Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்களுக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கொண்டால், எப்பேர்ப்பட்ட புயலையும் உங்களால் தாக்குப்பிடிக்க முடியும்

இளைஞர்களுக்கு

9: அடையாளம்

9: அடையாளம்

இதன் அர்த்தம் என்ன?

உங்கள் அடையாளம் என்பது உங்கள் பெயரையும் தோற்றத்தையும் மட்டுமே குறிப்பதில்லை. உங்கள் ஒழுக்கநெறிகளையும் நம்பிக்கைகளையும் குணாதிசயங்களையும்கூட குறிக்கின்றன. சொல்லப்போனால், நீங்கள் உள்ளேயும் சரி, வெளியேயும் சரி, எப்படிப்பட்டவராக இருக்கிறீர்கள் என்பதைப் படம்பிடித்துக் காட்டுவதுதான் உங்கள் அடையாளம்!

இது ஏன் முக்கியம்?

உங்களுக்கென்று ஓர் அடையாளத்தை நீங்கள் உருவாக்கிக்கொண்டால், உங்கள் நம்பிக்கைகளை விட்டுக்கொடுக்க மாட்டீர்கள்; உங்களைக் கட்டுப்படுத்த உங்கள் நண்பர்களை அனுமதிக்க மாட்டீர்கள்.

“இன்னைக்கு நிறைய பேர், துணிக்கடைகள்ல வைச்சிருக்குற மாடல் பொம்மைங்க மாதிரிதான் இருக்காங்க. என்ன டிரெஸ் போடணும்னு அதுங்க முடிவு செய்யாது; மத்தவங்கதான் முடிவு செய்வாங்க.”—ஏட்ரியன்.

“சரியானத செய்றது கஷ்டமா இருந்தாலும் அதை செய்யணுங்கறதுல உறுதியா இருக்க கத்துக்கிட்டேன். யார் என்னோட தராதரங்கள மதிக்குறாங்களோ... யார்கூட இருந்தா சரியான விஷயங்கள செய்றது எனக்கு சுலபமா இருக்குமோ... அவங்கதான் என்னோட உண்மையான நண்பர்கள்.”—கேர்ட்னீ.

பைபிள் நியமம்: “இந்த உலகத்தின் பாணியைப் பின்பற்றுவதை நிறுத்துங்கள். நீங்கள் யோசிக்கும் விதத்தை மாற்றுவதன் மூலம் உங்களையே மாற்றிக்கொள்ளுங்கள்.”—ரோமர் 12:2.

நீங்கள் என்ன செய்யலாம்?

நீங்கள் இப்போது எப்படிப்பட்டவராக இருக்கிறீர்கள், எப்படிப்பட்டவராக ஆக விரும்புகிறீர்கள் என்பதைச் சிந்தித்துப் பார்க்க, உங்கள் பலங்கள், பலவீனங்கள், நம்பிக்கைகள் என்ன என்பதை ஆராயுங்கள். கீழே உள்ள கேள்விகள் அதற்கு உதவும்.

பலங்கள்: என்னிடம் என்னென்ன திறமைகள் இருக்கின்றன? என்னென்ன நல்ல பழக்கங்கள் இருக்கின்றன? (உதாரணத்துக்கு: நான் நேரம் தவறாமல் இருக்கிறேனா? சுயக்கட்டுப்பாடு காட்டுகிறேனா? கடினமாக உழைக்கிறேனா? தாராள குணத்தைக் காட்டுகிறேனா?) என்னென்ன நல்ல விஷயங்களைச் செய்கிறேன்?

டிப்ஸ்: உங்களிடம் உள்ள நல்ல விஷயங்களை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லையா? அப்படியென்றால், உங்கள் பெற்றோரிடம் அல்லது நம்பகமான நண்பரிடம் அதைப் பற்றிக் கேளுங்கள், ஏன் அப்படி நினைக்கிறார்கள் என்றும் கேளுங்கள்.

பைபிள் நியமம்: “ஒவ்வொருவனும் தன்னுடைய செயல்களை ஆராய்ந்து பார்க்கட்டும். அப்போது, அவன் மற்றவனோடு தன்னை ஒப்பிட்டுப் பார்த்து சந்தோஷப்படாமல் தன்னைப் பார்த்தே சந்தோஷப்படுவான்.”—கலாத்தியர் 6:4.

பலவீனங்கள்: எந்தக் குணத்தை நான் இன்னும் அதிகமாக வளர்த்துக்கொள்ள வேண்டும்? எந்தெந்த சூழ்நிலைகளில் தவறு செய்ய தூண்டப்படுகிறேன்? எந்தெந்த விஷயங்களில் நான் ரொம்பவே சுயக்கட்டுப்பாடு காட்ட வேண்டியிருக்கிறது?

பைபிள் நியமம்: “‘எங்களிடம் பாவம் இல்லை’ என்று சொன்னால், நம்மையே ஏமாற்றிக்கொள்கிறவர்களாக இருப்போம்.”—1 யோவான் 1:8.

நம்பிக்கைகள்: என்னென்ன ஒழுக்கத் தராதரங்களை நான் பின்பற்றுகிறேன், ஏன்? எனக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறதா? எந்த ஆதாரத்தை வைத்து அவர் இருக்கிறார் என்று நம்புகிறேன்? எதையெல்லாம் அநியாயமான செயல்கள் என்று நினைக்கிறேன், ஏன்? எதிர்காலத்தைப் பற்றி எனக்கு என்ன நம்பிக்கை இருக்கிறது?

பைபிள் நியமம்: “யோசிக்கும் திறன் உன்னைக் காக்கும், பகுத்தறிவு உன்னைப் பாதுகாக்கும்.”—நீதிமொழிகள் 2:11.