Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளின் தண்டனைத் தீர்ப்புகள் கொடூரமானவையா?

கடவுளின் தண்டனைத் தீர்ப்புகள் கொடூரமானவையா?

கடவுளின் தண்டனைத் தீர்ப்புகள் பற்றிய இரண்டு பைபிள் பதிவுகளைச் சிந்தித்தால் இந்தக் கேள்விக்குப் பதிலைத் தெரிந்துகொள்ளலாம். ஒன்று, நோவா காலத்துப் பெருவெள்ளம், மற்றொன்று, கானானியர்களின் அழிவு.

நோவா காலத்துப் பெருவெள்ளம்

சிலர் என்ன சொல்கிறார்கள்: “நோவாவையும் அவருடைய குடும்பத்தையும் தவிர மற்ற எல்லோரையும் கடவுள் ஒரு வெள்ளத்தில் அழித்ததால், அவர் நிச்சயமாகவே கொடூரமானவர்தான்.”

பைபிள் என்ன சொல்கிறது: “நான் துன்மார்க்கனுடைய மரணத்தை விரும்பாமல், துன்மார்க்கன் தன் வழியைவிட்டுத் திரும்பிப் பிழைப்பதையே விரும்புகிறேன்” என்று கடவுள் சொல்லியிருக்கிறார். (எசேக்கியேல் 33:11) எனவே, நோவாவின் காலத்தில் வாழ்ந்த கெட்டவர்களை அழித்தது கடவுளுக்கு நிச்சயமாகவே சந்தோஷமளிக்கவில்லை. அப்படியானால், ஏன் அவ்வாறு செய்தார்?

“தேவபக்தியற்றவர்களுக்கு வரப்போகும் முடிவு எப்படியிருக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக” இருக்கவே பொல்லாத ஆட்களைக் கடவுள் தண்டித்தார் என பைபிள் சொல்கிறது. (2 பேதுரு 2:5, 6) என்ன ‘எடுத்துக்காட்டு’?

முதலாவதாக, ஜனங்களை அழிப்பது கடவுளுக்கு வேதனையாய் இருந்தாலும், கொடுமைக்காரர்களின் கெட்ட செயல்களுக்காக நிச்சயம் அவர்களைத் தண்டிப்பார். சீக்கிரத்தில், எல்லா அநியாயங்களுக்கும் துன்பங்களுக்கும் முடிவுகட்டுவார்.

இரண்டாவதாக, ஜனங்களை அன்பாய் எச்சரித்த பிறகே தண்டனைத் தீர்ப்பை நிறைவேற்றுவார். உதாரணத்திற்கு, நீதியைப் பிரசங்கித்த நோவாவின் மூலமாகக் கடவுள் எச்சரித்தார். ஆனாலும், பெரும்பாலானோர் நோவா சொன்னதைக் காதில் போட்டுக்கொள்ளவே இல்லை. “பெருவெள்ளம் வந்து எல்லாரையும் அடித்துக்கொண்டு போகும்வரை அவர்கள் கவனம் செலுத்தவே இல்லை” என்று பைபிள் சொல்கிறது.—மத்தேயு 24:39.

கடவுள் எப்போதும் இதே முறையைத்தான் கையாண்டிருக்கிறாரா? ஆம். தம் சொந்த ஜனமான இஸ்ரவேலரைக்கூட அவர் எச்சரித்தார். அவர்கள் தங்களைச் சுற்றியிருந்த தேசத்தாரைப் போல் கெட்ட காரியங்களைச் செய்தால், எதிரிகள் அவர்களுடைய தேசத்தைக் கைப்பற்றி... தலைநகரான எருசலேமை அழித்து... அவர்களை நாடுகடத்திவிடுவார்கள் என எச்சரித்தார். ஆனால், அந்த எச்சரிப்புக்கு இஸ்ரவேலர் செவிகொடுக்கவில்லை, பொல்லாத காரியங்களைச் செய்தார்கள், தங்கள் பிள்ளைகளைக்கூட பலிசெலுத்தினார்கள்! யெகோவா அவர்களைத் தண்டித்தாரா? ஆம், தண்டித்தார்; ஆனால், அதற்குமுன் தம்முடைய தீர்க்கதரிசிகளைத் திரும்பத்திரும்ப அனுப்பி அவர்களை எச்சரித்தார். “கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்” என்று பைபிள் சொல்கிறது.—ஆமோஸ் 3:7.

