Skip to content

இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்

கூச்சப்படாமல் மற்றவர்களோடு சகஜமாகப் பழகுவது எப்படி?

கூச்சப்படாமல் மற்றவர்களோடு சகஜமாகப் பழகுவது எப்படி?

 கெட்ட செய்தி: நீங்கள் கூச்சப்பட்டுக்கொண்டு ஒதுங்கியிருந்தால் நல்ல நல்ல நண்பர்கள் கிடைக்காமல் போய்விடுவார்கள், நல்ல நல்ல அனுபவங்களும் கிடைக்காமல் போய்விடும்.

 நல்ல செய்தி: கூச்சப்படுவது எப்போதுமே கெடுதல் கிடையாது. கூச்ச சுபாவம் இருப்பதால் பேசுவதற்கு முன்பு நீங்கள் யோசிப்பீர்கள். அதோடு, மற்றவர்களைக் கவனிப்பீர்கள், அவர்கள் பேசுவதைக் காதுகொடுத்தும் கேட்பீர்கள்.

 ஆறுதலான செய்தி: கூச்ச சுபாவம் நிரந்தரமான பிரச்சினை கிடையாது. நீங்கள் நினைத்தால் உங்கள் சுபாவத்தை மாற்றிக்கொள்ள முடியும். எப்படி என்று தெரிந்துகொள்ள, இந்தக் கட்டுரையைப் படித்துப் பாருங்கள்.

 எதை நினைத்துப் பயப்படுகிறீர்கள் என்று யோசியுங்கள்

 கூச்ச சுபாவம் இருந்தால், மற்றவர்களை நேருக்கு நேர் பார்த்துப் பேசுவதை நினைத்தாலே உங்களுக்குப் படபடப்பாகிவிடலாம். அதனால், ஏதோ ஒரு இருட்டு அறையில் தனியாக இருப்பதுபோல் நீங்கள் உணர ஆரம்பித்துவிடலாம். அது உங்களுக்குப் பயமாகத்தான் இருக்கும்! ஆனால், எதை நினைத்துப் பயப்படுகிறீர்கள் என்று யோசித்துப் பார்த்தால், பயப்படுவதற்கு அவசியமே இல்லை என்பதைப் புரிந்துகொள்வீர்கள். இதற்கு மூன்று உதாரணங்களைப் பார்க்கலாம்.

  •   பயம் #1: “என்ன பேசுறதுன்னே தெரியல.”

     உண்மை: நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்பதை மற்றவர்கள் அவ்வளவாக ஞாபகம் வைத்திருக்க மாட்டார்கள், ஆனால் அவர்களிடம் எப்படி நடந்துகொண்டீர்கள் என்பதை ஞாபகம் வைத்திருப்பார்கள். அதனால், பயத்தை விரட்டியடிக்க, மற்றவர்கள் சொல்வதை நன்றாகக் கவனித்துக் கேட்கப் பழகிக்கொள்ளுங்கள். அவர்கள் சொல்ல வருவதை உண்மையான அக்கறையோடு கேளுங்கள்.

     யோசித்துப் பாருங்கள்: உங்கள் நண்பர் எப்படி இருக்க வேண்டுமென்று நீங்கள் ஆசைப்படுவீர்கள்? எப்போதும் அவரே வாயடித்துக்கொண்டு இருக்க வேண்டும் என்றா, நீங்கள் பேசுவதையும் கவனித்துக் கேட்க வேண்டும் என்றா?

  •   பயம் #2: “நான் சரியான அறுவை கேஸ்னு மத்தவங்க நினைப்பாங்க.”

     உண்மை: உங்களுக்குக் கூச்ச சுபாவம் இருக்கிறதோ இல்லையோ மற்றவர்களுக்கு உங்களைப் பற்றி ஏதாவது ஒரு அபிப்பிராயம் இருக்கத்தான் செய்யும். நீங்கள் சகஜமாகப் பேசிப் பழகும்போது, நீங்கள் உண்மையிலேயே எப்படிப்பட்டவர் என்பதை மற்றவர்களால் புரிந்துகொள்ள முடியும். சொல்லப்போனால், உங்கள்மேல் அவர்களுக்கு நல்ல அபிப்பிராயம் ஏற்படும். இதைப் புரிந்துகொண்டால் உங்களுக்குப் பயம் குறைந்துவிடும்.

     யோசித்துப் பாருங்கள்: யாருக்குமே உங்களைப் பிடிக்காது என்று நீங்கள் நினைத்துக்கொண்டால் நீங்கள்தானே மற்ற எல்லாரையும் தப்பாகக் கணக்குப்போடுகிறீர்கள்?

  •   பயம் #3: “நான் ஏதாவது தப்பா சொல்லிட்டேன்னா தர்மசங்கடமா போயிடும்.”

     உண்மை: எல்லாருக்குமே அவ்வப்போது இப்படி நடப்பது சகஜம்தான். தவறுகளை ரொம்ப சீரியஸாக எடுத்துக்கொள்ளாதீர்கள். அப்போதுதான், உங்களுக்கும் குறைகள் இருப்பதை நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்கள் என்பது மற்றவர்களுக்குத் தெரியவரும். இதைப் புரிந்துகொண்டால் உங்களுக்குப் பயம் போய்விடும்.

