Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 85

பாவி மனம் திருந்தும்போது சந்தோஷம்

பாவி மனம் திருந்தும்போது சந்தோஷம்

லூக்கா 15:1-10

  • காணாமல் போன ஆடு, தொலைந்துபோன காசு பற்றிய உவமைகள்

  • பரலோகத்தில் இருக்கிற தூதர்கள் சந்தோஷப்படுகிறார்கள்

இயேசு ஊழியம் செய்தபோது, மனத்தாழ்மை எவ்வளவு முக்கியம் என்பதைப் பற்றிப் பல தடவை சொல்லியிருக்கிறார். (லூக்கா 14:8-11) கடவுளைத் தாழ்மையோடு வணங்க ஆசைப்படுகிற ஆண்களையும் பெண்களையும் தேடிக் கண்டுபிடிக்க அவர் ஆர்வமாக இருக்கிறார். ஒருவேளை, அவர்களில் சிலர் இன்னமும் படுமோசமான பாவங்களைச் செய்துகொண்டிருக்கலாம்.

பரிசேயர்களும் வேத அறிஞர்களும் அப்படிப்பட்ட ஆட்களைக் கீழ்த்தரமாக நினைக்கிறார்கள். அந்த ஆட்கள் இயேசுவிடம் வருவதையும், அவருடைய செய்தியால் கவரப்படுவதையும் அவர்கள் பார்க்கிறார்கள். அதனால், “இந்த மனுஷன் பாவிகளோடு பழகுகிறான், அவர்களோடு சேர்ந்து சாப்பிடுகிறான்” என்று முணுமுணுக்கிறார்கள். (லூக்கா 15:2) பரிசேயர்களும் வேத அறிஞர்களும் தங்களைப் பெரிய ஆட்களாக நினைத்துக்கொள்கிறார்கள். சாதாரண மக்களைத் தங்கள் காலின்கீழ் இருக்கிற தூசிபோல் பார்க்கிறார்கள். மதத் தலைவர்கள் இந்த மக்களைப் பற்றிப் பேசும்போது, ‘ஆம்ஹாரெட்ஸ்’ என்ற எபிரெய வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள். இதற்கு, “நிலத்தின் [மண்ணின்] மக்கள்” என்று அர்த்தம். அவர்கள்மேல் வெறுப்பைக் காட்டுவதற்காக இந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள்.

ஆனால், இயேசு எல்லாரிடமும் மரியாதையாக, கனிவாக, கரிசனையாக நடந்துகொள்கிறார். அதனால், தாழ்ந்த நிலையில் இருக்கிற மக்கள் பலரும், பாவிகள் என்று அறியப்பட்ட சிலரும்கூட இயேசு சொல்வதைக் கேட்க ஆர்வமாக இருக்கிறார்கள். இயேசு இவர்களுக்கு உதவி செய்வதைப் பார்த்து சிலர் குறை சொல்கிறார்கள். இதைப் பற்றி இயேசு என்ன நினைக்கிறார்? அவர்களுக்கு என்ன பதில் சொல்கிறார்?

இயேசு சொன்ன ஒரு உவமையைப் படிக்கும்போது இந்தக் கேள்விகளுக்குப் பதில் கிடைக்கிறது. இது மனதைத் தொடும் ஒரு உவமை. இதேபோன்ற ஒரு உவமையை இயேசு ஏற்கெனவே கப்பர்நகூமில் சொல்லியிருக்கிறார். (மத்தேயு 18:12-14) இந்த உவமையில், பரிசேயர்களை நீதிமான்கள் என்றும் கடவுளுடைய தொழுவத்தில் பாதுகாப்பாக இருக்கிற ஆடுகள் என்றும் இயேசு குறிப்பிடுகிறார். தாழ்ந்த நிலையில் இருக்கிற மக்களைக் காணாமல் போன ஆடுகளுக்கு ஒப்பிடுகிறார்.

“உங்களில் யாராவது தன்னுடைய 100 செம்மறியாடுகளில் ஒன்று காணாமல் போனால், மற்ற 99 ஆடுகளையும் வனாந்தரத்தில் விட்டுவிட்டு, வழிதவறிப்போன ஆட்டைக் கண்டுபிடிக்கிற வரைக்கும் அதைத் தேடிக்கொண்டிருக்க மாட்டானா? அவன் அதைக் கண்டுபிடிக்கும்போது, தன் தோள்கள்மேல் அதைப் போட்டுக்கொண்டு சந்தோஷப்படுவான். பின்பு வீட்டுக்கு வந்து, தன் நண்பர்களையும் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களையும் கூப்பிட்டு, ‘காணாமல் போன என் ஆட்டைக் கண்டுபிடித்துவிட்டேன், என்னோடு சேர்ந்து சந்தோஷப்படுங்கள்’ என்று சொல்வான்” என்கிறார்.—லூக்கா 15:4-6.

