Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஓரினச்சேர்க்கையைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

ஓரினச்சேர்க்கையைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

ஒரே பாலினத்தவரை திருமணம் செய்வது பற்றிய விஷயம், இன்னும் பல நாடுகளில் சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது. இருந்தாலும், ஒரே பாலினத்தவர் திருமணம் செய்துகொள்வது சட்டப்படி செல்லும் என 2015-ல் அமெரிக்க உச்ச நீதிமன்றம் அறிவித்தது. அதற்குப்பின், இன்டர்நெட்டில் இந்த விஷயத்தைத்தான் எல்லாரும் தேட ஆரம்பித்தார்கள். இன்று நிறைய பேர் கேட்கிற கேள்விகளில் ஒன்று இதுதான்: “ஒரே பாலினத்தவர் திருமணம் செய்துகொள்வதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?”

ஒரே பாலினத்தவரை திருமணம் செய்ய சட்டப்படி உரிமை இருக்கிறதா என்பதைப் பற்றி பைபிள் எதுவும் சொல்வதில்லை. ஆனால் கேள்வி என்னவென்றால்... ஓரினச்சேர்க்கையைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

பைபிளை நன்றாக ஆராய்ந்து பார்க்காமலேயே தங்களுக்குப் பதில் தெரியுமென பலர் நினைத்துக் கொள்கிறார்கள், ஆனால் அவர்களுடைய பதில்கள் ஒன்றுக்கொன்று முரண்பாடாகத்தான் இருக்கின்றன! ஓரினச்சேர்க்கையை பைபிள் ஆதரிப்பதில்லை... கண்டனம் செய்கிறது... என சிலர் சொல்கிறார்கள். மற்றவர்களோ, ‘சக மனிதரிடம் அன்புகாட்டுங்கள்’ என்று சொல்வதால், எந்த வாழ்க்கை முறையையும், பாலியல் சம்பந்தமான எல்லா வாழ்க்கை முறையையும், பைபிள் ஆதரிக்கிறது என்று சொல்கிறார்கள்.—ரோமர் 13:9.

பைபிள் என்ன சொல்கிறது?

இவற்றில் எது சரி என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

  1. ஓரினச்சேர்க்கையை பைபிள் ஆதரிப்பதில்லை.

  2. ஓரினச்சேர்க்கையை பைபிள் கண்டும்காணாமலும் விட்டுவிடுகிறது.

  3. ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுகிறவர்களை பைபிள் வெறுக்கும்படி சொல்கிறது.

பதில்கள்

  1. சரி. பைபிள் சொல்கிறது: “ஆண்களோடு உறவுகொள்ளும் ஆண்கள் . . . கடவுளுடைய அரசாங்கத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.” (1 கொரிந்தியர் 6:9, 10) இது பெண்களுக்கும் பொருந்தும்.—ரோமர் 1:26.

  2. தவறு. திருமணமானவர் தன் கணவருடன் அல்லது மனைவியுடன் மட்டுமே உறவுகொள்ள வேண்டுமென பைபிள் சொல்கிறது.—ஆதியாகமம் 1:27, 28; நீதிமொழிகள் 5:18, 19.

  3. தவறு. ஓரினச்சேர்க்கையை பைபிள் ஆதரிப்பதில்லை என்றாலும், தப்பெண்ணத்தையோ அப்படிப்பட்டவர்களை வெறுப்பதையோ வேறெந்த விதத்திலும் அவர்களைத் துஷ்பிரயோகம் செய்வதையோ தூண்டுவதில்லை.—ரோமர் 12:18. [1]

யெகோவாவின் சாட்சிகள் நம்புவதென்ன?

பைபிள் சொல்கிற ஒழுக்கநெறியே வாழ்க்கைக்கு மிகச் சிறந்த ஒழுக்கநெறி என்று யெகோவாவின் சாட்சிகள் நம்புகிறார்கள், அதன்படி நடக்க முயற்சியும் செய்கிறார்கள். (ஏசாயா 48:17) [2] அதனால், பாலியல் சம்பந்தமான ஒழுக்கங்கெட்ட எல்லா பழக்கங்களையும்... ஓரினச்சேர்க்கையையும்... அவர்கள் ஒதுக்கித் தள்ளுகிறார்கள். (1 கொரிந்தியர் 6:18) [3] இதுதான் யெகோவாவின் சாட்சிகளுடைய வாழ்க்கை முறை, அதைப் பின்பற்ற அவர்களுக்கு உரிமையும் இருக்கிறது.

