Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பேட்டி | பவோலா கையோட்ஸி

விஞ்ஞானி ஒருவர் தன் மதநம்பிக்கையைப் பற்றி பேசுகிறார்

விஞ்ஞானி ஒருவர் தன் மதநம்பிக்கையைப் பற்றி பேசுகிறார்

இத்தாலியில் உள்ள ஃபராரா பல்கலைக்கழகத்தில் டாக்டர் பவோலா கையோட்ஸி, மூலக்கூறு உயிரியல் நிபுணராக 20 வருடங்களுக்கும்மேல் வேலை செய்கிறார். உயிர்வேதியியல் பற்றியும் தன் மதநம்பிக்கையைப் பற்றியும் விழித்தெழு! நிபுணரிடம் மனம் திறக்கிறார்.

உங்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்கிறீர்களா?

என் அப்பா ஷூ தைக்கும் தொழில் செய்தார். அம்மா, பண்ணை வேலை செய்தார். எனக்கோ விஞ்ஞானி ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. என் வீட்டைச் சுற்றியிருந்த அழகான பூக்கள், பறவைகள், பூச்சிகளைப் பார்த்துப் பார்த்து வியந்துபோனேன். மனிதர்களைவிட புத்திக்கூர்மையுள்ள ஒருவர்தான் அதையெல்லாம் படைத்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன்.

அப்படியென்றால், ஆரம்பத்திலிருந்தே உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இருந்ததா?

இல்லை. நான் சிறுமியாக இருந்தபோது கடவுளைப் பற்றி நிறையக் கேள்விகள் என் மனதில் எழ ஆரம்பித்தன. என் அப்பா திடீரென்று மாரடைப்பில் இறந்துவிட்டார். எவ்வளவோ அழகான காரியங்களைப் படைத்த கடவுள் கஷ்டத்தையும் மரணத்தையும் ஏன் அனுமதிக்கிறார் என்று யோசிக்க ஆரம்பித்தேன்.

அறிவியல் ஆராய்ச்சி இதற்கான பதிலைக் கண்டுபிடிக்க உதவியதா?

ஆரம்பத்தில் அது எனக்கு உதவவில்லை. நான் மூலக்கூறு உயிரியல் நிபுணராக ஆன பிறகு சாவைப் பற்றி ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தேன். தசை வீக்கத்திற்கும் தசை அழுகல் நோய்க்கும் காரணமாக உள்ள செல் அழிவைப் பற்றி அல்ல, ஆனால் இயற்கையாக நடக்கிற செல்சிதைவைப் பற்றி ஆராய்ச்சி செய்தேன். இந்தச் செல்சிதைவு நம் ஆரோக்கியத்திற்கு மிகமிக முக்கியம்; என்றாலும், சமீப காலம்வரை விஞ்ஞானிகள் அதைப் பற்றிய ஆராய்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவே இல்லை.

உடலில் செல்சிதைவு ஏற்படுவது எவ்விதத்தில் முக்கியம் எனச் சொல்கிறீர்கள்?

நம் உடலில் கண்ணுக்குத் தெரியாத கோடானகோடி செல்கள் இருக்கின்றன. இவையெல்லாமே செத்து, பின்பு புதிய செல்களால் மாற்றீடு செய்யப்பட வேண்டும். செல்களின் வாழ்நாள் காலம் வகைக்கு வகை வேறுபடும். சில செல்கள் சில வாரங்களுக்கு ஒருமுறை மாற்றீடு செய்யப்படுகின்றன. சில செல்கள் பல வருடங்களுக்கு ஒருமுறை மாற்றீடு செய்யப்படுகின்றன. செல்சிதைவு ஏற்படுவதும் புதிய செல்கள் உருவாவதும் சமச்சீராக நடைபெற வேண்டும்.

அப்படி நடக்காவிட்டால் என்ன ஆகும்?

