Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளுடைய வாக்குறுதிகளை உறுதியாக நம்புங்கள்

கடவுளுடைய வாக்குறுதிகளை உறுதியாக நம்புங்கள்

விசுவாசம் என்பது எதிர்பார்க்கிற காரியங்கள் நிச்சயமாக நடக்கும் என்று உறுதியாக நம்புவதாகும்.எபி. 11:1.

1, 2. யெகோவா தம்முடைய விருப்பத்தை நிச்சயம் நிறைவேற்றுவார் என்பதை எது நிரூபிக்கிறது? எபேசியர் 2:12 அதை எப்படிக் காட்டுகிறது? (ஆரம்பப் படம்.)

கடவுளுடைய அரசாங்கம் மட்டும்தான் நம்முடைய எல்லா பிரச்சினைகளையும் சரிசெய்யும் என்று நாம் உறுதியாக நம்புகிறோம். இதை மற்றவர்களுக்கும் சொல்கிறோம். ஆனால், அந்த அரசாங்கம் கடவுளுடைய விருப்பத்தை நிறைவேற்றும் என்று நாம் எந்தளவுக்கு உறுதியாக நம்புகிறோம்? அதற்கு என்ன ஆதாரங்கள் இருக்கின்றன?—எபி. 11:1.

2 பூமியை யெகோவா எதற்காகப் படைத்தாரோ அந்த விருப்பத்தை நிறைவேற்றத்தான் ஓர் அரசாங்கத்தை ஏற்படுத்தினார். வானத்தையும் பூமியையும் ஆட்சி செய்யும் உரிமை யெகோவாவுக்கு மட்டும்தான் இருக்கிறது என்பதை அந்த அரசாங்கம் நிரூபிக்கும். அதன் ராஜா யார்? அவரோடு யாரெல்லாம் ஆட்சி செய்வார்கள்? அதன் குடிமக்கள் யார்? இவற்றிற்கான பதில்களை ஒப்பந்தங்கள் மூலமாக யெகோவா தெரியப்படுத்தினார். சில ஒப்பந்தங்களை யெகோவா செய்தார்; ஒரு ஒப்பந்தத்தை இயேசு செய்தார். யெகோவா தம்முடைய விருப்பத்தை நிச்சயம் நிறைவேற்றுவார் என்பதை இந்த ஒப்பந்தங்கள் நிரூபிக்கின்றன. இவற்றை நாம் புரிந்துகொள்வது நம் நம்பிக்கையைப் பலப்படுத்தும்.எபேசியர் 2:12-ஐ வாசியுங்கள்.

3. இந்தக் கட்டுரையிலும் அடுத்த கட்டுரையிலும் எதைப் பற்றிச் சிந்திப்போம்?

3 மேசியா ஆட்சி செய்யும் அரசாங்கத்தைப் பற்றிய ஆறு  ஒப்பந்தங்கள் பைபிளில் இருக்கின்றன. (1) ஆபிரகாமோடு செய்த ஒப்பந்தம், (2) திருச்சட்ட ஒப்பந்தம், (3) தாவீதோடு செய்த ஒப்பந்தம், (4) இயேசுவோடு செய்த ஒப்பந்தம், (5) புதிய ஒப்பந்தம், (6) அரசாங்கத்திற்கான ஒப்பந்தம். இந்த ஒவ்வொரு ஒப்பந்தமும் கடவுளுடைய அரசாங்கத்தோடு எப்படிச் சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதை ஆராய்ந்து பார்க்கலாம்; பூமிக்கான தம்முடைய விருப்பத்தை கடவுள் எப்படி நிறைவேற்றுவார் என்பதையும் பார்க்கலாம்.—“ஒப்பந்தங்கள்” என்ற பெட்டியைப் பக்கம் 12-ல் பாருங்கள்.

ஏதேனில் கொடுத்த வாக்குறுதி

4. யெகோவா என்ன மூன்று விஷயங்களைச் சொன்னார்?

