Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்தவர்கள் ஏதாவது உதவி கேட்டு அரசாங்க அதிகாரிகளிடம் போகும்போது பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சியின்படி நடந்துகொள்ள வேண்டும்

வாசகர் கேட்கும் கேள்விகள்

வாசகர் கேட்கும் கேள்விகள்

அரசாங்க ஊழியர்களுக்கு கிறிஸ்தவர்கள் அன்பளிப்போ பணமோ கொடுப்பது சரியா?

இதைத் தெரிந்துகொள்வதற்கு முன்பு நிறைய விஷயங்களை நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். கிறிஸ்தவர்களாக, நாம் எல்லா விஷயங்களிலும் நேர்மையாக இருக்க வேண்டும். யெகோவாவுடைய சட்டங்களுக்கு விரோதமாக இல்லாதவரை மனித அரசாங்கங்களுக்கு நாம் கீழ்ப்படிய வேண்டும். (மத். 22:21; ரோ. 13:1, 2; எபி. 13:18) அதோடு, நம் ஊரில் உள்ள பழக்கவழக்கங்களை மதிக்க வேண்டும்; நம்மை நேசிப்பதுபோல் மற்றவர்களையும் நாம் நேசிக்க வேண்டும். (மத். 22:39; ரோ. 12:17, 18; 1 தெ. 4:11, 12) இந்த விஷயங்களை எல்லாம் யோசித்துப் பார்க்கும்போது பணத்தை அல்லது அன்பளிப்பை கொடுக்கலாமா வேண்டாமா என்பது இடத்துக்கு இடம் வித்தியாசப்படும் என்பது தெரிகிறது.

நிறைய இடங்களில், அரசாங்க ஊழியர்கள் அவர்களுடைய கடமையை செய்வதற்கு மக்கள் எதுவும் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால், செய்யும் வேலைக்காக அரசாங்கமே அவர்களுக்கு சம்பளம் கொடுக்கிறது. அதனால், மக்களிடம் இருந்து அவர்கள் எதையும் எதிர்பார்ப்பதோ கேட்பதோ கிடையாது. நிறைய நாடுகளில், அதிகாரிகள் அவர்களுடைய கடமையை செய்வதற்காக பொதுமக்களிடமிருந்து பணமோ பொருளோ வாங்குவது சட்டப்படி தவறு. நியாயமான விஷயங்களை செய்வதற்காக வாங்கினால்கூட அது தவறுதான். அவர்கள் நமக்கு சாதகமாக செய்தாலும் சரி செய்யாவிட்டாலும் சரி நாம் கொடுக்கிற பணமும் அன்பளிப்பும் ஒருவகை லஞ்சம்தான். இப்படிப்பட்ட சூழ்நிலையில் கிறிஸ்தவர்கள் அரசாங்க ஊழியர்களுக்கு அன்பளிப்போ பணமோ கொடுப்பது நிச்சயம் தவறு.

சில நாடுகளில் இப்படிப்பட்ட சட்டங்கள் எல்லாம் இல்லை. அப்படியே இருந்தாலும் அதிகாரிகள் அந்த சட்டங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அதனால் பணமோ அன்பளிப்போ வாங்குவது தவறு என்று அவர்கள் நினைப்பதில்லை. சில நாடுகளில் அதிகாரிகள் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் அல்லது அவர்களுக்கு ஏதாவது காரியம் ஆக வேண்டும் என்பதற்காக அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள். மக்களுக்கு சேவை செய்ய மக்களிடமிருந்தே லஞ்சம் வாங்குகிறார்கள். அவர்கள் எதிர்பார்த்தது கிடைக்கும்வரை அந்த வேலையை செய்வதில்லை. உதாரணத்துக்கு, திருமணத்தை சட்டப்படி பதிவு செய்ய... வருமானவரி கட்ட... கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி கொடுக்க... லஞ்சம் எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றால் அந்த வேலையை இழுத்தடிக்கிறார்கள், அல்லது வேண்டுமென்றே தடுக்க பார்க்கிறார்கள். சிலசமயம், மக்களுக்கு சேர வேண்டிய நியாயமான சலுகைகள் அவர்களுக்கு சேராதபடி செய்கிறார்கள். ஒரு நாட்டில் தீயணைப்பு வீரர்கள் முதலில் லஞ்சம் வாங்கிய பிறகுதான் தீயை அணைக்கிறார்கள் என்று ஒரு அறிக்கை சொல்கிறது.

