Skip to content

யெகோவாவின் சாட்சிகள் ஏன் சில பண்டிகைகளைக் கொண்டாடுவதில்லை?

யெகோவாவின் சாட்சிகள் ஏன் சில பண்டிகைகளைக் கொண்டாடுவதில்லை?

 ஒரு பண்டிகையை கொண்டாடலாமா வேண்டாமா என்று யெகோவாவின் சாட்சிகள் எப்படி முடிவு செய்கிறார்கள்?

 ஒரு பண்டிகையை கொண்டாடலாமா வேண்டாமா என்று முடிவு எடுப்பதற்கு முன்பு, அதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்று யெகோவாவின் சாட்சிகள் பார்க்கிறார்கள். சில பண்டிகைகள் அல்லது கொண்டாட்டங்கள் பைபிளுக்கு எதிராக இருப்பது தெளிவாகத் தெரியும். அப்படிப்பட்ட கொண்டாட்டங்களை யெகோவாவின் சாட்சிகள் கொண்டாட மாட்டார்கள். ஆனால், சில பண்டிகைகளைக் கொண்டாடலாமா வேண்டாமா என்பது அவரவர் கையில் இருக்கிறது. அதுபோன்ற சமயத்தில், “கடவுளுக்கும் மனுஷர்களுக்கும் முன்னால் சுத்தமான மனசாட்சியோடு இருக்க” அவர்கள் கடினமாக முயற்சி செய்வார்கள்.—அப்போஸ்தலர் 24:16.

 ஒரு பண்டிகையைக் கொண்டாடலாமா வேண்டாமா என்று முடிவு எடுப்பதற்கு முன்பு, யெகோவாவின் சாட்சிகள் சில கேள்விகளைக் கேட்டுக்கொள்கிறார்கள். அவற்றில் சில கேள்விகளைக் கீழே பாருங்கள்: a

  •   இந்தப் பண்டிகை பைபிள் சொல்லித்தருகிற விஷயங்களுக்கு எதிரானதாக இருக்கிறதா?

     பைபிள் அறிவுரை: “‘நீங்கள் அவர்களைவிட்டு வெளியே வாருங்கள், அவர்களிடமிருந்து பிரிந்துபோங்கள், அசுத்தமானதைத் தொடாதீர்கள்’; . . . என்று யெகோவா சொல்கிறார்.”—2 கொரிந்தியர் 6:15-17.

     ஒரு பண்டிகை ஆன்மீக விதத்தில் அசுத்தமாக இருந்தால், அதாவது, பைபிள் சொல்வதற்கு எதிராக இருந்தால், யெகோவாவின் சாட்சிகள் அதைக் கொண்டாட மாட்டார்கள். கீழே கொடுக்கப்பட்டிருக்கும் அம்சங்களைக்கொண்ட பண்டிகைகளை அவர்கள் தவிர்க்கிறார்கள்.

     வேறு தெய்வங்களுக்கு வணக்கம் செலுத்துகிற பண்டிகைகள். “உன் கடவுளாகிய யெகோவாவை மட்டுமே வணங்க வேண்டும், அவர் ஒருவருக்குத்தான் பரிசுத்த சேவை செய்ய வேண்டும்” என்று இயேசு சொல்லியிருக்கிறார். (மத்தேயு 4:10) இந்த ஆலோசனையைப் பின்பற்றுவதால், யெகோவாவின் சாட்சிகள் கிறிஸ்மஸ், ஈஸ்டர், மே தினம் போன்ற பண்டிகைகளைக் கொண்டாடுவதில்லை. ஏனென்றால், இதுபோன்ற பண்டிகைகளைக் கொண்டாடினால் யெகோவாவை அல்ல, மற்ற தெய்வங்களை வணங்குவதுபோல் இருக்கும். அதோடு, கீழே இருப்பதைப் போன்ற பண்டிகைகளையும் அவர்கள் கொண்டாடுவதில்லை.

    •  குவான்சா. குவான்சா என்ற வார்த்தை “மட்டுன்டா யா குவான்சா என்ற ஸ்வாஹிலி வார்த்தைகளிலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. அதன் அர்த்தம், ‘முதல் பலன்கள்.’ இந்த பெயர், இந்தப் பண்டிக்கையின் ஆரம்பத்தைப் புரிந்துகொள்ள உதவுகிறது. ஆப்பிரிக்காவின் சரித்திரத்தில் முதன்முதலில் கொண்டாடப்பட்ட அறுவடை பண்டிகையிலிருந்து குவான்சா வந்திருக்கிறது என்று தெரிகிறது.” (என்ஸைக்ளோப்பீடியா ஆப் ப்லாக் ஸ்டடிஸ்) குவான்சா பண்டிகைக்கும் மதத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று சிலர் நினைத்தாலும், இந்தப் பண்டிகை வேறொரு ஆப்பிரிக்க அறுவடை பண்டிகையைப் போலவே இருப்பதாக என்ஸைக்ளோபீடியா ஆப் ஆப்பிரிக்கன் ரிலிஜியன் சொல்லுகிறது. அந்த ஆப்பிரிக்க அறுவடை பண்டிகையில், முதல் பலன்களை “தெய்வங்களுக்கும் முன்னோர்களுக்கும் படைப்பார்கள்; அவர்களுக்கு நன்றி சொல்வதற்காக இப்படிச் செய்தார்கள்” என்றும் “அதே மாதிரிதான் குவான்சா என்ற ஆப்பிரிக்க அமெரிக்க பண்டிகையும் இருக்கிறது. இந்தப் பண்டிகையிலும்கூட வாழ்க்கையில் கிடைத்திருக்கிற நன்மைகளுக்காக முன்னோர்களுக்கு நன்றி சொல்வார்கள்” என்றும் அந்த என்ஸைக்ளோபீடியா சொல்லுகிறது.