4 பூமியைப் படைத்து, மனிதர்கள் குடியிருப்பதற்காக அதைத் தயார்ப்படுத்திய பிறகு மூன்று விஷயங்களை யெகோவா சொன்னார்: (1) “நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக” என்றார். (2) ‘நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள்’ என்று ஆதாம்-ஏவாளிடம் சொன்னார். (3) “நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை” சாப்பிடக்கூடாது என்று கட்டளையிட்டார். (ஆதி. 1:26, 28; 2:16, 17) கடவுள் சொன்னபடியே மனிதனைத் தம்முடைய சாயலில் படைத்தார். மற்ற இரண்டு விஷயங்களை நிறைவேற்றும்படி மனிதர்களுக்குக் கட்டளை கொடுத்தார். மனிதர்கள் கீழ்ப்படிந்திருந்தால் கடவுளுடைய விருப்பம் நிறைவேறியிருக்கும்; ஒப்பந்தங்கள் தேவைப்பட்டிருக்காது.

5, 6. (அ) கடவுளுடைய விருப்பம் நிறைவேறுவதைத் தடுக்க சாத்தான் என்ன செய்தான்? (ஆ) ஏதேனில் எழுந்த கேள்விக்குக் கடவுள் எப்படிப் பதிலளித்தார்?

5 கடவுளுடைய விருப்பம் நிறைவேறக்கூடாது என்று சாத்தான் நினைத்தான். மனிதர்கள் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போனால் கடவுளுடைய விருப்பம் நிறைவேறாமல் போய்விடும் என்று அவனுக்குத் தெரியும். அதனால், “நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை” சாப்பிடும்படி ஏவாளைத் தூண்டினான். (ஆதி. 3:1-5; வெளி. 12:9) இப்படிச் செய்வதன் மூலம், கடவுளுக்கு ஆட்சி செய்யும் உரிமை இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்பினான். யோபுவின் காலத்தில் இன்னொரு கேள்வியை எழுப்பினான். மனிதர்கள் சுயநல காரணத்திற்காகத்தான் கடவுளை வணங்குகிறார்கள் என்று குற்றம் சாட்டினான். (யோபு 1:9-11; 2:4, 5) சாத்தான் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலடி கொடுக்க யெகோவா சில ஒப்பந்தங்களைச் செய்தார்.

6 சாத்தானையும் ஆதாம்-ஏவாளையும் யெகோவா உடனடியாக அழித்திருக்கலாம். ஆனால் அப்படிச் செய்திருந்தால், முழு பூமியும் ஆதாம்-ஏவாளுடைய சந்ததியால் நிரம்ப வேண்டும் என்ற யெகோவாவுடைய விருப்பம் நிறைவேறியிருக்காது. அதனால், அவர்களை அழிக்கவில்லை. சாத்தானின் கேள்விக்குப் பதிலளிப்பதற்காக ஞானமுள்ள படைப்பாளரான யெகோவா ஒரு வாக்குறுதி கொடுத்தார். அதுதான் ஏதேனில் கொடுத்த வாக்குறுதி. யெகோவாவுடைய விருப்பம் நிறைவேறும் என்பதை இந்த வாக்குறுதி தெளிவாகக் காட்டுகிறது.ஆதியாகமம் 3:15-ஐ வாசியுங்கள்.

7. சாத்தானுக்கும் அவனைச் சேர்ந்தவர்களுக்கும் என்ன நடக்கும்?

7 பாம்பிற்கும் அதன் வாரிசுக்கும், அதாவது சாத்தானுக்கும் அவனைச் சேர்ந்தவர்களுக்கும், ஏதேனில் யெகோவா தண்டனை தீர்ப்பு வழங்கினார். சாத்தானை அழிக்கும் அதிகாரத்தை ஆதியாகமம் 3:15-ல் சொல்லப்பட்ட பெண்ணின் வித்துவுக்கு, அதாவது வாரிசுக்கு, கொடுத்தார். இப்படிச் செய்வதன் மூலம் சாத்தானை அழித்துவிட்டு, அவனுடைய ஆட்சியால் வரும் பாதிப்புகளைச் சரிசெய்வார் என்பதைத் தெரியப்படுத்தினார். அதோடு, அதை யார் மூலமாகச் செய்வார் என்பதையும் தெரியப்படுத்தினார்.

8. ஆதியாகமம் 3:15-ல் சொல்லப்பட்ட பெண்ணையும் அவளுடைய வாரிசையும் பற்றி நமக்கு என்ன தெரியும்?

