Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

குடும்ப மகிழ்ச்சிக்கு

உங்கள் பிள்ளை உங்கள் மத நம்பிக்கையை ஏற்றுக்கொள்ளாவிட்டால்?

உங்கள் பிள்ளை உங்கள் மத நம்பிக்கையை ஏற்றுக்கொள்ளாவிட்டால்?

பொதுவாக பிள்ளைகள் வளர்ந்ததும் பெற்றோரின் மதத்தைத்தான் பின்பற்றுவார்கள். (2 தீமோத்தேயு 3:14) ஆனால், சில பிள்ளைகள் அப்படிச் செய்வதில்லை. உங்கள் பிள்ளை உங்கள் மத நம்பிக்கையைக் குறித்து கேள்வி கேட்க ஆரம்பித்தால் என்ன செய்யலாம்? இதுபோன்ற சவால்களை யெகோவாவின் சாட்சிகள் எப்படிச் சமாளிக்கிறார்கள் என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

“என் அப்பா-அம்மாவோட மதத்தில இருக்க எனக்கு பிடிக்கல. அத விட்டுடலாம்னு இருக்கேன்”—கேத்தி, 18. *

உங்கள் மதம் கடவுளைப் பற்றிய உண்மைகளைச் சொல்லித் தருகிறது என நீங்கள் நம்புகிறீர்கள். பைபிள், வாழ்க்கைக்குச் சிறந்த வழிகாட்டி என ஏற்றுக்கொள்கிறீர்கள். அதனால், உங்கள் நம்பிக்கையை உங்கள் பிள்ளைக்கும் சொல்லிக்கொடுக்கிறீர்கள். (உபாகமம் 6:6, 7) ஆனால், வளர வளர உங்கள் பிள்ளைக்கு ஆன்மீக விஷயங்கள்மீது இருந்த ஆர்வம் குறைந்துகொண்டே வந்தால், என்ன செய்வீர்கள்? * சிறு பிள்ளையாக இருந்தபோது ஆர்வத்தோடு ஏற்றுக்கொண்ட அதே நம்பிக்கைகளைப் பற்றி இப்போது கேள்வி கேட்டால் என்ன செய்வீர்கள்?—கலாத்தியர் 5:7.

ஒருவேளை உங்கள் மகன் அப்படிக் கேள்விகள் கேட்டால், ‘கிறிஸ்தவர்களாக இருந்தும் நாங்க அவனை சரியா வளர்க்கலையே’ என்று நினைத்துவிடாதீர்கள். அதற்கு வேறு காரணங்களும் இருக்கின்றன. அதை நாம் பார்க்கப்போகிறோம். ஆனால், ஒன்றை நினைவில் வையுங்கள்: உங்கள் நம்பிக்கைகளை அவன் ஏற்றுக்கொள்வானா, ஒதுக்கித்தள்ளுவானா என்பது அவன் கேட்கும் கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிக்கும் விதத்தைப் பொறுத்ததே. அதனால், அவனோடு வாய்ச்சண்டை போடாதீர்கள். அப்படிப் போட்டால், உங்கள் நம்பிக்கையை அவன் ஏற்றுக்கொள்ளாமலேயே போய்விடலாம்.—கொலோசெயர் 3:21.

அப்போஸ்தலன் பவுல் கொடுக்கும் புத்திமதியைக் கேளுங்கள். “நம் எஜமானரின் ஊழியக்காரனோ சண்டைபோடக் கூடாது; மாறாக, எல்லாரிடமும் மென்மையாய் நடந்துகொள்கிறவனாகவும், கற்பிக்கத் தகுதியுள்ளவனாகவும், தீங்கைப் பொறுத்துக்கொள்கிறவனாகவும்” இருக்க வேண்டும். (2 தீமோத்தேயு 2:24) உங்கள் நம்பிக்கையைக் குறித்து உங்கள் டீன்-ஏஜ் மகன் கேள்வி கேட்கும்போது ‘கற்பிக்கத் தகுதியுள்ளவராக’ எப்படி நடந்துகொள்ளலாம்?

பிரச்சினையைக் கண்டுபிடியுங்கள்

முதலில், உங்கள் பிள்ளை அப்படி நினைப்பதற்கு என்ன காரணம் என்பதைக் கண்டுபிடியுங்கள். ஒருவேளை...