      குவான்சா

    •  நடு இலையுதிர் கால திருவிழா. செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் இதைக் கொண்டாடுவார்கள். இது, “சந்திர பெண் தெய்வத்தை வழிபடுவதற்காகக் கொண்டாடப்படுகிற பண்டிகை.” (ஹாலிடேஸ், பெஸ்டிவல்ஸ், அன்ட் செலிப்ரேசன்ஸ் ஆப் தி உவர்ல்ட் டிக்ஷ்னரி) இந்தப் பண்டிகையின்போது, “வீட்டில் இருக்கிற பெண்கள் மண்டி போட்டு தரை வரைக்கும் குனிந்து, அந்தப் பெண் தெய்வத்தை வணங்குவதற்குச் சடங்குகளைச் செய்வார்கள். இந்தச் சடங்குகளைச் சீன மொழியில் கௌடௌ என்று சொல்வார்கள்.”—ரிலிஜியன்ஸ் ஆப் த உவர்ல்ட்எ காம்ப்ரிஹென்சிவ் என்ஸைக்ளோபீடியா ஆப் பிலீஃப்ஸ் அண்ட் பிராக்டிசஸ்.

    •  நவுருஸ் (நோருஸ்). ‘இந்தப் பண்டிகை சொராஸ்டிரிய மதத்திலிருந்து வந்திருக்கிறது. சொராஸ்டிரிய காலண்டரில் இது ரொம்பப் புனிதமான ஒரு நாள். . . . குறிப்பாக சொன்னால், ரபீத்வின் என்று அழைக்கப்படுகிற நண்பகலின் ஆவியை வரவேற்பதற்காக நவுருஸ் பண்டிகை மத்தியானத்தில் கொண்டாடப்படுகிறது. குளிர்காலத்தின் ஆவி, நண்பகலின் ஆவியைக் குளிர்காலம் முழுவதும் நிலத்துக்கு அடியில் அடைத்து வைத்திருப்பதாக நம்பப்படுகிறது. குளிர்காலம் முடிந்த பிறகு ரபீத்வினை [அதாவது, நண்பகலின் ஆவியை] மறுபடியும் வரவேற்பதற்காக இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது என்று சொராஸ்டிரிய பாரம்பரியம் சொல்கிறது.’—ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு.

    •  ஷாப்-எ யால்டா. இந்தக் குளிர்கால சங்கராந்தி கொண்டாட்டம், ஒளியின் கடவுளான “மித்ரா தெய்வத்தை வணங்குவதோடு சம்பந்தப்பட்டிருக்கிறது என்று நிச்சயமாக சொல்லலாம்” என்று சுஃபிஸம் இன் தி சீக்ரெட் ஹிஸ்டரி ஆப் பெர்சியா என்ற புத்தகம் சொல்கிறது. அதோடு, ரோம மற்றும் கிரேக்க சூரியக் கடவுள்களின் வணக்கத்தோடும் இந்தக் கொண்டாட்டம் சம்பந்தப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. b

    •  தேங்க்ஸ் கிவிங். குவான்சா போலவே இதுவும் ஒரு ஆரம்பகால அறுவடைக் கொண்டாட்டத்திலிருந்து வந்திருக்கிறது. வெவ்வேறு தெய்வங்களுக்கு நன்றி சொல்வதற்காக அந்த ஆரம்பகால அறுவடைக் கொண்டாட்டங்கள் செய்யப்பட்டன. காலங்கள் போகப்போக, “இந்த நாட்டுப்புற பாரம்பரியங்கள் கிறிஸ்தவ சர்ச்சுகளுக்குள்ளேயும் நுழைய ஆரம்பித்துவிட்டன.”—எ கிரேட் அன்ட் காட்லி அட்வென்ச்சர்—தி பில்கிரிம்ஸ் அன்ட் தி மித் ஆஃப் தி ஃபர்ஸ்ட் தேங்க்ஸ் கிவிங்.

     மூடநம்பிக்கை அல்லது அதிர்ஷ்ட நம்பிக்கையின் அடிப்படையில் கொண்டாடப்படும் பண்டிகைகள். ‘அதிர்ஷ்ட தெய்வத்துக்காக . . . படையல் வைக்கிறவர்கள்,’ ‘யெகோவாவை விட்டுவிடுகிறார்கள்’ என்று பைபிள் சொல்கிறது. (ஏசாயா 65:11) அதனால், இந்தப் பண்டிகைகளை யெகோவாவின் சாட்சிகள் கொண்டாடுவதில்லை:

    •  ஈவான் குபாலா. “[இந்த] பண்டிகையின்போது இயற்கை தன்னுடைய மந்திர சக்திகளை வெளியிடுவதாகவும், தைரியமும் அதிர்ஷ்டமும் இருந்தால் அதை எடுத்துக்கொள்ள முடியும் என்றும் நிறைய பேர் நம்புகிறார்கள்” என்று தி ஏ டூ ஸெட் ஆஃப் பெளாரஸ் என்ற புத்தகம் சொல்கிறது. ஆரம்பத்தில், கோடை சங்கராந்தியைக் கொண்டாடுவதற்காகத்தான் இந்தப் பண்டிகையைக் கொண்டாடினார்கள். ஆனால், “மற்ற மதத்தைச் சேர்ந்தவர்கள் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியபோது அவர்களுடைய இந்த பண்டிகை சர்ச்சின் பண்டிகையாக [யோவான் ஸ்நானகரின் ”புனிதரின் நாளாக“] ஆனது” என்று என்ஸைக்ளோபீடியா ஆஃப் கன்டெம்பொரரி ரஷ்யன் கல்ச்சர் சொல்கிறது.

    •  சந்திர புத்தாண்டு (சீனப் புத்தாண்டு அல்லது கொரிய புத்தாண்டு​). “புது வருஷத்தின் இந்த நாள், குடும்பங்களுக்கும் நண்பர்களுக்கும் சொந்தக்காரர்களுக்கும் முக்கியமான ஒரு நாள். அந்த வருஷம் முழுவதும் தங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அன்றைக்கு நிறைய நல்லது செய்வார்கள். தெய்வங்களுக்கும் ஆவிகளுக்கும் மரியாதை செலுத்துவார்கள். அதிர்ஷ்டத்துக்காக வேண்டிக்கொள்வார்கள்.” (மூண்கேக்ஸ் அன்ட் ஹங்கிறி கோஸ்ட்ஸ்​—ஃபெஸ்டிவல்ஸ் ஆஃப் சைனா​) அதுபோலவே, கொரிய புத்தாண்டிலும் “முன்னோர்களை வணங்குவது, கெட்ட ஆவிகளைத் துரத்த சடங்குகளைச் செய்வது, அதிர்ஷ்டத்துக்காக வேண்டுவது போன்றவற்றைச் செய்வார்கள். அதோடு, அந்த வருஷத்தில் என்னவெல்லாம் நடக்கப்போகிறது என்பதைத் தெரிந்துகொள்ள குறி கேட்பார்கள்.”​—என்ஸைக்ளோபீடியா ஆஃப் நியூ யியர்ஸ் ஹாலிடேஸ் உவர்ல்ட்வைட்.