8 ஆதியாகமம் 3:15-ல் சொல்லப்பட்ட பெண்ணின் வாரிசு, பாம்பின் தலையை நசுக்க வேண்டும், அதாவது பிசாசாகிய சாத்தானை ‘அழிக்க வேண்டும்.’ சாத்தான் ஒரு மனிதனாக இல்லாததுபோல், அந்த வாரிசும் நிச்சயம் ஒரு மனிதனாக இருக்க முடியாது. (எபி. 2:14) அப்படியென்றால், அந்தப் பெண்ணும் அடையாள அர்த்தத்தில்தான் சொல்லப்பட்டிருக்க வேண்டும். பாம்பும் அதனுடைய வாரிசும் யார் என்பது ஆரம்பத்திலிருந்தே தெளிவாக இருந்தது. ஆனால், அந்தப் பெண்ணும் அவளுடைய  வாரிசும் யார் என்பது 4,000 வருடங்களுக்கு ரகசியமாகவே இருந்தது. சில ஒப்பந்தங்கள் மூலமாக யெகோவா இந்த ரகசியத்தைத் தெரியப்படுத்தினார். சாத்தானுடைய ஆட்சியால் வரும் பாதிப்புகளைச் சரிசெய்வார் என்பதை இதன்மூலம் தம் ஊழியர்களுக்குத் தெரியப்படுத்தினார்.

ஆபிரகாமோடு செய்த ஒப்பந்தம்

9. ஆபிரகாமோடு யெகோவா என்ன ஒப்பந்தம் செய்தார், அது எப்போது அமலுக்கு வந்தது?

9 ஏதேன் தோட்டத்தில் வாக்குறுதி அளித்து 2,000 வருடங்களுக்குப் பிறகு, ஆபிரகாமோடு யெகோவா ஓர் ஒப்பந்தம் செய்தார். மெசபடோமியாவில் இருந்த ஊர் என்ற தேசத்தைவிட்டு கானானுக்குப் போகும்படி ஆபிரகாமுக்குக் கட்டளை கொடுத்தார். (அப். 7:2, 3) “நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ. நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்; பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும்” என்று ஆபிரகாமுக்கு யெகோவா வாக்குறுதி அளித்தார். (ஆதி. 12:1-3) இந்த வாக்குறுதியைத்தான் ஆபிரகாமோடு செய்த ஒப்பந்தம் என்று சொல்கிறோம். இந்த ஒப்பந்தத்தை யெகோவா எப்போது செய்தார் என்று நமக்குத் தெரியாது. ஆனால், இது எப்போது அமலுக்கு வந்தது என்று தெரியும். கி.மு. 1943-ல் ஆபிரகாமுக்கு 75 வயது இருக்கும்போது ஐப்பிராத்து நதியைக் கடந்தார். அப்போதுதான், இந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது.

10. (அ) கடவுளுடைய வாக்குறுதி மீது ஆபிரகாம் எந்தளவு நம்பிக்கை வைத்திருந்தார்? (ஆ) யெகோவா ஆபிரகாமுக்கு எதைப் படிப்படியாகத் தெரியப்படுத்தினார்?

10 இந்த வாக்குறுதியைப் பற்றி யெகோவா பலமுறை ஆபிரகாமிடம் சொன்னார். ஒவ்வொரு முறையும், அதைப் பற்றிக் கூடுதலான தகவல்களைச் சொன்னார். ஆதியாகமம் 3:15-ல் சொல்லப்பட்ட பெண்ணின் வாரிசு யார் என்று படிப்படியாக ஆபிரகாமுக்குத் தெரியப்படுத்தினார்: அந்த வாரிசு ஆபிரகாமின் சந்ததியில் வருவார்; அந்த வாரிசு ஒரேயொரு  நபரல்ல, பலரைக் குறிக்கும்; அவர்கள் ராஜாக்களாக இருப்பார்கள்; எல்லா எதிரிகளையும் அழிப்பார்கள்; அவர்கள் மூலமாக மனிதர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள். (ஆதி. 13:15-17; 17:1-8, 16) கடவுள் கொடுத்த வாக்குறுதியை ஆபிரகாம் உறுதியாக நம்பினார். அதனால்தான், தன்னுடைய மகனை பலி கொடுக்கும்படி யெகோவா கேட்டபோது அவர் தயங்கவில்லை. அந்தச் சமயத்தில், யெகோவா தம்முடைய வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்று ஆபிரகாமுக்கு மீண்டும் உறுதியளித்தார்.ஆதியாகமம் 22:15-18-ஐயும் எபிரெயர் 11:17, 18-ஐயும் வாசியுங்கள்.