நீங்கள் எப்படி உட்பட்டிருக்கிறீர்கள்: பூர்வ காலங்களில் யெகோவா கொடுத்த தண்டனைத் தீர்ப்புகள் நமக்கு நம்பிக்கை அளிக்கின்றன. பிறரைக் கொடூரமாக நடத்துகிறவர்களைக் கடவுள் தண்டிக்கப்போகிறார் என்ற உறுதியை அளிக்கின்றன. பைபிள் இப்படிச் சொல்கிறது: “பொல்லாதவர்கள் அறுப்புண்டுபோவார்கள் . . . சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.” (சங்கீதம் 37:9-11) மனிதகுலத்தைத் துன்பத்திலிருந்து விடுவிக்கப்போகிற இந்தத் தண்டனைத் தீர்ப்பைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இது கொடூரமானதா அல்லது கருணைமிக்கதா?

கானானியர்களின் அழிவு

சிலர் என்ன சொல்கிறார்கள்: “பூர்வகால கானானியர்கள் அழிக்கப்பட்டது இந்தக் கால இனப்படுகொலைக்குச் சமம்.”

பைபிள் என்ன சொல்கிறது: ‘கடவுளுடைய வழிகளெல்லாம் நியாயம், அவர் நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவன்; அவர் நீதியும் செம்மையுமானவர்.’ (உபாகமம் 32:4) அவர் நியாயமாக வழங்கும் தண்டனைத் தீர்ப்புகளை மனிதர்கள் செய்கிற போர்களோடு ஒப்பிட முடியாது. ஏன்? ஏனென்றால், மனிதர்களுடைய இருதயங்களைக் கடவுளால் ஊடுருவிப் பார்க்க முடியும், மனிதர்களால் முடியாது.

உதாரணத்திற்கு, சோதோம் கொமோரா நகரங்களை அழிக்கப்போவதாகக் கடவுள் தீர்மானித்தபோது, அந்தத் தண்டனைத் தீர்ப்பு நியாயமானதாக இருக்க வேண்டும் என்பதில் ஆபிரகாம் அக்கறை காண்பித்தார். நீதியுள்ள கடவுள் ‘தீயவனோடு நீதிமானையும் அழிப்பார்’ என்பதை அவரால் கற்பனைகூட செய்ய முடியவில்லை. அப்போது கடவுள், “பத்து நீதிமான்கள் நிமித்தம் அதை அழிப்பதில்லை” என்று பொறுமையாக ஆபிரகாமுக்கு உறுதியளித்தார். (ஆதியாகமம் 18:20-33; பொது மொழிபெயர்ப்பு) அதன்படியே நீதிமான்களைக் காப்பாற்றினார், கெட்டவர்களை அழித்தார். அந்தக் கெட்ட ஜனங்களுடைய இருதயத்தைக் கடவுள் ஊடுருவிப் பார்த்து, அது தீமையில் ஊறிப்போயிருப்பதைக் கண்ட பின்னரே அவர்களை அழித்தார் என்பது தெளிவாய்த் தெரிகிறது.—1 நாளாகமம் 28:9.

