Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளுடைய பெயரைத் தெரிந்துகொள்ளத் தடைகள்

கடவுளுடைய பெயரைத் தெரிந்துகொள்ளத் தடைகள்

யெகோவாவின் பெயரை நீங்கள் தெரிந்துகொள்வதையும், அவருடன் ஒரு நெருக்கமான பந்தத்தை அனுபவிப்பதையும் ஓர் எதிரி தடுக்கிறான். யார் அந்தப் பொல்லாத எதிரி? பைபிள் அதற்குப் பதிலளிக்கிறது: “விசுவாசிகளாக இல்லாத அவர்களுடைய மனக்கண்களை இந்த உலகத்தின் கடவுள் குருடாக்கியிருக்கிறான்.” பிசாசாகிய சாத்தானே தேவபக்தியில்லாத இந்த உலகத்தின் கடவுள். ‘கடவுளைப் பற்றிய அருமையான அறிவொளி’ உங்கள் இருதயத்தில் பிரகாசிக்கக் கூடாது என்பதற்காக சாத்தான் உங்களை அறியாமை என்னும் இருளில் வைத்திருக்க வேண்டுமென நினைக்கிறான். யெகோவாவின் பெயரை நீங்கள் தெரிந்துகொள்ளக் கூடாது என்று அவன் நினைக்கிறான். அப்படியென்றால், மக்களுடைய மனக்கண்களை சாத்தான் எப்படிக் குருடாக்கியிருக்கிறான்?—2 கொரிந்தியர் 4:4-6.

கடவுளுடைய பெயரை மக்கள் தெரிந்துகொள்ளாதபடி செய்வதற்கு சாத்தான் பொய் மதத்தைப் பயன்படுத்தியிருக்கிறான். உதாரணத்திற்கு, முற்காலங்களில் சில யூதர்கள், கடவுளுடைய பெயரை உச்சரிக்கக் கூடாது என்ற பாரம்பரியத்தைச் சாக்காக வைத்துக்கொண்டு கடவுளுடைய வார்த்தையை ஓரங்கட்டிவிட்டார்கள். கிறிஸ்தவ சகாப்தத்தின் ஆரம்ப நூற்றாண்டுகளில் பொது வாசிப்பில் ஈடுபட்ட யூதர்களுக்கு, பரிசுத்த வேதாகமத்தில் எங்கெல்லாம் கடவுளுடைய பெயர் வந்ததோ அங்கெல்லாம் அடோனாய் (“கர்த்தர்” என்று அர்த்தம்) என்று வாசிக்கும்படி கட்டளையிடப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. இதன் விளைவாக, மக்கள் கடவுளிடமிருந்து வெகுதூரம் விலகிச் சென்றார்கள். கடவுளோடு வைத்திருக்கும் நெருக்கமான பந்தத்தால் வரும் நன்மைகளை அநேகர் இழந்துவிட்டார்கள். ஆனால், இயேசு என்ன செய்தார்? யெகோவாவின் பெயரைப் பொறுத்தமட்டில் அவருடைய மனப்பான்மை என்னவாக இருந்தது?

இயேசுவும் சீடர்களும் கடவுளின் பெயரைத் தெரிவித்தார்கள்

இயேசு தம் தகப்பனிடம் ஜெபித்தபோது, “நான் . . . உங்களுடைய பெயரைத் தெரியப்படுத்தினேன், இன்னமும் தெரியப்படுத்துவேன்” என்றார். (யோவான் 17:26) அப்படியென்றால், எபிரெய வேதாகமத்தில் கடவுளுடைய பெயர் வருகிற வசனங்களை இயேசு வாசித்தபோது... மேற்கோள் காட்டியபோது... விளக்கியபோது... என அநேக சந்தர்ப்பங்களில் அந்தப் பெயரை நிச்சயம் பயன்படுத்தியிருப்பார். ஆகவே, தமக்கு முன் வாழ்ந்த தீர்க்கதரிசிகளைப் போலவே இயேசுவும் கடவுளுடைய பெயரைத் தாராளமாகப் பயன்படுத்தியிருப்பார். இயேசு ஊழியம் செய்த காலத்தில், பாரம்பரியத்தைக் காரணங்காட்டி யூதர்கள் கடவுளுடைய பெயரைப் பயன்படுத்துவதைத் தவிர்த்திருந்தாலும், இயேசு நிச்சயமாக அப்படிச் செய்திருக்க மாட்டார். “உங்கள் பாரம்பரியத்தினால் கடவுளுடைய வார்த்தையை மதிப்பற்றதாக்கிவிடுகிறீர்கள்” என்று சொல்லி அந்த மதத்தலைவர்களைக் கடுமையாகச் சாடினார்.—மத்தேயு 15:6.

