Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பட்டு—“துணிகளின் ராணி”

பட்டு—“துணிகளின் ராணி”

பட்டு—“துணிகளின் ராணி”

ஜப்பானிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

உலகின் மிக அழகான ஆடைகள் என்று சொன்னால், ஜப்பானியரின் கிமோனோ, இந்தியரின் புடவை, கொரியா நாட்டினரின் ஹான்பாக் என எத்தனையோ இருக்கின்றன. ஆனால் இவை எல்லாவற்றிலும் ஓர் ஒற்றுமை உள்ளது. இவை பெரும்பாலும் பளப்பளப்பான பட்டிழைகளால் நெய்யப்பட்டவை; பட்டு, துணிகளின் ராணி என அழைக்கப்படுகிறது. அன்றைய பெருமக்கள்முதல் இன்றைய பொதுமக்கள்வரை பட்டின் அழகில் சொக்கிவிடாதோர் யாருமே இல்லை. ஆனால், ஒரு காலத்தில் அது கிடைப்பதே குதிரைக் கொம்பாக இருந்தது.

பண்டைக் காலங்களில் சீனர்கள் மட்டுமே பட்டை உற்பத்தி செய்துவந்தார்கள். அவர்களைத் தவிர வேறு யாருமே இத்தொழிலை அறிந்திருக்கவில்லை. சீனர்கள் யாரேனும் இத்தொழிலின் இரகசியத்தை வெளியிட்டால், தேசத்துரோகி என அவர் முத்திரை குத்தப்பட்டு கொலை செய்யப்படுவார். இவர்களின் இந்த ஏகபோக உரிமையால், பட்டுத்துணியின் விலை மிக அதிகமாக இருந்தது. உதாரணத்திற்கு, ரோம மாகாணத்தில் பட்டின் விலை பொன்னுக்கு சமமாக இருந்தது.

காலப்போக்கில், சீனாவின் பட்டு ஏற்றுமதியை பெர்சியா நாடு தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. அப்படியும், பட்டின் விலை கொஞ்சமும் இறங்கவில்லை, பெர்சிய வியாபாரிகளை ஓரங்கட்டுவதற்காக எடுக்கப்பட்ட முயற்சியும் வீண்போனது. அதன் பிறகு, பைஸன்டைன் சக்கரவர்த்தியான ஜஸ்டினியன் ஓர் இரகசிய திட்டம் தீட்டி, பொ.ச. 550 வாக்கில் இரண்டு மத குருக்களை சீனாவுக்கு அனுப்பினார். இரண்டு வருடங்களுக்குப் பிறகு அவர்கள் திரும்பி வந்தார்கள். எதிர்பார்த்த பொக்கிஷம் வந்துசேர்ந்தது; ஆம், அந்த குருமார் தங்களுடைய மூங்கில் கைத்தடிகளுக்குள் பட்டுப்பூச்சியின் முட்டைகளை மறைத்துவைத்து கொண்டுவந்தார்கள். பட்டு உற்பத்தியின் இரகசியம் அம்பலமானது. சீனர்களின் ஏகபோக உரிமை அத்துடன் முடிவுக்கு வந்தது.

பட்டின் இரகசியம்

பட்டிழை பட்டுப்புழுக்களால் உருவாக்கப்படுகிறது. பட்டுப்பூச்சிகளில் நூற்றுக்கணக்கான வகைகள் உண்டு; ஆனால், உயர்தரமான பட்டிழைகளைத் தருகிற பட்டுப்பூச்சியின் அறிவியல் பெயர் பாம்பிக்ஸ் மோரி என்பதாகும். பட்டு உற்பத்திக்கு பட்டுப்பூச்சிகள் பெருமளவு தேவைப்பட்டதால் பட்டு பூச்சி வளர்ப்பு தழைக்க ஆரம்பித்தது. இதற்கு ஆள் பலம் அதிகம் தேவைப்படுகிறது. இன்றும் ஜப்பானில் சுமார் 2,000 குடும்பங்கள் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. அவற்றில் ஒன்றுதான் ஷோயிச்சி காவாஹாராடாவின் குடும்பம். அவர் கும்மா என்ற மாவட்டத்தில் வசிக்கிறார். பட்டு வளர்ப்புக்கென்றே இரண்டு மாடி வீட்டைக் கட்டியிருக்கிறார், அது ஒரு மலையின் அருகே மல்பரி தோட்டத்தைப் பார்த்தவாறு அமைந்துள்ளது (1).