மற்றவர்கள் நம்மை எப்படி நடத்த வேண்டுமென விரும்புகிறோமோ அப்படித்தான் நாமும் மற்றவர்களை நடத்த வேண்டும் என்ற பொன்விதியை சாட்சிகள் பின்பற்ற முயலுகிறார்கள்

அதேசமயத்தில், ‘எல்லா மக்களோடும் சமாதானமாய் இருக்க’ யெகோவாவின் சாட்சிகள் முயற்சி செய்கிறார்கள். (எபிரெயர் 12:14) ஓரினச்சேர்க்கையை ஒதுக்கித் தள்ளுகிறபோதிலும், தங்களுடைய கருத்தை மற்றவர்கள்மீது திணிப்பதில்லை. ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுகிறவர்களை வெறுப்பதோ தாக்குவதோ கிடையாது, அப்படிப்பட்ட சம்பவங்களைப் பற்றிக் கேள்விப்படும்போது சந்தோஷப்படுவதும் கிடையாது. மற்றவர்கள் தங்களை எப்படி நடத்த வேண்டுமென விரும்புகிறார்களோ அப்படித்தான் தாங்களும் மற்றவர்களை நடத்த வேண்டும் என்ற பொன்விதியை யெகோவாவின் சாட்சிகள் பின்பற்ற முயற்சி செய்கிறார்கள்.—மத்தேயு 7:12.

தப்பெண்ணத்தை பைபிள் தூண்டுகிறதா?

இருந்தாலும், ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுகிறவர்களுக்கு எதிராக பைபிள் தப்பெண்ணத்தை வளர்க்கிறது என்றும் பைபிள் சொல்கிற ஒழுக்கநெறியைப் பின்பற்றுகிறவர்கள் சகிப்புத்தன்மையற்றவர்களாக இருக்கிறார்கள் என்றும் சிலர் சொல்கிறார்கள். ‘மக்கள் எல்லாரும் குறுகிய மனப்பான்மையுடன் இருந்த காலத்தில் பைபிள் எழுதப்பட்டது,’ ‘இன்றைக்கு நாம் எல்லா வகையான இனத்தை, தேசத்தை, பாலினத்தை சேர்ந்தவர்களையும் ஏற்றுக்கொள்கிறோம்’ என்றெல்லாம் அவர்கள் சொல்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை, ஓரினச்சேர்க்கையை ஒதுக்கித்தள்ளுவதும் வேறு நிறமுள்ளவர்களை ஒதுக்கித்தள்ளுவதும் ஒன்றுதான். ஆனால், அவர்கள் இப்படி சொல்வது சரியா? இல்லை. ஏன்?

ஓரினச்சேர்க்கை என்ற பழக்கத்தை ஒதுக்கித் தள்ளுவதற்கும் அதில் ஈடுபடுகிறவர்களை ஒதுக்கித் தள்ளுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. எல்லா வகையான மக்களையும் மதிக்க வேண்டுமென கிறிஸ்தவர்களுக்கு பைபிள் சொல்கிறது. (1 பேதுரு 2:17) [4] அதற்காக கிறிஸ்தவர்கள் எல்லா வகையான பழக்கத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று அர்த்தமாகாது.