      சீனப் புத்தாண்டு

     ஆத்துமா சாகாது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் கொண்டாடப்படுகிற பண்டிகைகள். ஆத்துமா சாகும் என்று பைபிள் ரொம்பத் தெளிவாகச் சொல்கிறது. (எசேக்கியேல் 18:4) அதனால், ஆத்துமா சாகாது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இருக்கிற எந்தவொரு பண்டிகையையும் யெகோவாவின் சாட்சிகள் கொண்டாட மாட்டார்கள். அது என்னென்ன என்று இப்போது பார்க்கலாம்:

    •  கல்லறைத் திருநாள். “இறந்தவர்களைக் கௌரவப்படுத்துவதற்காக இந்த நாள் கொண்டாடப்படுகிறது” என்று நியூ கேத்தலிக் என்ஸைக்ளோப்பீடியா சொல்கிறது. “சுமார் கி.பி. 500-லிருந்து கி.பி. 1500-வரைக்கும் ஒரு பிரபலமான நம்பிக்கை இருந்தது. உத்தரிக்கும் ஸ்தலத்தில் இருக்கிற ஆத்துமாக்கள், மனிதர்களாக வாழ்ந்த சம்யத்தில் யாராவது அவர்களுக்குக் கெடுதல் செய்திருந்தால் கல்லறைத் திருநாளின்போது அவர்கள் ஆவிகளாகவோ சூனியக்காரிகளாகவோ தேரைகளாகவோ அல்லது வேறு ஏதாவது வழியிலோ வருவார்கள் என்ற ஒரு நம்பிக்கை இருந்தது.”

    •  சிங்மிங் திருவிழா மற்றும் ஆவிகள் திருவிழா. மூதாதையர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக இந்த இரண்டு பண்டிகைகளைக் கொண்டாடுகிறார்கள். “செத்தவர்கள் பசியாகவோ தாகமாகவோ இருக்கக் கூடாது... பணம் இல்லாமல் கஷ்டப்படக் கூடாது... என்பதற்காக சாப்பாடு, பானம், காசு இவை எல்லாவற்றையும் [சிங்மிங் திருவிழாவின்போது] எரிப்பார்கள்” என்று செலிப்ரேட்டிங் லைஃப் கஸ்டம்ஸ் அரவுண்ட் தி உவர்ல்ட்​—ஃப்ரம் பேபி ஷவர்ஸ் டூ ஃபியூனரல்ஸ் என்ற புத்தகம் சொல்கிறது. “ஆவிகள் திருவிழா மாதத்தில், வேறு எந்த ராத்திரியையும்விட முக்கியமாக பௌர்ணமி ராத்திரி அன்று, செத்தவர்களுக்கும் உயிரோடு இருப்பவர்களுக்கும் ஏதோ ஒரு தொடர்பு ஏற்படுவதாக [அந்தப் பண்டிகையைக் கொண்டாடுகிறவர்கள் நம்புகிறார்கள்]. அதனால், செத்தவர்களைச் சாந்திப்படுத்தவும் மூதாதையர்களுக்கு மரியாதை செலுத்தவும் ஏதாவது செய்வது ரொம்ப முக்கியம் என்று அவர்கள் நம்புகிறார்கள்” என்றும் அந்தப் புத்தகம் சொல்கிறது.

    •  ச்சூஸோக். இந்தப் பண்டிகையில் “இறந்தவர்களுடைய ஆத்துமாக்களுக்கு உணவையும் வைனையும் படைப்பார்கள்” என்று தி கொரியன் ட்ரெடிஷன் ஆஃப் ரிலிஜியன், சொஸைட்டி, அன்ட் எதிக்ஸ் என்ற புத்தகம் சொல்கிறது. “உடல் செத்த பிறகு ஆத்துமா தனியாகப் பிரிந்துபோய் வாழும் என்று நம்பி இதையெல்லாம் படைக்கிறார்கள்” என்றும் அந்தப் புத்தகம் சொல்கிறது.

     பேய்களோடு சம்பந்தப்பட்ட பண்டிகைகள். “உங்களில் யாருமே . . . குறிசொல்லவோ, மாயமந்திரம் செய்யவோ, சகுனம் பார்க்கவோ, சூனியம் வைக்கவோ, வசியம் செய்யவோ, ஆவிகளோடு பேசுகிறவரிடம் அல்லது குறிசொல்கிறவரிடம் போகவோ, இறந்தவர்களைத் தொடர்புகொள்ளவோ கூடாது. ஏனென்றால், இப்படிப்பட்ட காரியங்களைச் செய்கிறவர்கள் யெகோவாவுக்கு அருவருப்பானவர்கள்” என்று பைபிள் சொல்கிறது. (உபாகமம் 18:10-12) ஜோதிடம் பார்ப்பது (ஒரு வகையான குறி சொல்லுதல்) உட்பட பேய்களோடு சம்பந்தப்பட்ட எந்தவொரு விஷயத்திலிருந்தும் விலகியிருப்பதற்காக ஹாலோவீனையோ கீழே இருக்கிற எந்தவொரு பண்டிகையையோ யெகோவாவின் சாட்சிகள் கொண்டாடுவதில்லை.

    •  சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு. “நாள் நட்சத்திரம் பார்த்து நல்ல நேரம் குறித்து, . . . சில சடங்கு சம்பிரதாயங்களை இந்தப் பண்டிகையின்போது செய்வார்கள்.”​—என்ஸைக்ளோபீடியா ஆஃப் ஸ்ரீலங்கா.

    •  சொங்க்ரான். இந்த ஆசிய பண்டிகையின் பெயர், “சமஸ்கிருத வார்த்தையிலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. . . . அதன் அர்த்தம்: ‘நகர்வது’ அல்லது ‘மாற்றம்.’ மேஷ ராசிகுள் சூரியன் நுழைவதை” கொண்டாடும் பண்டிகை இது!—ஃபுட், ஃபீஸ்ட்ஸ், அன்ட் ஃபெய்த்​—ஆன் என்ஸைக்ளோபீடியா ஆஃப் ஃபுட் கல்ச்சர் இன் உவர்ல்ட் ரிலிஜியன்ஸ்.