பெண் பட்டுப்பூச்சி 500 முட்டைகள்வரை இடுகிறது, அவை ஒவ்வொன்றும் குண்டூசியின் தலையளவு இருக்கின்றன (2). சுமார் 20 நாட்களுக்குப் பின் அந்த முட்டைகள் பொரிக்கின்றன. முட்டையிலிருந்து வெளிவரும் சின்னஞ்சிறிய புழுக்கள் அகோர பசிகொண்டவை. அவை இராப்பகலாக மல்பரி இலைகளை வெட்டிவிழுங்குகின்றன​—⁠மல்பரி இலைகளை மட்டுமே உண்கின்றன (3, 4). பதினெட்டே நாட்களில் அவை எழுபது மடங்கு பெரிதாக வளர்ந்து விடுகின்றன, அதற்குள் நான்கு முறை அவை தோலை உரித்துப்போடுகின்றன.

திரு. காவாஹாராடாவின் பண்ணையில் சுமார் 1,20,000 பட்டுப்புழுக்கள் வளர்க்கப்படுகின்றன. இலைகளின்மேல் மழை சடசடவென கொட்டுவதுபோல் அவை சத்தம் உண்டாக்கி சாப்பிடுகின்றன. ஒரு புழு முதிர்வடைவதற்குள் அதன் எடை 10,000 மடங்கு அதிகரித்துவிடுகிறது. இப்போது கக்கூனை (கூட்டை) கட்ட, அதாவது, நூல்நூற்க அது ரெடியாக இருக்கிறது.

சத்தமின்றி நூல்நூற்போர்

முழு வளர்ச்சி அடைந்த பட்டுப்புழுவின் உடல் கண்ணாடிபோல் பளபளக்கிறது, நூல்நூற்பதற்கான சமயம் வந்துவிட்டதை இது காட்டுகிறது. பட்டுப்புழுக்கள் பரபரப்பாகி, கக்கூனை வைப்பதற்கு இடம் தேட ஆரம்பிக்கும்போது ஒரு பெரிய பெட்டியில் உள்ள தனித்தனி அறைகளில் அவை வைக்கப்படுகின்றன. அங்கே, அவை மென்மையான வெண்ணிற நூலை வெளிவிட்டு, பட்டு நூலாலேயே தங்களைச் சுற்றிக்கொள்கின்றன (5).

திரு. காவாஹாராடாவுக்கு இது பிஸியான சமயம், ஏனென்றால் 1,20,000 பட்டுப்புழுக்களும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் நூல்நூற்க ஆரம்பிக்கின்றன. அவருடைய வீட்டின் இரண்டாவது மாடியில் உள்ள பரணில் வரிசை வரிசையாக பல பெட்டிகள் தொங்கவிடப்பட்டுள்ளன. அந்த இடம் குளுகுளுவென காற்றோட்டமாக இருக்கிறது (6).

பட்டுப்புழுவின் உடலுக்குள்ளே ஓர் அற்புத மாற்றம் நிகழ்கிறது. பட்டுப்புழு சாப்பிட்ட மல்பரி இலைகள் ஜீரணமாகி ஃபைப்ராயின் என்ற ஒருவகை புரதப் பொருளாக மாறியிருக்கிறது, அது புழுவின் உடலிலுள்ள இரண்டு சுரப்பிகளில் சேகரித்து வைக்கப்பட்டிருக்கிறது. புழுவின் அதே நீளத்திற்கு இருக்கிற இந்த இரண்டு சுரப்பிகளும் ஃபைப்ராயினை வெளியே தள்ளுகின்றன. அப்போது அதனுடன் செரிசின் எனும் பசைப்பொருள் ஒட்டிக்கொள்கிறது. பட்டுப்புழுவின் வாயில் உள்ள ஸ்பின்னரெட் எனும் உறுப்பு வழியாக இந்த இரண்டு ஃபைப்ராயின் இழைகளும் வெளியேறும்போது செரிசின் அவற்றை ஒன்றாக ஒட்ட வைக்கிறது. காற்று பட்டதும் இந்தப் பட்டு திரவம் கெட்டியாகி ஒரு நூலிழையாக மாறுகிறது.