  • கிறிஸ்தவ சபையில் நண்பர்கள் இல்லாமல் தனிமையில் தவிக்கிறானா? “ஃப்ரெண்ட்ஸ் இல்லாம என்னால இருக்க முடியாது, ஸ்கூல்ல நிறைய ஃப்ரெண்ட்ஸ் கிடைச்சாங்க, அதனால கடவுள் கிட்ட இருந்த என் ஃப்ரெண்ட்ஷிப் முறிஞ்சிடுச்சு. மோசமான ஃப்ரெண்ட்ஸால கடவுள் பக்தி எல்லாம் குறைஞ்சிடுச்சு. இப்போ அத நெனச்சி வருத்தப்படுறேன்.”—ரூத், 19.

  • மத நம்பிக்கையைப் பற்றிப் பேச பயப்படுகிறானா? “நான் ஸ்கூல்ல படிச்சிட்டு இருக்கும்போது என் கூட படிக்கிறவங்ககிட்ட என் நம்பிக்கைய பத்தி சொல்ல தயங்குவேன். என்ன ஒரு ‘சாமியார்’னு கிண்டல் பண்ணுவாங்கனு பயந்தேன். யாராவது வித்தியாசமா இருந்தா அப்படியே ஒதுக்கி வச்சிடுவாங்க, அது எனக்கு நடந்துடக்கூடாதுனு நெனச்சேன்.”—ராகுல், 23.

  • பைபிள் நியமங்களுக்கும் அவனுக்கும் ‘ஏணி வச்சாலும் எட்டாதுனு’ நினைக்கிறானா? “முடிவில்லா வாழ்வுங்கறது எங்கயோ உச்சில இருக்கு. அதுக்கும் எனக்கும் ரொம்ப தூரம். நான் இன்னும் முதல் படியிலகூட கால் வைக்கல. அத நெனச்சாலே பயமா இருக்கு. எல்லாத்தையும் விட்டுட்டு ஓடிடலாம்னு தோனுது.”—ரியா, 16.

மனம்விட்டு பேசுங்கள்

உங்கள் பிள்ளையின் பிரச்சினை என்ன? அவனிடமே கேட்டுப்பாருங்கள்! தயவுசெய்து வாக்குவாதம் பண்ணாதீர்கள். யாக்கோபு 1:19 சொல்கிறபடி “கேட்பதற்குத் தீவிரமாகவும், பேசுவதற்கு நிதானமாகவும், கோபிப்பதற்கு தாமதமாகவும்” இருங்கள். பொறுமையாக நடந்துகொள்ளுங்கள். மற்றவர்களிடம் எப்படிப் பேசுவீர்களோ அதேபோல் அவனிடமும் “கற்பிக்கும் கலையைப் பயன்படுத்தி நீடிய பொறுமையோடு” பேசுங்கள்.—2 தீமோத்தேயு 4:2.

உதாரணமாக, உங்கள் பிள்ளைக்குக் கூட்டங்களுக்குப் போகப் பிடிக்கவில்லையென்றால் அவனுக்கு ஏதாவது பிரச்சினை இருக்கலாம். அதைக் கண்டுபிடியுங்கள். இந்தச் சமயத்திலும் பொறுமை அவசியம். எப்படிப் பேசக்கூடாது என்பதற்குக் கீழே உள்ள உரையாடலைப் பாருங்கள்.

மகன்: எனக்கு கூட்டத்துக்கு வரவே பிடிக்கல.

அப்பா: [கோபத்தில்] என்னது! கூட்டத்துக்கு வர பிடிக்கலயா?

மகன்: எனக்கு அங்க வந்தாலே ‘போர்’ அடிக்குது.

அப்பா: கடவுளைப் பத்தி தெரிஞ்சிக்கிறது உனக்கு ‘போர்’ அடிக்கிதா? எவ்ளோ தைரியம்! உனக்கு பிடிக்குதோ இல்லையோ இந்த வீட்ல நீ இருக்கணும்னா கூட்டங்களுக்கு வந்தே ஆகணும்!

பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்குக் கடவுளைப் பற்றி சொல்லிக்கொடுக்க வேண்டுமென்றும் பிள்ளைகள் பெற்றோருக்குக் கீழ்ப்படிய வேண்டுமென்றும் கடவுள் எதிர்பார்க்கிறார். (எபேசியர் 6:1) ஆனாலும், உங்கள் பிள்ளைகள் ஆன்மீக விஷயங்களை ஏதோ கடமைக்குச் செய்வதை அல்லது வேண்டா வெறுப்புடன் கூட்டங்களுக்கு வருவதை விரும்பமாட்டீர்கள். யெகோவா தேவன் மேலுள்ள உள்ளப்பூர்வமான அன்பினால் அப்படிச் செய்வதைத்தான் விரும்புவீர்கள்.

பிள்ளையின் பிரச்சினைக்கான காரணத்தைக் கண்டுபிடித்தால் எல்லாவற்றையும் சுலபமாகச் சரிசெய்யலாம். முன்பு பார்த்த அதே உரையாடலில் அந்த அப்பா எப்படிப் பேசியிருக்கலாம் என்பதைப் பாருங்கள்.

மகன்: எனக்கு கூட்டத்துக்கு வரவே பிடிக்கல.

அப்பா: [சாந்தமாக] ஏன் அப்படி நினைக்கிற?

மகன்: எனக்கு அங்க வந்தாலே ‘போர்’ அடிக்குது.

அப்பா: இரண்டு மணிநேரம் அப்படியே உக்காந்திருந்தா சில நேரம் ‘போர்’ அடிக்குந்தான். உனக்கு எது ரொம்ப ‘போர்’ அடிக்குது?

மகன்: தெரியல. அங்க இருக்கிறதவிட வேற எங்கயாவது இருந்தா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்.

அப்பா: உன் ஃபிரெண்ட்ஸ்கூட அப்படித்தான் நினைக்கிறாங்களா?

மகன்: ம்... அதுதான் என் பிரச்சனை. எனக்கு ஒரு ஃப்ரெண்ட்டுகூட இல்லை. என் பெஸ்ட் ஃபிரெண்ட் வேற சபைக்கு போனதிலிருந்து என்கிட்ட பேச யாருமே இல்லாத மாதிரி இருக்கு! எல்லாரும் ஜாலியா இருக்காங்க. நான் மட்டும் தனியா இருக்கேன்!

இப்படிப் பேசியதால் மகனின் பிரச்சினையை, தனிமை அவனை வாட்டுவதை, அப்பா கண்டுபிடித்தார். அதோடு, எந்தத் தயக்கமும் இல்லாமல் எதைப் பற்றியும் தன்னிடம் பேசலாம் என்ற நம்பிக்கையை மகனுக்கு அளிக்கிறார்.— “பொறுமையாக இருங்கள்!” என்ற பெட்டியைக் காண்க.

பல இளைஞர்கள் தங்களுடைய ஆன்மீக முன்னேற்றத்திற்குத் தடையாய் இருந்த சவால்களைப் போகப் போக சமாளித்திருக்கிறார்கள். இதனால், அவர்களுடைய தன்னம்பிக்கையும் அதிகமாகியிருக்கிறது, மத நம்பிக்கையும் பலப்பட்டிருக்கிறது. முன்பு, தன் மத நம்பிக்கைகளைப் பற்றிப் பள்ளியில் பேசத் தயங்கின ராகுலை எடுத்துக்கொள்ளுங்கள். மற்றவர்கள் கேலி செய்தாலும் தன்னுடைய நம்பிக்கையைப் பற்றிப் பேசுவது அவ்வளவு கஷ்டமான விஷயம் இல்லை என்று பின்பு புரிந்துகொண்டார். அவர் சொல்கிறார்:

“ஒரு நாள் என் க்ளாஸ் பையன் ஒருத்தன் என்னோட மதத்தை கிண்டல் அடிச்சான். எல்லா பசங்களும் பார்த்துட்டிருந்தாங்க, என்ன பேசுறதுனே தெரியாம எனக்கு ஒரே படபடப்பா இருந்தது. திடீர்னு எனக்கு ஒரு யோசனை வந்துது, நான் திரும்ப அவனோட மதத்தைப் பத்தி கேட்டேன். அதுக்கப்புறம் அவன் நெளிஞ்சத பார்க்கணுமே, அவனுக்கு அதப் பத்தி சுத்தமா தெரியல. நிறைய இளைஞர்கள் இப்படித்தான்னு புரிஞ்சிகிட்டேன். எனக்கு என்னோட மதத்தை பத்தி விளக்கவாவது தெரியுதேன்னு சந்தோஷப்பட்டேன். உண்மைய சொன்னா, மத நம்பிக்கைகள பத்தி பேசறதுக்கு நான் வெட்கப்பட வேண்டியதில்லை, என் க்ளாஸ் பசங்கதான் வெட்கப்படணும்!”