     திருச்சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கும் பண்டிகைகள். “கிறிஸ்து திருச்சட்டத்தின் முடிவாக இருக்கிறார்” என்று பைபிள் சொல்கிறது. (ரோமர் 10:4) அந்தக் காலத்தில் இருந்த இஸ்ரவேலர்களுக்காக திருச்சட்டம் கொடுக்கப்பட்டது. அதில் இருக்கிற நியமங்கள் இன்றைக்கும் கிறிஸ்தவர்களுக்குப் பிரயோஜனமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும், அதில் சொல்லப்பட்டிருக்கிற பண்டிகைகளைக் கிறிஸ்தவர்கள் கொண்டாடுவதில்லை. குறிப்பாக மேசியா வருவதற்கு அடையாளமாக இருந்த பண்டிகைகளை அவர்கள் கொண்டாடுவதில்லை. ஏனென்றால், மேசியா ஏற்கெனவே வந்துவிட்டார் என்று அவர்கள் நம்புவதால், அவற்றை கொண்டாட வேண்டிய அவசியம் இல்லை. பைபிள் சொல்கிறபடி, “அவை வரப்போகிற காரியங்களின் நிழல் மட்டுமே, கிறிஸ்துதான் நிஜம்.” (கொலோசெயர் 2:17) அதுமட்டுமல்ல, அந்தப் பண்டிகைகளில் பைபிளில் சொல்லப்படாத சடங்கு சம்பிரதாயங்கள் கலந்துவிட்டதாலும் யெகோவாவின் சாட்சிகள் அவற்றைக் கொண்டாடுவதில்லை. அந்தப் பண்டிகைகளில் சிலவற்றை இப்போது பார்க்கலாம்.

    •  ஹனுக்கா. எருசலேமிலிருந்த ஆலயத்தை யூதர்கள் மறுபடியும் கட்டி அர்ப்பணித்த நாளை நினைத்துப் பார்க்கத்தான் இந்தக் கொண்டாட்டம். ஆனால், “கையால் செய்யப்பட்ட பூமிக்குரிய கூடாரத்துக்கு,” அதாவது ஆலயத்துக்கு அல்ல, “அதைவிட பரிபூரணமான பெரிய கூடாரத்துக்கு” இயேசு தலைமைக் குருவாக ஆகியிருக்கிறார் என்று பைபிள் சொல்கிறது. (எபிரெயர் 9:11) கிறிஸ்தவர்களை பொறுத்தவரைக்கும், அடையாள அர்த்தமுள்ள இந்த ஆலயம் எருசலேமில் இருக்கிற ஆலயத்தை மாற்றீடு செய்துவிட்டது.

    •  ரோஷ் ஹஷானா. யூத வருஷத்தின் முதல் நாள் இது. இந்த நாளில், அந்தக் காலத்தில் இருந்த யூதர்கள் கடவுளுக்கு விசேஷப் பலிகளைச் செலுத்தினார்கள். (எண்ணாகமம் 29:1-6) ஆனால், இயேசு கிறிஸ்து மேசியாவாக ஆனதற்குப் பிறகு ‘பலிகளுக்கும் காணிக்கைகளுக்கும் முடிவுகட்டினார்.’ அதனால், இந்தப் பலிகளைக் கடவுள் ஏற்றுக்கொள்வதில்லை.​—தானியேல் 9:26, 27.

  •   இந்தப் பண்டிகை கலப்பு விசுவாசத்தை ஆதரிக்கிறதா?

     பைபிள் நியமம்: “விசுவாசியாக இருப்பவனுக்கும் விசுவாசியாக இல்லாதவனுக்கும் என்ன பொருத்தம் இருக்கிறது? கடவுளுடைய ஆலயத்துக்கும் சிலைகளுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?”​—2 கொரிந்தியர் 6:15-17.

     யெகோவாவின் சாட்சிகள், எல்லாரோடும் சமாதானமாக இருக்கத்தான் முயற்சி செய்கிறார்கள். மத நம்பிக்கை என்பது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட உரிமை என்பதைப் புரிந்துவைத்திருக்கிறார்கள்; அதை மதிக்கிறார்கள். இருந்தாலும், கலப்பு விசுவாசத்தை ஆதரிக்கிற மாதிரியான பண்டிகைகளை அவர்கள் கொண்டாடுவதில்லை.

     வெவ்வேறு மதத்தில் இருக்கிறவர்கள் ஒன்றுசேர்ந்து ஒற்றுமையாக வழிபட வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட கொண்டாட்டங்கள். ஒரு மதத்தைச் சார்ந்த நபரையோ சம்பவத்தையோ கொண்டாடுவதற்காக இப்படிப்பட்ட பண்டிகைகள் உருவாக்கப்பட்டன. பைபிள் காலங்களில், கடவுள் தன்னுடைய மக்களை ஒரு புதிய ஊரில் குடிவைப்பதற்காக அவர்களைக் கூட்டிக்கொண்டு போனார். அங்கே வெவ்வேறு மதத்தைச் சேர்ந்த ஆட்களும் இருந்தார்கள். அதனால் கடவுள் தன்னுடைய மக்களிடம், “அவர்களுடனோ அவர்கள் தெய்வங்களுடனோ நீங்கள் ஒப்பந்தம் செய்யக் கூடாது. . . . நீங்கள் அவர்களுடைய தெய்வங்களை வணங்கினால், அது கண்டிப்பாக உங்களுக்கு ஒரு கண்ணியாக ஆகிவிடும்” என்று சொன்னார். (யாத்திராகமம் 23:32, 33) அதனால், யெகோவாவின் சாட்சிகள் கீழே சொல்லியிருக்கிற மாதிரியான பண்டிகைகளைக் கொண்டாடுவதில்லை.

