Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பூமியில் சமாதானம் ஒருவழியாக!

பூமியில் சமாதானம் ஒருவழியாக!

பூமியில் சமாதானம் ஒருவழியாக!

அரசியல் சுதந்திரத்தையும் ஆன்மீக சுத்தத்தையும் வன்முறையின் மூலமே அடைய முடியும்​—⁠அழிவுக்குரிய சக்தியால் மாத்திரமே வேண்டாத ஆட்சியாளர்களை அடியோடு அகற்ற முடியும்⁠—⁠என சிலர் நினைக்கிறார்கள். அதுமட்டுமல்ல, சில அரசாங்கங்கள் மக்களிடையே திகிலை ஏற்படுத்தி, நாட்டில் ஒழுங்கை நிலைநாட்டுகின்றன, குடிமக்களைக் கட்டுப்பாட்டில் வைக்கின்றன. கொடுங்கோன்மையைக் கருவியாகப் பயன்படுத்தி நல்லாட்சி வழங்கலாம், சமூகத்தைத் திருத்திவிடலாம் என்பதெல்லாம் உண்மையென்றால் நாட்டில் அமைதியும், செழுமையும், ஸ்திரத்தன்மையும் ஏற்பட்டிருக்க வேண்டும். அதோடு, வன்முறையும் பயமும் தணிந்திருக்க வேண்டும். இதெல்லாம் நடந்திருக்கிறதா என்ன?

உண்மையில், கொடுங்கோல் ஆட்சி உயிரின் மதிப்பை மலிவாக்கி விட்டிருக்கிறது, இரத்தவெறியையும் கொடூரத்தையும் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது. இதற்கு ஆளாகிறவர்கள் வேதனை தாங்கமுடியாமல் பழிக்குப் பழி வாங்க ஆரம்பித்துவிடுகிறார்கள், இதைக் கட்டுப்படுத்த மேலுமான அடக்குமுறையைக் கையாள வேண்டியிருக்கிறது. இதனால், பழிவாங்கும் படலங்கள் தொடர்கதையாகின்றன.

வன்முறை​—⁠பிரச்சினைகளுக்குத் தீர்வல்ல

அரசாங்க, மத, சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மனிதர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக முயன்று வந்திருக்கிறார்கள். ஆனால், அவர்களுடைய முயற்சிகள் எல்லாம் மண்ணைத்தான் கவ்வியிருக்கின்றன. இது, பைபிள் பின்வருமாறு சொல்வதை உண்மையென நிரூபிக்கிறது: “கர்த்தாவே, மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்லவென்றும், தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்லவென்றும் அறிவேன்.” (எரேமியா 10:23) இயேசுவும் இவ்வாறு கூறினார்: “ஞானம் அதன் செயல்களால் தீர்மானிக்கப்படுகிறது.” (மத்தேயு 11:19, ஈஸி டு ரீட் வர்ஷன்) இன்னும் குறிப்பாகச் சொன்னால், தீவிரவாதம் ஒரு தவறான கொள்கை என பைபிள் நியமங்கள் சுட்டிக்காட்டுகின்றன. தீவிரவாதத்தால் சுதந்திரமோ சந்தோஷமோ கிடைக்கவில்லை; மாறாக, சாவும் துயரமும் நாசமும்தான் விளைவடைந்திருக்கின்றன. இந்த மோசமான விளைவுகளைத்தான் 20-⁠ம் நூற்றாண்டு சந்தித்தது, 21-⁠ம் நூற்றாண்டும்கூட இதையே சந்தித்து வருகிறது. தீவிரவாதம் ஒரு தீர்வாக இல்லாமல், தீர்க்கப்பட வேண்டிய ஒரு பிரச்சினையாகவே இருக்கிறது என அநேகர் சொல்கிறார்கள்.

உதாரணமாக, தீவிரவாதிகளின் வன்முறையால் சின்னாபின்னமான ஒரு நாட்டைச் சேர்ந்த இளம் பெண் இவ்வாறு கூறினாள்: “என் வீட்ல இருக்கிறவங்ளோ ஃபிரண்ட்ஸுங்களோ யாருமே செத்துப்போகக் கூடாதுன்னுதான் தினமும் நினைக்கிறேன். . . . அற்புதமா ஏதாவது நடந்தாத்தான் இந்த நிலை மாறும்.” அவளுடைய வார்த்தைகள் அநேகருடைய மனதைப் படம்பிடித்துக் காட்டுகின்றன: மனித பிரச்சினைகளுக்குப் பரிகாரம் மனிதர் கைகளில் இல்லை. தீவிரவாதத்தையும் தற்போதுள்ள மற்ற பிரச்சினைகளையும் படைப்பாளர் மாத்திரமே தீர்க்க முடியும். ஆனால், நாம் ஏன் அவரை நம்ப வேண்டும்?