பட்டுப்புழு பட்டு உற்பத்தியைத் தொடங்கிவிட்டால் அதை நிறுத்தாமல் செய்துகொண்டே இருக்கும். நிமிடத்திற்கு 30 முதல் 40 சென்டிமீட்டர் என்ற வேகத்தில் தலையைச் சுழற்றி சுழற்றி நூற்கிறது. ஒரு கக்கூனைக் கட்டி முடிப்பதற்குள் பட்டுப்புழு அதன் தலையை சுமார் 1,50,000 தடவை சுழற்றுகிறது என ஒரு கட்டுரை குறிப்பிடுகிறது. இரண்டு நாட்கள் இராப்பகலாக நூல்நூற்ற பிறகு, அது உற்பத்தி செய்த ஒரே நூலை அளந்து பார்த்தால் 1,500 மீட்டர் நீளம்வரை இருக்கும். வானளாவிய ஒரு கட்டடத்தின் உயரத்தைவிட அது சுமார் நான்கு மடங்கு அதிகமாக இருக்கும்!

திரு. காவாஹாராடா ஒரே வாரத்தில் 1,20,000 கக்கூன்களை மகசூல் செய்துவிடுவார், பிறகு அவற்றை நூற்பாலைகளுக்கு அனுப்பி வைப்பார். ஒரு கிமோனா ஆடை தயாரிப்பதற்கு சுமார் 9,000 கக்கூன்கள் தேவை, ஒரு ‘டை’ தயாரிப்பதற்கு சுமார் 140 கக்கூன்கள் தேவை, ஒரு ஸ்கார்ஃப் தயாரிப்பதற்கு 100-⁠க்கும் அதிகமான கக்கூன்கள் தேவைப்படலாம்.

பட்டுத்துணி நெசவு

ஒரு கக்கூனிலிருந்து பட்டிழையைப் பிரித்தெடுத்து ஒரு உருளையில் சுற்றுவதை ரீலிங் என்கிறார்கள். இந்த ரீலிங் வேலை எப்படி ஆரம்பமானது? இதைப் பற்றிய பழங்கதைகளும் கட்டுக்கதைகளும் ஏராளம். உதாரணத்திற்கு, மல்பரி மரத்திலிருந்து ஒரு கக்கூன் சீன பேரரசி ஷி லிங்-ஷியின் டீ கப்புக்குள் விழுந்தபோது அதை அவள் எடுக்க முயன்றதாகவும், அப்போது அதனுடன் ஒரு மெல்லிய பட்டுநூல் ஒட்டிக்கொண்டு வந்ததைப் பார்த்ததாகவும் ஒரு கதை உண்டு. இப்படித்தான் ரீலிங் வேலை ஆரம்பமானதாம். இன்றோ இந்த வேலையை மெஷின்கள் செய்துவிடுகின்றன.

கக்கூன்களை விற்று காசாக்க வேண்டுமானால் அதனுள்ளே இருக்கிற புழு வெளியே வருவதற்கு முன் அதைச் சாகடிக்க வேண்டும். ஈவிரக்கமற்ற இப்பணியைச் செய்வதற்கு அதைக் கொதிநீரில் போடவேண்டும். சேதமடைந்த கக்கூன்கள் தனியே பிரித்தெடுக்கப்படுகின்றன, மற்றவை பட்டு உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகின்றன. ஒட்டியிருக்கும் இழையை தனியே பிரித்தெடுப்பதற்காக கக்கூன்கள் முதலில் கொதிநீரில் போடப்படுகின்றன அல்லது சூடேற்றப்படுகின்றன. அடுத்து, சுழலும் பிரஷ்களைக்கொண்டு இழையின் நுனி கண்டுபிடிக்கப்படுகிறது (7). எந்தளவு தடிமனான இழைத் தேவைப்படுகிறதோ அதற்கேற்றாற்போல், இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட கக்கூன்களின் இழைகளை ஒன்றாகச் சேர்த்து ஒரே நூலாக எடுக்கலாம். அந்த நூல் உருளையில் சுற்றும்போதே காயவைக்கப்படுகிறது. தேவையான நீளத்திலும் கனத்திலும் நூற்கண்டுகளைத் தயாரிப்பதற்கு இந்தப் பட்டுநூல் ஒரு பெரிய உருளையில் மீண்டும் சுற்றப்படுகிறது (8, 9).