    •  லாய் கிரத்தோங். இது தாய்லாந்தில் கொண்டாடப்படுகிற பண்டிகை. இதில், “இலைகளை விளக்கு வடிவத்தில் செய்து, அதில் மெழுகுவர்த்திகளை அல்லது ஊதுபத்திகளை ஏற்றி தண்ணீரில் மிதக்க விடுவார்கள். அந்த விலக்குகள் துரதிஷ்டத்தை எடுத்துக்கொண்டு போய்விடும் என்ற நம்பிக்கை இருக்கிறது. புத்தர் விட்டுவிட்டுப் போன புனிதமான கால் தடத்தை நினைத்துப் பார்க்க இது அனுசரிக்கப்படுகிறது.”—என்ஸைக்ளோபீடியா ஆஃப் புத்திஸம்.

    •  தேசிய மனம்திரும்புதல் நாள். ஒரு அரசாங்க அதிகாரி சொன்ன விஷயம் பாப்புவா நியூ கினியில் இருக்கிற தி நேஷனல் என்ற செய்தித்தாளில் வந்திருந்தது. அவர் இப்படிச் சொன்னார்: “இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறவர்கள் கிறிஸ்தவ மதத்தின் அடிப்படை நம்பிக்கைகளை ஏற்றுக்கொள்கிறார்கள். தேசிய மனம்திரும்புதல் நாள், நாட்டில் இருக்கிற எல்லாரையும் கிறிஸ்தவ மதத்தின் அடிப்படை நம்பிக்கைகளைக் கடைப்பிடிக்கத் தூண்டுகிறது” என்று அவர் சொல்கிறார்.

    •  விசாக். “புத்தர்களின் புனித நாட்களிலேயே இதுதான் ரொம்பப் புனிதமான நாள். புத்தர் பிறந்ததை, ஞானம் அடைந்ததை, இறந்ததை, அதாவது நிர்வாணா என்ற நிலையை எட்டியதைக், கொண்டாடுவதற்குத்தான் இந்தப் பண்டிகை.”—ஹாலிடேஸ், பெஸ்டிவல்ஸ், அன்ட் செலிப்ரேசன்ஸ் ஆப் த உவர்ல்ட் டிக்ஷ்னரி.

      விசாக்

     பைபிளில் சொல்லப்படாத மத சம்பிரதாயங்களின் அடிப்படையில் இருக்கிற பண்டிகைகள். “உங்களுடைய பாரம்பரியத்தால் கடவுளுடைய வார்த்தையை மதிப்பற்றதாக்கிவிடுகிறீர்கள்” என்று அன்றைக்கு இருந்த மத தலைவர்களிடம் இயேசு சொன்னார். “மனுஷர்களுடைய கோட்பாடுகளைத்தான் இவர்கள் கற்றுக்கொடுக்கிறார்கள்.” அதனால், இவர்களுடைய வணக்கத்தை கடவுள் ஏற்றுக்கொள்ள மாட்டார் என்றும் சொன்னார். (மத்தேயு 15:6, 9) இயேசு கொடுத்த இந்த எச்சரிப்பை மனதில் வைத்திருப்பதால் யெகோவாவின் சாட்சிகள் நிறைய பண்டிகைகளைக் கொண்டாடுவதில்லை.

    •  மூன்று ராஜாக்கள் திருவிழா (மூன்று அரசர் திருநாள், டிம்காட், லாஸ் ரேஸ் மாகோஸ்). இயேசுவை ஜோதிடர்கள் வந்து பார்த்ததை அல்லது அவர் ஞானஸ்நானம் எடுத்ததை நினைத்துப் பார்க்கத்தான் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. “மற்ற மதங்களில் கொண்டாடப்பட்ட வசந்தகால பண்டிகைகள், கிறிஸ்தவ மதத்திற்குள் நுழைந்து ஒரு கிறிஸ்தவ பண்டிகையாக ஆகிவிட்டது. அந்த வசந்தகால பண்டிகைகள் ஓடுகிற தண்ணீர், ஆறு மற்றும் நீரோடையின் தெய்வங்களை மகிமைப்படுத்துவதற்காக கொண்டாடப்பட்டன.” (தி கிறிஸ்மஸ் என்ஸைக்ளோபீடியா) இதோடு சம்பந்தப்பட்ட டிம்காட் என்ற பண்டிகை “காலம் காலமாக இருக்கிற பாரம்பரியங்களின் அடிப்படையில் கொண்டாடப்படுகிறது.”​—என்ஸைக்ளோபீடியா ஆஃப் சோஸைட்டி அன்ட் கல்ச்சர் இன் தி ஏன்சியன்ட் உவர்ல்ட்.

    •  தூய கன்னி மரியாவின் விண்ணேற்பு திருவிழா. இயேசுவின் அம்மா மரியாள் தன்னுடைய மனித உடலோடு பரலோகத்துக்கு ஏறி போனார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது. “இந்த நம்பிக்கை ஆரம்பகால கிறிஸ்தவர்களுக்கு இல்லை. வேதாகமங்களிலும் இந்த நம்பிக்கையைப் பற்றி எங்குமே சொல்லப்படவில்லை” என்று ரிலிஜியன் அன்ட் சோஸைட்டி​—என்ஸைக்ளோபீடியா ஆஃப் ஃபண்டமென்டலிஸம் சொல்கிறது.

    •  தேவமாதா கருவுற்ற புனித நாள். மரியாள் ஆரம்பத்திலிருந்தே, அதாவது தன் தாயின் வயிற்றில் கருத்தரித்த சமயத்திலிருந்தே, பாவமில்லாமல் இருந்தார் என்ற போதனை “வேதாகமத்தின் அடிப்படையில் இல்லை. இது சர்ச்சுகளால் உருவாக்கப்பட்ட கோட்பாடு” என்று நியூ கேத்தலிக் என்ஸைக்ளோபீடியா சொல்கிறது.

    •  தவக் காலம் (லெந்து நாட்கள்). தவறுகளுக்காக வருந்தி விரதம் இருக்கிற இந்தக் காலப்பகுதி, பைபிள் எழுதி முடிக்கப்பட்டு கிட்டத்தட்ட 200 வருஷங்களுக்குப் பிறகு, அதாவது “நான்காவது நூற்றாண்டில்” ஏற்படுத்தப்பட்டது என்று நியூ கேத்தலிக் என்ஸைக்ளோபீடியா சொல்கிறது. தவக் காலத்தின் முதல் நாளை பற்றி அந்த என்ஸைக்ளோபீடியா இப்படிச் சொல்கிறது: “சாம்பல் புதன் அன்று, உண்மையுள்ளவர்களின் நெற்றியில் சாம்பல் பூசும் பழக்கம் 1091-ல் பெனிவென்டோவின் குருமார் பேரவை நடந்த சமயத்திலிருந்து உலகம் முழுவதும் செய்யப்பட்டு வருகிறது.”

