Skip to content

என் அப்பா அம்மா விவாகரத்து செய்ய நினைத்தால் என்ன செய்வது?

என் அப்பா அம்மா விவாகரத்து செய்ய நினைத்தால் என்ன செய்வது?

இதை செய்து பாருங்கள்:

 உங்கள் கவலைகளை அவர்களிடம் சொல்லுங்கள். உங்களுக்கு எவ்வளவு வருத்தமாக அல்லது குழப்பமாக இருக்கிறதென்று உங்கள் அப்பா அம்மாவிடம் சொல்லுங்கள். அப்போது, அவர்கள் ஏன் விவாகரத்து செய்யப்போகிறார்கள் என்பதை உங்களிடம் விளக்கமாகச் சொல்லலாம். அதனால், உங்கள் கவலையும் குறையலாம்.

 உங்கள் அப்பா அம்மாவிடம் பேசியும் பிரயோஜனம் இல்லையென்றால், முதிர்ச்சியுள்ள ஒரு நண்பரிடம் மனம்திறந்து பேசலாம்.—நீதிமொழிகள் 17:17.

 முக்கியமாக, ‘ஜெபத்தைக் கேட்கிறவரான’ உங்கள் பரலோகத் தகப்பனிடம் பேசுங்கள்; அவர் உங்கள் கவலைகளைக் கேட்பார். (சங்கீதம் 65:2) ‘அவர் உங்கள்மேல் அக்கறையாக இருப்பதால்’ மனதில் உள்ளதையெல்லாம் அவரிடம் கொட்டிவிடுங்கள்.—1 பேதுரு 5:7.

இதையெல்லாம் செய்யாதீர்கள்:

அப்பா அம்மாவின் விவாகரத்தைச் சமாளிப்பது, எலும்பு முறிவிலிருந்து குணமடைவதைப் போன்றது; வலி இருக்கும் என்பது உண்மைதான், ஆனால் கடைசியில் குணமாகிவிடுவீர்கள்

 மனக்கசப்பை வளர்த்துக்கொள்ளாதீர்கள். தானியேல் ஏழு வயதாக இருந்தபோது அவனுடைய அப்பா அம்மா பிரிந்துவிட்டார்கள். அவன் இப்படிச் சொல்கிறான்: “என் அப்பா அம்மா சுயநலம் பிடிச்சவங்க. எங்கள பத்தி அவங்க யோசிக்கவே இல்ல. அவங்க விவாகரத்து செய்வது எங்கள எப்படி பாதிக்கும்னு அவங்க நினைச்சு பாக்கவே இல்ல.”

 தானியேல் தொடர்ந்து கோபப்பட்டுக்கொண்டும் மனக்கசப்பை வளர்த்துக்கொண்டும் இருந்தால் அவனுக்கு என்ன ஆகும்?—க்ளூ: நீதிமொழிகள் 29:22-ஐ வாசியுங்கள்.

 தானியேலுக்கு அவனுடைய அப்பா அம்மாவினால்தான் இவ்வளவு வேதனை என்றாலும், அவன் அவர்களை மன்னிப்பது ஏன் நல்லது?—க்ளூ: எபேசியர் 4:31, 32-ஐ வாசியுங்கள்.

 உங்களுக்கே கேடு வரும்படி நடந்துகொள்ளாதீர்கள். டென்னி இப்படிச் சொல்கிறான்: “என்னோட அப்பா அம்மா பிரிஞ்சதுக்கு அப்புறம் நான் எப்பவும் சோகமாவே இருந்தேன். ஸ்கூல்ல பிரச்சினைகள் வர ஆரம்பிச்சுது. ஒரு வருஷம் ஃபெயில் ஆயிட்டேன். அதுக்கு அப்புறம் ... க்ளாசுல தமாஷ் பண்ணிட்டு ஒரு ஜோக்கர் மாதிரி சுத்திட்டிருந்தேன். தேவை இல்லாம மத்த பசங்ளோட அடிக்கடி சண்டையும் போட்டேன்.”

 க்ளாசில் ஜோக்கராக ஆவதன் மூலம் அல்லது சண்டைகள் போடுவதன் மூலம் டென்னி என்ன சாதிக்க நினைத்தான்?

 கலாத்தியர் 6:7-ல் உள்ள நியமம், தங்களுக்கே கேடு உண்டாக்காமல் இருக்க டென்னி போன்ற ஆட்களுக்கு எப்படி உதவும்?

 மனதில் ஏற்படும் காயம் சீக்கிரத்தில் ஆறாது. உங்கள் வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைக்குத் திரும்பும்போது, உங்கள் மனதும் சரியாகிவிடும்.