கடவுளுடைய பெயரைத் தெரியப்படுத்துவதில் இயேசு முன்மாதிரி வைத்தார்

இயேசுவை உண்மையாகப் பின்பற்றினவர்கள் அவர் இறந்த பிறகும்கூட கடவுளுடைய பெயரைத் தொடர்ந்து தெரியப்படுத்தி வந்தார்கள். (“ஆரம்பகால கிறிஸ்தவர்கள் கடவுளுடைய பெயரைப் பயன்படுத்தினார்களா?” என்ற பெட்டியைக் காண்க.) கி.பி. 33, பெந்தெகொஸ்தே அன்று கிறிஸ்தவ சபை ஆரம்பிக்கப்பட்ட அதே நாளில், கூடியிருந்த ஆயிரக்கணக்கான யூதர்களிடமும், யூத மதத்திற்கு மாறியவர்களிடமும் யோவேலின் தீர்க்கதரிசனத்தை மேற்கோள் காட்டி, “ யெகோவாவின் பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்கிற ஒவ்வொருவரும் மீட்புப் பெறுவார்கள்” என்று அப்போஸ்தலன் பேதுரு சொன்னார். (அப்போஸ்தலர் 2:21; யோவேல் 2:32) பல தேசங்களைச் சேர்ந்த மக்கள் கடவுளுடைய பெயரைத் தெரிந்துகொள்ள ஆரம்பகால கிறிஸ்தவர்கள் உதவினார்கள். அதனால்தான், எருசலேமில் அப்போஸ்தலர்களுக்கும் மூப்பர்களுக்கும் நடந்த ஒரு கூட்டத்தில் சீடரான யாக்கோபு இவ்வாறு சொன்னார்: ‘கடவுள் . . . புறதேசத்தார்மீது தம் கவனத்தைத் திருப்பி, அவர்கள் மத்தியிலிருந்து தம்முடைய பெயருக்கென்று ஒரு மக்கள் தொகுதியைப் பிரித்தெடுத்தார்.’—அப்போஸ்தலர் 15:14.

இருந்தாலும், கடவுளுடைய பெயரை அடியோடு அகற்றிவிடவேண்டும் என்று தீர்மானமாய் இருந்த சாத்தான் தன் முயற்சியைக் கைவிடவில்லை. அப்போஸ்தலர்கள் அனைவரும் இறந்த பிறகு, விசுவாசதுரோகத்தை விதைப்பதில் அவன் தன் நேரத்தைத் துளிகூட வீணடிக்கவில்லை. (மத்தேயு 13:38, 39; 2 பேதுரு 2:1) உதாரணத்திற்கு, பெயரளவில் கிறிஸ்தவ எழுத்தாளராக இருந்த ஜஸ்டின் மார்ட்டிர், கடைசி அப்போஸ்தலன் யோவான் இறந்த சமயத்தில்தான் பிறந்தார். என்றாலும், எல்லா நல்ல காரியங்களையும் கொடுக்கிற கடவுளுக்குத் “தனிப்பட்ட பெயர் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை” என்று தன்னுடைய புத்தகங்களில் தொடர்ந்து வலியுறுத்தினார்.

கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தை விசுவாசதுரோகக் கிறிஸ்தவர்கள் நகலெடுத்தபோது, யெகோவா என்ற கடவுளுடைய சொந்தப் பெயரை அதிலிருந்து அகற்றிவிட்டார்கள்; அதற்குப் பதிலாக “கர்த்தர்” என அர்த்தம் தரும் கைரியாஸ் என்ற கிரேக்க வார்த்தையைப் பயன்படுத்தினார்கள். எபிரெய வேதாகமமும் இதற்கு விதிவிலக்கல்ல. பொது வாசிப்பில் கடவுளுடைய பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்று கட்டளையிடப்பட்டிருந்ததால் வசனங்களில் எங்கெல்லாம் கடவுளுடைய பெயர் இருந்ததோ அங்கெல்லாம் அடோனாய் என்று விசுவாசதுரோக யூத வேத அறிஞர்கள் மாற்றினார்கள்; இவ்வாறு 130-க்கும் மேலான இடங்களில் மாற்றினார்கள். லத்தீன் மொழியில் பிரசித்திபெற்று விளங்கிய வல்கேட் பைபிள் ஜெரோம் என்பவரால் கி.பி. 405-ல் மொழிபெயர்த்து முடிக்கப்பட்டது; இந்த பைபிளும்கூட கடவுளுடைய பெயரைப் புறக்கணித்துவிட்டது.

கடவுளுடைய பெயரை அடியோடு அகற்ற இன்றைய முயற்சிகள்

யெகோவா என்ற பெயர் பைபிளில் சுமார் 7,000 இடங்களில் இருந்ததை அறிஞர்கள் நன்றாக அறிந்திருக்கிறார்கள். எனவேதான் பரவலாகப் பயன்படுத்தப்படும் சில மொழிபெயர்ப்புகளில், உதாரணத்திற்கு, கத்தோலிக்க ஜெரூசலேம் பைபிள், கத்தோலிக்க லா பிப்ளியா லாட்டினோஅமெரிக்கா (ஸ்பானிஷ்), பிரசித்திபெற்ற ரேனா-வாலேரா (ஸ்பானிஷ்) ஆகிய மொழிபெயர்ப்புகளில் கடவுளுடைய பெயர் நிறைய இடங்களில் காணப்படுகின்றன. சில மொழிபெயர்ப்புகள் கடவுளுடைய பெயரை “யாவே” என்று மொழிபெயர்க்கின்றன.

ஆனால், பைபிள் மொழிபெயர்ப்புகளுக்கு நிதி உதவி அளிக்கும் அநேக சர்ச்சுகள், பைபிளில் கடவுளுடைய பெயரைப் பயன்படுத்தக் கூடாதென்று மொழிபெயர்ப்பாளர்களை நிர்ப்பந்திப்பதுதான் சோகத்திலும் சோகம்! உதாரணத்திற்கு, கத்தோலிக்க பிஷப்புகளுக்கான மாநாடுகளின் தலைவர்களுக்கு அனுப்பப்பட்ட ஜூன் 29, 2008 தேதியிட்ட ஒரு கடிதத்தில், “சமீப வருடங்களில், இஸ்ரவேலருடைய கடவுளின் பெயரை உச்சரிக்கும் பழக்கம் மெல்ல ஊடுருவியிருக்கிறது” என்று குறிப்பிட்ட வாடிகன், “கடவுளுடைய பெயரை . . . பயன்படுத்தவும் கூடாது, உச்சரிக்கவும் கூடாது” என்று தெள்ளத்தெளிவாகக் கட்டளையிட்டது. அதுமட்டுமல்ல, “நவீன மொழிகளில் பைபிளை மொழிபெயர்க்கும்போது, . . . நான்கெழுத்துக்களைக் கொண்ட கடவுளுடைய பெயர் வரும் இடங்களிலெல்லாம் அடோனாய்/கைரியாஸ் என்ற அர்த்தம் தரும் ‘கர்த்தர்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டும்” என்றும் அது கட்டளையிட்டது. கடவுளுடைய பெயரை அடியோடு அகற்றுவதே வாடிகனின் நோக்கம் என்பது இந்தக் கடிதத்திலிருந்து நன்றாகத் தெரிகிறது.