    •  மிஸ்கெல் (அதாவது, மஸ்கல்). “சிலுவையை (இயேசு அறையப்பட்ட சிலுவையை) கண்டுபிடித்ததை” கொண்டாடுவதற்குத்தான் இந்தப் பண்டிகை. இந்தப் பண்டிகையின்போது, “விறகுக் குவியலுக்கு நெருப்பு மூட்டி அதைச் சுற்றி ஆடுவார்கள்” என்று என்ஸைக்ளோபீடியா ஆஃப் சோஸைட்டி அன்ட் கல்ச்சர் இன் தி மிடிவல் உவர்ல்ட் சொல்கிறது. ஆனால், யெகோவாவின் சாட்சிகள் வணக்கத்துக்காக சிலுவையைப் பயன்படுத்துவதில்லை.

  •   இந்தப் பண்டிகை ஒரு மனிதனையோ அமைப்பையோ தேசிய சின்னத்தையோ உயர்த்தி வைக்கிறதா?

     பைபிள் நியமம்: “யெகோவா சொல்வது இதுதான்: ‘யெகோவாவாகிய என்னை விட்டுவிட்டு அற்ப மனுஷனையும் மனுஷனுடைய பலத்தையும் நம்புகிறவன் சபிக்கப்படுவான்.’”—எரேமியா 17:5.

     யெகோவாவின் சாட்சிகள் மற்ற மனிதர்களை மதிக்கிறார்கள், அவர்களுக்காக ஜெபம்கூட செய்கிறார்கள். ஆனாலும், கீழே சொல்லியிருக்கிற மாதிரியான பண்டிகைகளை அவர்கள் கொண்டாடுவதில்லை.

     முக்கியமான ஒரு நபரையோ ஆட்சியாளரையோ கௌரவப்படுத்துகிற பண்டிகைகள். “மனிதனை நம்புவதை விட்டுவிடுங்கள். அவன் வெறும் காற்றைச் சுவாசித்து உயிர்வாழ்கிறான். அவனுக்கு என்ன மதிப்பு இருக்கிறது?” என்று பைபிள் சொல்கிறது. (ஏசாயா 2:22) அதனால், யெகோவாவின் சாட்சிகள் ஆட்சியாளர்களின் பிறந்த நாட்களைக் கொண்டாடுவதில்லை.

     தேசிய கொடியை கௌரவிக்கும் கொண்டாட்டங்கள். யெகோவாவின் சாட்சிகள் கொடி நாளைக் கொண்டாடுவதில்லை. ஏனென்றால், “சிலைகளுக்கு விலகி உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்” என்று பைபிள் சொல்கிறது. (1 யோவான் 5:21) இன்று சிலர், கொடியை ஒரு சிலையாகவோ வணக்கத்துக்கு பயன்படுத்தும் பொருளாகவோ பார்ப்பதில்லைதான். ஆனால், சரித்திராசிரியர் கார்ல்டன் ஜே. ஹச். ஹேஸ் இப்படி எழுதுகிறார்: “தேசப்பற்றின் அடிப்படை சின்னமும் தேசத்தை வணங்குவதற்கு பயன்படுத்தப்படுகிற முக்கிய பொருளும் கொடிதான்!”

     புனிதர்களைக் கௌரவப்படுத்தும் பண்டிகைகளும் கொண்டாட்டங்களும். கடவுள் பக்தியுள்ள ஒருவர், அப்போஸ்தலன் பேதுருவின் காலில் விழுந்தபோது என்ன ஆனது? பைபிள் இப்படிச் சொல்கிறது, “அப்போது பேதுரு, ‘எழுந்திருங்கள்; நானும் ஒரு மனுஷன்தான்’ என்று சொல்லி அவரைத் தூக்கிவிட்டார்.” (அப்போஸ்தலர் 10:25, 26) பேதுருவும் சரி, வேறு எந்த அப்போஸ்தலர்களும் சரி, மற்றவர்கள் தங்களை விசேஷமாக நடத்துவதையோ வணங்குவதையோ ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால், யெகோவாவின் சாட்சிகள் புனிதர்களைக் கௌரவிக்கிற பண்டிகைகளைக் கொண்டாடுவதில்லை. அவற்றில் சில பண்டிகைகளை இப்போது பார்க்கலாம்:

    •  புனிதர் பெருவிழா. “எல்லா புனிதர்களையும் கௌரவப்படுத்துவதற்காக இதைக் கொண்டாடினார்கள். . . . இந்தக் கொண்டாட்டத்தின் ஆரம்பத்தைப் பற்றி எதுவும் தெரியவில்லை.”​—நியூ கேத்தலிக் என்ஸைக்ளோபீடியா.

    •  குவாதலூப்பே அன்னை திருவிழா. “மெக்சிகோவை பாதுகாக்கிற புனிதரை” கௌரவப்படுத்துவதற்காகத்தான் இந்தப் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். அந்தப் புனிதர், இயேசுவுடைய தாய் மரியாள் என்று சிலர் நம்புகிறார்கள். 1531-ல் மரியாள் ஒரு ஏழை விவசாயிக்கு அற்புதமாக காட்சி கொடுத்ததாக நம்பப்படுகிறது.​—தி கிரீன்வுட் என்ஸைக்ளோபீடியா ஆஃப் லட்டினோ லிட்டரேச்சர்.

      குவாதலூப்பே அன்னை திருவிழா

    •  பெயர் நாள். “ஒரு குழந்தை ஞானஸ்நானம் எடுக்கும்போதோ புது நன்மை பெறும்போதோ அதற்கு ஒரு புனிதருடைய பெயரை வைப்பார்கள். அந்தப் புனிதருடைய நாள்தான், இந்தக் குழந்தையின் பெயர் நாள்” என்று செலிப்ரேட்டிங் லைஃப் கஸ்டம்ஸ் அரவுண்ட் தி உவர்ல்ட்​—ஃப்ரம் பேபி ஷவர்ஸ் டு ஃபியூனரல்ஸ் என்ற புத்தகம் சொல்கிறது. ”இந்த நாளில், மதத்தோடு சம்பந்தப்பட்ட சடங்குகளையும் செய்வார்கள்“ என்றும் அந்தப் புத்தகம் சொல்கிறது.