இதற்கு என்ன அர்த்தம்? “மனம் திருந்தத் தேவையில்லாத 99 நீதிமான்களைக் குறித்து ஏற்படுகிற சந்தோஷத்தைவிட மனம் திருந்துகிற ஒரே பாவியைக் குறித்துப் பரலோகத்தில் ஏற்படுகிற சந்தோஷம் அதிகமாக இருக்கும் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்று இயேசு விளக்குகிறார்.—லூக்கா 15:7.

மனம் திருந்துவதைப் பற்றி இயேசு சொன்னதைக் கேட்டு பரிசேயர்கள் அதிர்ச்சியடைகிறார்கள். ஏனென்றால், அவர்கள் தங்களை நீதிமான்கள் என்றும், மனம் திருந்தத் தேவையில்லை என்றும் நினைக்கிறார்கள். ஒருசில வருஷங்களுக்கு முன்பு, வரி வசூலிக்கிறவர்களோடும் பாவிகளோடும் இயேசு சாப்பிடுவதைப் பார்த்து அவர்களில் சிலர் இயேசுவைக் குறை சொல்லியிருந்தார்கள். அப்போது இயேசு, “நீதிமான்களை அல்ல, பாவிகளைத்தான் நான் அழைக்க வந்தேன்” என்று சொல்லியிருந்தார். (மாற்கு 2:15-17) பரிசேயர்கள் தங்களை நீதிமான்கள் என்று நினைத்துக்கொள்வதால், தாங்கள் மனம் திருந்த வேண்டும் என்பதையே உணராமல் இருக்கிறார்கள். அதனால், பரலோகத்தில் அவர்களால் சந்தோஷம் ஏற்படுவதில்லை. ஆனால் பாவிகள் உண்மையிலேயே மனம் திருந்தும்போது பரலோகத்தில் சந்தோஷம் ஏற்படுகிறது.

காணாமல் போன பாவிகள் திருந்தி வரும்போது, பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் ஏற்படுகிறது என்பதை வலியுறுத்துவதற்காக இயேசு இன்னொரு உவமையைச் சொல்கிறார். இது ஒரு வீட்டில் நடக்கிற விஷயத்தைப் பற்றிய உவமை. “பத்து வெள்ளிக் காசுகளை வைத்திருக்கும் எந்தப் பெண்ணாவது அதில் ஒரு காசைத் தொலைத்துவிட்டால் விளக்கைக் கொளுத்தி, தன்னுடைய வீட்டைப் பெருக்கி, அதைக் கண்டுபிடிக்கிற வரைக்கும் கவனமாகத் தேடிக்கொண்டிருக்க மாட்டாளா? அதைக் கண்டுபிடித்ததும் தன்னுடைய தோழிகளையும் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களையும் கூப்பிட்டு, ‘என்னோடு சேர்ந்து சந்தோஷப்படுங்கள், நான் தொலைத்த வெள்ளிக் காசைக் கண்டுபிடித்துவிட்டேன்’ என்று சொல்வாள்” என்கிறார்.—லூக்கா 15:8, 9.

காணாமல் போன ஆட்டைப் பற்றிய உவமையைச் சொன்ன பிறகு இயேசு ஒரு விளக்கத்தைக் கொடுத்தார். அதேபோன்ற ஒரு விளக்கத்தை இப்போதும் கொடுக்கிறார். “பாவிகளில் ஒருவன் மனம் திருந்தும்போது கடவுளுடைய தூதர்கள் எல்லாரும் சந்தோஷப்படுவார்கள் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்கிறார்.—லூக்கா 15:10.

பாவிகள் திருந்தி வர வேண்டும் என்று தேவதூதர்கள் ரொம்ப ஆசைப்படுகிறார்கள். இது உண்மையிலேயே பெரிய விஷயம். ஏனென்றால், ஒரு பாவி மனம் திருந்தி பரலோக அரசாங்கத்தில் பங்கு பெறும்போது, தேவதூதர்களைவிட பெரிய ஸ்தானத்தை அவர் பெறுவார். (1 கொரிந்தியர் 6:2, 3) ஆனாலும், தேவதூதர்கள் பொறாமைப்படுவதில்லை. அப்படியானால், ஒரு பாவி உண்மையிலேயே திருந்தி வரும்போது நாம் எப்படி உணர வேண்டும்?