கடவுள் நமது நம்பிக்கைக்குத் தகுதியானவர்—⁠ஏன்?

முதல் காரணம்: படைப்பாளரான யெகோவாவே நமக்கு உயிரைக் கொடுத்தவர், நாம் அதை சமாதானத்தோடும் திருப்தியோடும் மகிழ்ந்து அனுபவிக்கவே அவர் விரும்புகிறார். கடவுளுடைய தீர்க்கதரிசியான ஏசாயா இவ்வாறு எழுதுவதற்குத் தூண்டப்பட்டார்: “இப்பொழுதும் கர்த்தாவே [யெகோவாவே], நீர் எங்களுடைய பிதா, நாங்கள் களிமண்; நீர் எங்களை உருவாக்குகிறவர், நாங்கள் அனைவரும் உமது கரத்தின் கிரியை.” (ஏசாயா 64:8) ஆம், யெகோவாவே மனிதகுலத்தின் தகப்பன், எல்லா தேசத்தவருமே அவருக்கு அருமையானவர்கள். அநீதி, பகைமை ஆகியவற்றின் விளைவாக ஏற்பட்ட தீவிரவாதத்திற்கு அவர் காரணர் அல்ல. ஞானியான சாலொமோன் ராஜா ஒரு சமயம் இவ்வாறு கூறினார்: “இதோ, தேவன் மனுஷனைச் செம்மையானவனாக உண்டாக்கினார்; அவர்களோ அநேக உபாயதந்திரங்களைத் தேடிக்கொண்டார்கள்.” (பிரசங்கி 7:29) எனவே, மனிதருடைய அக்கிரமமும் பிசாசுகளின் செல்வாக்குமே தீவிரவாதத்தின் ஆணிவேராக இருக்கின்றனவே தவிர கடவுளுடைய பாகத்தில் குறையிருப்பதாகச் சொல்ல முடியாது.​—எபேசியர் 6:11, 12.

இரண்டாவது காரணம்: அவர் மனிதரைப் படைத்தவராக இருப்பதால், மனிதகுலத்தின் பிரச்சினைகளுக்குரிய காரணத்தையும் அவற்றைத் தீர்ப்பதற்கான வழிகளையும் வேறு யாரைக் காட்டிலும் அவர் நன்றாக அறிந்திருக்கிறார். நீதிமொழிகள் 3:19-⁠ல் இந்த உண்மையை பைபிள் குறிப்பிடுகிறது: “கர்த்தர் ஞானத்தினாலே பூமியை அஸ்திபாரப்படுத்தி, புத்தியினாலே வானங்களை ஸ்தாபித்தார்.” கடவுள்மீது முழு நம்பிக்கை வைத்து, பூர்வகால மனிதர் ஒருவர் இவ்வாறு எழுதினார்: “எனக்கு எங்கிருந்து உதவி வரும்? வானத்தையும் பூமியையும் படைத்த யெகோவாவிடமிருந்து எனக்கு உதவி வரும்.”​—சங்கீதம் 121:1, 2, NW.

மூன்றாவது காரணம்: இரத்தவெறிபிடித்த வன்முறைகளைத் தடுத்துநிறுத்த அவர் வல்லவராக இருக்கிறார். நோவாவின் காலத்தில், இந்தப் “பூமி கொடுமையினால் [அதாவது, வன்முறையினால்] நிறைந்திருந்தது.” (ஆதியாகமம் 6:11) அப்போது, கடவுளுடைய நியாயத்தீர்ப்பு திடீரென வந்தது, அது எல்லாவற்றையும் துடைத்தழித்தது. ஆம், கடவுள் ‘பூர்வ உலகத்தையும் தப்பவிடாமல், . . . அவபக்தியுள்ளவர்கள் நிறைந்த உலகத்தின்மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணினார்.’​—2 பேதுரு 2:⁠5.

