, கடவுளுடைய கையைப் பிடித்து நடக்க கற்றுக்கொண்டார்கள். உதாரணமாக, சாமுவேலுடைய அம்மா அன்னாள், தனக்கு குழந்தை இல்லாததை நினைத்து கவலைப்பட்டார். நிறைய பேர் அவரை கிண்டல் செய்தார்கள். அதனால், சாப்பிடாமல் ரொம்ப நாள் அழுதுகொண்டே இருந்தார். (1 சாமுவேல் 1:6, 8) ஆனால், கடவுளிடம் அவருடைய பிரச்சினைகள் எல்லாவற்றையும் கொட்டித் தீர்த்த பிறகு நிம்மதியாக இருந்தார்.—1 சாமுவேல் 1:18.

பைபிளில் நிறைய பாடல்களை எழுதிய தாவீதுகூட, சிலசமயம் என்ன செய்வதென்றே தெரியாமல் பயந்துபோயிருந்தார். சவுல் என்ற ராஜா பல வருஷங்களாக தாவீதை கொல்ல துடியாய் துடித்துக் கொண்டிருந்தார். சவுலுடைய கையில் சிக்கவில்லை என்றாலும், தான் பிரச்சினையில் மூழ்கிக்கொண்டிருப்பதாக தாவீது நினைத்தார். (சங்கீதம் 55:3-5; 69:1) இருந்தாலும், அவர் கடவுள் மேல் நம்பிக்கை வைத்தார். “சமாதானத்தோடே படுத்துக்கொண்டு நித்திரை செய்வேன்; கர்த்தாவே, நீர் ஒருவரே என்னைச் சுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர்” என்று சொன்னார்.—சங்கீதம் 4:8.

அன்னாளும், தாவீதும் அவர்களுடைய கவலைகளை கடவுளான யெகோவாவிடம் கொட்டினார்கள். அவரும் அவர்களுக்கு உதவி செய்தார். (சங்கீதம் 55:22) அதேபோல, உங்களுக்கும் உதவி வேண்டுமா?

“பாதுகாப்பில்லை” என்ற பயத்தை சமாளிக்க 3 வழிகள்

1. யெகோவாவை நம்புவதற்கு கற்றுக்கொள்ளுங்கள்.

யெகோவாதான் ‘ஒரே உண்மையான கடவுள்’ என்றும் அவர்தான் தன்னுடைய அப்பா என்றும் இயேசு சொன்னார். நாம் அவரைப் பற்றி கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் சொன்னார். (யோவான் 17:3) ‘அவர் நம் ஒருவருக்கும் தூரமானவராக இல்லை’ என்று இயேசுவின் சீடரான பவுல் சொன்னார். (அப்போஸ்தலர் 17:27) “கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அப்போது அவர் உங்களிடம் நெருங்கி வருவார்” என்று யாக்கோபு எழுதினார்.—யாக்கோபு 4:8.

நம்மை அன்பாகவும் பாசமாகவும் பார்த்துக்கொள்ள ஒரு அப்பா இருக்கிறார் என்பதை நாம் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். கவலைகளை சமாளிக்க இது ரொம்ப உதவியாக இருக்கும். யெகோவாவை ஒரு அப்பாவாக ஏற்றுக்கொள்வதற்கும் அவரை நம்புவதற்கும் கொஞ்சம் காலம் எடுக்கலாம். ஆனால், அப்படி ஏற்றுக்கொள்வதுதான் நமக்கு பாதுகாப்பு. நிறைய பேர் அப்படி செய்திருக்கிறார்கள். “யெகோவாவை என்னோட அப்பாவா ஏத்துக்கிட்டப்போ, என் மனசுல இருக்கிறதை எல்லாம் புரிஞ்சுக்கிறதுக்கு ஒருத்தர் இருக்காருனு தெரிஞ்சுக்கிட்டேன். அது என் மனசுக்கு ஆறுதலா இருந்துச்சு” என்று சொல்கிறார் சூசன்.

“என் அப்பா-அம்மா என்னைவிட்டு பிரிஞ்சு போனப்போ, யெகோவாதான் எனக்கு துணையா இருந்தாரு. என்னோட பிரச்சினைய எல்லாம் சரிசெய்யுங்கனு அவர்கிட்ட வேண்டினேன். அவர் எனக்கு உதவி செஞ்சாரு” என்று ரேச்சல் சொல்கிறார். * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)

2. கடவுளுக்கு பிரியமாக வாழும் குடும்பத்தை கண்டுபிடியுங்கள்.