கடவுள் கொடுத்த வாக்குறுதியை ஆபிரகாம் உறுதியாக நம்பினார் (பாரா 10)

11, 12. ஆபிரகாமோடு யெகோவா செய்த ஒப்பந்தம் நிறைவேறியதா? அதனால் நமக்கு என்ன நன்மை?

11 ஆபிரகாமின் சந்ததியில் வந்த இஸ்ரவேலர்கள் கானான் தேசத்திற்குள் போனபோது ஆபிரகாமுக்குக் கடவுள் கொடுத்த வாக்குறுதி நிறைவேறியது. ஆனால், அந்த வாக்குறுதிக்கு இன்னொரு நிறைவேற்றமும் இருக்கிறது. (கலா. 4:22-25) இதைத்தான் அப்போஸ்தலன் பவுல் கலாத்தியர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெளிவாக விளக்கினார். அதாவது, ஆபிரகாமின் சந்ததியில் வந்த வாரிசு, முக்கியமாக இயேசுவையும் அவரோடு ஆட்சி செய்யப்போகும் 1,44,000 பேரையும் குறிக்கிறது. (கலா. 3:16, 29; வெளி. 5:9, 10; 14:1, 4) ‘மேலான எருசலேம்தான்’ ஆதியாகமம் 3:15-ல் சொல்லப்பட்ட பெண்; அதாவது, கடவுளுடைய அமைப்பின் பரலோக பாகம். அது கடவுளுக்கு உண்மையோடு இருக்கும் தேவதூதர்களைக் குறிக்கிறது. (கலா. 4:26, 31) ஆபிரகாமோடு கடவுள் செய்த ஒப்பந்தத்தின்படி, இயேசுவும் 1,44,000 பேரும் ஆட்சி செய்யும்போது ‘பூமியிலுள்ள சகல தேசத்தாரும் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.’

12 கடவுள் ஏற்படுத்திய அரசாங்கத்தின் ராஜா யார், அவரோடு யாரெல்லாம் ஆட்சி செய்வார்கள் என்பதை ஆபிரகாமோடு கடவுள் செய்த ஒப்பந்தம் தெளிவாகக் காட்டுகிறது. கடவுளுடைய அரசாங்கம் கண்டிப்பாக வரும் என்று இந்த ஒப்பந்தம் உறுதியளிக்கிறது. (எபி. 6:13-18) எவ்வளவு காலத்திற்கு இந்த ஒப்பந்தம் அமலில் இருக்கும்? “என்றென்றைக்கும் இந்த உடன்படிக்கை (அதாவது, ஒப்பந்தம்) தொடரும்” என்று பைபிள் சொல்கிறது. (ஆதி. 17:7, ஈஸி டு ரீட் வர்ஷன்) மேசியா ஆட்சி செய்யும் அரசாங்கம் கடவுளுடைய எதிரிகளை எல்லாம் ஒழித்துக்கட்டி, பூமியில் வாழும் நல்ல ஜனங்கள்மீது ஆசீர்வாதங்களைப் பொழியும். (1 கொ. 15:23-26) இந்த ஆசீர்வாதங்களை மக்கள் என்றென்றும் அனுபவிப்பார்கள். நீதியுள்ள மக்கள் இந்த ‘பூமியை நிரப்ப’ வேண்டும் என்ற தம்முடைய விருப்பத்தை யெகோவா நிச்சயம் நிறைவேற்றுவார் என்பதற்கு இந்த ஒப்பந்தம் எப்பேர்ப்பட்ட அத்தாட்சி!—ஆதி. 1:28.

தாவீதோடு செய்த ஒப்பந்தம்

13, 14. தாவீதோடு செய்த ஒப்பந்தத்திலிருந்து மேசியாவின் ஆட்சியைப் பற்றி என்ன தெரிந்துகொள்கிறோம்?