பட்டுத்துணியை கன்னத்தில் ஒற்றிக்கொள்ள வேண்டும்போல் அந்தளவு நைஸாக இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அதற்கு காரணமாயிருக்கும் அம்சங்கள் யாவை? ஒன்று, ஃபைராயினை ஒட்டியிருக்கும் செரிசினை அகற்றுவதாகும். செரிசின் அகற்றப்படாத பட்டு, முரடாக இருக்கும்; அதில் சாயம் ஏற்றுவது கடினம். ஷிஃப்பான் துணி சொரசொரப்பாக இருப்பதற்குக் காரணம், செரிசின் சரிவர அகற்றப்படாததே.

நூலில் எந்தளவு முறுக்கேற்றப்படுகிறது என்பது இரண்டாவது அம்சம். ஜப்பானியரின் ஹாபூடாயே என்ற துணி பஞ்சுபோல் மிருதுவாக இருக்கும். சிறிதளவே முறுக்கேற்றப்பட்டிருப்பதால் அல்லது சற்றும் முறுக்கேற்றப்படாததால்தான் அது அவ்வளவு மிருதுவாக இருக்கிறது. ஆனால் கிரேப் துணியோ சுருக்கங்களுடன் மொறுமொறுப்பாக இருக்கும். ஏனென்றால், இது அதிகமாக முறுக்கேற்றப்படுகிறது.

அடுத்து செய்ய வேண்டிய முக்கிய வேலை சாயமேற்றுவது. பட்டுத்துணியில் சாயமேற்றுவது எளிது. அதிலுள்ள ஃபைப்ராயின் காரணமாக சாயம் நன்கு பிடித்துக்கொள்கிறது, சீக்கிரத்தில் வெளுத்துப்போவதில்லை. அதுமட்டுமல்ல, செயற்கைத் துணிகளைப் போலின்றி, பட்டில் நேர்மின் அயனியும் எதிர்மின் அயனியும் உள்ளதால் எல்லா நிறங்களிலும் சாயமேற்ற முடிகிறது. தறியில் நெசவு செய்யப்படுவதற்கு (10)  முன்பு நூலாகவும் அதில் சாயமேற்றப்படலாம் அல்லது நெசவு செய்யப்பட்ட பிறகு துணியாகவும் சாயமேற்றப்படலாம். ஜப்பானியர் பிரபலமான யூஸென் முறையைப் பயன்படுத்தி கிமோனா துணியில் சாயமேற்றுகிறார்கள். இவர்கள் நெசவு செய்த துணியில் டிசைன்களை வரைந்த பிறகு கையாலேயே சாயமேற்றுகிறார்கள்.

சீனாவும் இந்தியாவும் பட்டு உற்பத்தியில் சிறந்து விளங்கினாலும், பட்டு டிசைன்களை உருவாக்குவதில் முன்னணி வகிப்பது பிரான்சும் இத்தாலியும்தான். இன்று ரேயான், நைலான் போன்ற செயற்கை துணிகள் மலிவான விலையில் கிடைப்பது உண்மையே. என்றாலும், பட்டுக்கு நிகர் வேறெதுவும் இல்லை. “நவீன விஞ்ஞான முன்னேற்றத்தால்கூட பட்டை செயற்கை முறையில் தயாரிக்க முடியாது. அதன் மூலக்கூறு வாய்ப்பாடுமுதல் கட்டமைப்புவரை எல்லாவற்றையும் நாம் தெரிந்துவைத்திருந்தாலும், அதை நம்மால் காப்பியடிக்க முடியாது. அதுவே பட்டின் தனித்துவம் என்று சொல்லுவேன்” என்கிறார் ஜப்பானிலுள்ள யோகோஹாமா பட்டு அருங்காட்சியகத்தின் காப்பாளர்.

[பக்கம் 26-ன் பெட்டி/படங்கள்]

பட்டின் தன்மைகள்

உறுதியானது: எஃகு இழை அளவுக்கு எடுக்கப்பட்ட பட்டிழை எஃகுபோல் உறுதியாக இருக்கிறது.

பளபளப்பானது: இது முத்தைப் போல் பளபளக்கிறது. பல அடுக்குள்ள, முப்பட்டகம் (prism) போன்ற ஃபைப்ராயின் புரதத்தின் அமைப்பே இதற்குக் காரணம், இதனால் ஒளி சிதறுகிறது.