நமக்கு செய்யும் நியாயமான சேவைக்கு நன்றி காட்டுவதற்காக ஏதாவது சின்ன அன்பளிப்பு கொடுக்க நாம் விரும்பலாம்

இந்த மாதிரியான விஷயங்கள் எல்லாம் சகஜமாக நடக்கும் இடங்களில் பணமோ அன்பளிப்போ கொடுக்காமல் இருப்பது ரொம்ப கஷ்டம் என்று சிலர் நினைக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இருக்கும் ஒரு கிறிஸ்தவர் தனக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய சலுகைகளுக்காக பணம் கொடுப்பது தவறில்லை என்று நினைக்கலாம். அந்த வேலை நடப்பதற்காக கொடுக்கப்படும் கூடுதல் கட்டணமாக அதை நினைத்துக்கொள்ளலாம். ஊழலும் லஞ்சமும் சர்வசாதாரணமாக இருக்கும் ஒரு இடத்தில் கிறிஸ்தவர்கள் ரொம்ப கவனமாக நடந்துகொள்ள வேண்டும். கடவுளுக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது என்று தெளிவாக தெரிந்துவைத்திருக்க வேண்டும். நியாயமான விஷயங்களை செய்வதற்காக அரசாங்க ஊழியர்களுக்கு பணம் கொடுப்பது ஒருபக்கம் இருந்தாலும், நிறையப் பேர் சட்டவிரோதமான விஷயங்களுக்காக பணம் கொடுக்கிறார்கள். உதாரணத்துக்கு, சட்டவிரோதமாக ஒரு பதவியை அடைவதற்கு லஞ்சம் கொடுக்கிறார்கள். சாலை விதிகளை மீறியதால் போலீசிடம் கட்ட வேண்டிய அபராதத்தை குறைக்க லஞ்சம் கொடுக்கிறார்கள். லஞ்சம் வாங்குவதும் சரி கொடுப்பதும் சரி இரண்டுமே சட்டத்துக்கு எதிரானது.—யாத். 23:8; உபா. 16:19; நீதி. 17:23.

பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சியின் அடிப்படையில் முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்கள் நிறையப் பேர் அதிகாரிகளுக்கு பணமோ அன்பளிப்போ கொடுக்க விரும்புவதில்லை. அப்படி கொடுத்தால் அதையும் ஒருவகையான ஊழல் என்றுதான் நினைக்கிறார்கள். அதனால், அதை சுத்தமாக தவிர்க்கிறார்கள்.

சட்டவிரோதமான விஷயங்களை செய்வதற்காக அதிகாரிகளுக்கு பணமோ அன்பளிப்போ கொடுப்பதை லஞ்சமாகத்தான் கிறிஸ்தவர்கள் நினைக்கிறார்கள். இருந்தாலும் அதிகாரிகள் ஒரு வேலையை தள்ளிப்போடாமல் செய்ததற்காக, அல்லது அவர்கள் நமக்கு செய்யும் நியாயமான சேவைக்கு நன்றி காட்டுவதற்காக ஏதாவது சின்ன அன்பளிப்பு கொடுக்க விரும்பலாம். உதாரணத்துக்கு, சில கிறிஸ்தவர்கள் அரசு மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை எடுத்துக்கொண்ட பிறகு டாக்டர்களுக்கும் நர்சுகளுக்கும் நன்றி சொல்லும் விதமாக ஏதாவது அன்பளிப்பு கொடுக்கிறார்கள். சிகிச்சைக்கு முன்பு கொடுத்தால் ஒருவேளை தங்களை நன்றாக கவனித்துக்கொள்வதற்காக கொடுக்கப்படும் லஞ்சமாக அது இருக்கலாம் என்று நினைத்து அதை சிகிச்சைக்கு பிறகு கொடுக்கிறார்கள்.

ஒவ்வொரு நாட்டில் இருக்கும் சூழ்நிலைகளும் வித்தியாசப்படுவதால் எந்தெந்த சூழ்நிலைகளில் அதிகாரிகளுக்கு பணமோ அன்பளிப்போ கொடுக்கலாம் என்று இந்தக் கட்டுரையில் விளக்க முடியாது. அதனால், கிறிஸ்தவர்கள் பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சியின்படி சரியான தீர்மானம் எடுக்க வேண்டும். (ரோ. 14:1-6) சட்டவிரோதமான எந்தவொரு செயலையும் செய்யாமல் இருக்க தீர்மானமாக இருக்க வேண்டும். (ரோ. 13:1-7) அதோடு, யெகோவாவுடைய பெயருக்கு அவமானத்தை கொண்டுவரும் எந்தவொரு விஷயத்தையும் செய்யக் கூடாது. அதேசமயம், மற்ற கிறிஸ்தவர்களுக்கு இடறலாகவும் இருக்க கூடாது. (மத். 6:9; 1 கொ. 10:32) மற்றவர்கள்மீது அன்பு இருக்கிறது என்பதை அவர்கள் எடுக்கும் தீர்மானங்கள் காட்ட வேண்டும்.—மாற். 12:31.

சபைநீக்கம் செய்யப்பட்ட ஒருவரை மீண்டும் சபையில் சேர்த்துக்கொள்ளும்போது நம் சந்தோஷத்தை எப்படி தெரியப்படுத்தலாம்?