கானானியர்களுடைய விஷயத்தில் கடவுள் அவ்வாறே செயல்பட்டார்; அவர்களது இருதயம் தீமையால் நிறைந்திருந்ததால் அவர்களை அழிக்கும்படி இஸ்ரவேலரிடம் கட்டளையிட்டார். கானானியர்கள் கொடூர குணத்திற்குப் பேர்போனவர்களாய் இருந்தார்கள், பலி என்ற பெயரில் தங்கள் குழந்தைகளை உயிரோடு நெருப்பில் போட்டார்கள். * (2 இராஜாக்கள் 16:3) கானான் தேசம் முழுவதையும் கைப்பற்றும்படி யெகோவா இஸ்ரவேலருக்குக் கட்டளையிட்டிருந்ததை கானானியர்கள் அறிந்திருந்தாலும், அங்கேயே இருந்து போர்புரிய நினைத்தார்கள். இப்படி, இஸ்ரவேலருக்கு எதிராக மட்டுமல்ல, யெகோவாவுக்கு எதிராகவும் வேண்டுமென்றே செயல்பட்டார்கள். யெகோவா தம்முடைய ஜனங்களுக்குப் பக்கபலமாக இருப்பது தெரிந்தும் அப்படிச் செயல்பட்டார்கள்.

ஆனால், கானானியர்களில் சிலர் தங்கள் பொல்லாத செயல்களை விட்டுவிட்டு யெகோவாவின் உயர்ந்த ஒழுக்கநெறிகளைக் கடைப்பிடித்தபோது, யெகோவா அவர்கள்மேல் இரக்கம் காட்டினார். உதாரணத்திற்கு, கானானில் வசித்த ராகாப் என்ற விலைமகளும் அவளுடைய குடும்பத்தாரும் காப்பாற்றப்பட்டார்கள். அதுமட்டுமல்ல, கானான் தேசத்தைச் சேர்ந்த கிபியோனியர்கள் இரக்கம் காட்டும்படி மன்றாடியதால், அவர்களும் அவர்கள் பிள்ளைகளும் பாதுகாக்கப்பட்டார்கள்.—யோசுவா 6:25; 9:3, 24-26.

நீங்கள் எப்படி உட்பட்டிருக்கிறீர்கள்: கானானியர்களுக்கு வந்த அழிவிலிருந்து நாம் ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம். ‘தேவபக்தி இல்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகிற நாள்’ வெகு விரைவில் வந்துகொண்டிருக்கிறது. (2 பேதுரு 3:7) அப்போது யெகோவா, தம்முடைய ஆட்சியை நிராகரிக்கிற கொடியவர்களை அழிக்கப்போகிறார்; நாம் யெகோவாவை நேசித்து அவருடைய பார்வையில் நீதிமான்களாக இருந்தால் அந்த அழிவிலிருந்து காப்பாற்றப்படுவோம்.

கொடூர குணத்திற்குப் பேர்போன கானானியர்கள், கடவுளையும் அவரது மக்களையும் வேண்டுமென்றே எதிர்த்தார்கள்

பெற்றோர் எடுக்கிற தீர்மானங்கள் பிள்ளைகளின் உயிரைக் காப்பாற்றும் என்பதை யெகோவா நமக்கு அன்புடன் நினைப்பூட்டுகிறார். அவருடைய வார்த்தையாகிய பைபிள் இப்படிச் சொல்கிறது: ‘நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படிக்கு, நீ ஜீவனைத் தெரிந்துகொண்டு, உன் தேவனாகிய கர்த்தரில் அன்புகூர்ந்து, அவர் சத்தத்திற்குச் செவிகொடுத்து, அவரைப் பற்றிக்கொள்வாயாக.’ (உபாகமம் 30:19, 20) இந்த வார்த்தைகள் கொடூரமான கடவுள் பேசுவதுபோல் தொனிக்கிறதா? அல்லது, நாம் சரியான தீர்மானமெடுக்க வேண்டுமென விரும்புகிற அன்பான கடவுள் பேசுவதுபோல் தொனிக்கிறதா? (w13-E 05/01)

^ கானானியர்களின் வழிபாட்டில் குழந்தைகளைப் பலிசெலுத்துவது உட்பட்டிருந்தது என்பதை புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.