Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பத்தொன்பதாம் அதிகாரம்

பாதுகாத்தார்... பராமரித்தார்... பொறுப்பை செய்துமுடித்தார்!

பாதுகாத்தார்... பராமரித்தார்... பொறுப்பை செய்துமுடித்தார்!

1, 2. (அ) யோசேப்பும் அவரது குடும்பத்தாரும் என்ன மாற்றங்களை எதிர்ப்பட்டார்கள்? (ஆ) யோசேப்பு தன் மனைவியிடம் சொல்ல வேண்டியிருந்த துர்ச்செய்தி என்ன?

கழுதைமீது இன்னொரு பொதியை யோசேப்பு ஏற்றுகிறார். இப்போது கற்பனை செய்து பாருங்கள்... கும்மிருட்டு வேளை; பெத்லகேமை ஒருமுறை அப்படியே யோசேப்பு பார்க்கிறார்; பின்பு, கழுதையை மென்மையாகத் தட்டி அதை ஓட்டிச் செல்கிறார். இப்போது, எகிப்துக்குப் போகும் அந்த நீண்ட பயணத்தைப் பற்றிய எண்ணம்தான் அவர் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது! புது மக்கள்... புது மொழி... புது சம்பிரதாயம்! இந்தத் தலைகீழ் மாற்றத்தை அவரது சின்னஞ்சிறு குடும்பம் எப்படிச் சமாளிக்கப்போகிறது?

2 கனவில் தூதன் சொன்ன துர்ச்செய்தியை மரியாளிடம் சொல்ல யோசேப்புக்குக் கஷ்டமாகத்தான் இருந்தது; என்றாலும், ஒருவழியாகத் தன் அன்பு மனைவியிடம் சொல்லிவிட்டார். தூதன் சொன்ன செய்தி இதுதான்: குழந்தையை ஏரோது ராஜா கொல்லத் துடிக்கிறான், உடனடியாக அங்கிருந்து கிளம்பு! (மத்தேயு 2:​13, 14-ஐ வாசியுங்கள்.) இதைக் கேட்டதும் மரியாள் பதைபதைத்தாள். கள்ளமில்லா இந்தப் பிள்ளையைக் கொல்ல எப்படித்தான் ஏரோதுக்கு மனசு வரும்? இரண்டு பேராலும் அதை ஜீரணிக்கவே முடியவில்லை. ஆனால், அவர்கள் யெகோவாமீது நம்பிக்கை வைத்து எகிப்துக்குப் புறப்பட்டுச் செல்கிறார்கள்.

3. யோசேப்பு தன் குடும்பத்தோடு பெத்லகேமை விட்டுப் புறப்பட்டுச் சென்றதை விவரியுங்கள். (படத்தையும் பாருங்கள்.)

3 இந்த விஷயங்கள் எதுவும் தெரியாமல் பெத்லகேம் நகரமே தூக்கத்தில் ஆழ்ந்திருக்கிறது; யோசேப்பும் மரியாளும் இயேசுவை எடுத்துக்கொண்டு ராத்திரியோடு ராத்திரியாக ஓசையின்றி வெளியேறுகிறார்கள். அவர்கள் தெற்கு நோக்கிப் பயணிக்கையில்... கிழக்கே வானம் வெளுக்கத் தொடங்குகிறது. இனி என்னவெல்லாம் நடக்குமோ என்று யோசேப்பு யோசித்திருக்கலாம். ‘நானே ஒரு சாதாரண தச்சன், தீய சக்திகளிடமிருந்து என் குடும்பத்தை எப்படிப் பாதுகாக்கப்போகிறேன்? இனி எப்படித்தான் என் குடும்பத்தைப் பராமரிக்கப்போகிறேன்? இந்த அதிசயக் குழந்தையை வளர்த்து ஆளாக்கும் பொறுப்பை யெகோவா எனக்குக் கொடுத்திருக்கிறாரே, இதை நான் கடைசிவரை செய்துமுடிப்பேனா?’ என்றெல்லாம் யோசித்திருக்கலாம். இப்படிப்பட்ட பெரும் சவால்கள் அவருக்கு முன்னால் இருக்கின்றன. இந்த ஒவ்வொரு சவாலையும் எப்படிச் சமாளிக்கிறார் என்று அலசிப் பார்க்கலாம்; அப்போதுதான், யோசேப்பின் விசுவாசத்தை இன்றுள்ள அப்பாமார் அனைவரும், சொல்லப்போனால் நாம் அனைவரும், ஏன் பின்பற்ற வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வோம்.

யோசேப்பு தன் குடும்பத்தைப் பாதுகாத்தார்

4, 5. (அ) யோசேப்பின் வாழ்க்கை எப்படி அடியோடு மாறியது? (ஆ) ஒரு மாபெரும் பொறுப்பை ஏற்கும்படி தேவதூதன் எவ்வாறு யோசேப்பை உற்சாகப்படுத்தினார்?