13 ஏதேனில் யெகோவா கொடுத்த வாக்குறுதியிலிருந்தும் ஆபிரகாமோடு அவர் செய்த ஒப்பந்தத்திலிருந்தும் ஒரு முக்கியமான விஷயத்தைத் தெரிந்துகொள்கிறோம். யெகோவா எப்போதுமே நீதியாகவும் நியாயமாகவும் ஆட்சி செய்வார். அதனால், அவர் ஏற்படுத்தின அரசாங்கமும் நீதியாக ஆட்சி செய்யும். (சங். 89:14) மேசியா ஆட்சி செய்யும் அரசாங்கம் என்றைக்காவது அநீதியாக செயல்படுமா? அதை நீக்கிவிட்டு வேறொரு அரசாங்கத்தை ஏற்படுத்த வேண்டியிருக்குமா? இன்னொரு ஒப்பந்தம் இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது.

14 தாவீதிடம் யெகோவா ஒரு வாக்குக் கொடுத்தார். அதைத்தான் தாவீதோடு செய்த ஒப்பந்தம் என்று சொல்கிறோம். (2 சாமுவேல் 7:12, 16-ஐ வாசியுங்கள்.) தாவீது எருசலேமின் ராஜாவாக இருந்தபோது யெகோவா இந்த ஒப்பந்தத்தைச் செய்தார். மேசியா தாவீதுடைய வம்சத்தில்தான் வருவார் என்று வாக்குக் கொடுத்தார். (லூக். 1:30-33) கடவுளுடைய அரசாங்கத்தில் ஆட்சி செய்யும் ‘உரிமையுள்ளவர்’ தாவீதின் சந்ததியில்தான் வருவார் என்பதை இந்த ஒப்பந்தம் உறுதிப்படுத்தியது. (எசே. 21:25-27) தாவீதுடைய சிங்காசனம் ‘என்றென்றைக்கும் உறுதியாக’ இருக்கும்; தாவீதுடைய சந்ததியில் வருபவர் ‘என்றென்றைக்கும் இருப்பார்; அவர் சிங்காசனம் சூரியனைப்போல நிலைநிற்கும்.’ இயேசு ஆட்சி செய்யும்போது இந்த வார்த்தைகள் நிறைவேறும். (சங். 89:34-37) இயேசு எப்போதுமே நீதியாக ஆட்சி  செய்வார்; அவருடைய ஆட்சியில் ஒருநாளும் அநீதி இருக்காது. அந்த ஆட்சியால் வரும் ஆசீர்வாதங்கள் என்றென்றைக்கும் இருக்கும்.

இயேசுவோடு செய்த ஒப்பந்தம்

15-17. (அ) ஆதியாகமம் 3:15-ல் சொல்லப்பட்ட வாரிசு ஏன் குருவாகவும் இருக்க வேண்டும்? (ஆ) இயேசு ஏன் “மெல்கிசேதேக்கின் முறைமையின்படி” குருவாக இருக்க வேண்டும்?

15 ஆதியாகமம் 3:15-ல் சொல்லப்பட்ட பெண்ணின் வாரிசு, ராஜாவாக இருப்பார் என்பதை ஆபிரகாமோடும் தாவீதோடும் செய்த ஒப்பந்தங்கள் தெளிவாக்குகின்றன. ஆனால், அந்த வாரிசு ராஜாவாக மட்டுமே இருந்தால் மனிதர்களுக்குத் தேவையான எல்லா ஆசீர்வாதங்களையும் தந்துவிட முடியாது. குருமார்கள் செய்த வேலையையும் அந்த வாரிசு செய்ய வேண்டும்; மக்களுடைய பாவத்தைப் போக்க உதவ வேண்டும். அப்போதுதான், அவர்கள் யெகோவாவோடு நெருங்கிய பந்தத்திற்குள் வர முடியும். இதற்காக, யெகோவா ஓர் ஒப்பந்தத்தைச் செய்தார். அதைத்தான் இயேசுவோடு செய்த ஒப்பந்தம் என்று சொல்கிறோம்.

16 இயேசுவோடு ஒப்பந்தம் செய்யப்போவதாக தாவீதின் மூலம் யெகோவா தெரியப்படுத்தினார். அந்த ஒப்பந்தத்தில் இரண்டு விஷயங்கள் அடங்கியிருக்கிறது: (1) எதிரிகளை அழிக்க அதிகாரம் கொடுக்கும்வரை கடவுளுடைய வலதுபக்கத்தில் இயேசு உட்கார வேண்டும். (2) “மெல்கிசேதேக்கின் முறைமையின்படி [அவர்] என்றென்றைக்கும்” குருவாக இருக்க வேண்டும். (சங்கீதம் 110:1, 2, 4-ஐ வாசியுங்கள்.) “மெல்கிசேதேக்கின் முறைமையின்படி” என்று ஏன் சொன்னார்? இஸ்ரவேலர்கள் கானான் தேசத்திற்குள் போவதற்கு ரொம்ப காலத்திற்கு முன்பு, “மெல்கிசேதேக்கு சாலேமின் ராஜாவாகவும் உன்னதமான கடவுளுக்குச் சேவை செய்த குருவாகவும் இருந்தார்.” (எபி. 7:1-3) இவரை யெகோவாவே நேரடியாக நியமித்தார். வேறு யாருமே, ராஜாவாகவும் குருவாகவும் இருந்ததாக எந்தப் பதிவும் இல்லை. அதனால்தான், மெல்கிசேதேக்கு “என்றென்றும் குருவாக நிலைத்திருக்கிறார்” என்று பைபிள் சொல்கிறது.

17 மெல்கிசேதேக்கைப் போலவே, இயேசுவை தலைமை குருவாக யெகோவாவே நேரடியாக நியமித்தார். அதனால்தான், “மெல்கிசேதேக்கைப் போலவே நீ என்றென்றும் தலைமைக் குருவாக இருக்கிறாய்” என்று யெகோவா சொன்னார். (எபி. 5:4-6) இந்த ஒப்பந்தம் கடவுளுடைய விருப்பத்தோடு எப்படிச் சம்பந்தப்பட்டிருக்கிறது? நீதியுள்ள மக்கள் பூமியில் வாழ வேண்டும் என்பதுதான் யெகோவாவுடைய விருப்பம். இந்த விருப்பத்தை நிறைவேற்ற மேசியா ஆட்சி செய்யும் அரசாங்கத்தை யெகோவா பயன்படுத்துவார் என்று இந்த ஒப்பந்தம் தெளிவாகக் காட்டுகிறது.

ஒப்பந்தங்களும் கடவுளுடைய அரசாங்கமும்

18, 19. (அ) இதுவரைப் பார்த்த ஒப்பந்தங்களிலிருந்து மேசியா ஆட்சி செய்யும் அரசாங்கத்தைப் பற்றி என்ன தெரிந்துகொண்டோம்? (ஆ) அடுத்த கட்டுரையில் எதைச் சிந்திப்போம்?

18 நாம் இதுவரை பார்த்த ஒப்பந்தங்கள் மேசியா ஆட்சி செய்யும் அரசாங்கத்தோடு எப்படிச் சம்பந்தப்பட்டிருக்கின்றன என்று தெரிந்துகொண்டோம். ஏதேனில் கடவுள் கொடுத்த வாக்குறுதியின்படி, யெகோவா தம்முடைய விருப்பத்தை நிறைவேற்ற அந்தப் பெண்ணின் வாரிசைப் பயன்படுத்துவார் என்று தெரிந்துகொண்டோம். அந்தப் பெண்ணின் வாரிசு யார், அந்த வாரிசுக்கு என்ன பொறுப்பு கொடுக்கப்படும் என்பதையெல்லாம் ஆபிரகாமோடு யெகோவா செய்த ஒப்பந்தம் விளக்கியது.

19 தாவீதோடு யெகோவா செய்த ஒப்பந்தத்திலிருந்து என்ன தெரிந்துகொண்டோம்? அந்த வாரிசு தாவீதின் சந்ததியில் வருவார்; அவருக்கு பூமியை ஆட்சி செய்யும் உரிமை கொடுக்கப்படும்; அவருடைய ஆட்சியினால் வரும் ஆசீர்வாதங்கள் என்றென்றும் நிலைத்திருக்கும். இயேசுவோடு செய்த ஒப்பந்தத்தின்படி, பெண்ணின் வாரிசு மெல்கிசேதேக்கைப் போல குருவாகவும் இருப்பார். இயேசு மட்டுமல்ல, அவரோடு ஆட்சி செய்பவர்களும் மனிதர்களைப் பாவத்திலிருந்து விடுவிக்க உதவுவார்கள். அவர்களும் இயேசுவைப் போலவே ராஜாக்களாகவும் குருமார்களாகவும் இருப்பார்கள். அவர்கள் யார் என்பதை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.