Skip to content

யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக ஆவது எப்படி?

யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக ஆவது எப்படி?

 யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக ஆவதற்கு என்னென்ன படிகளை எடுக்க வேண்டும் என்பதை இயேசு சொல்லியிருக்கிறார். மத்தேயு 28:19, 20-ஐப் படித்தால் அதைத் தெரிந்துகொள்ளலாம். கிறிஸ்துவின் சீஷராவதற்கு, ஒருவர் யெகோவாவைப் பற்றி மற்றவர்களிடம் சொல்ல வேண்டும், அதாவது அவரைப் பற்றிச் சாட்சி கொடுக்க வேண்டும், என்று அந்த வசனம் விளக்குகிறது.

 படி 1: பைபிள் என்ன கற்பிக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். ‘சீஷர்களாக்குங்கள் . . .  அவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள்” என்று தன்னைப் பின்பற்றியவர்களிடம் இயேசு சொன்னார். (மத்தேயு 28:19, 20) “சீஷர்” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிற வார்த்தைக்கு “கற்றுக்கொள்கிறவர்” என்று அர்த்தம். பைபிளில் இருக்கிற தகவல்கள், அதிலும் குறிப்பாக, பைபிளில் பதிவு செய்யப்பட்டிருக்கிற இயேசு கிறிஸ்துவின் போதனைகள், சந்தோஷமாகவும் திருப்தியாகவும் வாழ நமக்கு உதவுகின்றன. (2 தீமோத்தேயு 3:16, 17) நீங்கள் பைபிளைக் கற்றுக்கொள்ள விரும்பினால், உங்களுக்கு இலவசமாக பைபிள் படிப்பு நடத்த நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம்.—மத்தேயு 10:7, 8; 1 தெசலோனிக்கேயர் 2:13.

 படி 2: கற்றுக்கொள்வதைக் கடைப்பிடியுங்கள். பைபிளைப் படிக்கிறவர்கள் ‘[அவர்] கட்டளையிட்ட எல்லாவற்றையும் கடைப்பிடிக்க’ வேண்டும் என்று இயேசு சொல்லியிருக்கிறார். (மத்தேயு 28:20) வெறுமனே தகவலைத் தெரிந்துகொள்வதற்காக மட்டும் பைபிள் படிக்காமல், யோசிக்கிற விதத்தையும் நடந்துகொள்கிற விதத்தையும் மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற குறிக்கோளோடு படியுங்கள். (அப்போஸ்தலர் 10:42; எபேசியர் 4:22-29; எபிரெயர் 10:24, 25) இயேசுவின் கட்டளைகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்கும்போது, யெகோவா தேவனுக்குத் உங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்க வேண்டும் என்று நீங்கள் முடிவு எடுக்கலாம்.—மத்தேயு 16:24.

 படி 3: ஞானஸ்நானம் எடுங்கள். (மத்தேயு 28:19) ஞானஸ்நானம் எடுப்பதை, அடக்கம் செய்யப்படுவதோடு பைபிள் ஒப்பிடுகிறது. (ரோமர் 6:2-4-ஐ ஒப்பிட்டுப் பாருங்கள்) பழைய வாழ்க்கையைப் பொறுத்தவரை நாம் இறந்துவிட்டதையும், புதிய வாழ்க்கையை நாம் ஆரம்பித்திருப்பதையும் அது காட்டுகிறது. இயேசு குறிப்பிட்ட முதல் இரண்டு படிகளை நீங்கள் எடுத்துவிட்டீர்கள் என்பதையும், கடவுளிடம் சுத்தமான மனச்சாட்சிக்காக வேண்டுதல் செய்திருக்கிறீர்கள் என்பதையும் ஞானஸ்நானம் எடுக்கும்போது நீங்கள் வெளிப்படையாகக் காட்டுகிறீர்கள்.—எபிரெயர் 9:14; 1 பேதுரு 3:21.

ஞானஸ்நானம் எடுக்க நான் தயாராக இருக்கிறேனா என்பதை எப்படித் தெரிந்துகொள்வது?

 சபையில் இருக்கிற மூப்பர்களிடம் பேசுங்கள். ஞானஸ்நானம் எடுப்பதில் என்னவெல்லாம் உட்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் புரிந்துகொண்டீர்களா என்பதையும், கற்றுக்கொண்டதைக் கடைப்பிடிக்கிறீர்களா என்பதையும் தெரிந்துகொள்வதற்காக அவர்கள் உங்களிடம் பேசுவார்கள். அதோடு, நீங்களாகவே விருப்பப்பட்டு கடவுளுக்கு உங்களை அர்ப்பணித்திருக்கிறீர்களா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும் அவர்கள் உங்களிடம் பேசுவார்கள்.—அப்போஸ்தலர் 20:28; 1 பேதுரு 5:1-3.

சாட்சிகளாக இருக்கிறவர்களின் பிள்ளைகளுக்கும் இது பொருந்துமா?

 ஆமாம். ‘யெகோவா சொல்கிற விதத்தில் கண்டித்து, அவர் தருகிற புத்திமதியின்படி’ பிள்ளைகளை வளர்க்க வேண்டும் என்று பைபிள் சொல்கிறது. (எபேசியர் 6:4) பிள்ளைகளை அப்படித்தான் நாங்கள் வளர்க்கிறோம். ஆனாலும், பிள்ளைகள் வளர வளர, பைபிள் சொல்வதைக் கற்றுக்கொள்ளவும், ஏற்றுக்கொள்ளவும், கடைப்பிடிக்கவும் அவர்களாகவே முடிவு எடுக்க வேண்டும். அப்போதுதான், அவர்கள் ஞானஸ்நானம் எடுப்பதற்குத் தயாராக இருக்கிறார்கள் என்று சொல்ல முடியும். (ரோமர் 12:2) ஆக மொத்தத்தில், கடவுளை வணங்கும் விஷயத்தில் அவரவர்தான் முடிவு எடுக்க வேண்டும்.—ரோமர் 14:12; கலாத்தியர் 6:5.