சில ஆராய்ச்சிகள் என்ன காட்டுகிறதென்றால், செல்கள் சரியான சமயத்தில் சாகாதபோது மூட்டு அழற்சி நோயோ, புற்றுநோயோ வரக்கூடும். அதேசமயம், செல்கள் சீக்கிரமாகச் செத்துவிட்டால் பார்கின்சன் நோய் அல்லது அல்செய்மர் நோய் வரக்கூடும். இந்த நோய்களை எப்படிக் குணப்படுத்துவது என்பதைப் பற்றியும் நான் ஆராய்ச்சி செய்கிறேன்.

செல்சிதைவைப் பற்றிய ஆராய்ச்சி உங்களை எப்படிப் பாதித்தது?

உண்மையைச் சொன்னால், என்னை ரொம்பவே குழப்பியது. நம்முடைய ஆரோக்கியத்தில் அக்கறையாக உள்ள ஒருவர்தான் அந்த அற்புதமான மாற்றம் நிகழும்படி செல்களை வடிவமைத்திருக்க வேண்டும் என்பது தெளிவாகத் தெரிந்தது. இருந்தாலும், ஜனங்கள் ஏன் கஷ்டப்படுகிறார்கள், ஏன் சாகிறார்கள் என்ற கேள்விகளுக்கு மட்டும் என்னால் பதில் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஆனால், செல்சிதைவு ஏற்படும் விதத்தைப் பார்த்து, அதை ஒருவர் வடிவமைத்திருக்க வேண்டுமென நம்பினீர்களே.

ஆமாம். செல்களின் மலைக்க வைக்கும் இந்தச் செயல்பாட்டைப் பார்க்கும்போது இதை வடிவமைத்தவர் அதிபுத்திசாலியாக இருக்க வேண்டும் என்பது தெளிவாகத் தெரிகிறது. அவர், கடவுளாகத்தான் இருக்க முடியும். மிக சக்திவாய்ந்த நுண்ணோக்கிகளைப் பயன்படுத்தி, செல்சிதைவின்போது நடைபெறுகிற படுசிக்கலான செயல்பாடுகள் பலவற்றை ஆராய்ச்சி செய்கிறேன். சில செயல்பாடுகள், ஒருசில நொடிகளிலேயே செல்சிதைவை ஏற்படுத்துகின்றன. அப்போது செல்கள் தங்களைத் தாங்களே அழித்துக்கொள்கின்றன. செல்சிதைவு செயல்பாடு முழுவதுமே அவ்வளவு அருமையாக இருப்பதைப் பார்க்கும்போது ஆச்சரியமாகவும் பிரமிப்பாகவும் இருக்கிறது.

 

கடவுளைப் பற்றியும் கஷ்டங்களைப் பற்றியும் உங்களுக்குக் கேள்விகள் இருந்தது இல்லையா, அதற்குப் பதில் கிடைத்ததா?

கிடைத்தது! 1991-ல் என் வீட்டுக்கு இரண்டு யெகோவாவின் சாட்சிகள் வந்தார்கள். மனிதர்கள் ஏன் சாகிறார்கள் என்று அவர்களிடம் கேட்டேன். “ஒரே மனிதனால் பாவமும் பாவத்தினால் மரணமும் இந்த உலகத்தில் வந்தது” என்ற பதிலை பைபிளிலிருந்து காட்டினார்கள். (ரோமர் 5:12) முதல் மனிதன் ஆதாம் பாவம் செய்யாமல் இருந்திருந்தால் என்றென்றைக்கும் வாழ்ந்திருப்பான் என்றும் சொன்னார்கள். ஆராய்ச்சியில் நான் தெரிந்துகொண்ட விஷயமும் இவர்கள் சொன்ன விஷயமும் ஒத்திருப்பதைச் சட்டெனப் புரிந்துகொண்டேன். சாக வேண்டுமென்ற நோக்கத்துடன் மனிதர்களைக் கடவுள் படைக்கவில்லை என்பது எனக்குத் தெளிவானது. நம் உடலிலுள்ள கிட்டத்தட்ட எல்லா செல்களும் சீராகப் புதுப்பித்துக்கொள்வதால் சாவில்லாத வாழ்க்கை சாத்தியம்தான்.