கத்தோலிக்கருக்கு இணையாக புராட்டஸ்டன்ட் பிரிவினரும் யெகோவாவின் பெயரை அவமதித்திருக்கிறார்கள். 1978-ல் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட நியு இன்டர்நேஷனல் வர்ஷன் பைபிளுக்கு புராட்டஸ்டன்ட் சர்ச் நிதி உதவி அளித்தது; பிரசுரிப்பாளர்களின் சார்பாக ஒருவர் இவ்வாறு எழுதினார்: “யெகோவா என்பது கடவுளுடைய சிறப்புப் பெயர். அதை நாங்கள் நிச்சயம் பயன்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், 22.5 லட்சம் டாலர் பணத்தைக் கொட்டி மொழிபெயர்க்கப்பட்ட இந்த பைபிளில், ‘யாவே என் மேய்ப்பராக இருக்கிறார்’ என்று சங்கீதம் 23-ஐ மொழிபெயர்த்திருந்தால் அதைத் தூக்கி குப்பையில்தான் எறியவேண்டி வந்திருக்கும்.”

போதாக்குறைக்கு, லத்தீன் அமெரிக்கர்களுக்குக் கடவுளுடைய பெயர் தெரியாதபடி சர்ச்சுகள் அவர்களை இருட்டில் வைத்திருக்கின்றன. ஐக்கிய பைபிள் சங்கங்களின் (UBS) மொழிபெயர்ப்பு ஆலோசகர் ஸ்டீவன் வோட் இவ்வாறு எழுதினார்: “லத்தீன் அமெரிக்க புராட்டஸ்டன்ட் வட்டாரங்களில் நடைபெறும் விவாதங்கள் பெரும்பாலும் ஜெஹோவா என்ற பெயரைப் பயன்படுத்துவது சம்பந்தமாகவே இருக்கின்றன. . . . அதுமட்டுமல்ல, மிகப் பெரியளவில் வளர்ந்து வரும் நியோ-பென்ட்டிகாஸ்ட்டல் சர்ச் . . . ரேனா-வாலேராவின் 1960-ஆம் பதிப்பு தங்களுக்கு வேண்டுமென்றும், ஆனால், அதில் ஜெஹோவா என்ற பெயர் இருக்கக் கூடாது என்றும் கேட்டிருப்பது ஆச்சரியமான விஷயம். அந்தப் பெயருக்குப் பதிலாக, ஸென்னார் [கர்த்தர்] என்ற வார்த்தை இருக்க வேண்டுமென்று அது கேட்டுக்கொண்டது.” இந்த வேண்டுகோளை UBS முதலில் மறுத்தாலும் பின்பு “ஜெஹோவா என்ற பெயர் இல்லாத” ரேனா-வாலேரா பைபிளை மொழிபெயர்த்துக் கொடுத்ததாக வோட் சொல்கிறார்.

பைபிளிலிருந்து கடவுளுடைய பெயரை அகற்றிவிட்டு அதற்குப் பதிலாக “கர்த்தர்” என்று மொழிபெயர்ப்பதால், கடவுள் யார் என்றே வாசகர்களுக்குத் தெரியாமல் போய்விடுகிறது; அதனால், பெருத்த குழப்பம் ஏற்படுகிறது. உதாரணமாக, “கர்த்தர்” என்ற வார்த்தை யெகோவாவைக் குறிக்கிறதா அல்லது அவருடைய மகன் இயேசுவைக் குறிக்கிறதா என வாசகரால் புரிந்துகொள்ள முடிவதில்லை. இதற்கு ஓர் எடுத்துக்காட்டுதான் பின்வரும் வசனம். “யெகோவா என் எஜமானரிடம் [உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசுவிடம்], . . . ‘என் வலது பக்கத்தில் உட்கார்ந்திரு’ என்றார்” என தாவீது கூறியதை அப்போஸ்தலன் பேதுரு மேற்கோள் காட்டினார். இந்த வசனம் அநேக பைபிள்களில், “கர்த்தர் என் ஆண்டவருடனே சொன்னார்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. (அப்போஸ்தலர் 2:34, 35, BSI) அதுமட்டுமல்ல, டேவிட் கிளைன்ஸ் என்பவர் “யாவேயும் கிறிஸ்தவ இறையியலின் கடவுளும்” என்ற தனது கட்டுரையில், “கிறிஸ்தவர்களின் மனதிலிருந்து யாவே என்ற பெயர் அகற்றப்பட்டதால் வந்த விளைவுகளில் ஒன்று என்னவென்றால், கிறிஸ்துவுக்கே முக்கியத்துவம் கொடுக்கத் தோன்றுகிறது” என்று குறிப்பிடுகிறார். இதனால், யெகோவா என்ற பெயருடைய உண்மைக் கடவுளிடம்தான் இயேசு ஜெபம் செய்தார் என்ற விஷயம் சர்ச்சுக்குச் செல்லும் அநேகருக்குத் தெரிவதில்லை.