     அரசியல் அல்லது சமுதாய சீர்திருத்த கொண்டாட்டங்கள். “மனிதர்களை நம்புவதைவிட யெகோவாவிடம் தஞ்சம் அடைவதே நல்லது” என்று பைபிள் சொல்கிறது. (சங்கீதம் 118:8, 9) இந்த உலகத்தில் இருக்கிற பிரச்சினைகளை மனிதர்கள் அல்ல, கடவுள்தான் தீர்ப்பார் என்று யெகோவாவின் சாட்சிகள் நம்புகிறார்கள். அதனால், இன்றிருக்கும் பிரச்சினைகளை மனிதர்கள் தீர்ப்பார்கள் என்று காட்டும் பண்டிகைகளை அவர்கள் கொண்டாடுவதில்லை. உதாரணத்துக்கு, இளைஞர் தினம், மகளிர் தினம், விடுதலை நாள் அல்லது இதுபோன்ற மற்ற பண்டிகைகளை அவர்கள் கொண்டாடுவதில்லை. இனவெறி, பாகுபாடு மாதிரியான பிரச்சினைகளைக் கடவுளுடைய அரசாங்கம் மட்டும்தான் தீர்க்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.​—ரோமர் 2:11; 8:21.

  •   இந்தப் பண்டிகை, ஒரு குறிப்பிட்ட தேசமோ இனமோ ரொம்ப உயர்ந்தது என்பதைப் போல காட்டுகிறதா?

     பைபிள் நியமம்: “கடவுள் பாரபட்சம் காட்டாதவர்.  . . அவருக்குப் பயந்து சரியானதைச் செய்கிறவன் எந்தத் தேசத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அவனை அவர் ஏற்றுக்கொள்கிறார்.”—அப்போஸ்தலர் 10:34, 35.

     யெகோவாவின் சாட்சிகளுக்கு அவர்களுடைய சொந்த ஊர் பிடிக்கும்தான். ஆனால், தங்களுடைய நாடு அல்லது இனம்தான் மற்றதைவிட உயர்ந்தது என்று அவர்கள் நினைப்பதில்லை. அப்படிக் காட்டுகிற பண்டிகைகளை அவர்கள் கொண்டாடுவதும் இல்லை. அதைப் பற்றி கீழே பார்க்கலாம்.

     ராணுவத்தைக் கௌரவிக்கிற நிகழ்ச்சிகள் அல்லது கொண்டாட்டங்கள். போரை ஆதரிப்பதற்குப் பதிலாக, “உங்கள் எதிரிகளிடம் தொடர்ந்து அன்பு காட்டுங்கள், உங்களைத் துன்புறுத்துகிறவர்களுக்காகத் தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள்” என்று இயேசு தன்னைப் பின்பற்றியவர்களிடம் சொன்னார். (மத்தேயு 5:44) அதனால், யெகோவாவின் சாட்சிகள் ராணுவ வீரர்களைக் கௌரவிக்கும் பண்டிகைகளைக் கொண்டாடுவதில்லை. அப்படிப்பட்ட கொண்டாட்டங்களில் சிலவற்றைப் பற்றி இப்போது பார்க்கலாம்:

    •  அன்சாக் நாள். அன்சாக் என்பது “ஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து ராணுவப் படைகளைக் குறிக்கிறது.” அதோடு, “போரில் இறந்துபோனவர்களை நினைத்துப் பார்க்கிற ஒரு நாளாக இது காலப்போக்கில் மாறிவிட்டது.”​—ஹிஸ்டாரிக்கல் டிக்ஷனரி ஆஃப் ஆஸ்திரேலியா.

    •  படைவீரர்கள் தினம் (ஞாபகார்த்த தினம், ஞாபகார்த்த ஞாயிற்றுக்கிழமை, அல்லது நினைவு நாள்). “ராணுவத்தில் இருந்த படைவீரர்களையும், போரில் இறந்துபோனவர்களையும்” கௌரவப்படுத்துவற்காக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.—என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிக்கா.

     நாட்டின் சரித்திரத்தையோ சுதந்திரத்தையோ கொண்டாடுகிற கொண்டாட்டங்கள். இயேசு தன்னுடைய சீஷர்களைப் பற்றி இப்படிச் சொல்கிறார்: “நான் இந்த உலகத்தின் பாகமாக இல்லாதது போலவே இவர்களும் இந்த உலகத்தின் பாகமாக இல்லை.” (யோவான் 17:16) ஒரு நாட்டின் சரித்திரத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள யெகோவாவின் சாட்சிகள் விரும்பினாலும், கீழே சொல்லி இருப்பதைப் போன்ற நிகழ்ச்சிகளில் அவர்கள் கலந்துகொள்வதில்லை.

    •  ஆஸ்திரேலியா தினம். “1788-ல் ஆங்கிலப் போர்வீரர்கள் தங்களுடைய கொடியை நாட்டி, ஆஸ்திரேலியா தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாக அறிவித்த நாள்தான்” ஆஸ்திரேலியா தினம் என்று அனுசரிக்கப்படுவதாக உவர்ல்ட்மார்க் என்ஸைக்ளோபீடியா ஆஃப் கல்சர்ஸ் அன்ட் டெய்லி லைஃப் சொல்கிறது.

    •  கை ஃபாக்ஸ் டே. “1605-ல் கை ­ஃபாக்ஸும் அவரோடு சேர்ந்த கத்தோலிக்கர்களும் முதலாம் ஜேம்ஸ் ராஜாவையும், [இங்கிலாந்து] பாராளுமன்றத்தில் இருந்த மற்ற ஆட்களையும் வெடிமருந்து வைத்துக் கொல்வதற்குப் போட்ட திட்டம் தோல்வி அடைந்ததை நினைத்துக் கொண்டாடுகிற நாள்தான்” இது.—எ டிக்ஷனரி ஆஃப் இங்கிலிஷ் ஃபோல்க்லோர்.

    •  சுதந்திர தினம். “ஒரு நாட்டின் சுதந்திரத்தைப் பொது மக்கள் வருஷா வருஷம் கொண்டாடுவதற்காக ஒதுக்கப்பட்ட நாள்தான்” இது.—மிரீயாம்-வெப்ஸ்டர்ஸ் அன்பிரிட்ஜ்டு டிக்ஷனரி.

