Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மற்றவர்களோடு ஒத்துப்போவதற்கு உதவும் ஆலோசனைகள்

மற்றவர்களோடு ஒத்துப்போவதற்கு உதவும் ஆலோசனைகள்

வீட்டில், வேலை செய்கிற இடத்தில், நண்பர்களிடத்தில் எப்படி ஒத்துப்போகலாம் என்று கடவுள் நமக்குச் சொல்லித்தருகிறார். நிறைய பேருக்கு உதவியாக இருந்த சில ஆலோசனைகளை இப்போது பார்க்கலாம்.

மன்னிக்கத் தயாராக இருங்கள்

“ஒருவர்மேல் ஒருவருக்கு ஏதாவது மனக்குறை இருந்தால், தொடர்ந்து ஒருவரை ஒருவர் . . . தாராளமாக மன்னித்துக்கொண்டே இருங்கள்.”​—கொலோசெயர் 3:13.

நாம் எல்லாருமே தவறு செய்கிறவர்கள்தான். மற்றவர்களை நாம் புண்படுத்திவிடலாம், அல்லது மற்றவர்கள் நம்மைப் புண்படுத்திவிடலாம். எப்படியானாலும் சரி, மற்றவர்களை நாம் மன்னிக்க வேண்டும், மற்றவர்களும் நம்மை மன்னிக்க வேண்டும். ஒருவரை மனதார மன்னிக்கும்போது அவர்மேல் இருக்கும் கோபம் போய்விடும். அவருக்கு, “தீமைக்குத் தீமை” செய்யவோ அவர் செய்த தவறை அடிக்கடி குத்திக்காட்டவோ மாட்டோம். (ரோமர் 12:17) ஒருவேளை, நம்மை யாராவது ரொம்பவே புண்படுத்திவிட்டால்... நடந்ததை மறக்கவே முடியவில்லை என்றால்... என்ன செய்யலாம்? அவர் தனியாக இருக்கும்போது மரியாதையோடு அதைப் பற்றி பேசலாம். அப்போது யார்மேல் தவறு இருக்கிறது என்பதை நிரூபிப்பது நம் குறிக்கோளாக இருக்கக் கூடாது. அவரோடு சமாதானமாவதுதான் நம் குறிக்கோளாக இருக்க வேண்டும்.—ரோமர் 12:18.

பணிவாக, மரியாதையாக நடந்துகொள்ளுங்கள்

“மற்றவர்களை உங்களைவிட உயர்ந்தவர்களாகக் கருதுங்கள்.”​—பிலிப்பியர் 2:3.

நாம் பணிவாக, மரியாதையாக நடந்துகொள்ளும்போது மற்றவர்கள் நம்மோடு இருக்க வேண்டுமென்று ஆசைப்படுவார்கள். ஏனென்றால், நாம் அன்பாக, அக்கறையாக இருப்போம் என்றும், அவர்களைப் புண்படுத்தும் விதத்தில் நடந்துகொள்ள மாட்டோம் என்றும் அவர்களுக்குத் தெரியும். ஆனால், மற்றவர்களைவிட நம்மைப் பெரிய ஆளாக நினைத்தால்... எப்போதும் நாம் நினைக்கிறபடி எல்லாவற்றையும் செய்ய வேண்டுமென்று மற்றவர்களை வற்புறுத்தினால்... தேவையில்லாத பிரச்சினைகள் வரும். இதனால், மற்றவர்கள் நம்மோடு பழக விரும்ப மாட்டார்கள். நமக்கு நண்பர்களும் கிடைக்க மாட்டார்கள்.

பாரபட்சம் இல்லாமல் நடந்துகொள்ளுங்கள்

“கடவுள் பாரபட்சம் காட்டாதவர் . . . அவருக்குப் பயந்து சரியானதைச் செய்கிறவன் எந்தத் தேசத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அவனை அவர் ஏற்றுக்கொள்கிறார்.”​—அப்போஸ்தலர் 10:34, 35.

நாடு, மொழி, அந்தஸ்து, நிறம் போன்றவற்றை வைத்து ஒருவரை உயர்வாகவோ தாழ்வாகவோ கடவுள் எடை போடுவதில்லை. கடவுள், ‘ஒரே மனுஷனிலிருந்து எல்லா தேசத்து மக்களையும் உண்டுபண்ணியிருக்கிறார்.’ (அப்போஸ்தலர் 17:26) அதனால், நாம் எல்லாருமே ஒருவிதத்தில் சொந்தக்காரர்கள்தான். எல்லாரிடமும் அன்பாக, மரியாதையாக நடந்துகொள்ளும்போது அவர்களை சந்தோஷப்படுத்துவோம். அதோடு, நாமும் சந்தோஷப்படுவோம், கடவுளையும் சந்தோஷப்படுத்துவோம்.

சாந்தமாக இருங்கள்

“சாந்தத்தை. . . . காட்டுங்கள்.”​—கொலோசெயர் 3:12.

நாம் சாந்தமாக, பொறுமையாக நடந்துகொள்ளும்போது மற்றவர்கள் நம்மிடம் சகஜமாகப் பழகுவார்கள், தயக்கம் இல்லாமல் பேசுவார்கள். நம்மிடம் இருக்கும் தவறை எடுத்துச்சொல்லவும் தயங்க மாட்டார்கள். ஏனென்றால், நாம் சட்டென கோபப்படாமல், அமைதியாக இருப்போம் என்று அவர்களுக்குத் தெரியும். நம்மிடம் கோபமாகப் பேசுகிறவரிடம் சாந்தமாகப் பேசினால் அவர் அமைதியாகிவிடுவார். “சாந்தமாகப் பதில் சொல்வது கடும் கோபத்தைத் தணிக்கும். ஆனால், கடுகடுப்பாகப் பேசுவது கோபத்தைத் தூண்டும்” என்று நீதிமொழிகள் 15:1 சொல்கிறது.

தாராளமாகக் கொடுங்கள், நன்றியோடு இருங்கள்

“வாங்குவதைவிட கொடுப்பதில்தான் அதிக சந்தோஷம் இருக்கிறது.”​—அப்போஸ்தலர் 20:35.

இன்று நிறைய பேர் பேராசை பிடித்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தங்களைப் பற்றி மட்டுமே யோசிக்கிறார்கள். ஆனால், தாராளமாகக் கொடுக்கிறவர்களுக்கு உண்மையான சந்தோஷம் கிடைக்கிறது. (லூக்கா 6:38) ஏனென்றால், அவர்கள் பணம் பொருளைவிட மனிதர்களை அதிகமாக நேசிக்கிறார்கள். அதனால், மற்றவர்கள் தங்களுக்குத் தாராளமாகக் கொடுக்கும்போதும், அதற்கு நன்றியோடு இருக்கிறார்கள், அதை உயர்வாக மதிக்கிறார்கள். (கொலோசெயர் 3:15) உங்களையே இப்படிக் கேட்டுப்பாருங்கள்: ‘கஞ்சத்தனமா இருக்குறவங்களோட, நன்றியே இல்லாதவங்களோட பழக விரும்புவேனா இல்ல, தாராளமா கொடுக்குறவங்களோட, நன்றி காட்டுறவங்களோட பழக்க விரும்புவேனா?’ இதிலிருந்து, மற்றவர்கள் நம்மிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்று நினைக்கிறோமோ அப்படித்தான் நாமும் மற்றவர்களிடம் நடந்துகொள்ள வேண்டும் என்று தெரிந்துகொள்கிறோம்.—மத்தேயு 7:12.