நோவாவின் நாளில் சம்பவித்த ஜலப்பிரளயத்திலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டுமென பைபிள் குறிப்பிடுகிறது: “கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்கவும், அக்கிரமக்காரரை ஆக்கினைக்குள்ளானவர்களாக நியாயத்தீர்ப்பு நாளுக்கு வைக்கவும் அறிந்திருக்கிறார்.” (2 பேதுரு 2:9) மேம்பட்ட வாழ்க்கை வாழ உள்ளப்பூர்வமாய் விரும்புகிறவர்கள் யார் என்பதையும், மற்றவர்களுடைய வாழ்க்கையைக் கெடுக்கிறவர்கள் யார் என்பதையும் கடவுளால் அடையாளம் கண்டுகொள்ள முடியும். ஆகவே, மற்றவர்களுடைய வாழ்க்கையைக் கெடுக்கிற ‘தேவபக்தியற்ற மனிதரை அழிக்க’ அவர் தீர்மானித்திருக்கிறார். சமாதானத்தை விரும்புகிறவர்களுக்கோ நீதி வாசமாயிருக்கும் புதிய பூமியைத் தயார்படுத்தி வருகிறார்.​—⁠2 பேதுரு 3:7, 13.

ஒருவழியாக பூமியில் சமாதானம்!

மனிதகுலத்தைக் குறிப்பதற்கு “பூமி” என்ற வார்த்தையை பைபிள் எழுத்தாளர்கள் அடிக்கடி பயன்படுத்தினார்கள். உதாரணமாக, “பூமியெங்கும்,” அதாவது அக்காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் அனைவராலும் ஒரே பாஷை பேசப்பட்டதாக ஆதியாகமம் 11:1 கூறுகிறது. இந்த அர்த்தத்தில்தான் அப்போஸ்தலன் பேதுரு “புதிய பூமி”யைப் பற்றி எழுதினார். வன்முறையும் பகைமையும் நீங்கி, நீதியும் நியாயமும் நிரந்தரமாகக் குடிகொள்ளும் விதத்தில் மனித சமுதாயத்தை யெகோவா தேவன் புதுப்பிப்பார். பைபிளில் மீகா 4:3-⁠ல் உள்ள ஒரு தீர்க்கதரிசனம் இவ்வாறு கூறுகிறது: “அவர் திரளான ஜனங்களுக்குள் நியாயந்தீர்த்து, தூரத்திலுள்ள பலத்த ஜாதிகளைக் கடிந்துகொள்ளுவார்; அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அறிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஒரு ஜாதிக்கு விரோதமாய் மறுஜாதி பட்டயம் எடுப்பதில்லை; இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.”

இந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேறும்போது மக்கள் எப்படி வாழ்வார்கள்? மீகா 4:4 இவ்வாறு கூறுகிறது: “அவனவன் தன்தன் திராட்சச் செடியின் நிழலிலும், தன்தன் அத்திமரத்தின் நிழலிலும் பயப்படுத்துவார் இல்லாமல் உட்காருவான்.” அத்தகைய பரதீஸ் பூமியில், தீவிரவாதிகள் அடுத்து எப்போது தாக்கப் போகிறார்களோ என்ற பயத்தில் யாருமே வாழ மாட்டார்கள். இந்த வாக்குறுதியை நீங்கள் நம்பலாமா? நிச்சயமாக! ஏனெனில், “சேனைகளுடைய கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்று.”​—மீகா 4:⁠4.

ஆகவே, தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகரிக்கும்போதும் வன்முறையின் காரணமாகத் தேசங்கள் நடுங்கும்போதும், யெகோவாமீது நம்பிக்கை வைப்பதே சமாதானத்தை நாடுகிறவர்களுக்கு ஒரே பரிகாரமாகும். அவரால் தீர்க்க முடியாத பிரச்சினை எதுவுமே இல்லை. தீமையையும் துன்பத்தையும், ஏன் மரணத்தையும்கூட அவர் ஒழித்துவிடுவார். பைபிள் இவ்வாறு கூறுகிறது: ‘அவர் மரணத்தை ஜெயமாக விழுங்குவார்; கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைப்பார்.’ (ஏசாயா 25:8) இப்பொழுது அநேகருடைய அருமையான தேசங்கள் வேதனையிலும் பயத்திலும் தத்தளிக்கின்றன. ஆனால், விரைவில் அங்கெல்லாம் சமாதானம் பூத்துக்குலுங்கும். “பொய்யுரையாத” கடவுளால் வாக்குறுதி அளிக்கப்பட்ட அந்தச் சமாதானமே மனிதருக்கு மிகவும் தேவை.​—தீத்து 1:3; எபிரெயர் 6:17, 18.