இப்படிச் செய்து பாருங்கள்: ஒரு கிறிஸ்தவனாக இருப்பதை நினைத்து உங்கள் மகன் சந்தோஷப்படுகிறானா அல்லது சங்கோஜப்படுகிறானா என்று கண்டுப்பிடியுங்கள். அவனுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது? எது அவனுக்குச் சவாலாக இருக்கிறது? சவால்களைவிட நன்மைகள் அதிகமாக இருக்கிறதா? எப்படி? என்பதைக் கேளுங்கள். (மாற்கு 10:29, 30) ஒரு பேப்பரை எடுத்துக்கொண்டு நன்மைகளை வலது பக்கமும் சவால்களை இடது பக்கமும் எழுதச் சொல்லுங்கள். இப்படி எழுதிப் பார்ப்பது பிரச்சினையைப் புரிந்துகொண்டு அதை அவனே சரி செய்ய அவனுக்கு உதவியாக இருக்கும்.

டீன்-ஏஜ் பிள்ளையின் ‘சிந்திக்கும் திறன்’

சிறு பிள்ளைகள் யோசிப்பதற்கும் டீன்-ஏஜ் பிள்ளைகள் யோசிப்பதற்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாகச் சில பெற்றோர்களும் நிபுணர்களும் கவனித்திருக்கிறார்கள். (1 கொரிந்தியர் 13:11) சிறு பிள்ளைகள் நீங்கள் சொல்வதை அப்படியே நம்பிவிடுவார்கள்; ஆனால், டீன்-ஏஜ் பிள்ளைகள் கேள்விக்கு மேல் கேள்வி கேட்பார்கள். உதாரணமாக, கடவுள்தான் எல்லாவற்றையும் படைத்தார் என்று சொன்னால் உங்கள் சிறு பிள்ளை நம்பிவிடும். (ஆதியாகமம் 1:1) ஆனால், டீன்-ஏஜ் பிள்ளைகள் அப்படியில்லை. ‘கடவுள் இருக்கிறார்னு எப்படி நம்புறது? அன்பான கடவுள் ஏன் கஷ்டத்தை தடுக்கிறதில்ல? கடவுளுக்கு மட்டும் ஆரம்பமே இல்லனு எப்படி சொல்ல முடியும்?’ என்று கேள்வி கேட்பார்கள்.—சங்கீதம் 90:2.

இப்படிக் கேள்விகள் கேட்பதால் உங்கள் டீன்-ஏஜ் பிள்ளையின் விசுவாசம் குறைந்துவிட்டதோ என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், உண்மையில் விசுவாசத்தில் முன்னேறுவதற்கான அறிகுறிகள்தான் அவை. சொல்லப்போனால், ஆன்மீக ரீதியில் முன்னேற கேள்விகள் கேட்பது கிறிஸ்தவர்களுக்கு மிக முக்கியமானது.—அப்போஸ்தலர் 17:2, 3.

அதோடு, உங்கள் மகன் “சிந்திக்கும் திறனை” பயன்படுத்த பழகுகிறான் என்றும் அர்த்தம். (ரோமர் 12:1, 2) அப்போது, சிறு பிள்ளையைப் போல் இல்லாமல் கிறிஸ்தவ போதனைகளின் “அகலமும் நீளமும் உயரமும் ஆழமும் என்னவென்று” புரிந்துகொள்ளுவான். (எபேசியர் 3:18) உங்கள் டீன்-ஏஜ் மகன் தன் நம்பிக்கைகளைப் பற்றி சிந்தித்துப் பார்ப்பதற்கும் அதை மனதில் பதிய வைப்பதற்கும் அவனுக்கு நீங்கள் கைகொடுக்க வேண்டிய நேரம் இதுதான்.—நீதிமொழிகள் 14:15; அப்போஸ்தலர் 17:11.