4 ஒரு வருடத்துக்கும் மேலான காலத்திற்குமுன்... யோசேப்பு தன் சொந்த ஊரான நாசரேத்தில் இருந்த சமயத்தில், ஹேலியின் மகள் மரியாளோடு அவருக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அதற்குப்பின் அவருடைய வாழ்க்கையில் ஒரு திடீர் திருப்பம் ஏற்பட்டது. மரியாள் சூதுவாதில்லாத பெண்... விசுவாசமுள்ள பெண்... என்பது யோசேப்புக்குத் தெரியும். ஆனால், அவள் கர்ப்பமாகியிருந்த செய்தி அவருக்குத் திடீரென ஒருநாள் தெரியவந்தது! என்றாலும், எல்லோருக்கும்முன் அவளை அவமானப்படுத்தாமல் ரகசியமாக விவாகரத்து செய்துவிட நினைத்தார். * ஆனால், தேவதூதன் அவரது கனவில் தோன்றி, யெகோவாவின் சக்தியால்தான் மரியாள் கர்ப்பமாகியிருக்கிறாள் என விளக்கினார். அவளுக்குப் பிறக்கும் மகன் “தமது மக்களைப் பாவங்களிலிருந்து மீட்பார்” என்று சொன்னார். அதோடு, “பயப்படாமல் உன் மனைவியாகிய மரியாளை வீட்டிற்கு அழைத்துக்கொண்டு வா” என்று சொல்லி நம்பிக்கையூட்டினார்.​—மத். 1:​18-21.

5 நீதியும் கீழ்ப்படிதலும் உள்ள யோசேப்பு, தூதன் சொன்னபடியே செய்தார். அந்த மாபெரும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்; ஆம், கடவுளுடைய மகனையே... கடவுளுக்கு மிகவும் அருமையான மகனையே... வளர்த்து ஆளாக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். பின்பு, அரச கட்டளைப்படி பெயர்ப்பதிவு செய்வதற்காக, நிறைமாத கர்ப்பிணியாய் இருக்கிற தன் மனைவியை அழைத்துக்கொண்டு பெத்லகேமுக்குப் போனார். அங்குதான் குழந்தை பிறந்தது.

6-8. (அ) யோசேப்பு மற்றும் அவரது குடும்பத்தாரின் வாழ்க்கையில் மற்றொரு திடீர் திருப்பத்தை ஏற்படுத்திய சம்பவங்கள் யாவை? (ஆ) அந்த நட்சத்திரத்தை அனுப்பியது சாத்தானே என எப்படிச் சொல்லலாம்? (அடிக்குறிப்பையும் காண்க.)

6 அதற்குப்பின் யோசேப்பு தன் குடும்பத்தை நாசரேத்துக்கு அழைத்துக்கொண்டு போகவில்லை. மாறாக, எருசலேமுக்குச் சில மைல் தூரத்திலுள்ள பெத்லகேமிலேயே தங்கிவிட்டார். அவர்கள் ஏழையாக இருந்தார்கள், ஆனாலும் மரியாளுக்கும் இயேசுவுக்கும் எந்தக் குறையும் வைக்காமல் யோசேப்பு கவனித்துக்கொண்டார், பத்திரமாய்ப் பார்த்துக்கொண்டார். விரைவிலேயே, ஒரு சிறிய வீட்டில் அவர்கள் குடியேறினார்கள். இயேசு ஒருவயதைத் தாண்டிய சிறுவனாக இருந்தபோது, அவர்களுடைய வாழ்க்கையில் மறுபடியும் ஒரு திடீர் திருப்பம் ஏற்பட்டது!

7 யூதருக்கு ராஜாவாய் ஆகப்போகிற பிள்ளையைத் தேடி, கிழக்கிலிருந்து... ஒருவேளை தொலைதூர பாபிலோனிலிருந்து... சோதிடர்கள் சிலர் வந்தார்கள். அவர்களை ஒரு நட்சத்திரம் யோசேப்பின் வீட்டுக்கு அழைத்துவந்தது. அவர்கள் அந்தப் பிள்ளைக்கு மிகுந்த மதிப்பு காட்டினார்கள்.

8 தெரிந்தோ தெரியாமலோ, அந்தச் சோதிடர்கள் சிறுவன் இயேசுவைப் பெரிய ஆபத்தில் சிக்க வைத்துவிட்டார்கள். அந்த நட்சத்திரம் முதலில் அவர்களை பெத்லகேமுக்கு அழைத்து வராமல் எருசலேமுக்கு அழைத்துச் சென்றது. * யூதருக்கு ராஜாவாய் ஆகப்போகிற பிள்ளையைத் தேடி வந்திருப்பதாக ஏரோதிடம் அவர்கள் சொன்னார்கள். அதைக் கேட்ட அந்தப் பொல்லாத ராஜாவுக்கு ஆத்திரமும் பொறாமையும் பற்றிக்கொண்டு வந்தது.

9-11. (அ) ஏரோதையும் சாத்தானையும்விட சக்தியுள்ள ஒருவர் செயல்பட்டுக் கொண்டிருந்தார் என எப்படிச் சொல்லலாம்? (ஆ) யோசேப்பின் குடும்பம் எகிப்துக்குப் போனதைப் பற்றி தள்ளுபடி ஆகமத்தில் உள்ள கட்டுக்கதைகள் என்ன சொல்கின்றன, ஆனால் உண்மை என்ன?

9 என்றாலும், தீய சக்திகளான ஏரோதையும் சாத்தானையும்விட சக்தியுள்ள ஒருவர் செயல்பட்டுக்கொண்டிருந்தார். எப்படி? நாம் பார்க்கலாம்... அந்தச் சோதிடர்கள் இயேசுவின் வீட்டுக்குப் போய், தாயுடன் இருந்த அந்தச் சிறுவனைக் கண்டார்கள்; எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் அன்பளிப்புகளை வழங்கினார்கள். “தங்கம், சாம்பிராணி, வெள்ளைப்போளம்” போன்ற விலையுயர்ந்த பொருள்களைத் திடீரென அவர்கள் கொண்டுவந்து கொடுத்தபோது யோசேப்பும் மரியாளும் திகைத்துப்போயிருப்பார்கள்! அந்தச் சோதிடர்கள் மறுபடியும் ஏரோது ராஜாவிடம் போய், பிள்ளை இருக்கும் இடத்தைச் சொல்ல நினைத்தார்கள். ஆனால், யெகோவா அவர்களைத் தடுத்தார். அந்தச் சோதிடர்களை வேறு வழியாகத் தங்கள் நாட்டுக்குத் திரும்பிப்போகச் சொல்லி அவர்களுடைய கனவில் கட்டளையிட்டார்.​மத்தேயு 2:​1-12-ஐ வாசியுங்கள்.

10 சோதிடர்கள் கிளம்பிப்போன பின்பு யோசேப்புக்கு யெகோவாவின் தூதன் எச்சரிக்கை தந்தார்; “எழுந்திரு, பிள்ளையைக் கொல்வதற்காக ஏரோது அதைத் தேடப் போகிறான்; அதனால் பிள்ளையையும் அதன் தாயையும் அழைத்துக்கொண்டு எகிப்துக்கு ஓடிப்போ, நான் உனக்குச் சொல்லும்வரை அங்கேயே இரு” என்று சொன்னார். (மத். 2:13) நாம் ஆரம்பத்தில் பார்த்தபடி, யோசேப்பு உடனடியாகக் கீழ்ப்படிகிறார். எல்லாவற்றையும்விட பிள்ளையின் உயிரே முக்கியம் என நினைத்து தன் குடும்பத்தை எகிப்துக்கு அழைத்துச் செல்கிறார். அந்தச் சோதிடர்கள் விலையுயர்ந்த அன்பளிப்புகளைக் கொடுத்திருந்ததால் இப்போது யோசேப்பிடம் செல்வம் இருக்கிறது, அது அவர்களுடைய செலவுகளுக்குக் கைகொடுக்கும்.

பிள்ளையைக் காப்பாற்ற யோசேப்பு உறுதியுடனும் தன்னலமின்றியும் செயல்பட்டார்

11 தள்ளுபடி ஆகமத்தில் உள்ள புராணக் கதைகளும் கட்டுக்கதைகளும், அவர்கள் எகிப்துக்குச் சென்ற பயணத்தை ஜோடித்து சொல்கின்றன; அதாவது, சிறுவன் இயேசு மிகத் தொலைவிலுள்ள எகிப்து மிக அருகில் இருப்பதுபோல் அற்புதம் செய்கிறான்... கொள்ளைக் கூட்டத்தாரால் எந்த ஆபத்தும் வராமல் செய்கிறான்... பேரீச்ச மரம் அப்படியே தன் தாயின்முன் வளைந்து பழங்களைக் கொடுக்கும்படி செய்கிறான்... என்றெல்லாம் சொல்கின்றன. * ஆனால் நிஜத்தில் பார்த்தால், அந்தப் பயணம் நீண்ட பயணம்... முன்பின் தெரியாத இடத்துக்குப் போகிற பயணம்... களைப்பூட்டும் பயணம்.

குடும்பத்திற்காக யோசேப்பு தன் சொந்த சௌகரியத்தை விட்டுக்கொடுத்தார்

12. இந்த ஆபத்தான உலகத்தில் பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர் யோசேப்பிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?

12 யோசேப்பிடமிருந்து பெற்றோர் நிறையப் பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம். அவர் தன் குடும்பத்தை யெகோவா தந்த பொக்கிஷமாகக் கருதினார்; அதை ஆபத்திலிருந்து பாதுகாக்க உடனடியாகத் தன்னுடைய வேலையையும் சொந்த சௌகரியங்களையும் விட்டுக்கொடுத்தார். இன்றும் பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளை அபாயகரமான உலகில் வளர்க்கிறார்கள்; பிள்ளைகளை ஆபத்தில் சிக்கவைக்கிற... கெட்டுக் குட்டிச்சுவராக்குகிற... சின்னாபின்னமாக்குகிற... எத்தனையோ தீய சக்திகள் இந்த உலகத்தில் இருக்கின்றன. அதனால், தாய்மாரும் தகப்பன்மாரும் யோசேப்பைப் போல் உறுதியாய்ச் செயல்படுவது... தீய சக்திகளிலிருந்து பிள்ளைகளைப் பாதுகாக்கக் கடினமாகப் போராடுவது... எவ்வளவு மெச்சத்தக்கது!

யோசேப்பு தன் குடும்பத்தைப் பராமரித்தார்

13, 14. யோசேப்பும் மரியாளும் ஏன் நாசரேத்தில் குடித்தனம் நடத்தினார்கள்?

13 இந்தக் குடும்பம் எகிப்தில் நெடுநாள் தங்கவில்லை எனத் தெரிகிறது; ஏரோது இறந்த செய்தியைச் சீக்கிரத்திலேயே யோசேப்புக்குத் தேவதூதன் தெரிவிக்கிறார். உடனே யோசேப்பு தன் குடும்பத்தைத் தாய்நாட்டுக்கே அழைத்து வருகிறார். ஏனென்றால், யெகோவா தமது மகனை ‘எகிப்திலிருந்து வரவழைப்பார்’ என முன்னரே ஒரு தீர்க்கதரிசனம் சொல்லப்பட்டிருந்தது. (மத். 2:15) அந்தத் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றுவதில் யோசேப்பும் ஒரு பங்கு வகிக்கிறார். ஆனால், இப்போது தன் குடும்பத்தோடு எந்த ஊரில் குடியேறுவார்?

14 யோசேப்பு ஜாக்கிரதையாகச் செயல்படுகிறார். ஏரோதுக்குப்பின் ராஜாவான அர்கெலாயுவைக் குறித்துப் பயப்படுகிறார்; இவனும் ஏரோதைப் போல் கொடியவன்... கொலைவெறி பிடித்தவன்! அதனால், வடக்கே போய்க் குடியேறும்படி யோசேப்புக்குக் கடவுள் கட்டளையிடுகிறார்; எருசலேமையும் அங்கு தீட்டப்படுகிற சதித்திட்டங்களையும் விட்டு வெகு தொலைவுக்கு... கலிலேயாவிலுள்ள அவருடைய சொந்த ஊரான நாசரேத்துக்கு... போகச் சொல்லி கடவுள் கட்டளையிடுகிறார். அங்குதான் யோசேப்பும் மரியாளும் போய்க் குடித்தனம் நடத்துகிறார்கள்.​மத்தேயு 2:​19-23-ஐ வாசியுங்கள்.

15, 16. யோசேப்பின் வேலை எப்படிப்பட்டது, அவர் என்னென்ன கருவிகளைப் பயன்படுத்தியிருப்பார்?

15 அவர்கள் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தாலும் அது சுலபமாய் இருப்பதில்லை. யோசேப்பு ஒரு தச்சர் என பைபிள் சொல்கிறது; இங்கு பைபிள் பயன்படுத்துகிற வார்த்தை எல்லாவித மர வேலைகளையும் செய்வதைக் குறிக்கிறது. உதாரணமாக, வீடுகளும் படகுகளும் கட்டுவதற்காக... சிறு பாலங்கள் அமைப்பதற்காக... வண்டிகள், வண்டிச் சக்கரங்கள், நுகத்தடிகள், விவசாயக் கருவிகள் ஆகியவற்றைத் தயாரிப்பதற்காக... மரம் வெட்டுவதையும் அதை இழுத்து வருவதையும் காயவைப்பதையும் குறிக்கிறது. (மத். 13:55) இதெல்லாம் உடலை வருத்தி செய்ய வேண்டிய கடினமான வேலை. அந்தக் காலத்தில் ஒரு தச்சர் தன்னுடைய சிறிய வீட்டின் வாசலில் அல்லது பக்கத்திலுள்ள பட்டறையில் வேலை செய்வார்.

16 யோசேப்பு பற்பல கருவிகளைப் பயன்படுத்துகிறார்; அவற்றில் சில, பரம்பரைச் சொத்தாக இருந்திருக்கலாம். மூலை மட்டம் பார்க்கும் கருவி, தூக்குநூல், சாக்குக்கட்டி, கைக்கோடாரி, ரம்பம், சுத்தியல், கொட்டாப்புளி, உளி, துளைபோடும் கருவி, விதவிதமான பசைகள், ஒருவேளை ஆணிகள் ஆகியவற்றை வைத்திருந்திருக்கலாம்; இந்தக் கருவிகளெல்லாம் விலையுயர்ந்தவையாக இருந்தாலும் இவற்றை அவர் வைத்திருந்திருக்கலாம்.

17, 18. (அ) சிறுவன் இயேசு தன் வளர்ப்புத் தந்தையிடமிருந்து என்ன கற்றுக்கொண்டான்? (ஆ) யோசேப்பு ஏன் மேன்மேலும் கடினமாய் உழைக்க வேண்டியிருந்தது?

17 கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்: வளர்ப்புத் தகப்பன் வேலை செய்வதைச் சிறுவன் இயேசு கூர்ந்து கவனிக்கிறான். யோசேப்பின் ஒவ்வொரு அசைவையும் கண்ணிமைக்காமல் பார்க்கிறான். அப்பாவின் அகன்ற தோள்களில் காணப்படும் வலிமையை... உறுதியான புஜங்களில் வெளிப்படும் பலத்தை... கைகளில் தெரியும் லாவகத்தை... கண்களில் தெறிக்கும் அறிவுக்கூர்மையை... கண்டு வியக்கிறான். காய்ந்த மீன் தோலால் மரக்கட்டைகளைத் தேய்த்து வழுவழுப்பாக்குவது போன்ற சின்னச் சின்ன வேலைகளை யோசேப்பு தன் மகனுக்குச் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்திருக்கலாம். காட்டத்தி மரம், கருவாலி மரம், ஒலிவ மரம் போன்ற மர வகைகளை அடையாளம் கண்டுபிடிக்கக் கற்றுத் தந்திருக்கலாம்.

தச்சு வேலை செய்ய யோசேப்பு தன் மகனுக்குப் பயிற்சி அளித்தார்

18 மரங்களை வெட்டி, செதுக்கி, இணைக்கிற அந்த உருண்டு திரண்ட கைகள் தன்னை... தன் தாயை... தன் தம்பி தங்கைகளை... அன்பாக அரவணைப்பதையும் அந்தச் சிறுவன் கவனிக்கிறான். யோசேப்பின் குடும்பம் வளர்ந்துகொண்டே போகிறது; இயேசு மட்டுமல்லாமல், யோசேப்புக்கும் மரியாளுக்கும் குறைந்தது ஆறு பிள்ளைகள் இருக்கிறார்கள். (மத். 13:​55, 56) அதனால், குடும்பத்தைப் பேணிப் பராமரிக்க யோசேப்பு மேன்மேலும் கடினமாய் உழைக்க வேண்டியிருக்கிறது.

குடும்பத்தின் ஆன்மீகத் தேவைகளைப் பூர்த்தி செய்வதே அதிமுக்கியம் என்பதை யோசேப்பு புரிந்திருந்தார்

19. குடும்பத்தின் ஆன்மீகத் தேவைகளை யோசேப்பு எப்படிக் கவனித்துக்கொண்டார்?

19 இருந்தாலும், குடும்பத்தின் ஆன்மீகத் தேவைகளுக்கே அதிமுக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை யோசேப்பு புரிந்திருக்கிறார். ஆகவே, யெகோவாவையும் அவரது சட்டதிட்டங்களையும் பற்றிப் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க நேரம் செலவழிக்கிறார். அவரும் மரியாளும் பிள்ளைகளைத் தவறாமல் உள்ளூர் ஜெபக்கூடத்துக்கு... அதாவது திருச்சட்டம் வாசிக்கப்பட்டு விளக்கப்படுகிற இடத்துக்கு... அழைத்துச் செல்கிறார்கள். அங்கிருந்து வந்தபின் அப்பாவிடம் சிறுவன் இயேசு பல கேள்விகளைக் கேட்டிருப்பான்; மகனின் ஆன்மீகப் பசியைப் போக்க அவர் பெருமுயற்சி எடுத்திருப்பார். அதோடு, பண்டிகைகள் கொண்டாட யோசேப்பு தன் குடும்பத்தை எருசலேமுக்கு அழைத்துச் செல்கிறார். அங்கு போய்வர இரண்டு வாரம் எடுத்தாலும்... 120 கிலோமீட்டர் பயணிக்க வேண்டியிருந்தாலும்... தன் குடும்பத்தை வருடாந்தர பஸ்கா பண்டிகைக்குத் தவறாமல் அழைத்துச் செல்கிறார்.

யோசேப்பு தன் குடும்பத்தாரை எருசலேமிலிருந்த ஆலயத்துக்குத் தவறாமல் அழைத்துச் சென்றார்

20. கிறிஸ்தவத் தகப்பன்மார் எவ்வாறு யோசேப்பின் முன்மாதிரியைப் பின்பற்றுகிறார்கள்?

20 இன்று கிறிஸ்தவத் தகப்பன்மார் யோசேப்பின் முன்மாதிரியைப் பின்பற்றுகிறார்கள். பிள்ளைகளுக்காகத் தங்களையே அர்ப்பணிக்கிறார்கள்; வேறெதையும்விட, ஏன் பொருளாதார வசதிகள் செய்து தருவதையும்விட, பிள்ளைகளை யெகோவாவின் வழியில் வளர்ப்பதற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். குடும்ப வழிபாடு நடத்த... கூட்டங்களுக்கும் மாநாடுகளுக்கும் பிள்ளைகளை அழைத்துச் செல்ல... கடின முயற்சி எடுக்கிறார்கள். பிள்ளைகளுக்கு இதைவிட சிறந்த முதலீடு வேறில்லை என்பதை யோசேப்பைப் போலவே இவர்களும் அறிந்திருக்கிறார்கள்.

“மிகுந்த கவலையோடு”

21. யோசேப்பின் குடும்பத்துக்கு பஸ்கா பண்டிகைக் காலம் எப்படியிருந்தது, இயேசு காணாமல் போனதை யோசேப்பும் மரியாளும் எப்போது கவனித்தார்கள்?

21 இயேசுவுக்கு 12 வயதிருக்கும்போது, வழக்கம்போல் யோசேப்பு தன் குடும்பத்தை எருசலேமுக்கு அழைத்துச் செல்கிறார். இது பஸ்கா பண்டிகைக் காலம்; பெரிய பெரிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றாகப் பயணம் செய்கிறார்கள். போகும் பாதையில்... பசுமை போர்த்திய கிராமப்புறங்களைத் தொட்டுச் செல்கிறார்கள். எருசலேமை நெருங்கி வரும்போது... வறண்ட மேட்டுநிலப் பகுதியில் ஏறிச்செல்லும்போது... வழக்கமாய்ப் பாடுகிற ஆரோகண சங்கீதங்களைப் பலர் பாடுகிறார்கள். (சங். 120-134) அந்த நகரத்திற்கு ஆயிரமாயிரம் மக்கள் திரண்டு வந்திருக்கலாம். பிற்பாடு, பண்டிகை முடிந்து குடும்பம் குடும்பமாக எல்லோரும் வீட்டுக்குக் கிளம்பிச் செல்கிறார்கள். அப்போது, யோசேப்பும் மரியாளும் மற்ற காரியங்களில் மும்முரமாக இருப்பதால், சிறுவன் இயேசு சொந்தக்காரர்களுடன் இருப்பான் என நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால் ஒருநாளான பின்புதான் அவர்களுக்கு ‘திக்’ என்கிறது, இயேசுவைக் காணவில்லை!​—லூக். 2:​41-44.

22, 23. இயேசு காணாமல் போனபோது யோசேப்பும் மரியாளும் என்ன செய்தார்கள், ஒருவழியாக அவனைக் கண்டுபிடித்தபோது மரியாள் என்ன சொன்னாள்?

22 அவர்கள் பதறியடித்துக்கொண்டு மறுபடியும் வந்த வழியிலேயே திரும்பி எருசலேமுக்குப் போகிறார்கள். கொஞ்சம் கற்பனையில் பாருங்கள்: அவர்கள் இருவரும் தங்கள் மகனுடைய பெயரைக் கூப்பிட்டுக்கொண்டே தெருத் தெருவாய்த் தேடுகிறார்கள். நகரமே வெறிச்சோடிக் கிடப்பதுபோல் அவர்களுக்குத் தோன்றுகிறது. அவன் எங்கு போய்விட்டான் எனத் தெரியாமல் கலங்குகிறார்கள். மூன்றாம் நாள் ஆகிவிடுகிறது. ‘யெகோவா எனக்குக் கொடுத்த பொறுப்பைச் சரியாகச் செய்யவில்லையே, இப்படி அஜாக்கிரதையாக இருந்துவிட்டேனே’ என்றெல்லாம் யோசேப்பு யோசித்திருப்பாரோ? தேடித் தேடி... கடைசியில் அவர்கள் இருவரும் ஆலயத்துக்கு வருகிறார்கள். அங்குமிங்கும் போய்ப் பார்த்தபின் ஒரு பெரிய அறைக்கு வருகிறார்கள்; அங்கு பல கல்விமான்கள் மத்தியில்... திருச்சட்டத்தில் புலமை பெற்றவர்கள் மத்தியில்... இயேசு உட்கார்ந்திருப்பதைப் பார்க்கிறார்கள். யோசேப்பும் மரியாளும் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள்!​—லூக். 2:​45, 46.

23 சிறுவன் இயேசு அந்தக் கல்விமான்கள் சொல்வதைக் கூர்ந்து கவனித்துக்கொண்டும் ஆர்வத்துடிப்போடு கேள்விகள் கேட்டுக்கொண்டும் இருக்கிறான். அவன் எல்லாவற்றையும் நன்கு புரிந்துகொண்டு புத்திசாலித்தனமாய்ப் பதில் சொல்வதைப் பார்த்து அவர்கள் வாயடைத்துப் போகிறார்கள்! மரியாளும் யோசேப்பும் வியப்படைகிறார்கள். யோசேப்பு எதுவும் சொன்னதாக பைபிளில் பதிவு இல்லை. ஆனால், அவர்கள் இருவருடைய உணர்ச்சியையும் மரியாளே வெளிப்படுத்துகிறாள். “மகனே, ஏன் இப்படிச் செய்தாய்? உன் தகப்பனும் நானும் மிகுந்த கவலையோடு உன்னைத் தேடிக்கொண்டிருந்தோமே” என்று சொல்கிறாள்.​—லூக். 2:​47, 48.

24. பிள்ளை வளர்ப்பு சம்பந்தமாக பைபிள் எதை எதார்த்தமாக எடுத்துக் காட்டுகிறது?

24 பைபிளிலுள்ள இந்தச் சம்பவம் பிள்ளை வளர்ப்பைப் பற்றிய எதார்த்தமான கண்ணோட்டத்தை ரத்தினச்சுருக்கமாய்ச் சித்தரித்துக் காட்டுகிறது. பிள்ளையை வளர்ப்பது பெரும் பாடுதான், அது பரிபூரண பிள்ளையாக இருந்தாலும் சரி! இந்த ஆபத்தான உலகில் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குவது பெற்றோருக்கு ‘மிகுந்த கவலையை’ அளிக்கிறது. ஆனால், அவர்களுடைய கஷ்டத்தைக் கடவுள் புரிந்துகொள்கிறார் என்பதை அறிந்து அவர்கள் ஆறுதல் அடையலாம்.

25, 26. சிறுவன் இயேசு தன் பெற்றோருக்கு எப்படிப் பதிலளித்தான், அதைக் கேட்ட யோசேப்புக்கு எப்படி இருந்திருக்கும்?

25 வேறெந்த இடத்தையும்விட தேவாலயத்தில்தான் பரலோகத் தகப்பனோடு மிகவும் நெருக்கமாய் இருப்பதாகச் சிறுவன் இயேசு உணருகிறான்; அதோடு, யெகோவாவைப் பற்றிய அறிவு எனும் முத்துக்களை அள்ள வேண்டுமென்ற ஆர்வத்தில்தான் அங்கு இருக்கிறான்! அதனால் தன் பெற்றோரிடம், “நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தகப்பனுடைய வீட்டில் இருக்க வேண்டுமென உங்களுக்குத் தெரியாதா?” என்று வெளிப்படையாகவும் மரியாதையாகவும் பதிலளிக்கிறான்.​—லூக். 2:49.

26 அந்த வார்த்தைகளை யோசேப்பு மீண்டும் மீண்டும் அசைபோட்டுப் பார்த்திருப்பார் என்பதில் சந்தேகமே இல்லை. ஒருவேளை அவற்றை நினைத்துப் பெருமிதத்தில் மிதந்திருப்பார். யெகோவா தேவனுடன் அப்படிப்பட்ட பந்தத்தை அனுபவிக்க சளைக்காமல் தன் வளர்ப்பு மகனுக்குக் கற்றுத் தந்தது அவர்தானே! ‘தகப்பன்’ என்ற வார்த்தைக்குள் பொதிந்துள்ள பாசத்தையும் நேசத்தையும் சிறுவன் இயேசு அந்த வயதிலேயே அனுபவப்பூர்வமாக அறிந்திருந்தான்​—இவ்வளவு காலமாக யோசேப்பு அவனைச் சீராட்டி பாராட்டி வளர்த்திருந்தாரே!

27. ஒரு தகப்பனாக உங்களுக்கு என்ன பாக்கியம் இருக்கிறது, நீங்கள் ஏன் யோசேப்பின் உதாரணத்தை நினைத்துப்பார்க்க வேண்டும்?

27 நீங்கள் ஒரு தகப்பனா? அப்படியென்றால், யெகோவா அன்புகாட்டுகிற, பாதுகாக்கிற தகப்பன் என்பதை உங்கள் முன்மாதிரியின் மூலம் பிள்ளைகளுக்குப் புரியவைக்கும் அரும்பெரும் பாக்கியம் உங்களுக்கு இருக்கிறது. உங்களுக்கு மாற்றான் பிள்ளைகளோ வளர்ப்புப் பிள்ளைகளோ இருந்தால், யோசேப்பின் உதாரணத்தை நினைத்துப் பாருங்கள்; ஒவ்வொரு பிள்ளையையும் ஒரு பொக்கிஷமாகக் கருதுங்கள். பரலோகத் தகப்பனான யெகோவா தேவனுடன் நெருங்கிய பந்தத்தை வளர்க்க அவர்களுக்கு உதவுங்கள்.​எபேசியர் 6:​4-ஐ வாசியுங்கள்.

பொறுப்பைக் கடைசிவரை செய்துமுடித்தார்

28, 29. (அ) லூக்கா 2:​51, 52-ல் உள்ள வார்த்தைகள் யோசேப்பைப் பற்றி என்ன சொல்கின்றன? (ஆ) இயேசு ஞானத்தில் பெருக யோசேப்பு எப்படி உதவினார்?

28 யோசேப்பின் வாழ்க்கைச் சுவடுகளைப் பற்றி பைபிள் இன்னும் ஓரளவு மட்டுமே சொல்கிறது, ஆனாலும் அலசிப் பார்க்க வேண்டிய முக்கியமான விவரங்கள் அவை. இயேசு ‘தொடர்ந்து பெற்றோருக்குக் கட்டுப்பட்டு நடந்தார்’ என்று வாசிக்கிறோம். அதுமட்டுமல்ல, அவர் “வளரவளர ஞானத்தில் பெருகி கடவுளிடமும் மனிதரிடமும் தயவு பெற்று வந்தார்” என்றும் வாசிக்கிறோம். (லூக்கா 2:​51, 52-ஐ வாசியுங்கள்.) யோசேப்பைப் பற்றி இவை நமக்கு என்ன சொல்கின்றன? பல விஷயங்களைச் சொல்கின்றன. பரிபூரண மகனாகிய இயேசு அவரது அதிகாரத்தை மதித்து அவருக்குக் கட்டுப்பட்டு நடந்ததை வைத்துப் பார்க்கும்போது, அவர் தன் குடும்பத்தைத் தலைமைதாங்கி நடத்தி வந்தார் எனத் தெரிந்துகொள்கிறோம்.

29 இயேசு ஞானத்தில் பெருகி வந்தார் என்பதாகவும் நாம் வாசிக்கிறோம். யோசேப்புக்கு அதில் பெரும் பங்குண்டு என்பது நிச்சயம். அந்தக் காலத்தில் யூதரிடையே ஒரு முதுமொழி நிலவி வந்தது. சில பதிவுகளில் இன்றும் அந்த முதுமொழியைக் காணலாம், வாசிக்கலாம். செல்வமும் செல்வாக்கும் படைத்தவர்கள் மட்டுமே ஞானியாக முடியும்... ஆனால் தச்சர்கள், விவசாயிகள், கொல்லர்கள் போன்ற சாதாரண தொழிலாளிகள் “நீதி நியாயம் வழங்க முடியாது, ஞானம் பொதிந்த கூற்றுகள் பேசப்படும் இடத்தில் அவர்களுக்கு இடமில்லை”... என்றெல்லாம் அந்த முதுமொழி சுட்டிக்காட்டுகிறது. ஆனால் அது அர்த்தமற்ற முதுமொழி என்பதைப் பிற்காலத்தில் இயேசு தம் வாழ்க்கையில் நிரூபித்துக் காட்டினார். அதுமட்டுமல்ல, அவரது வளர்ப்புத் தந்தை யோசேப்பு ஒரு சாதாரண தச்சராக இருந்தபோதும் யெகோவாவின் “நீதி நியாயத்தை” பற்றி அருமையாக அவருக்குக் கற்பித்திருந்தாரே! ஒரு முறையா இரண்டு முறையா, எண்ணற்ற முறை கற்பித்திருந்தாரே!

30. இன்றுள்ள குடும்பத் தலைவர்களுக்கு யோசேப்பு எப்படி முன்மாதிரியாய் விளங்குகிறார்?

30 இயேசுவின் உடல் வளர்ச்சியிலும் யோசேப்புக்கு பங்குண்டு. அவர் திடகாத்திரமான வாலிபராக வளர்ந்தது யோசேப்பின் அன்பான கவனிப்பால்தான். தச்சு வேலையில் கைதேர்ந்தவராய் ஆனதும் யோசேப்பின் பயிற்றுவிப்பால்தான். இயேசு தச்சனின் மகன் என்று மட்டுமல்ல, “தச்சன்” என்றும் அழைக்கப்பட்டார். (மாற். 6:3) அப்படியென்றால், யோசேப்பு தந்த பயிற்சி பலன் அளித்தது. இன்றுள்ள குடும்பத் தலைவர்கள் யோசேப்பின் முன்மாதிரியைப் பின்பற்றி பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவதும்... சொந்தக் காலில் நிற்க அவர்களுக்கு உதவி செய்வதும்... ஞானமானது.

31. (அ) யோசேப்பு எப்போது இறந்திருக்கலாம்? ( பெட்டியையும் காண்க.) (ஆ) யோசேப்பின் முன்மாதிரியை நாம் எப்படிப் பின்பற்றலாம்?

31 சுமார் 30 வயதில் இயேசு ஞானஸ்நானம் எடுத்ததைப் பற்றிய பதிவு முதற்கொண்டு யோசேப்பைப் பற்றி பைபிளில் எந்த விவரமும் இல்லை. இயேசு தமது ஊழியத்தை ஆரம்பித்தபோது மரியாள் விதவையாக இருந்ததாய்த் தெரிகிறது. ( “யோசேப்பு எப்போது இறந்தார்?” என்ற பெட்டியைக் காண்க.) என்றாலும், குடும்பத்தைப் பாதுகாப்பதில்... பராமரிப்பதில்... பொறுப்பைச் செய்துமுடிப்பதில்... யோசேப்பு அருமையான தகப்பன் என்ற முத்திரையைப் பதித்துச் சென்றிருக்கிறார். ஒவ்வொரு தகப்பனும் ஒவ்வொரு குடும்பத் தலைவரும், சொல்லப்போனால் ஒவ்வொரு கிறிஸ்தவரும், யோசேப்பின் விசுவாசப் பாதையில் நடப்பது எவ்வளவு நல்லது!

^ பாரா. 4 அந்தக் காலத்தில், நிச்சயதார்த்தம் திருமணத்தைப் போல் அவ்வளவு முக்கியமாகக் கருதப்பட்டது.

^ பாரா. 8 அந்த நட்சத்திரம் சாதாரணமாக வானில் தோன்றும் நட்சத்திரம் அல்ல; அற்புதமாகக் கடவுள் அனுப்பிய நட்சத்திரமும் அல்ல. அதை வானில் தோன்ற வைத்தது சாத்தானே; இயேசுவைக் கொல்ல அவன் செய்த சதியில் இதுவும் ஒன்று.

^ பாரா. 11 இயேசு தமது “முதல் அற்புதத்தை” ஞானஸ்நானத்திற்குப் பிறகே செய்தார் என பைபிள் தெளிவாகக் காட்டுகிறது.​—யோவா. 2:​1-11.