இயேசு அவருடைய சீடர்களை அண்ணன்-தம்பி, அக்கா-தங்கை போல பழகச் சொன்னார். அதனால்தான், “நீங்கள் எல்லாரும் சகோதரர்களாக இருக்கிறீர்கள்” என்று சொன்னார். (மத்தேயு 23:8) தன்னுடைய சீடர்கள் எல்லாரும் அன்பாக இருக்க வேண்டும், ஒரு குடும்பம் போல் இருக்க வேண்டும் என்று இயேசு சொன்னார்.—மத்தேயு 12:48-50; யோவான் 13:35.

யெகோவாவின் சாட்சிகளும் ஒரு குடும்பம் போல்தான் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாரும் அன்பாக நடந்துகொள்ள நிறைய முயற்சி எடுக்கிறார்கள். (எபிரெயர் 10:24, 25) அவர்கள் நடத்தும் சபைக் கூட்டங்கள் காயங்களுக்கு மருந்து போடுவதுபோல் இருந்தது என்று அதில் கலந்துகொண்ட நிறைய பேர் சொல்கிறார்கள். மனதுக்கு சந்தோஷமாக இருந்ததாகவும் சொல்கிறார்கள்.

“சபையில எனக்கு ஒரு பெஸ்ட் ஃப்ரெண்டு இருந்தாங்க, என்னோட கஷ்டம் எல்லாத்தையும் அவங்க புரிஞ்சுக்குவாங்க. என் பிரச்சினைய சொல்லும்போது கவனமா கேட்பாங்க, பைபிளை படிச்சு காட்டுவாங்க, என்னோட சேர்ந்து ஜெபம் செய்வாங்க. நான் தனியா இல்லங்கிறத அடிக்கடி சொல்வாங்க. என்னோட கஷ்டத்தை மறக்கிறதுக்கு ஏத்த மாதிரி நல்ல விஷயங்களை பேசுவாங்க. அவங்க எனக்கு உதவி செஞ்சதுனாலதான் பாதுகாப்பில்லைங்கிற பயத்தை நான் சமாளிக்க முடிஞ்சுது,” என்று சொல்கிறார் திவ்யா. யெகோவாவின் சாட்சிகளுடைய சபைக் கூட்டங்களுக்கு போனதால், அங்கு தனக்கு ஒரு நல்ல ‘அப்பா அம்மா’ கிடைத்ததாக ரேச்சல் சொல்கிறார். அதோடு, அவர்கள் தன்மீது ரொம்ப அன்பையும் பாசத்தையும் காட்டுவதாகவும், தான் ஒரு குடும்பத்தில் இருப்பதுபோல இப்போது உணருவதாகவும் ரேச்சல் சொல்கிறார்.

3. மற்றவர்களுக்கு அன்பு காட்டுங்கள், உதவுங்கள்.

மற்றவர்களுக்கு அன்பையும் பாசத்தையும் காட்டும்போதும், அவர்களுக்கு உதவி செய்யும்போதும் நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். “பெற்றுக்கொள்வதைவிடக் கொடுப்பதிலேயே அதிகச் சந்தோஷம் இருக்கிறது,” என்று இயேசு சொன்னார். (அப்போஸ்தலர் 20:35) எந்தளவுக்கு நாம் மற்றவர்கள்மீது அன்பு காட்டுகிறோமோ அந்தளவுக்கு மற்றவர்களும் நம்மீது அன்பு காட்டுவார்கள். இயேசு தன் சீடர்களிடம் இப்படி சொன்னார்: “கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்.”—லூக்கா 6:38.

மற்றவர்கள்மீது நாம் அன்பு காட்டும்போதும், மற்றவர்கள் நம்மீது அன்பு காட்டும்போதும் ‘பாதுகாப்பாக இருக்கிறோம்’ என்ற எண்ணம் நமக்கு வரும். “அன்பு ஒருபோதும் ஒழியாது” என்று பைபிள் சொல்கிறது. (1 கொரிந்தியர் 13:8) “மத்தவங்களுக்கு உதவி செய்றதுல நான் என்னையே மறந்திடுவேன். இப்படி செஞ்சதால, என்மேல எனக்கிருந்த தப்பான எண்ணம் எல்லாம் போயிடுச்சு. மத்தவங்களுக்கு உதவி செய்யும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமாவும் திருப்தியாவும் இருக்கும்” என்று அனிதா சொல்கிறார்.