மேனிக்கு மென்மையானது: இதில் அமினோ அமிலங்கள் கலந்திருப்பதால் மேனிக்கு மென்மையாக இருக்கிறது. இது தோல் சம்பந்தமான பல நோய்களிலிருந்து சருமத்தைப் பாதுகாப்பதாகச் சொல்லப்படுகிறது. சில அழகு சாதனங்கள் பட்டுத் தூளால் செய்யப்படுகின்றன.

ஈரத்தை உரிஞ்சும் தன்மையுடையது: பட்டுத்துணியில் உள்ள அமினோ அமிலங்களும் சின்னஞ்சிறிய இடைவெளிகளும் பெருமளவு வியர்வையை உறிஞ்சி வெளிவிடுகின்றன; இதனால், வெயில் காலத்தில் உடலை குளுமையாக வைக்கிறது.

வெப்பத்தைத் தடுக்கிறது: பட்டுத்துணி எளிதில் எரிந்துவிடுவதில்லை, அப்படி எரிந்தாலும் நச்சுப் புகையை வெளியிடுவதில்லை.

பாதுகாக்கிறது: பட்டுத்துணி புற ஊதாக் கதிர்களை உறிஞ்சி சருமத்தைப் பாதுகாக்கிறது.

ஸ்டாடிக் கரென்ட் இல்லாதது: பட்டுத்துணியில் நேர்மின் அயனி, எதிர்மின் அயனி இருப்பதோடு ஈரத்தை உறிஞ்சும் தன்மையும் இருப்பதால் மற்ற துணிகள் சிலவற்றைப்போல் இதில் ஸ்டாடிக் கரென்ட் எளிதில் உருவாகுவது இல்லை.

பட்டாடைகளைப் பராமரித்தல்

சலவை செய்தல்: பொதுவாக பட்டாடைகளை டிரை-கிளீன் செய்வதுதான் நல்லது. வீட்டில் சலவை செய்வதாக இருந்தால் மிதமான டிட்டர்ஜன்டை உபயோகித்து சுமார் 30 டிகிரி செல்ஷியஸ் கொதிநிலையில் உள்ள வெதுவெதுப்பான தண்ணீரில் சலவை செய்யுங்கள். கசக்கவோ பிழியவோ வேண்டாம், மென்மையாக கையாளுங்கள். காற்றில் உலர விடுங்கள்.

இஸ்திரி போடுதல்: பட்டாடைக்கு மேல் ஒரு துணியை விரித்து இஸ்திரி போடுங்கள். கூடியமட்டும் இழையமைப்புக்கு ஏற்ப இஸ்திரி போடுங்கள். இஸ்திரியில் சுமார் 130 டிகிரி செல்ஷியஸ் சூடு இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். ஸ்டீமை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை, அப்படியே பயன்படுத்தினாலும் குறைந்தளவு ஸ்டீம் போதுமானது.

கறையை அகற்றுதல்: கறையை உடனடியாக அகற்ற வேண்டியிருந்தால், ஓர் உலர்ந்த துணிமீது பட்டாடையின் கறை படிந்த பாகம் இருக்கும்படி வையுங்கள். பிறகு ஓர் ஈர துணியால் அதன் மேல் பாகத்தை தட்டுங்கள், தேய்க்காதீர்கள். அதற்குப் பின் டிரை-கிளீன் செய்யுங்கள்.

பத்திரப்படுத்துதல்: ஈரப்பதமுள்ள இடத்தில் வைக்காதீர்கள்; பூச்சிகள், வண்டுகள் அண்டாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். வெளிச்சம் அதிகமாகப் படும் இடத்தில் வைக்காதீர்கள். ஸ்பாஞ்சு ஹாங்கர்களில் (sponge-padded hangers) தொங்கவிடுங்கள் அல்லது அதிகம் மடிக்காமல் அலமாரியில் வையுங்கள்.

[பக்கம் 25-ன் படம்]

பட்டு கக்கூன்கள்

[பக்கம் 26-ன் படங்களுக்கான நன்றி]

ஃபோட்டோக்கள் 7-9: Matsuida Machi, Annaka City, Gunma Prefecture, Japan; 10 and close-up pattern: Kiryu City, Gunma Prefecture, Japan