இப்படிச் செய்து பாருங்கள்: உங்களுக்கும் உங்கள் மகனுக்கும் ஏற்கெனவே தெரிந்த சில அடிப்படை பைபிள் விஷயங்களைப் பற்றி மறுபடியும் அவனோடு பேசுங்கள். சில கேள்விகளை அவனையே கேட்டுக்கொள்ளச் சொல்லுங்கள்: ‘கடவுள் இருக்கிறார் என்று நான் ஏன் நம்புகிறேன்? கடவுளுக்கு என்மேல் அக்கறை இருக்கிறது என்று நான் எதை வைத்துச் சொல்கிறேன்? கடவுளுடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதுதான் எப்போதும் எனக்கு நல்லது என்று நான் ஏன் நினைக்கிறேன்?’ அதேசமயம், உங்கள் கருத்துக்களை அவன்மீது திணிக்காதீர்கள், அவனாகவே தீர்மானிக்க உதவுங்கள். அப்போதுதான் விசுவாசத்தில் உறுதியாக இருப்பது அவனுக்குச் சுலபமாக இருக்கும்.

‘பக்குவமாக எடுத்துச்சொல்லப்பட்ட விஷயங்கள்’

இளம் தீமோத்தேயு “சிசுப் பருவத்திலிருந்தே” பரிசுத்த எழுத்துக்களைப் அறிந்திருந்ததாக பைபிள் சொல்கிறது. ஆனாலும் அப்போஸ்தலன் பவுல் தீமோத்தேயுவை இவ்வாறு உற்சாகப்படுத்தினார்: “பக்குவமாக எடுத்துச்சொல்லப்பட்ட விஷயங்களை விடாமல் கடைப்பிடி.” (2 தீமோத்தேயு 3:14, 15) தீமோத்தேயுவைப் போல் உங்கள் பிள்ளைக்கும் சிறுவயதிலிருந்தே நீங்கள் பைபிள் நியமங்களைச் சொல்லிக்கொடுத்திருக்கலாம். ஆனால் கற்றுக்கொண்ட விஷயங்கள் உண்மையென்று அவனாகவே நம்புவதற்கு இந்த வயதில் நீங்கள் பக்குவமாக எடுத்துச்சொல்ல வேண்டியது அவசியம்.

இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன் தரும் விடைகள், தொகுதி 1, இப்படிச் சொல்கிறது: “பிள்ளைகள் உங்களோடு இருக்கும்வரை அவர்களை ஆன்மீக விஷயங்களில் தவறாமல் ஈடுபடும்படி சொல்வதற்கு உங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால், உங்களுடைய குறிக்கோள் யெகோவாவின்மேல் அவர்களுடைய அன்பை அதிகரிப்பதுதான். கடமைக்காக யெகோவாவை வணங்க அவர்களைக் கட்டாயப்படுத்துவதல்ல.” இதை மனதில் வைத்தால், உங்கள் பிள்ளை ‘விசுவாசத்தில் உறுதியாயிருக்க’ உங்களால் உதவ முடியும். அப்போதுதான், நீங்கள் சொல்வதற்காக அல்லாமல் அவனாகவே விருப்பப்பட்டு யெகோவாவை வணங்குவான். *1 பேதுரு 5:9. (w12-E 02/01)

^ பாரா. 4 இந்தக் கட்டுரையில் வரும் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

^ பாரா. 5 எளிதாகப் புரிந்துகொள்ள இந்தக் கட்டுரையில் டீன்-ஏஜ் பிள்ளைகளை ஆண்பாலில் சொல்லியிருக்கிறோம். ஆனால், இந்த விஷயங்கள் பெண் பிள்ளைகளுக்கும் பொருந்தும்.

^ பாரா. 40 கூடுதலான தகவலுக்கு, மே 1, 2009, காவற்கோபுரம் பக்கங்கள் 10-12-ஐயும் இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன் தரும் விடைகள், தொகுதி 1 (ஆங்கிலம்) பக்கங்கள் 315-318-ஐயும் காண்க.

உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்...

  • என் பிள்ளை என் மத நம்பிக்கைகளைப் பற்றி கேள்விக் கேட்டால் எப்படி நடந்துக்கொள்வேன்?

  • இந்தக் கட்டுரையில் உள்ள ஆலோசனைகள் எனக்கு எப்படி உதவும்?