[பக்கம் 9-ன் பெட்டி/படங்கள்]

துப்பாக்கி குண்டுகளையும் வெடிகுண்டுகளையும்விட சக்திவாய்ந்தது

அரசியல் சீர்திருத்தத்திற்கு ஒரே வழி வன்முறையைக் கையாளுவதுதான் என ஒரு காலத்தில் நம்பியவர்கள் சொல்வதைக் கேளுங்கள்:

“சரித்திர புத்தகங்களை வாசிக்கும்போது, அரசர்களும் அதிகாரிகளும் எப்போதுமே ஏழைபாழைகளை அடக்கி ஆண்டு வந்திருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்டேன். கீழ்த்தட்டு மக்களின் அவல நிலையைப் புரிந்து கொண்டேன். இதற்கெல்லாம் எப்படித்தான் முடிவு வரப்போகிறதோ என்று யோசித்தேன். அதிகாரவர்க்கத்தின் கொட்டத்தை அடக்க ஒரே வழி ஆயுதம் எடுப்பதுதான் என்ற முடிவுக்கு வந்தேன்.”​—⁠ராமான். a

◼ “நான் வன்முறை போராட்டங்களில் இறங்கினேன். அதிகாரிகளைப் புறக்கணிக்க வேண்டும்; உலக மக்களிடையே உள்ள ஏற்றத்தாழ்வுகளை வேரறுக்கும் ஒரு சமுதாயத்தை உருவாக்க வேண்டும், அதுவே என்னுடைய இலட்சியமாக இருந்தது.”​—⁠லூகான்.

◼ “சிறுவயதிலிருந்தே அநியாயமான காரியங்களைப் பார்த்து என் மனம் வேதனைப்பட்டது. ஏழ்மை, குற்றச்செயல்கள், தரமற்ற கல்வி, மருத்துவ வசதி குறைவு என எத்தனையோ அநீதி இழைக்கப்படுவதைப் பார்த்திருக்கிறேன். ஆயுதத்தை எடுத்து கைவரிசையைக் காட்டினால்தான் கல்வி, மருத்துவ வசதி, வீடு, வேலை என எல்லாமே கிடைக்குமென நினைத்தேன். பிறரிடம் கண்ணியமாகவும் மரியாதையாகவும் நடக்காத எவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்றும்கூட நினைத்தேன்.”​—⁠பீட்டர்.

◼ “நானும் என்னுடைய கணவரும் ஓர் இரகசிய அமைப்பின் அங்கத்தினர்களாக இருந்தோம். அது வன்முறையைத் தூண்டிவிடும் ஓர் அமைப்பு. சமுதாய நலனையும் ஒழுங்கையும் கட்டிக்காத்து, சமத்துவத்தை ஏற்படுத்துகிற ஓர் அரசாங்கத்தை அமைப்பதே எங்களுடைய இலட்சியமாக இருந்தது. அரசாங்கத்திற்கு எதிராகப் புரட்சி செய்வதுதான் நீதியை நிலைநாட்டுவதற்கு ஒரே வழி என நாங்கள் நினைத்தோம்.”​—⁠லூர்டஸ்.

இவர்கள் எல்லாருமே கஷ்டப்படுகிற மக்களுக்கு வன்முறையின் மூலம் உதவ வழிதேடினார்கள். ஆனால் இதைவிட மேலான வழி இருப்பது பற்றி யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படித்த பிறகு அறிந்துகொண்டார்கள். “மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்க மாட்டாதே” என யாக்கோபு 1:20-⁠ல் பைபிள் குறிப்பிடுகிறது. “மனிதனுடைய கோபம் கடவுளுடைய நீதியான நோக்கத்தை நிறைவேற்றுவதில்லை” என டுடேஸ் இங்லிஷ் வர்ஷன் குறிப்பிடுகிறது.

ஆக, கடவுளுடைய ஆட்சியால் மட்டுமே மனித சமுதாயத்தைச் சீர்திருத்த முடியும். சீக்கிரத்தில் அவருடைய அரசாங்கம் அதைத்தான் செய்யப்போகிறது என்பதை பைபிள் தீர்க்கதரிசனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உதாரணமாக, மத்தேயு 24-⁠ம் அதிகாரத்திலும் 2 தீமோத்தேயு 3:1-5-⁠லும் உள்ள தீர்க்கதரிசனங்கள் அதைச் சுட்டிக்காட்டுகின்றன. யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படித்து நீங்களும் இந்தச் சத்தியங்களை அறிந்துகொள்ளும்படி உங்களை ஊக்குவிக்கிறோம்.

[அடிக்குறிப்பு]

a பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.