Skip to content

பைபிள் வசனங்களின் விளக்கம்

ஏசாயா 41:10—“நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்”

ஏசாயா 41:10—“நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்”

 “பயப்படாதே, நான் உன்னோடு இருக்கிறேன். கவலைப்படாதே, நான் உன் கடவுள். நான் உன்னைப் பலப்படுத்துவேன், உனக்கு உதவி செய்வேன். என்னுடைய நீதியான வலது கையால் உன்னைத் தாங்குவேன்.”—ஏசாயா 41:10, புதிய உலக மொழிபெயர்ப்பு.

 “நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.”—ஏசாயா 41:10, பரிசுத்த வேதாகமம்—தமிழ் O.V. பைபிள்.

ஏசாயா 41:10-ன் அர்த்தம்

 யெகோவா a தன்னை வணங்குபவர்களுக்கு இந்த வாக்குறுதியைக் கொடுக்கிறார். எப்படிப்பட்ட பிரச்சினைகள் வந்தாலும் அவர்களுக்கு உதவி செய்வதாக உறுதி தருகிறார்.

 “நான் உன்னோடு இருக்கிறேன்.” தன்னை வணங்குபவர்கள் ஏன் பயப்பட வேண்டியதில்லை என்று யெகோவா சொல்கிறார். அவர்கள் தனியாக இல்லை. அவர்கள் படும் வேதனையை யெகோவா கவனிக்கிறார். அவர்களுடைய ஜெபங்களைக் கேட்கிறார். அவர்களுக்குப் பக்கத்திலேயே இருக்கிறார்.—சங்கீதம் 34:15; 1 பேதுரு 3:12.

 “நான் உன் கடவுள்.” தன்னை வணங்குபவர்களை யெகோவா ஆறுதல்படுத்துகிறார். ‘எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் நான் உங்கள் கடவுள், நீங்கள் என் மக்கள்’ என்று சொல்கிறார். அவர் உதவி செய்வதற்கு எந்தச் சூழ்நிலையும் தடையாக இருக்க முடியாது என்பது நிச்சயம்!—சங்கீதம் 118:6; ரோமர் 8:32; எபிரெயர் 13:6.

 “நான் உன்னைப் பலப்படுத்துவேன், உனக்கு உதவி செய்வேன். என்னுடைய நீதியான வலது கையால் உன்னைத் தாங்குவேன்.” ஒரே விஷயத்தை மூன்று விதமாக யெகோவா சொல்கிறார். இப்படி, உதவி செய்வதாக ஆணித்தரமாகச் சொல்கிறார். தன் மக்களுக்கு உதவி தேவைப்படும்போது என்ன செய்வார் என்பதை ஒரு சொல்லோவியத்தின் மூலம் விளக்குகிறார். ஒருவர் விழுந்துவிட்டால், தன்னுடைய வலது கையைக் கொடுத்துத் தூக்கிவிடுவதாகச் சொல்கிறார்.—ஏசாயா 41:13.

 யெகோவா முக்கியமாகத் தன் வார்த்தையாகிய பைபிளின் மூலம் தன் மக்களைப் பலப்படுத்துகிறார், தாங்கிப் பிடிக்கிறார். (யோசுவா 1:8; எபிரெயர் 4:12) உதாரணத்துக்கு, வறுமையினாலோ நோய்நொடியினாலோ அன்பானவரை இழந்ததாலோ வேதனையில் தவிப்பவர்களுக்கு பைபிள் அருமையான ஆலோசனைகளைத் தருகிறது. (நீதிமொழிகள் 2:6, 7) கடவுள் தன்னுடைய சக்தியையும் கொடுத்து தன் மக்களுக்கு உதவுகிறார். சோதனைகளை சகிப்பதற்குத் தேவையான மன பலத்தை அந்தச் சக்தி அவர்களுக்குத் தருகிறது.—ஏசாயா 40:29; லூக்கா 11:13.

ஏசாயா 41:10-ன் பின்னணி

 பிற்பாடு பாபிலோனுக்கு சிறைக்கைதிகளாகக் கொண்டுபோகப்பட்ட யூதர்களுக்கு இந்த வார்த்தைகள் ஆறுதல் தந்தன. அவர்களுடைய சிறைக்காலம் முடியப்போகும் சமயத்தில், சுற்றுப்புற தேசங்களையும் பாபிலோனையும் தாக்குவதற்கு ஒரு ராஜா வரப்போவதைப் பற்றி அவர்கள் கேள்விப்படுவார்கள் என்று யெகோவா முன்கூட்டியே சொல்லியிருந்தார். (ஏசாயா 41:2-4; 44:1-4) அந்தச் செய்தியைக் கேட்டு பாபிலோனிலும் சுற்றுப்புற தேசங்களிலும் இருக்கும் மக்கள் பயந்து நடுங்குவார்கள், ஆனால் யூதர்கள் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை. ஏனென்றால், யெகோவா அவர்களைப் பாதுகாப்பார். “பயப்படாதே” என்று மூன்று தடவை சொல்லி அவர்களுக்கு அவர் நம்பிக்கை அளித்தார்.—ஏசாயா 41:5, 6, 10, 13, 14.

 பாபிலோனில் சிறைக்கைதிகளாக இருந்த பக்தியுள்ள யூதர்களிடம் ஏசாயா 41:10-ல் உள்ள வார்த்தைகளை யெகோவா முதலில் சொன்னார் என்பது உண்மைதான். ஆனால், தன்னை வணங்குகிற எல்லாருக்குமே ஆறுதல் தருவதற்காக அந்த வார்த்தைகளை அவர் பைபிளில் பதிவு செய்து வைத்திருக்கிறார். (ஏசாயா 41:10; 40:8; ரோமர் 15:4) அன்று தன் மக்களுக்கு உதவி செய்தது போலவே இன்றும் தன் மக்களுக்கு அவர் உதவி செய்கிறார்.

ஏசாயா 41-வது அதிகாரத்தை அடிக்குறிப்புகளோடும் இணை வசனங்களோடும் சேர்த்து வாசித்துப் பாருங்கள்.

a யெகோவா என்பது கடவுளுடைய பெயர்.—சங்கீதம் 83:18 (தமிழ் O.V. பைபிளில் வசனம் 17).