இந்த உதாரணத்தைக் கவனியுங்கள்: புகைப்பிடிப்பது உடலுக்குக் கெடுதல் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்... அதை வெறுக்கவும்கூட செய்கிறீர்கள். ஆனால் உங்களுடன் வேலை பார்ப்பவர் புகைப்பிடிப்பவராக இருந்தால்? புகைப்பிடிப்பதைப் பற்றிய உங்களுடைய கருத்தும் அவருடைய கருத்தும் வேறுபடுவதால் உங்களைக் குறுகிய மனப்பான்மையுள்ளவர் என்று முத்திரை குத்துவது சரியாக இருக்குமா? அவர் புகைப்பிடிக்கிறார்... நீங்களோ புகைப்பிடிப்பதில்லை... அதனால் அவர்மீது உங்களுக்குத் தப்பெண்ணம் இருக்கிறது என்று அர்த்தமாகுமா? புகைப்பிடிப்பதைப் பற்றிய உங்களுடைய கருத்தை மாற்றிக்கொள்ள வேண்டுமென உங்களோடு வேலை பார்ப்பவர் உங்களை வற்புறுத்தினால், அவரை குறுகிய மனப்பான்மையுள்ளவராக, சகிப்புத்தன்மையற்றவராக ஆக்கிவிடும், இல்லையா?

பைபிள் சொல்கிற ஒழுக்க நெறிப்படி வாழவே யெகோவாவின் சாட்சிகள் விரும்புகிறார்கள். பைபிள் தடைசெய்கிற செயல்களை அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. அதற்காக, அவர்களுடைய பழக்கங்களும் மற்றவர்களுடைய பழக்கங்களும் வேறுபடும்போது அப்படிப்பட்டவர்களை கேலி செய்வதோ தவறாக நடத்துவதோ கிடையாது.

பைபிள் சொல்வது கொடூரமானதா?

ஓரினச்சேர்க்கையில் ஈடுபட வேண்டுமென்ற தீராத ஆசையுள்ளவர்களைப் பற்றி என்ன சொல்லலாம்? அவர்கள் பிறவியிலேயே அப்படித்தானா? அப்படியானால், அவர்களுடைய ஆசைகளின்படி நடப்பது தவறு என்று சொல்வது கொடூரமாக இருக்காதா?

பிறவியிலேயே ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுகிற ஆசை உண்டாவதைப் பற்றி பைபிள் எதுவும் சொல்வதில்லை. இருந்தாலும், சில மனிதருடைய செயல்கள் ஆழமாக ஊறிப்போனவை என்பதை பைபிள் ஒத்துக்கொள்கிறது. அதேசமயத்தில், கடவுளைப் பிரியப்படுத்த வேண்டுமென்றால் சில வகையான பழக்கத்தை—ஓரினச்சேர்க்கையையும்தான்—தவிர்க்க வேண்டும் என்று பைபிள் சொல்கிறது.—2 கொரிந்தியர் 10:4, 5.

பைபிள் சொல்வது மிகக் கொடூரமாக இருக்கிறதென சிலர் கூறலாம். நமக்குள் ஏற்படுகிற ஆசைகளின்படிதான் நடக்க வேண்டும் அல்லது முக்கியமாகப் பாலியல் ஆசைகளைக் கட்டுப்படுத்தக் கூடாது, ஏன் கட்டுப்படுத்தவும் முடியாது, என்ற கருத்தை அடிப்படையாக வைத்து அவர்கள் இப்படிச் சொல்லலாம். ஆனால், அப்படிப்பட்டவர்கள் தங்களுடைய ஆசைகளைக் கட்டுப்படுத்த முடியும் என்று சொல்லி மனிதர்களை பைபிள் கௌரவிக்கிறது. மிருகங்களைப் போல் இல்லாமல், மனிதர்களால் தங்களுடைய ஆசைகளைக் கட்டுப்படுத்த முடியும்.—கொலோசெயர் 3:5. [5]

இந்த உதாரணத்தைக் கவனியுங்கள்: வெறித்தனம் போன்ற சில வகையான குணங்கள் பிறவியிலேயே உண்டாகலாம் என நிபுணர்கள் சிலர் சொல்கிறார்கள். வெறித்தனம் பிறவியிலேயே உண்டாகலாம் என்பதைப் பற்றி பைபிள் திட்டவட்டமாக எதுவும் சொல்வதில்லை. ஆனால் சிலர் ‘எரிந்து விழுகிற சுபாவம் உள்ளவர்களாக’ இருப்பார்கள்... ‘ஆவேசப்படும் சுபாவம் உள்ளவர்களாக’ இருப்பார்கள் என்பதை பைபிள் ஒத்துக்கொள்கிறது. (நீதிமொழிகள் 22:24; 29:22; NW) அதேசமயத்தில், “கோபத்தையும் ஆத்திரத்தையும் விட்டுவிடு. எரிச்சல்பட்டு ஏதாவது தப்பு செய்துவிடாதே” என்றும் பைபிள் சொல்கிறது.—சங்கீதம் 37:8, NW; எபேசியர் 4:31.

