Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளைப் பற்றித் தெரிந்துகொண்டு அவருடைய நண்பராகுங்கள்

கடவுளைப் பற்றித் தெரிந்துகொண்டு அவருடைய நண்பராகுங்கள்

நம் கடவுளுக்கு அதிக சக்தி இருப்பதோடு அருமையான நல்ல குணங்களும் இருக்கின்றன. நாம் அவரைப் பற்றித் தெரிந்துகொண்டு அவருடைய நண்பராக வேண்டுமென்று அவர் ஆசைப்படுகிறார். (யோவான் 17:3; யாக்கோபு 4:8) அதனால்தான், அவரைப் பற்றிய நிறைய விஷயங்களை நமக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார்.

நம் கடவுளுக்கு ஒரு பெயர் இருக்கிறது

“யெகோவா என்ற பெயருள்ள நீங்கள் ஒருவர்தான், இந்தப் பூமி முழுவதையும் ஆளுகிற உன்னதமான கடவுள் என்று மக்கள் புரிந்துகொள்ளட்டும்.”​—சங்கீதம் 83:18.

யெகோவாதான் ஒரே உண்மையான கடவுள் என்று பைபிள் சொல்கிறது. இந்தப் பிரபஞ்சத்தையும் உயிரினங்கள் எல்லாவற்றையும் படைத்தவர் அவர்தான். நம்முடைய வணக்கத்தைப் பெற்றுக்கொள்வதற்கான தகுதி அவருக்குதான் இருக்கிறது.—வெளிப்படுத்துதல் 4:11.

யெகோவா ஒரு அன்பான கடவுள்

“கடவுள் அன்பாகவே இருக்கிறார்.”​—1 யோவான் 4:8.

யெகோவா எப்படிப்பட்டவர் என்பதை பைபிளைப் படித்தும், நம்மைச் சுற்றியிருக்கிற அவருடைய படைப்புகளைப் பார்த்தும் தெரிந்துகொள்ள முடியும். அன்புதான் அவருடைய தலைசிறந்த குணம்! இதை வைத்தே அவர் எப்படிப்பட்டவர் என்று சொல்ல முடியும். யெகோவாவைப் பற்றி நாம் எந்தளவுக்குத் தெரிந்துகொள்கிறோமோ அந்தளவுக்கு அவர்மேல் நமக்கு அன்பு அதிகமாகும்.

யெகோவா மன்னிக்கிற கடவுள்

“கடவுளே, நீங்கள் மன்னிக்கத் தயாராக இருக்கிறவர்.”​—நெகேமியா 9:17, அடிக்குறிப்பு.

நாம் எல்லாருமே தவறு செய்கிறவர்கள் என்று யெகோவாவுக்கு நன்றாகவே தெரியும். அதனால், அவர் நம்மை ‘மன்னிக்கத் தயாராக இருக்கிறார்.’ நாம் செய்த தவறுக்காக அவரிடம் மன்னிப்பு கேட்டு, அந்தத் தவறைத் திரும்பவும் செய்யாமல் இருப்பதற்குக் கடினமாக முயற்சி செய்தோம் என்றால் அவர் நம்மை மன்னிப்பார். அந்தத் தவறுக்காக நம்மைத் தண்டிக்க மாட்டார்.—சங்கீதம் 103:12, 13.

நம் வேண்டுதலைக் கேட்க யெகோவா ஆசையாக இருக்கிறார்

யெகோவா தன்னை நோக்கிக் கூப்பிடுகிற எல்லாருடைய பக்கத்திலும் இருக்கிறார். . . . உதவிக்காக அவர்கள் கதறுவதைக் கேட்கிறார்.’​—சங்கீதம் 145:18, 19.

விசேஷச் சடங்குகளைச் செய்தோ உருவங்களை வைத்தோ தன்னை வழிபட வேண்டுமென்று யெகோவா எதிர்பார்ப்பதில்லை. அன்பான பெற்றோர், தங்களுடைய பிள்ளைகள் பேசுவதைக் காதுகொடுத்துக் கேட்பது போல யெகோவாவும் நம்முடைய வேண்டுதலைக் காதுகொடுத்துக் கேட்கிறார்.