மக்கள் கடவுளைப் பற்றித் தெரிந்துகொள்ளாமல் இருக்க சாத்தான் தன்னால் ஆனமட்டும் முயன்றிருக்கிறான். அப்படியிருந்தாலும், நீங்கள் யெகோவாவைப் பற்றி நன்கு தெரிந்துகொள்ளலாம்.

நீங்கள் யெகோவாவைப் பற்றி நன்கு தெரிந்துகொள்ள முடியும்!

கடவுளுடைய பெயரைக் குறித்து சாத்தான் நடத்தியிருக்கும் உக்கிரமான போர்களில் பொய் மதங்களைத் தந்திரமாகப் பயன்படுத்தியிருக்கிறான் என்பது தெளிவு. என்றாலும், யெகோவாவே பேரரசராகிய எஜமானர்; அவரைப் பற்றியும்... நேர்மை மனமுள்ளவர்களுக்கு அவர் வைத்திருக்கிற மகத்தான நோக்கத்தைப் பற்றியும்... தெரிந்துகொள்ள விரும்புகிறவர்களுக்குத் தம்முடைய பெயரை அவர் நிச்சயம் தெரியப்படுத்துவார்; அதைத் தடுக்க பரலோகத்திலும் சரி பூலோகத்திலும் சரி, யாராலும் முடியாது!

பைபிள் படிப்பின் மூலம் நீங்கள் எப்படிக் கடவுளிடம் நெருங்கி வரலாம் என்பதைப் பற்றிக் கற்றுக்கொடுக்க யெகோவாவின் சாட்சிகள் ஆர்வமாய் இருக்கிறார்கள். ‘கடவுளுடைய பெயரைத் தெரியப்படுத்தியதாக’ ஜெபத்தில் தெரிவித்த இயேசுவின் முன்மாதிரியை அவர்கள் பின்பற்றுகிறார்கள். (யோவான் 17:26) மனிதகுலத்தின் நன்மைக்காக யெகோவா ஏற்றிருக்கும் வெவ்வேறு ஸ்தானங்களைக் குறித்துப் பேசுகிற பைபிள் வசனங்களை நீங்கள் ஆழ்ந்து சிந்திக்கும்போது அவருடைய ஒப்பற்ற சுபாவத்தின் பல்வேறு பரிமாணங்களை அறிந்துகொள்வீர்கள்.

கடவுளுக்கு உண்மையாய் வாழ்ந்த முற்பிதா யோபுவுக்கு, ‘தேவன் நெருங்கிய நண்பராக இருந்தார்’; அதுபோன்ற நட்பை நீங்களும் அனுபவிக்கலாம். (யோபு 29:4, ஈஸி டு ரீட் வர்ஷன்) பைபிளைப் படிப்பதன் மூலம் யெகோவாவைப் பற்றி நீங்கள் நன்றாக அறிந்துகொள்ள முடியும். இந்த அறிவு, யெகோவா தாம் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுபவர் என்பதை நமக்கு உறுதிப்படுத்தும். அவர் இவ்வாறு வாக்குக் கொடுத்திருக்கிறார்: “எப்படியெல்லாம் ஆக வேண்டுமென விரும்புகிறேனோ அப்படியெல்லாம் நான் ஆவேன்.” (யாத்திராகமம் 3:14, ரோதர்ஹாம் மொழிபெயர்ப்பு) ஆம், மனிதகுலத்தின் நலனுக்காகத் தாம் கொடுத்துள்ள வாக்குறுதிகள் அனைத்தையும் அவர் நிச்சயம் நிறைவேற்றுவார்! (w10-E 07/01)