     யோசித்துப் பாருங்கள்: தங்களிடமும் குறைகள் இருப்பதை ஒத்துக்கொள்ளும் நபர்களோடுதானே உங்களுக்குப் பழகப் பிடிக்கும்?

 உங்களுக்குத் தெரியுமா? சிலர் மற்றவர்களுக்கு நிறைய மெசேஜ் அனுப்புகிறார்கள். அதனால், தங்களுக்குக் கூச்ச சுபாவம் இல்லை என்று நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால், மற்றவர்களை நேருக்கு நேர் பார்த்துப் பேசும்போதுதான் உண்மையான நண்பர்களைக் கண்டுபிடிப்பது சுலபமாக இருக்கும். மனோவியல் நிபுணரும் தொழில்நுட்ப நிபுணருமான ஷெர்ரி டெர்க்கிள் இப்படி எழுதுகிறார்: “நாம் மற்றவர்களுடைய முகத்தைப் பார்க்கும்போதும் குரலைக் கேட்கும்போதும்தான் நெருங்கிப் பழக முடிகிறது.” a

உங்களுக்கு ஏன் பயம் வருகிறது என்று கண்டுபிடித்து அதைக் குறைக்க முயற்சி செய்யுங்கள். அப்போது, மற்றவர்களை நேருக்கு நேர் பார்த்துப் பேசுவதை நினைத்து அரண்டுபோக மாட்டீர்கள்

 என்ன செய்யலாம்?

  •   ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். நீங்கள் எல்லாரோடும் ரொம்பக் கலகலப்பாக இருக்க வேண்டும் என்பதில்லை. நல்ல நல்ல நண்பர்களையும் அனுபவங்களையும் இழக்காமல் இருக்க, கூச்ச சுபாவத்தைக் கட்டுப்படுத்தினாலே போதும்.

     “நீங்க ரொம்ப நேரம் பேசணுங்கறது இல்ல. உங்களாலதான் பார்ட்டி களைகட்டணுங்கறதும் இல்ல. புதுசா இருக்குற ஒருத்தர்கிட்ட போய் உங்கள அறிமுகப்படுத்துனாலே போதும். இல்லனா, சில சாதாரண கேள்விகளை கேட்டாலே போதும்.”—அலிஷியா.

     பைபிள் ஆலோசனை: “ஒவ்வொருவனும் தன்னுடைய செயல்களை ஆராய்ந்து பார்க்கட்டும். அப்போது, அவன் மற்றவனோடு தன்னை ஒப்பிட்டுப் பார்த்து சந்தோஷப்படாமல் தன்னைப் பார்த்தே சந்தோஷப்படுவான்.”—கலாத்தியர் 6:4.

  •   கவனியுங்கள். எல்லாரோடும் நன்றாகப் பழகுகிறவர்களைக் கவனியுங்கள். அவர்கள் எப்படி மற்றவர்களோடு பேசுகிறார்கள் என்று பாருங்கள். என்ன விஷயம் அவர்களுக்கு உதவி செய்கிறது? என்ன விஷயம் அவ்வளவாக உதவி செய்வதில்லை? அவர்களிடம் இருக்கும் என்ன திறமைகளை நீங்கள் வளர்த்துக்கொள்ளலாம்?

     “சிலர் ஈஸியா ஃப்ரெண்ட்ஸ் ஆயிடுவாங்க. அவங்கள பார்த்து நாம கத்துக்கலாம். ஒருத்தர முதல் தடவை பார்க்குறப்போ அவங்க எப்படி நடந்துக்குறாங்க, என்ன சொல்றாங்க அப்படினெல்லாம் கவனிக்கலாம்.”—ஏரன்.

     பைபிள் ஆலோசனை: “இரும்பை இரும்பு கூர்மையாக்குவது போல, நண்பனை நண்பன் கூர்மையாக்குகிறான்.”—நீதிமொழிகள் 27:17.

  •   கேள்விகளைக் கேளுங்கள். பொதுவாக, எல்லாரும் தங்களுடைய அபிப்பிராயத்தை சொல்ல விரும்புவார்கள். அதனால், கேள்விகள் கேட்பது அவர்களோடு பேச ஆரம்பிப்பதற்கு ஒரு நல்ல வழி. உங்கள்மேல் கவனத்தைத் திருப்பாமல் இருப்பதற்கும் இது சிறந்த வழி.

     “ஒரு பார்ட்டிக்கோ விருந்துக்கோ போறதுக்கு முன்னாடியே என்ன பேசலாம், என்ன கேட்கலாம் அப்படினெல்லாம் யோசிச்சு வெச்சுட்டா அவ்வளவா டென்ஷன் இருக்காது. புதுசா யாரையாவது பார்க்குறப்போகூட பதட்டப்பட மாட்டோம்.”—அலானா.

     பைபிள் ஆலோசனை: “உங்களுடைய நலனில் மட்டுமே அக்கறை காட்டாமல், மற்றவர்களுடைய நலனிலும் அக்கறை காட்டுங்கள்.”—பிலிப்பியர் 2:4.

a ரீக்லெயிமிங் கான்வர்சேஷன் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது.