Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளுடைய பெயரைத் தெரிந்துகொள்ள முடியுமா?

கடவுளுடைய பெயரைத் தெரிந்துகொள்ள முடியுமா?

பிரபலமான ஒரு நபரைப் பெயர் சொல்லி அழைப்பதற்கும்... வாழ்த்துச் சொல்வதற்கும்... வாய்ப்புக் கிடைத்தால் அது ஒரு கௌரவமான விஷயம். பொதுவாக, உயர் பதவியில் இருப்பவர்கள் அவர்களுக்கே உரிய பட்டப்பெயர்களாலேயே அழைக்கப்படுகிறார்கள்; உதாரணத்திற்கு, “மாண்புமிகு ஜனாதிபதி,” “மன்னாதி மன்னர்,” “கனம் நீதிபதி” என்றெல்லாம் அழைக்கப்படுகிறார்கள். எனவே, உயர் பதவியில் இருக்கும் ஒருவர், “என்னை நீங்கள் பெயர் சொல்லியே கூப்பிடலாம்” என்று சொன்னால் நீங்கள் அதைக் கௌரவமாகக் கருத மாட்டீர்களா?

உண்மையான கடவுள், “என் நாமம் யேகோவா” என்று பைபிளில் சொல்லியிருக்கிறார். பைபிள், கடவுளுடைய வார்த்தை என அழைக்கப்படுகிறது. (எரேமியா 16:21) “படைப்பாளர்,” “சர்வ வல்லமையுள்ளவர்,” “பேரரசராகிய எஜமானர்” என்று கடவுளுக்கு அநேக பட்டப்பெயர்கள் இருக்கின்றன; என்றாலும், தமது சொந்தப் பெயராலேயே தம்மை அழைக்கும்படி சொல்லி, தமது ஊழியர்களை அவர் கௌரவித்திருக்கிறார்.

உதாரணத்திற்கு, ஒருமுறை மோசே தீர்க்கதரிசி, “ஐயோ! [யெகோவாவே!]” என்று சொல்லி கடவுளிடம் மன்றாடினார். (யாத்திராகமம் [விடுதலைப் பயணம்] 4:10, பொது மொழிபெயர்ப்பு) a எருசலேமில் ஆலயப் பிரதிஷ்டையின்போது சாலொமோன், “கர்த்தாவே [யெகோவாவே]” என்று சொல்லி ஜெபம் செய்யத் தொடங்கினார். (1 இராஜாக்கள் 8:22, 23) ஏசாயா தீர்க்கதரிசி இஸ்ரவேல் மக்கள் சார்பாகக் கடவுளிடம் ஜெபம் செய்தபோது, “[யெகோவாவே] நீரே எங்கள் தந்தை” என்றார். (ஏசாயா 63:16, பொ.மொ.) தம்மைப் பெயர் சொல்லி அழைக்கும்படியே நம்முடைய பரலோகத் தந்தை விரும்புகிறார் என்பது இந்த உதாரணங்களிலிருந்து தெளிவாகத் தெரிகிறது.

யெகோவா என்ற பெயரைச் சொல்லி அவரை அழைப்பது முக்கியம் என்றாலும், அவருடைய பெயரைத் தெரிந்திருப்பதில் நிறைய விஷயங்கள் உட்பட்டுள்ளன. தம்மீது அன்பும் நம்பிக்கையும் வைத்திருக்கிற ஒருவருக்கு யெகோவா இவ்வாறு உறுதியளிக்கிறார்: “என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன்.” (சங்கீதம் 91:14) கடவுளுடைய பெயரைத் தெரிந்துகொள்வதில் நிறைய விஷயங்கள் அடங்கியிருக்க வேண்டுமென்று இதிலிருந்து புரிகிறது. ஏனென்றால், அவருடைய பாதுகாப்பைப் பெற அதுவே முக்கியமான வழி! அப்படியென்றால், யெகோவாவுடைய பெயரைத் தெரிந்துகொள்வதில் என்னவெல்லாம் உட்பட்டிருக்கிறது? (w10-E 07/01)

[அடிக்குறிப்பு]

a இந்த வசனத்திலும், இதையடுத்து வருகிற இரண்டு வசனங்களிலும், “கர்த்தாவே” என யெகோவாவின் ஊழியர்கள் அழைத்ததாக தமிழ் யூனியன் மொழிபெயர்ப்பு (BSI) பைபிள் குறிப்பிடுகிறது. என்றாலும், பைபிள் எழுதப்பட்ட மூலமொழியில், கடவுளை ‘யெகோவா’ என்ற பெயராலேயே அவர்கள் அழைத்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.