பைபிள் கடவுளுடைய புத்தகம் என்று உறுதியாக நம்ப எது உங்களுக்கு உதவியது?

கடவுளைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்று சங்கீதம் 139:16-லிருந்து தெரிந்துகொண்டேன். அந்த வசனம் சொல்கிறது: ‘என் கருவை உம்முடைய கண்கள் கண்டது; என் அவயவங்கள் அனைத்தும், . . . உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது.’ நான் உயிர்வேதியியல் நிபுணராக இருப்பதால் செல்களில் உள்ள மரபியல் தகவல்களைப் பற்றி ஆராய்ச்சி செய்திருக்கிறேன். ஆனால் இந்த வசனத்தை எழுதியவருக்கு இதெல்லாம் எப்படித் தெரிந்தது என்று ஆச்சரியப்பட்டேன். எந்தளவுக்கு ஆழமாக பைபிளைப் படித்தேனோ அந்தளவுக்கு பைபிள் கடவுளுடைய புத்தகம் என்பது உறுதியானது.

பைபிளைப் பற்றித் தெரிந்துகொள்ள உங்களுக்கு எப்படி உதவி கிடைத்தது?

ஒரு யெகோவாவின் சாட்சி எனக்கு பைபிள் படிப்பு நடத்தினார். கடவுள் ஏன் கஷ்டத்தை அனுமதித்திருக்கிறார் என்ற கேள்விக்குப் பதில் தெரிந்துகொண்டேன். அதுமட்டுமல்ல, மரணத்தை நீக்கப்போவதாகக் கடவுள் கொடுத்த வாக்கைப் பற்றியும் தெரிந்துகொண்டேன். (ஏசாயா 25:8) நம்முடைய உடலைப் பரிபூரணமாகச் செயல்பட வைப்பது கடவுளுக்குப் பெரிய விஷயமே இல்லை. அவர் அப்படிச் செய்யும்போது நம்மால் சாவே இல்லாமல் என்றென்றும் வாழ முடியும்.

பைபிளிலிருந்து தெரிந்துகொண்ட விஷயங்களை வைத்து மற்றவர்களுக்கு எப்படி உதவுகிறீர்கள்?

நான் 1995-ல் யெகோவாவின் சாட்சியாக ஆனேன். அதுமுதல், பைபிளைப் பற்றிப் பேச எனக்கு ஒரு சிறிய வாய்ப்பு கிடைத்தால்கூட அதைப் பயன்படுத்திக்கொள்வேன். ஒருசமயம், என்னோடு வேலை செய்தவளின் சகோதரர் தற்கொலை செய்துகொண்டார். அவள் அப்படியே இடிந்துபோய்விட்டாள். தற்கொலை செய்பவர்களை கடவுள் மன்னிக்கவே மாட்டார் என்பது அவளுடைய சர்ச்சின் போதனை. ஆனால், இறந்தவர்களைக் கடவுள் உயிரோடு எழுப்பப்போகிறார் என்று பைபிளிலிருந்து காட்டினேன். (யோவான் 5:28, 29) கடவுள் எவ்வளவு அக்கறையுள்ளவர் என்பதைத் தெரிந்துகொண்டபோது அவள் அளவில்லா ஆறுதலை அடைந்தாள். இப்படி மற்றவர்களுக்கு பைபிள் விஷயங்களைச் சொல்லிக் கொடுக்கும்போது கிடைக்கும் திருப்தி என் அறிவியல் ஆராய்ச்சியைப் பற்றி பேசும்போது எனக்குக் கிடைப்பதில்லை! ▪ (g13-E 01)