  •   இந்தப் பண்டிகையில், ஒழுக்கக்கேடான கட்டுக்கடங்காத பழக்கங்கள் இருக்குமா?

     பைபிள் நியமம்: “முன்பு நீங்கள் உலக மக்களுடைய விருப்பத்தின்படி வெட்கங்கெட்ட நடத்தையில் ஈடுபடுவதிலும், கட்டுக்கடங்காத ஆசைகளுக்கு இடம்கொடுப்பதிலும், குடித்து வெறிப்பதிலும், குடித்துக் கும்மாளம் போடுவதிலும், போட்டி போட்டுக்கொண்டு குடிப்பதிலும், கண்டனத்துக்குரிய சிலை வழிபாடுகளில் கலந்துகொள்வதிலும் ஏற்கெனவே நிறைய காலத்தைச் செலவழித்துவிட்டீர்கள்.”—1 பேதுரு 4:3.

     இந்த நியமத்தின்படி நடப்பதால், அளவுக்கு அதிகமாகக் குடித்துக் கும்மாளம் போடுகிற மாதிரியான கொண்டாட்டங்களை யெகோவாவின் சாட்சிகள் செய்வதில்லை. அதேசமயத்தில், அவர்கள் நண்பர்களோடு ஒன்று சேர்ந்து சந்தோஷமாகவும் இருக்கிறார்கள். அதுபோன்ற சமயங்களில், மதுபானம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் அதை அளவோடு எடுத்துக்கொள்கிறார்கள். “நீங்கள் சாப்பிட்டாலும் குடித்தாலும் எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் கடவுளுடைய மகிமைக்காகவே செய்யுங்கள்” என்று பைபிள் கொடுக்கிற ஆலோசனையின்படி எல்லா சமயத்திலும் நடக்க முயற்சி செய்கிறார்கள்.—1 கொரிந்தியர் 10:31.

     ஒழுக்கக்கேடாக நடந்துக்கொள்ளக் கூடாது என்று பைபிள் சொல்கிறது. ஒழுக்கக்கேட்டை ஆதரிக்கிற பண்டிகைகளிலும் கேளிக்கை கொண்டாட்டங்களிலும், அதாவது கார்னிவல்களிலும், யெகோவாவின் சாட்சிகள் கலந்துகொள்வதில்லை. அந்த மாதிரியான ஒரு கொண்டாட்டம்தான் யூதர்களின் பூரீம் பண்டிகை. கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் யூதர்களுக்கு விடுதலை கிடைத்ததை அனுசரிப்பதற்காக ஆரம்பத்தில் இந்தப் பண்டிகை கொண்டாடப்பட்டது. ஆனால், காலம் போகப்போக “இது யூதர்களின் மார்டி கிராஸ் அல்லது கார்னிவலாக மாறிவிட்டது” என்று எசென்சியல் ஜூடாயிஸம் என்ற புத்தகம் சொல்கிறது. “இதில் கலந்துகொள்பவர்கள் வித்தியாசமான உடைகளை (பெரும்பாலும், ஆண்கள் பெண்களுடைய உடைகளை) போட்டுக்கொள்வார்கள். ரவுடித்தனம் செய்துகொண்டு அதிகமாகக் குடித்துவிட்டு கத்தி கும்மாளம் போட்டுக்கொண்டு இருப்பார்கள்” என்றும் அந்தப் புத்தகம் சொல்கிறது.

 யெகோவாவின் சாட்சிகள் சில பண்டிகைகளைக் கொண்டாடுவதில்லை என்பதால் அவர்களுடைய குடும்பத்தின்மேல் அவர்களுக்கு அன்பு இல்லையென்று அர்த்தமா?

 இல்லை, அப்படிக் கிடையாது! குடும்பத்தில் இருக்கிறவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள்மேல் அன்பும் மரியாதையும் காட்ட வேண்டும் என்று பைபிள் சொல்லிக் கொடுக்கிறது. (1 பேதுரு 3:1, 2, 7) யெகோவாவின் சாட்சிகள் சில பண்டிகைகளைக் கொண்டாடுவதை நிறுத்தும்போது, அவர்களுடைய சொந்தக்காரர்கள் வருத்தப்படலாம், கோபப்படலாம், கைவிடப்பட்டதைப் போல் உணரலாம். அதனால், தங்களுடைய சொந்தக்காரர்கள்மேல் அன்பு இருக்கிறது என்பதைக் காட்ட யெகோவாவின் சாட்சிகள் நிறைய முயற்சிகள் எடுக்கிறார்கள். அவர்கள் ஏன் அந்தப் பண்டிகைகளைக் கொண்டாடுவதில்லை என்பதைப் பற்றிச் சாதுரியமாகவும் அன்பாகவும் எடுத்துச் சொல்கிறார்கள். பண்டிகைகள் இல்லாத வேறு சமயங்களில் அவர்களைப் போய்ப் பார்த்து நேரம் செலவு செய்கிறார்கள்.

 “சில பண்டிகைகளை நீங்கள் கொண்டாடக் கூடாது,” என்று மற்றவர்களிடம் யெகோவாவின் சாட்சிகள் சொல்கிறார்களா?

 இல்லை! ஒரு பண்டிகையைக் கொண்டாடலாமா வேண்டாமா என்பது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட தீர்மானம் என்று யெகோவாவின் சாட்சிகள் நினைக்கிறார்கள். (யோசுவா 24:15) அவர்கள் ‘எல்லா விதமான ஆட்களுக்கும் மதிப்புக் கொடுக்கிறார்கள்.’ அந்த ஆட்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி!1 பேதுரு 2:17.

a யெகோவாவின் சாட்சிகள் கொண்டாடாத எல்லா பண்டிகைகளைப் பற்றியும் இந்தக் கட்டுரை சொல்லவில்லை. அதேபோல், இது சம்பந்தமான எல்லா நியமங்களும் இந்தக் கட்டுரையில் இருக்கிறது என்று சொல்ல முடியாது.

b கெ. யீ எடுல்ஜீ எழுதிய மித்ரா, மித்ராயிஸம், கிறிஸ்மஸ் டெ அன்ட் யால்டா, பக்கங்கள் 31-33.