Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நாம் நல்லவர்களாக அல்லது கெட்டவர்களாக இருப்பதற்கு என்ன காரணம்?

நாம் நல்லவர்களாக அல்லது கெட்டவர்களாக இருப்பதற்கு என்ன காரணம்?

பைபிளின் கருத்து

நாம் நல்லவர்களாக அல்லது கெட்டவர்களாக இருப்பதற்கு என்ன காரணம்?

சரித்திர ஏடுகளைப் புரட்டிப் பார்த்தால் முழுக்க முழுக்க பகை உணர்வும் இரத்தக் கறைகளும்தான் படிந்திருக்கின்றன. ஆனால், உலகில் பெருந்துயரங்கள் அரங்கேறிய போதெல்லாம் அசாதாரணமான மனிதாபிமானச் செயல்களும், சுயதியாகச் செயல்களும் தலைதூக்கியுள்ளன. ஆனால், ஒருவர் ஈவிரக்கமில்லாமல் உயிர்களைக் கொல்லும்போது இன்னொருவர் இரக்கமே உருவாக திகழ்ந்து நற்பணி ஆற்றுவது ஏன்? மனித இனத்தில் சில சமயங்களில் மிருக குணங்கள் தலைகாட்டுவது ஏன்?

அபூரணத்தன்மையும் மனசாட்சியும்

“மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறுவயது தொடங்கிப் பொல்லாததாயிருக்கிறது” என்று பைபிள் வெளிப்படையாகச் சொல்கிறது. (ஆதியாகமம் 8:21) அதனால்தான் பிள்ளைகள் எப்போதும் குறும்பு செய்கிறார்கள். (நீதிமொழிகள் 22:15) தவறு செய்யும் எண்ணம் பிறப்பிலிருந்தே நம் அனைவரிடமும் இருக்கிறது. (சங்கீதம் 51:5) அதனால், எதிர்நீச்சல் போட எப்படி முயற்சி தேவையோ அப்படியே நல்லது செய்யவும் முயற்சி தேவை.

என்றாலும், நமக்குள் மனசாட்சி என்ற ஒன்றும் இருக்கிறது. நல்லது கெட்டதை பகுத்தறிய நமக்குள் இருக்கும் இந்தத் திறன், பண்புள்ள மனிதனாய் நடக்க நமக்குத் துணைபுரிகிறது. இதனால்தான் கடவுளைப் பற்றி எதுவும் தெரியாதவர்கள்கூட அன்புடனும், நேர்மையுடனும் நடந்துகொள்கிறார்கள். (ரோமர் 2:14, 15) இருந்தாலும், நாம் ஏற்கெனவே பார்த்தபடி தவறு செய்வதற்கான எண்ணம் நமக்குள் ஒட்டிக்கொண்டிருப்பதால் நல்லது செய்வதற்கான ஆசை எழும்போது பிரச்சினை உருவாகிறது. இந்தப் பிரச்சினைக்கு வேறு எதுவும் காரணமாக இருக்கிறது?

கெட்ட சுற்றுச்சூழல்

பச்சோந்தி அதன் சுற்றுச்சூழலுக்கு ஏற்ப நிறத்தை மாற்றிக்கொள்கிறது. அதுபோல், குற்றவாளிகளைக் கூட்டாளிகளாகக் கொண்டவர்கள் அவர்களுடைய கேடுகெட்ட குணங்களைக் கற்றுக்கொள்கிறார்கள். ‘ஒரு கூட்டத்தார் தவறு செய்தால் அவர்களோடு சேராதீர்கள்’ என்று பைபிள் எச்சரிக்கிறது. (யாத்திராகமம் 23:2, ஈஸி டு ரீட் வர்ஷன்) ஆனால், நேர்மையும் நியாயமும் ஒழுக்கமுமுள்ள ஆட்களோடு எப்போதும் சகவாசம் வைத்துக்கொண்டால் நல்லது செய்ய தூண்டப்படுவோம்.—நீதிமொழிகள் 13:20.

என்றாலும், தவறு செய்கிறவர்களோடு நாம் கூட்டு சேர்வதில்லை என்பதற்காக தவறு செய்யும் எண்ணம் நமக்கு வராது என்று நினைக்க முடியாது. நாம் அபூரணர்களாக இருப்பதால், தவறு செய்ய வேண்டுமென்ற எண்ணம் நம் மனதின் ஓரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கலாம், வாய்ப்பு கிடைத்தால் அது எட்டிப்பார்க்கலாம். (ஆதியாகமம் 4:7) ஏன், மீடியாக்கள் மூலமாகவும் தீமை நம் வீட்டுக்குள் நுழையலாம். விடியோ கேம்ஸ், டிவி நிகழ்ச்சிகள், சினிமாக்கள் யாவும் வன்முறையையும் பழிவாங்குதலையுமே ஆதரிக்கின்றன. அதுமட்டுமல்ல, மனிதன் படும் துன்பங்களையும் துயரங்களையும் சித்தரிக்கும் உலகச் செய்திகளையோ உள்ளூர் செய்திகளையோ நாம் திரும்பத் திரும்ப பார்த்துக்கொண்டே இருந்தால் நம் உள்ளம் மறத்துப்போய்விடும்.