இந்த அறிவுரையை யாரும் ஒத்துக்கொள்ளாமல் இருக்க மாட்டார்கள் அல்லது மூர்க்க குணங்கள் உள்ளவர்களுக்கு இது ரொம்ப கஷ்டம் என்று சொல்ல மாட்டார்கள். உதாரணமாக, கோபம் என்பது ஒருவருடைய மரபில் வேரூன்றி இருப்பதாக நிபுணர்கள் நம்புகிறார்கள். இந்த மாதிரி குணங்களை கட்டுப்படுத்த அந்த நிபுணர்களும்கூட அப்படிப்பட்டவர்களுக்கு உதவி செய்ய கடினமாக உழைக்கிறார்கள்.

அதேபோல, பைபிள் சொல்கிற ஒழுக்கநெறிகளுக்கு முரண்பாடாக இருக்கிற எந்த பழக்கமாக இருந்தாலும் சரி, அதை மாற்ற முடியும் என்று யெகோவாவின் சாட்சிகள் நம்புகிறார்கள். ஒரே பாலினத்தவரோடு உறவு கொள்வதைப் பற்றி மட்டுமல்ல, திருமண துணையல்லாத வேறொரு ஆணோடு அல்லது பெண்ணோடு உறவு கொள்வதைப் பற்றிய பைபிள் கருத்தையும் அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். இப்படிப்பட்ட எல்லா விஷயத்திலும், பைபிள் தருகிற இந்த அறிவுரை பொருந்துகிறது: “கடவுளை அறியாத உலகத்தாரைப் போல் கட்டுக்கடங்கா காமப்பசிக்கு இடங்கொடுப்பதைத் தவிர்த்து, உடலைப் பரிசுத்தமாகவும் மதிப்புமிக்கதாகவும் வைத்துக்கொள்வதற்கு அறிந்திருக்க வேண்டும்.”—1 தெசலோனிக்கேயர் 4:4, 5.

“உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாகத்தான் இருந்தீர்கள்”

முதல் நூற்றாண்டில் கிறிஸ்தவர்களாக மாற விரும்பியவர்கள் பல்வேறு பின்னணியை சேர்ந்தவர்களாக இருந்தார்கள், பல்வேறு வாழ்க்கை பாணியை பின்பற்றினார்கள். அவர்களில் சிலர் தங்களுடைய வாழ்க்கை பாணியில் மாபெரும் மாற்றம் செய்தார்கள். உதாரணமாக, “பாலியல் முறைகேட்டில் ஈடுபடுகிறவர்கள், உருவ வழிபாடு செய்கிறவர்கள், மணத்துணைக்குத் துரோகம் செய்கிறவர்கள், மற்ற ஆண்கள் தங்களைப் பாலுறவுக்காகப் பயன்படுத்த அனுமதிக்கும் ஆண்கள், ஆண்களோடு உறவுகொள்ளும் ஆண்கள்” ஆகியோரைப் பற்றி பைபிள் சொல்கிறது. அதோடு, “உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாகத்தான் இருந்தீர்கள்” என்றும் சொல்கிறது.—1 கொரிந்தியர் 6:9-11.

“உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாகத்தான் இருந்தீர்கள்” என்று பைபிள் சொல்லும்போது, ஓரினச்சேர்க்கை பழக்கத்திலிருந்து வெளியே வந்தவர்களுக்கு மறுபடியும் அப்படிப்பட்ட ஆசைகள் வரவே இல்லை என்று சொல்கிறதா? இல்லவே இல்லை. ஏனென்றால் “கடவுளுடைய சக்தி வழிநடத்துகிறபடி நடந்துகொண்டிருங்கள், அப்போது எந்தவொரு பாவ இச்சையையும் நிறைவேற்ற மாட்டீர்கள்” என்றும் பைபிள் சொல்கிறது.—கலாத்தியர் 5:16.