100 ஆடுகளை வைத்திருந்த ஒரு மனிதனைப் பற்றிய உதாரணத்தை லூக்கா 15-வது அதிகாரத்தில் இயேசு சொன்னார். அதில் 1 ஆடு காணாமல் போனதால் மற்ற 99 ஆடுகளையும் விட்டுவிட்டு, காணாமல் போன ஒரு ஆட்டை அந்த மனிதன் தேடுகிறான். ‘அவன் அதைக் கண்டுபிடித்தபோது, தன் தோள்களில் அதைப் போட்டுக்கொண்டு சந்தோஷப்படுகிறான். பின்பு வீட்டிற்கு வந்து, தன் நண்பர்களையும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களையும் அழைத்து, “காணாமல் போன என் ஆட்டைக் கண்டுபிடித்துவிட்டேன், என்னோடுகூடச் சந்தோஷப்படுங்கள்” என்கிறான்.’ கடைசியாக இயேசு இப்படி சொன்னார்: “அதேபோல், மனந்திரும்பத் தேவையில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக் குறித்து உண்டாகிற சந்தோஷத்தைவிட மனந்திரும்புகிற ஒரே பாவியைக் குறித்துப் பரலோகத்தில் உண்டாகிற சந்தோஷம் அதிகமாக இருக்கும் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்.’—லூக். 15:4-7.

இயேசு வரிவசூலிப்பவர்களோடும் பாவிகளோடும் பழகுவதை வேத அறிஞர்களும் பரிசேயர்களும் குறை சொன்னார்கள். இவர்களுடைய தவறான எண்ணத்தை சரிசெய்ய இயேசு இந்த உதாரணத்தை சொன்னார். (லூக். 15:1-3) ஒரு பாவி மனந்திரும்பும்போது பரலோகத்தில் சந்தோஷம் உண்டாகிறது என்று இயேசு சொன்னார். அப்படியென்றால் நம்மையே இப்படி கேட்டுக்கொள்ளலாம்: ‘ஒருத்தர் மனந்திருந்தி, திரும்பவும் சரியான வழியில நடக்கும்போது பரலோகத்துல இருக்கிறவங்களே சந்தோஷப்படுறாங்கனா பூமியில இருக்கிற நாமளும் சந்தோஷப்படணும்தானே?’—எபி. 12:13.

சபைநீக்கம் செய்யப்பட்ட ஒருவர் மறுபடியும் சபைக்குள் வரும்போது அதை பார்த்து சந்தோஷப்படுவதற்கு நல்ல காரணம் இருக்கிறது. அவர் யெகோவாவுக்கு உண்மையாக இருக்க தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டியிருந்தாலும் இப்போது அவர் மனந்திரும்பி இருக்கிறார். அதை பார்த்து நாம் ரொம்ப சந்தோஷப்படுகிறோம். அதனால், சபையில் அவரை சேர்த்துக்கொள்ளப்படுவதை பற்றி மூப்பர்கள் அறிவிக்கும்போது உற்சாகமாக கைதட்டி நம் சந்தோஷத்தை தெரியப்படுத்தலாம். இருந்தாலும் இதை கண்ணியமான விதத்தில் செய்ய வேண்டும்.

பெத்சாயிதா குளத்தில் இருந்த ‘நீர் கலங்கியதற்கு’ எது காரணமாக இருந்திருக்கும்?

பெத்சாயிதா “குளத்து நீர் கலங்கும்போது” அதில் இறங்குகிறவர்களுடைய வியாதிகள் குணமாகும் என்று இயேசுவின் காலத்தில் வாழ்ந்தவர்கள் நம்பினார்கள். (யோவா. 5:1-7) அதனால் அந்த குளத்தை சுற்றி எப்போதுமே வியாதிப்பட்ட ஆட்கள் இருந்தார்கள்.

பெத்சாயிதா குளத்தை ஒட்டி இன்னொரு குளம் இருந்தது. இதில் தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டது. இதிலிருந்துதான் பெத்சாயிதா குளத்துக்கு தேவையான தண்ணீர் வந்தது. இந்த இரண்டு குளத்துக்கும் இடையில் மதகு பொருத்தப்பட்ட ஒரு பெரிய தடுப்பு சுவர் இருந்தது. இந்த மதகை திறக்கும்போதெல்லாம் கால்வாய் வழியாக பெத்சாயிதா குளத்துக்கு தண்ணீர் வந்தது. அந்த தண்ணீர் குளத்தின் அடியிலிருந்து வேகமாக வந்ததால் குளத்தின் மேற்பரப்பில் நீர் கலங்கியது.

தேவதூதன் ஒருவன் அந்தக் குளத்தில் இறங்கி, தண்ணீரைக் கலக்கியதாக யோவான் 5:4 சொல்கிறது. ஆனால், பிரபலமான பழைய கிரேக்க கையெழுத்து பிரதிகளில், உதாரணத்துக்கு நான்காம் நூற்றாண்டை சேர்ந்த கோடெக்ஸ் சினியாட்டிகஸ் பிரதியில், அப்படி இல்லை. 38 வருஷங்களாக வியாதிப்பட்டிருந்த ஒரு மனிதனை இயேசு அற்புதமாக குணமாக்கினார். அந்த குளத்திற்குள் இறங்காமலேயே உடனடியாக குணப்படுத்தினார்.