இந்தக் கெட்ட சுற்றுச்சூழலுக்கு காரணம் என்ன? “இந்த உலகம் முழுவதும் பொல்லாதவனுடைய கைக்குள் கிடக்கிறது” என்று பைபிள் பதில் சொல்கிறது. (1 யோவான் 5:19) பிசாசாகிய சாத்தானாய் இருக்கும் அந்தப் ‘பொல்லாதவன்’ பொய்யனாகவும் கொலைகாரனாகவும் பைபிளில் சித்தரிக்கப்படுகிறான். (யோவான் 8:44) அவன் இந்த உலகத்தின் செல்வாக்கைக் கொண்டு தீமையைப் பரப்புகிறான்.

இத்தனை விஷயங்கள் நம் சிந்தையையும் செயலையும் செல்வாக்கு செலுத்துவதால் தாங்கள் செய்யும் தவறுகளுக்குத் தாங்கள் பொறுப்பாளி அல்ல என்று சிலர் நியாயம் பேசலாம். ஆனால், அப்படி நினைப்பது சரியா? ஒரு காரை ஸ்டியரிங் வீல் கட்டுப்படுத்துவது போலவும், ஒரு கப்பலை சுக்கான் கட்டுப்படுத்துவது போலவும், உடலை நம் மனம் கட்டுப்படுத்துகிறது.

நீங்கள் நல்லவரா கெட்டவரா—உங்கள் கையில்

நன்மையோ தீமையோ, நாம் என்ன செய்தாலும் முதலில் யோசித்துவிட்டுதான் செய்கிறோம். நல்ல, ஒழுக்கமான விஷயங்களை மனதில் விதைத்தால் நல்ல செயல்களே முளைக்கும். மறுபட்சத்தில், சுயநல ஆசைகள் நம் மனதில் வேர்விட அனுமதித்தால் கெட்ட செயல்களே விளையும். (லூக்கா 6:43-45; யாக்கோபு 1:14, 15) எனவே, ஒரு மனிதன் நல்லவனாக இருப்பதும் கெட்டவனாக இருப்பதும் அவன் கையில்தான் இருக்கிறது என்று சொல்லலாம்.

நல்லது செய்ய கற்றுக்கொள்ள முடியும் என்று பைபிள் சொல்கிறது. (ஏசாயா 1:16, 17) நல்லது செய்வதற்கு அன்பு ஊக்கமளிக்கிறது; ஏனென்றால், “அன்பு காட்டுகிறவன் சக மனிதருக்குத் தீமை செய்ய மாட்டான்.” (ரோமர் 13:10) நாம் பிறர்மீது அன்பை வளர்த்துக்கொள்ளும்போது அவர்களுக்கு எந்தக் கெடுதலும் நினைக்கமாட்டோம்.

அமெரிக்கா, பென்ஸில்வேனியாவைச் சேர்ந்த ரே என்பவர் அதைத் தன் அனுபவத்தில் கண்டார். சிறுவயது முதல் சண்டை போட்டே பழகிய இவருக்கு “பன்ச்” என்று மக்கள் பெயர் வைத்துவிட்டார்கள். இவருக்கு முன்கோபமும் அதிகம். ஆனால், இவர் பைபிள் நியமங்களைக் கடைப்பிடித்து வந்ததால் நாளடைவில் மாற்றங்கள் செய்தார். இருந்தாலும், மாற்றங்கள் அவ்வளவு சுலபமாக ஏற்படவில்லை. சில சமயங்களில் பைபிள் எழுத்தாளரான பவுல் உணர்ந்தது போல் இவரும் உணர்ந்தார்: “நன்மை செய்ய விரும்புகிற எனக்குள் தீமை இருக்கிறது.” (ரோமர் 7:21) பல வருட போராட்டத்திற்குப் பிறகு ரே இப்போது, ‘தீமையை . . . நன்மையால் வெல்ல’ கற்றிருக்கிறார்.—ரோமர் 12:21.

‘நல்லவர்களின் வழியிலே நடக்க’ முயற்சி செய்தால் கைமேல் பலன் கிடைக்கும் என்று ஏன் சொல்லலாம்? (நீதிமொழிகள் 2:20-22) ஏனென்றால், கடைசியில் நன்மையே தீமையை வெல்லும். “பொல்லாதவர்கள் அறுப்புண்டு போவார்கள்; . . . இன்னுங் கொஞ்சநேரந்தான், அப்போது துன்மார்க்கன் இரான்; . . . சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்” என்று பைபிள் சொல்கிறது. (சங்கீதம் 37:9-11) சீக்கிரத்தில், தீமையைச் சுவடு தெரியாமல் கடவுள் ஒழித்துவிடுவார். நல்லது செய்ய கடினமாய் உழைப்பவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது! (g10-E 04)

நீங்கள் சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா?

● நம் செயல்களுக்கு யார் பொறுப்பு? —யாக்கோபு 1:14.

● நம்மால் நல்லவர்களாக மாற முடியுமா? —ஏசாயா 1:16, 17.

● தீமை என்றாவது ஒழியுமா?—சங்கீதம் 37:9, 10; நீதிமொழிகள் 2:20-22.

[பக்கம் 31-ன் படங்கள்]

ஒரு மனிதன் நல்லவனாக இருப்பதும் கெட்டவனாக இருப்பதும் அவன் கையில்தான் இருக்கிறது