பாதுகாப்பான வாழ்க்கை–சீக்கிரத்தில்!

இங்கு சொல்லியிருக்கிறபடி செய்தால் பிரச்சினைகள் உடனே பஞ்சாய்ப் பறந்துவிடும் என்று நினைக்க வேண்டாம். ஆனால், இது உங்கள் வாழ்க்கையில் நிச்சயம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். “நான் பாதுகாப்பா இல்லங்கிற எண்ணம் எனக்கு இப்பவும் வரும்தான். ஆனா இப்பவெல்லாம், முன்னாடி இருந்த அளவுக்கு என்னைப் பத்தி நான் தப்பா நினைக்கிறதில்ல. கடவுள் என்னை பார்த்துக்குவாருன்னு நம்பிக்கை இருக்கு. என்கூட நிறைய நண்பர்கள் இருக்கிறாங்க. அவங்ககூட இருக்கும்போது பாதுகாப்பில்லைங்கிற பயம் எனக்கு வர்றதில்லை” என்று சூசன் சொல்கிறார். ரேச்சலும் அதேபோலதான் உணர்கிறார். “அடிக்கடி நான் ரொம்ப சோகமாயிடுவேன், ஆனா யெகோவாவை வணங்குற நல்ல நண்பர்கள் சிலர் எனக்கு ஆலோசனை சொல்வாங்க. வாழ்க்கையில நொந்துபோயிடாம இருக்க எனக்கு உதவி செஞ்சாங்க. எல்லாத்தையும்விட யெகோவா அப்பாகிட்ட நான் தினமும் பேசுறேன். அதைவிட சந்தோஷம் வேற எதுவும் இருக்க முடியாது” என்று ரேச்சல் சொல்கிறார்.

எதிர்காலத்தில் இந்தப் பூமி முழுவதும் ஒரு அழகிய தோட்டமாக மாறப்போகிறது. அதில் நாம் எல்லாருமே பாதுகாப்பாக வாழ்வோம்

சீக்கிரத்தில், இந்த எல்லா பிரச்சினைகளும் நிரந்தரமாக சரியாகப் போகிறது! இந்த முழு பூமியும் ஒரு அழகிய தோட்டமாக மாறப்போகிறது. அதில் நாம் எல்லாரும் எந்த பயமும் இல்லாமல் பாதுகாப்பாக இருப்போம். “அவனவன் தன்தன் திராட்சச் செடியின் நிழலிலும், தன்தன் அத்திமரத்தின் நிழலிலும் பயப்படுத்துவார் இல்லாமல் உட்காருவான்” என்று கடவுள் சொல்கிறார். (மீகா 4:4) அந்த சமயத்தில், நாம் ரொம்ப பாதுகாப்பாய் உணர்வோம். நமக்கு எந்த ஆபத்தும் இருக்காது. இன்று நம்மால் மறக்க முடியாத சோகங்கள் கூட, சீக்கிரத்தில் நம் மனதில் இருந்து மறைந்துவிடும். அவை, “இனி நினைக்கப்படுவதுமில்லை” என்று பைபிள் சொல்கிறது. (ஏசாயா 65:17, 25) கடவுளும் அவருடைய மகன் இயேசு கிறிஸ்துவும், இந்தப் பூமியை நல்லவர்கள் வாழும் இடமாக மாற்றுவார்கள். அப்போது நாம் “சமாதானத்தையும் பாதுகாப்பையும்” அனுபவிப்போம்.—ஏசாயா 32:17, ஈஸி டு ரீட் வர்ஷன். ▪ (w16-E No.1)

^ பாரா. 5 பெயர்கள் மாற்றப்பட்டிருக்கிறது.

^ பாரா. 21 கடவுளைப் பற்றி நன்றாக தெரிந்துகொள்ள விரும்புகிறவர்களுக்கு, யெகோவாவின் சாட்சிகள் இலவசமாக பைபிளைப் பற்றி சொல்லிக் கொடுக்கிறார்கள்.