கவனியுங்கள்... ஒரு கிறிஸ்தவருக்கு கெட்ட ஆசைகள் வரவே வராது என்று பைபிள் சொல்வதில்லை. அதற்குப் பதிலாக, ஒருவர் அப்படிப்பட்ட ஆசையை நிறைவேற்ற மாட்டார் என்றுதான் சொல்கிறது. அப்படிப்பட்ட ஆசைகளைக் கட்டுப்படுத்த கிறிஸ்தவர்கள் கற்றுக்கொள்கிறார்கள்... அவற்றில் ஈடுபடும் அளவுக்கு அவற்றைப் பற்றியே யோசித்துக்கொண்டோ கற்பனை செய்துகொண்டோ இருக்க மாட்டார்கள்.—யாக்கோபு 1:14, 15. [6]

ஆசைகளுக்கும் பழக்கங்களுக்கும் இடையே இருக்கிற வித்தியாசத்தை பைபிள் தெளிவாகக் காட்டுகிறது. (ரோமர் 7:16-25) ஓரினச்சேர்க்கையில் ஈடுபட வேண்டுமென்ற ஆசையுள்ளவர் அதைப் பற்றி யோசிப்பதை கட்டுப்படுத்த முடியும். உதாரணமாக, கோபம், மணத்துணைக்குத் துரோகம், பேராசை போன்ற வேறெந்த கெட்ட ஆசையையும் ஒருவரால் கட்டுப்படுத்த முடிவதை போல ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுகிற ஆசையையும் கட்டுப்படுத்த முடியும்.—1 கொரிந்தியர் 9:27; 2 பேதுரு 2:14, 15.

பைபிளில் சொல்லப்பட்டுள்ள ஒழுக்க நெறியே மிகச் சிறந்த வாழ்க்கைக்கு வழி என்பதை யெகோவாவின் சாட்சிகள் நம்புகிறபோதிலும், தங்களுடைய கருத்துகளை மற்றவர்கள்மீது திணிப்பதில்லை. வித்தியாசமான வாழ்க்கை பாணிகளைப் பின்பற்ற சட்டம் உரிமை அளித்திருந்தால் அதை மாற்றுவதற்கும் முயற்சி செய்வதில்லை. யெகோவாவின் சாட்சிகள் சொல்கிற செய்தி நம்பிக்கையூட்டும் செய்தி, காதுகொடுத்துக் கேட்கிற எல்லாருக்கும் அதை ஆர்வத்தோடு சொல்கிறார்கள்.—அப்போஸ்தலர் 20:20. ▪ (g16-E No. 4)

^ 1. ரோமர் 12:18: ‘எல்லாரோடும் சமாதானமாக இருங்கள்.’

^ 2. ஏசாயா 48:17: ‘யெகோவாவாகிய நானே உங்களுக்குப் பிரயோஜனமானதை கற்றுக்கொடுக்கிறேன்.’

^ 3. 1 கொரிந்தியர் 6:18: “பாலியல் முறைகேட்டிலிருந்து விலகி ஓடுங்கள்.”

^ 4. 1 பேதுரு 2:17: “எல்லா விதமான ஆட்களையும் உயர்வாக மதியுங்கள்.”

^ 5. கொலோசெயர் 3:5: “பாலியல் முறைகேடு, அசுத்தமான நடத்தை, காமப்பசி . . . ஆகியவற்றைத் தூண்டுகிற உங்கள் உடலுறுப்புகளை மரத்துப்போகச் செய்யுங்கள்.”

^ 6. யாக்கோபு 1:14, 15: “ஒவ்வொருவனுடைய கெட்ட ஆசைதான் அவனைக் கவர்ந்திழுத்து, சிக்க வைத்து, சோதிக்கிறது. பின்பு அந்த ஆசை கருத்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கிறது; பாவம் கடைசியில் மரணத்தை விளைவிக்கிறது.”